Published : 16 Mar 2021 08:26 PM
Last Updated : 16 Mar 2021 08:26 PM

ஆடு மேய்த்ததால் படிப்பு தடைபட்ட விவசாயி; 7-வது முறையாக தேர்தலில் போட்டி: மதுரையிலும் ஒரு தேர்தல் மன்னன்

மதுரை

குடும்ப வறுமையால் ஆடு மேய்த்ததால் 10-ம் வகுப்பிற்கு மேல் படிக்க முடியாமல் போன மதுரை விவசாயி, சாமானியருக்கும் தேர்தலில் தேர்தலில் போட்டியிடும் உரிமை உள்ளது, அவர்களும் அதிகாரத்திற்கு வர முடியும் என்ற விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த 7-வது முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார்.

மதுரை அருகே அழகர்கோயில் அருகே சாம்பிராணிப்பட்டி மலைக்கிராமத்தை சேர்ந்த விவசாயி கோபாலகிருஷ்ணன், 50. முன்னோடி விவசாயியான இவர் மதுரை வடக்கு, மேலூர், திருப்பரங்குன்றம் போன்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் 4 முறையும், மதுரை மக்களவைத் தேர்தலில் 2 முறையும் போட்டியிட்டுள்ளார்.

தொடர்ந்து இவர் தோல்வியடைந்தாலும், சேலம் மேட்டூர் தேர்தல் மன்னன் பத்மநாபன் போல் தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை மட்டும் கைவிடவில்லை. இந்த முறை இவர் மீண்டும் 7-வது முறையாக மதுரை மேலூர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு மேலூர் தொகுதியில் முதல் ஆளாக பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டார்.

இதுகுறித்து கோபாலகிருஷ்ணனிடம் கேட்டபோது, ‘‘ மக்களாட்சியையும், நமது ஜனநாயக உரிமைகளையும் நம் தலைவர்கள் பல்வேறு கஷ்ட நஷ்டங்களுக்கும் இடையே, உயிர்த் தியாகம் செய்துதான் பெற்றுத் தந்துள்ளனர்.

அந்த உரிமைகளைத் தக்க வைக்கவே தற்போது போராட வேண்டிய இருக்கிறது. அப்படியிருந்தும் மாநில உரிமைகள் பலவற்றை மத்திய அரசு பறித்துவிட்டது. ஒரு விவசாயியாக கடந்த 25 ஆண்டுகளாக பல நஷ்டங்களை சந்தித்துள்ளேன். அதற்கு நிவாரணம் கொடுக்கும் அரசு, விவசாயத்தையும், விவசாயியையும் நிரந்தரமாக காப்பாற்ற முயற்சி செய்யவில்லை.

விவசாயத்திற்காக யாரும் குரல் கொடுக்கவில்லை. தேர்தலில் அரசியல் கட்சிகள்தான் போட்டியிட முடியும் என்ற மக்கள் எண்ணுகின்றனர். தனி மனிதனுக்கு கூட இந்த உரிமை இருக்கிறது எனும் விழிப்புணர்வு ஏற்படுத்தவே நான் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடுகிறேன்.

சேவை எண்ணம் கொண்ட எல்லோரும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று அதிகாரத்திற்கு வர முடியும். நானே மதுரையின் கடைக்கோடியில் உள்ள பேருந்து வசதி, சரியான சாலை வசதியில்லாத மலைக்கிராமத்தை சேர்ந்த விவசாயி.

சிறுவயதில் ஆடுமேய்த்துக் கொண்டே படித்தேன். என்னுடைய குடும்ப வறுமையால் 10-ம் வகுப்பை எண்ணால் தாண்ட முடியவில்லை. அதற்காக என்னைப் போன்ற படிக்காதவர்கள் ஆட்சிக்கும், அதிகாரத்திற்கு வர முடியாது என்று நினைப்பது தவறு. எங்களால் வர முடியாவிட்டாலும் நேர்மையான மக்கள் செல்வாக்கு பெற்றவர்கள் போட்டியிட்டு அதிகாரத்திற்கு வரலாம்.

அதை அவர்களுக்கு உணர்த்தவும், மக்களும் வாக்கிற்கு பணம் வாங்காமல் அவர்களுக்கு வாக்களிக்க முன்வர வேண்டும் என்பதையும் தொடர்ந்து நான் தேர்தல் பிரச்சாரமாக முன்னெடுக்கிறேன்.

நான் போட்டியிட்டதிலேயே 2011ஆம் ஆண்டு மேலூர் சட்டமப்பேரவைத் தேர்தலில் 1,050 வாக்குகள் பெற்றது தான் அதிகம். அப்படி 1000 பேர், 800 பேர், 500 பேர் என்னைப் போன்ற சாமானிய வேட்பாளர்களை நேர்மையாக தேர்வு செய்ய வாக்களித்துள்ளனர்.

இந்த ஆயிரக்கணக்கான எ வாக்குகள் விரைவில் லட்சக்கணக்கான வாக்குகளாக மாறி என்னைப்போன்ற சாமானியர்கள் கண்டிப்பாக அதிகாரத்திற்கு வருவார்கள், ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x