Published : 20 Nov 2015 10:42 AM
Last Updated : 20 Nov 2015 10:42 AM
நோபல் பரிசு பெற்ற முதல் பெண் படைப்பாளி
இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணியும், ஸ்வீடனை சேர்ந்த படைப்பாளியுமான செல்மா லேகர்லாவ் (Selma Lagerlof) பிறந்த தினம் இன்று (நவம்பர் 20). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# ஸ்வீடன் நாட்டின் வார்ம்லேண்ட் நகரில் (1858) பிறந்தார். இடுப்பில் காயத்துடன் பிறந்தார் செல்மா. குழந்தைத்தனமான விளையாட்டுகள், குறும்புகள் எதுவும் இல்லாத அமைதியான குழந்தையாக வளர்ந்தார்.
# ஆரம்பக் கல்வியை வீட்டிலேயே கற்றார். சிறு வயதிலேயே புத்தகம் படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். கவிதைகளும் எழுதினார். ஸ்டாக்ஹோம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பட்டம் பெற்றார். ராணுவ அதிகாரியாக இருந்த தந்தை 1884-ல் நோய்வாய்ப்பட்ட பிறகு, குடும்பம் தடுமாறியது. வீட்டை விற்கும் நிலை ஏற்பட்டது.
# லேண்ட்ஸ்குரோனா நகரப் பள்ளியில் 1885-ல் சேர்ந்தார். மாணவர்களுக்கு நிறைய கதைகள் கூறுவார். பள்ளியிலேயே கதை கூறுவதில் சிறந்த ஆசிரியையாகத் திகழ்ந்தார்.
# ஆசிரியர் பணிக்கு இடையே ‘கோஸ்ட்டா பெர்லிங்ஸ் சகா’ என்ற தனது முதல் நாவலை எழுதினார். அதன் முதல் சில அத்தியாயங்களை வாரப் பத்திரிகை நடத்திய இலக்கியப் போட்டிக்கு அனுப்பிவைத்தார். அது முதல் பரிசை வென்றது. நாவலில் இருந்து ஒருசில பகுதிகளை அந்த வாரப் பத்திரிகை வெளியிட்டது. பின்னாளில் மிகவும் போற்றப்பட இருக்கிற படைப்பு என்பது அப்போது யாருக்கும் தெரியவில்லை.
# புத்தகம் வெளிவந்த பிறகு டேனிஷில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. அதன் பிறகு பரவலான பாராட்டுகளைப் பெற்றதோடு விற்பனையும் அதிகரித்தது. அரச குடும்பம், ஸ்வீடன் அகாடமியில் இருந்து நிதி உதவி கிடைத்தது. 1895-ல் ஆசிரியர் பணியைத் துறந்து முழுநேர எழுத்தாளரானார்.
# தன் படைப்புகளுக்கு கருத்துகளை சேகரிக்க ஓரிரு முறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டார். இத்தாலிக்கு சென்றவர், ‘ஆன்டிகிறிஸ்ட்ஸ் மிராக்ளர்’ என்ற புத்தகத்தை எழுதினார். தொடர்ந்து பல சிறுகதைகள் எழுதினார். 1902-ல் வெளிவந்த ‘ஜெருசலேம்’ என்ற நூல் அமோக வரவேற்பை பெற்றது.
# பள்ளிக் குழந்தைகளுக்காக ‘தி ஒண்டர்ஃபுல் அட்வென்சர்ஸ் ஆஃப் நீல்ஸ்’ என்ற நூலை எழுதினார். இது உலக அளவில் குழந்தைகளால் மிகவும் விரும்பப்படும் புத்தகம் என்ற பெருமையைப் பெற்றது.
# ஸ்வீடன் இலக்கியக் கழகத்தின் தங்கப் பதக்கத்தை 1904-ல் பெற்றார். 1907-ல் உப்சலா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது. ஜெருசலேம் நகரில் ஒரு தெருவுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டது. ஜெருசலேம் உள்ளிட்ட இவரது பல நாவல்கள் திரைப்படங்களாகவும் தயாரிக்கப்பட்டன.
# இலக்கியத்துக்கான நோபல் பரிசை 1909-ல் பெற்றார். அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு, ஏற்கெனவே வறுமையால் விற்ற வீட்டை திரும்ப வாங்கினார். 2-ம் உலகப் போருக்கு நிதி திரட்டுவதற்காக தனது நோபல் பரிசு பதக்கம், ஸ்வீடன் அகாடமியின் தங்கப்பதக்கத்தை பின்லாந்து அரசுக்கு அனுப்பினார். இதில் நெகிழ்ந்துபோன பின்லாந்து அரசு வேறு வழிகளில் நிதி திரட்டி இவரது பதக்கங்களை இவரிடமே வழங்கியது.
# ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, வறுமையை வென்று, சுய முயற்சியாலும் அபாரத் திறமையாலும் உலகப் புகழ்பெற்ற படைப்பாளியாக பரிணமித்த செல்மா லேகர்லாவ் 1940-ம் ஆண்டு மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT