Published : 03 Nov 2015 11:03 AM
Last Updated : 03 Nov 2015 11:03 AM

அன்னபூர்ணா மஹாராணா 10

விடுதலைப் போராட்ட வீராங்கனை

விடுதலைப் போராட்ட வீராங்கனை, பெண்கள் உரிமைக்காகப் போராடிய சமூக சீர்திருத்தவாதியான அன்னபூர்ணா மஹாராணா (Annapurna Maharana) பிறந்த தினம் இன்று (நவம்பர் 3). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# ஒடிசா மாநிலத்தில் (1917) பிறந்த வர். மாஜிஸ்திரேட்டாகப் பணிபுரிந்த தந்தை, மகாத்மா காந்தியின் அறைகூவலை ஏற்று அப்பதவியைத் துறந்தார். விடுதலை இயக்கத்தில் பங்கேற்றார். அருமை மகள் வீட்டிலேயே கல்வி கற்க ஏற்பாடு செய்தார். பெற்றோர் மட்டு மின்றி, இவரது உறவினர்கள் பலரும் விடுதலை வேள்வியில் பங்கேற்றவர்கள்.

# அபார நினைவாற்றல் கொண்ட அன்னபூர்ணா, 12 வயதில் பகவத் கீதை முழுவதையும் மனப்பாடம் செய்துவிட்டார். காந்திஜியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, 14 வயதிலேயே விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். ‘வானர் சேனா’ என்ற சிறுவயதினருக்கான விடுதலை இயக்கத்தில் முக்கிய உறுப்பினராக செயல்பட்டார்.

# பெற்றோருடனும் சகோதரனுடனும் இணைந்து கட்டாக் மாவட்டத்தில் 5 ஆண்டுகள் மக்களுக்கு சேவை செய்தார். வார்தாவில் ஆசிரியர் பயிற்சி பெற்றார். ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காக பல போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்றார்.

# பல தலைவர்களிடம் அறிமுகம் பெற்ற இவர், காங்கிரஸின் அனைத்து மாநாடுகளிலும் கலந்துகொள்ளும் வாய்ப்பு பெற்றார். இவரது தலைமைப் பண்பையும் தேசபக்தியையும் காந்திஜி பாராட்டியுள்ளார். ஒடிசாவில் விடுதலைப் போராட்டத் திட்டங்களுக்காக காந்திஜி பல கடிதங்கள் மூலம் இவருக்கு வழிகாட்டினார்.

# இவர் நல்ல குரல்வளம் மிக்கவர். தேசபக்தி பாடல்களைப் பாடி விடுதலைக் கனல் மூட்டினார். 1930-ல் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டு முதன்முதலாக சிறைசென்றார். 1934-ல் காந்திஜி நடத்திய நீண்ட பாதயாத்திரையில் கலந்துகொண்டார். ‘வெள்ளையனே வெளியேறு’ உள்ளிட்ட பல போராட்டங்களில் கலந்துகொண்டு பலமுறை சிறை சென்றார்.

# விடுதலைக்குப் பிறகு பதவிகளை நாடாமல், எளிமையாக வாழ்ந்தார். ஏழை மக்களின் சேவைக்கே தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். மத்தியப் பிரதேசத்தில் சம்பல் கொள்ளையர்களின் மன மாற்றத்துக்கான மகத்தான பணியில் ஈடுபட்டிருந்த ஜெயப்பிரகாஷ் நாராயணுடன் இணைந்து சேவையாற்றினார். ‘தஸ்யு ஹ்ருதயரா தேவதா’, ‘அம்ருத அனுபவ்’ என்ற தனது நூல்களில் சம்பல் பள்ளத்தாக்கு திட்டப் பணி அனுபவங்களை விவரித்துள்ளார்.

# ராய்கடா மாவட்டத்தில் பழங்குடியினருக்காக இலவசப் பள்ளியைத் திறந்தார். வினோபா பாவேயின் பூதான இயக்கத்திலும் பங்கேற்றார். நெருக்கடி நிலையை எதிர்த்து போராடியவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார். விடுதலைப் போராட்ட அனுபவங்கள் குறித்து ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார்.

# பெண்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் மற்றும் போதைப் பழக்கத்துக்கு எதிராக பல போராட்டங்கள் நடத்தி னார். பல்வேறு சமூக அமைப்புகளில் இணைந்து பணியாற்றினார்.

# மகாத்மா காந்தியின் பல படைப்புகளை ஒரிய மொழியில் மொழிபெயர்த்துள்ளார். இவரது இலக்கிய சேவைகளுக்காக சரள புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. உத்கல் பல்கலைக்கழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. ‘உத்கல் ரத்னா’ எனப் போற்றப்பட்டார்.

# அர்ப்பணிப்பு உணர்வுடனும் தேசபக்தியுடனும் சேவையாற்றிய இவரது வாழ்க்கை பலருக்கும் உத்வேக சக்தியாக விளங்கியது. இறுதி மூச்சுவரை ஏழை எளியவர்களின் நல்வாழ்வுக்காக பாடுபட்டவரும் சமூக சீர்திருத்தவாதியுமான அன்னபூர்ணா மஹாராணா 95-வது வயதில் (2012) மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x