Published : 21 Nov 2015 10:44 AM
Last Updated : 21 Nov 2015 10:44 AM
நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர்
இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற ‘இட்டிஷ்’ மொழி எழுத்தாளர் ஐசக் பாஷவிஸ் சிங்கர் (Isaac Bashevis Singer) பிறந்த தினம் இன்று (நவம்பர் 21). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l போலந்து நாட்டின் லியான்சின் கிராமத்தில் யூத குடும்பத்தில் (1901) பிறந்தார். இவரது தந்தை நீதிபதி, தலைமை மத போதகராக இருந்தவர். 1907-ல் குடும்பம் ராட்ஸிமின் நகருக்கு இடம்பெயர்ந்தது. அது ஹீப்ரூ ஜெர்மானிய கலப்பு மொழியான ‘இட்டிஷ்’ மொழி பேசும் ஏழை யூதர்கள் நிரம்பிய பகுதி.
l சிறு வயது முதலே புத்தகம் படிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். வார்சாவில் அண்ணன் ஆசிரியராகப் பணியாற்றிய பத்திரிகையில் சேர்ந்தார். அண்டை நாடான ஜெர்மனி எல்லையில் நாஜிக்களின் ஆதிக்கமும், அவர்களது யூத எதிர்ப்பும் அதிகரித்ததால் 1935-ல் போலந்தில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியேறி, அங்கேயே குடியுரிமையும் பெற்றார்.
l நியூயார்க்கில் ‘தி பார்வர்டு’ என்ற இட்டிஷ் மொழி பத்திரிகையில் வேலைக்கு சேர்ந்தார். தனிமை உட்பட பல்வேறு காரணங்களால் மனச் சோர்வுக்கு ஆளானார். அப்போதுதான் ‘லாஸ்ட் இன் அமெரிக்கா’ என்ற நாவலுக்கான கரு உதயமானது.
l திருமணத்துக்கு பிறகு, முழுமூச்சாக எழுத்துப் பணியில் இறங்கினார். இவரது முதல் கதை ‘லிட்டராஷே பிளட்டர்’ என்ற பத்திரிகை நடத்திய இலக்கியப் போட்டியில் பரிசு பெற்றது. முதல் நாவலான ‘சாட்டான் கோரே’, குளோபஸ் இலக்கிய இதழில் தொடராக வெளிவந்தது.
l ‘தி ஸ்லேவ்’ நாவல் 1962-ல் வெளிவந்தது. மறைந்த அண்ணனின் நினைவாக எழுதிய ‘தி ஃபேமிலி மாஸ்கட்’ என்ற நாவல் இவருக்குப் பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது. தனித்துவமான எழுதும் பாணி, காட்சிகளை விவரிக்கும் எதார்த்த நடை, கதாபாத்திர சித்தரிப்பு ஆகியவற்றுக்காக பெரிதும் போற்றப்பட்டார்.
l குழந்தைகளுக்காக இவர் எழுதிய நூல்கள் மிகவும் பிரசித்தம். 18 நாவல்கள், குழந்தைகளுக்கான 14 புத்தகங்கள், ஏராளமான நினைவுச் சித்திரங்கள், கட்டுரைகள், சுயசரிதைகள் எழுதியுள்ளார். ஆனாலும் சிறந்த சிறுகதை எழுத்தாளராகவே அதிகம் அறியப்பட்டார்.
l முதல் ஆங்கில சிறுகதைத் தொகுப்பான ‘கிம்பல் தி ஃபூல்’ 1957-ல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து பல நூல்கள் ஆங்கிலத்தில் வெளிவந்தன. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இவரது கதைகள் ப்ளேபாய், எஸ்கொயர் போன்ற இதழ்களில் அடிக்கடி வெளிவந்தன.
l இட்டிஷ் இலக்கிய இயக்கத்தின் முக்கிய நபராகத் திகழ்ந்தார். அந்த மொழியில்தான் நூல்களை எழுதியும், வெளியிட்டும் வந்தார். 1978-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார். அமெரிக்க தேசிய புத்தக விருதையும் வென்றார்.
l சைவ உணவுப் பழக்கம் கொண்டவர். ‘உங்கள் உடல்நலம் கருதி சைவம் சாப்பிடுகிறீர்களா?’ என்று கேட்டதற்கு ‘கோழிகளின் நலம் கருதி’ என்று நகைச்சுவையாக கூறினாராம். ‘எனிமீஸ்’, ‘எ லவ் ஸ்டோரி’ ஆகிய கதைகள் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்ட பிறகு உலகம் முழுவதும் பிரபலமானார்.
l சொந்த வாழ்வில் துயரங்கள், விரக்தி, வறுமையோடு போராடினாலும் படைப்புத் திறனால் உலகப்புகழ் பெற்று வெற்றிகரமான எழுத்தாளராக உயர்ந்த ஐசக் பாஷவிஸ் சிங்கர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு 1991-ம் ஆண்டு மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT