Published : 24 Nov 2015 11:43 AM
Last Updated : 24 Nov 2015 11:43 AM
சென்னை அண்ணா சாலை எல்.ஐ.சி. அருகே இருக்கிறது என் அலுவலகம். அந்தப் பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்த காரணத்தால், மாலை 5:30 மணிக்கு பல்லாவரத்தில் உள்ள என் வீட்டுக்கு கிளம்பினேன். கிளம்பும்போது மழை விட்டுவிட்டது, 45 நிமிடத்தில் வீட்டுக்குச் சென்று விடலாம் என்று நம்பிக்கையுடன் எனது ஆக்டிவாவைக் கிளப்பினேன்.
அடிதடிக்கும் பெயர் போன சத்தியமூர்த்தி பவன் இருக்கும் சாலையில் எனக்கு முதல் அடி விழுந்தது. சாலை முழுவதும் தண்ணீர். மழையில் செல்லும் ரயில் பூச்சி போல ஊர்ந்து ஊர்ந்து எக்ஸ்பிரஸ் அவென்யூ சிக்னல் சொல்லும்போது மணி சுமார் 6:20 தான் மக்களே.
எக்ஸ்பிரஸ் அவென்யூ சிக்னலில் இருந்து வலது பக்கம் திரும்பிய உடன் தான் எனக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி. அண்ணா சாலையில் இருந்து எக்ஸ்பிரஸ் அவென்யூ உள்ளே நுழையும் வழி வரை மக்கள் கூட்டம். அந்த பேரதிர்ச்சியில் இன்னொரு பேரதிர்ச்சி எனது ஆக்டிவ்வா வண்டியை தண்ணீரில் இறக்கி ஒட்டியதால் ஆக்டிவாவே ஆக்டிவ்வாக ப்ரேக் பிடிக்க மாட்டேன் என்கிறது.
அந்தச் சாலையும் முழுக்க தண்ணீர், வண்டியோடு தத்தளித்தேன். தண்ணீரில் இறக்கி வண்டி ஆஃப் ஆகிவிடக் கூடாது என்பதால் வண்டியை ரைஸ் செய்தே வைத்திருக்க வேண்டும். ப்ரேக் வேற பிடிக்காது. என் நிலைமை நினைத்துப் பாருங்கள். சத்யம் பின் வாசலில் அருகே மழை நீரில் முங்கியது. அங்கிருந்து தான் ஆரம்பித்து எனது நடைபயணம். எனது அருகில் நின்றிருந்த வண்டியில் "மச்சி.. நேரா ஒயின் ஷாப் விடுறா... ஆளுக்கு ஒரு குவார்ட்டர் போட்டுட்டு வண்டில போகலாம்" என்று கேட்டவருக்கு, "இங்கு வேண்டாம்டா... சைதாப்பேட்டைகிட்ட போய் அடிக்கலாம். இங்கு அடிச்சா போலீஸ் பிடிப்பாங்க. அவங்களுக்கு வேற தண்டம் அழணும்" என்று பதிலளித்தார். அவர்களுடைய பேச்சில் இருந்த நேர்மை எனக்கு பிடித்திருந்தது.
சத்யம் திரையரங்கம் இருக்கும் சாலையில் திரும்பி போகலாம் என்று வண்டியை கிடைக்கும் கேப்பில் எல்லாம் விட்டு சத்யம் திரையரங்கம் சாலையில் திருப்பியபோது ஃப்ரீயாக இருந்தது. சந்தோஷத்தில் வண்டியை திருப்பவும் முடியாமல், மெதுவாக சென்று வலதுபுறம் திரும்பியவுடன் மீண்டும் டிராபிக். என்ன கொடுமைடா எது என்று மீண்டும் அங்கு 30 நிமிடங்கள் கடந்தது. அங்குள்ள சரவண பவன் ஹோட்டல் அருகே இடதுகை பக்கம் திரும்பி ஜெமினியில் ஏறிவிடலாம் என்று திரும்பினேன். அங்குள்ள சாலையிலும் டிராபிக். அப்போது, "இதுக்குத் தான் சொன்னேன். படத்துக்கு இன்னொர் நாள் போகலாம் என்று... இப்போது பார் மழை" என்று டூவிலரில் டிரைவராக இருந்த கணவனை திட்டிக் கொண்டிருந்தார் மனைவி.
ஜெமினி பாலத்தில்தான் மொத்த டிராபிக்கும் இருந்தது. ஒரு இன்ச் கூட நகரவில்லை. எனது சிவகாமியோ (வண்டி ஆக்டிவா) ஆக்டிவ்வாக இருந்தாள். சிவகாமி மட்டும் கைகொடுத்தா போதும், வீட்டுக்கு போய் விடலாம் என்று நம்பிக்கையுடனே காத்திருந்தேன். நுங்கம்பாக்கம் சாலையில் இருந்த டிராபிக் ஜெமினி மேம்பாலம் வரை எதிரொலித்தது தான் பிரச்சினை. ஒருவழியாக கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் செல்லும் வழியை கடந்தவுடன் சாலை ப்ரீயாக இருந்தது. மீண்டும் சந்தோஷத்தில் வண்டியை ஜாலியாக ஒட்டினேன்.
அண்ணா அறிவாலயம் முன் மீண்டும் ஒரு டிராபிக் ஜாம். அந்த இடத்தில் மீண்டும் ஒரு பேய் மழை. அங்குள்ள பெட்ரோல் பங்க் முழுக்க ஒரு கூட்டம், சாலை முழுக்க தண்ணீர். தேனாம்பேட்டை சிக்னலில் மீண்டும் ஒரு டிராபிக் ஜாம். வலது புறம் செல்லும் தி.நகர் சாலையை நோக்கினேன் முழுக்க வாகனங்கள் நின்றன. எப்போதோ நான் பார்த்த ஆங்கில படத்தின் காட்சிகள் தான் அப்போது ஞாபகம் வந்தன.
அந்த நெரிசலிலும் ஒரு காதல் ஜோடி மிகவும் நெருக்கமாக வண்டியில் கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தார்கள். சும்மாவா சொன்னார்கள் முன்னோர்கள்... "மன மன மன மென்டல் மனதில்"...
மீண்டும் சிவகாமியோடு நீந்தினேன். செனடாஃப் ரோடு வழியாக சென்று அண்ணா சாலை தொடலாம் என்று எண்ணி, அந்த சாலையில் திரும்பினேன். தண்ணீர் நின்றது, டிராபிக் இல்லை. சிவகாமி சொதப்பி விடாதே என்று நீந்த ஆரம்பித்தேன். அங்குள்ள சிக்னலில் மீண்டும் டிராபிக், ஒரு வழியாக தேவர் சிலையைத் தொட்டு இடது திரும்பி சைதாப்பேட்டையை தொடப் புறப்பட்டேன்.
சைதாப்பேட்டை நீதிமன்றம் இருக்கும் சாலையில் மீண்டும் ஒரு கடுமையாக டிராபிக். அந்த சாலையில் வலது புறத்தில் ஒரு சிறு கிறிஸ்துவ ஆலயம் இருக்கும். அதற்கு அருகில் உள்ள சின்ன சந்து வழியாக சென்று குறுக்கு வழியில் செல்லலாம், அங்கு யாரும் இருக்க மாட்டார்கள் என்று எண்ணினேன். சின்ன சந்துக்குள் நுழைந்தவுடன் எனக்கு கிடைத்தது ஒரு மிகப்பெரிய பல்பு. அங்கும் ஒரு டிராபிக்.
திக்கித்திணறி கிண்டியைத் தொட்டேன். அங்குள்ள பாலம் முழுக்க டிராபிக். அய்யோ ராமா என்று மணியைப் பார்த்தேன் 8.00. கிண்டி மேம்பாலத்தில் ஊர்ந்து இறங்கியபோதுதான் எனக்கு நாம் கஷ்டப்பட்டு வண்டி ஒட்டுகிறோம் என்பதையும் தாண்டி ஒரு பரிதாபம் தொற்றிக் கொண்டது. அங்கிருந்த கடைகளுக்குள் எல்லாம் தண்ணீர் சென்றுவிட்டது. அந்தளவுக்கு சாலை முழுக்க தண்ணீர். ஸ்ரீநிவாசா கபே, சாகர் ஹோட்டல், முருகன் மெடிக்கல் ஷாப் என கடைக்குள் தண்ணீரோடு கடையை மூடிக் கொண்டிருந்தார்கள். அந்த தண்ணீரில் தத்தளித்து லீ ராயல் மெரிடியனைத் தொட்டேன். அங்கு வாசல் முழுக்க தண்ணீர். அப்போது அந்த ஹோட்டலின் உள்ளிருந்து ஒரு கார் வந்தது. அதனுள் இருந்த ஒரு வெளிநாட்டு பெண் மொபைல் போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டே இருந்தார். ”சென்னை உன்னையும் மாற்றிவிட்டதா.. இங்கிருப்பவர்கள் தான் புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் போடுவார்கள். நீயுமா” என்று எண்ணினேன்.
அங்கிருந்து பல்லாவரம் வரை டிராபிக் இல்லை என்றாலும், ஒரு பதற்றத்தோடு வண்டியை ஓட்டினேன். காரணம் எனக்கு எதிர்புறம் உள்ள தாம்பரம் - கிண்டி சாலை முழுக்க டிராபிக் ஜாம். ஒரு இன்ச் வரை நகரவில்லை. ஒரு வழியாக திக்கித்திணறி பல்லாவரம் வரை சென்றேன். அதையும் தாண்டி டிராபிக் நீடித்தது.
அனைத்து இடைஞ்சல்கள், பதற்றம், சந்தோஷம் எல்லாம் கடந்து வீட்டிற்கு சந்தோஷத்துடன் சென்றேன். அங்குதான் கடவுள் வைத்தான் எனக்கு ஒரு மிகப்பெரிய ட்விஸ்ட். வீட்டிற்குள் தண்ணீர், கோபத்துடன் உடைகள் எடுத்துக் கொண்டு கிளம்பினேன் என் நண்பன் வீட்டிற்கு.
ஒரு வழியாக செட்டில் ஆன பிறகு, என் அலுவலகத்தில் இருந்து கிண்டி வழியாக போரூர் செல்லக்கூடிய நண்பரிடம் விசாரித்தேன். அவர் இரவு 10 மணிக்கு வீட்டுக்கு கிளம்புவதாகச் சொன்னார். எச்சரிக்கை விடுத்துவிட்டு தூங்கத் தொடங்கினேன்.
காலை 6 மணிக்கு எழுந்தேன். வாட்ஸ்ஆப்-பில் அந்த நண்பரிடம் இருந்து ஒரு மெசேஜ் வந்திருந்தது. "குட் மார்னிங். ஐ ரீச்சிடு ஹோம் சேஃப்லி" என்று. அந்த மெசேஜ் வந்து சேர்ந்திருந்த நேரம்... 02:07AM.
ஆந்திராவுக்கு புயல் போய்விட்டதாக தோழர் ரமணன் சொன்னார். அப்போதுதான் ஒன்று தெரிந்தது, ஸ்கெட்ச் ஆந்திராவுக்கு இல்லை செளந்தரு.. சென்னைக்குத்தான்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT