Published : 14 Nov 2015 09:50 AM
Last Updated : 14 Nov 2015 09:50 AM
பிரான்ஸ் ஓவியர்
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற ஓவியர் ஆஸ்கர் கிளாடு மோனட் (Oscar Claude Monet) பிறந்த தினம் இன்று (நவம்பர் 14). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் (1840) பிறந்தார். புத்திசாலி மாணவன்தான். ஆனாலும், வகுப்பறைக்குள் அடைந்துகிடப்பது கசந்தது. சுதந்திரப் பறவையாக இருக்கவே விரும்பினார். சிறு வயதிலேயே ஓவியம் தீட்டுவதில் ஆர்வம் கொண்டிருந்தார்.
# வியாபாரியான தந்தை, மகனையும் அதில் ஈடுபடுத்த விரும்பினார். ஓவியம்தான் தன் வாழ்க்கை என்பதில் இவர் தீவிரமாக இருந்தார். ஆசிரியர்களை கிண்டல் செய்து நோட்டு, பாடப் புத்தகங்களில் கேலிச்சித்திரம் வரைவார். இவரது ஓவிய ஆர்வத்தை ஊக்கப்படுத்திவந்த தாய் 1857-ல் மறைந்தார். ஓவியத்தில் நாட்டம் செலுத்தி, அந்த சோகத்தில் இருந்து மீண்டார்.
# பொதுமக்களைப் பற்றி இவர் வரையும் சித்திரங்கள் மிகவும் பிரபலமடைந்தன. கரிக்கோலால் பல ஓவியங்களை வரைந்து விற்றார். யூஜின் புதின் என்ற ஓவியரை சந்தித்த பிறகு இவரது ஓவிய பாணியில் மாற்றம் ஏற்பட்டது. ஆயில் பெயின்ட், இயற்கை ஓவியங்கள் வரையும் நுட்பங்களை புதின் இவருக்கு கற்றுத்தந்தார்.
# ராணுவப் பணியாற்ற அல்ஜீரியாவுக்கு சென்றார். நோய்வாய்ப் பட்டதால், இரண்டே ஆண்டுகளில் பிரான்ஸ் திரும்பினார்.
# பிரபல ஓவியர்களின் பாணியைப் பின்பற்றி வரைவதில் இவருக்கு உடன்பாடு கிடையாது. இவர் தன் விழிவாசலில் பிரவேசித்து மனதில் உயிர்பெறும் வடிவங்களை வரைவதிலேயே ஆர்வம் காட்டினார்.
# ஓவியத் திறனை மேம்படுத்திக்கொள்ள 1862-ல் சார்லஸ் கிளேயர் என்பவரின் ஓவியக் கூடத்தில் சேர்ந்தார். அங்கு இவருக்கு பியர் அகஸ்ட் ரென்வர், பிரெட்ரிக் பஸில், ஆர்பிரெட் சிஸ்லே போன்ற புகழ்பெற்ற ஓவியர்களின் நட்பு கிடைத்தது. இவர்கள் இணைந்து ஓவியத்தில் புதிய பாணியைக் கடைபிடித்தனர்.
# இவரது ஓவியக் கண்காட்சியை பார்க்க வந்த ஒரு விமர்சகர் இவரது ஓவிய பாணியை ‘இம்ப்ரெஷன்’ என்று குறிப்பிட்டார். இதுவே இவரது ஓவிய பாணியைக் குறிப்பிடும் பதமாக நிலைத்துவிட்டது. பின்னாளில் ‘இம்ப்ரெஷனிஸம்’ என்ற ஓவிய இயக்கமாகவே இது உருவெடுத்தது.
# மனைவி கேமீலை வைத்து 1866-ல் இவர் வரைந்த ‘தி வுமன் இன் க்ரீன் டிரெஸ்’ ஓவியம் இவருக்கு பெரும் புகழை பெற்றுத் தந்தது. கேமீலை மாடலாகக் கொண்டு பல ஓவியங்களை வரைந்தார். 1879-ல் கேமீல் இறந்தார்.
# பேரும் புகழும் கிடைத்ததே தவிர, இவரால் பொருளாதார ரீதியாக எதுவும் சாதிக்க முடியவில்லை. உடல்நலமும் அவ்வப்போது வாட்டியது. வறுமை, உடல்நல பாதிப்புகளிலேயே வாழ்வின் பெரும்பகுதி கழிந்தது. இதனால் மன அழுத்தத்துக்கு ஆளானார். தூரிகைதான் அவருக்கு இருந்த ஒரே ஆறுதல். ஓவியம் வரைவதை நிறுத்தவே இல்லை. இவரது பொருளாதார நிலை 1890-களில் மாறியது. புகழோடு, பணமும் சேர்ந்தது.
# ‘இம்ப்ரெஷனிஸம்’ ஓவிய பாணியை கலை உலகுக்கு தந்த முன்னணி ஓவியர் கிளாட் மோனட் 86-வது வயதில் (1926) மறைந்தார். காலத்தால் அழியாப் புகழ்பெற்ற இவரது ஓவியங்கள் இன்றும் உலகின் பல அருங்காட்சியகங்களிலும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT