Published : 12 Mar 2021 09:46 AM
Last Updated : 12 Mar 2021 09:46 AM
1971- ஜூன் 19-ந்தேதி
நாளைய தினம் திருப்பூர் பொருட்காட்சியில் நாடகம். பின்னாளில் அதிமுக கொறாடாவாக சட்டமன்றத்தில் பதவி வகித்த இளைஞர் மணிமாறன் பொருட்காட்சி கான்ட்ராக்ட் எடுத்திருந்தார்.
இன்று காலை சென்னையில் ‘கண்காட்சி’ படப்பிடிப்பு. மாலை 5 மணி வரை. அங்கிருந்து பாலாஜி பைன் ஆர்ட்ஸ் சபாவுக்காக ‘அம்மன் தாலி’-யில் நடிக்க ராமாராவ் கலாமண்டபம் ஹால் சென்றேன்.
நாடகம் முடிந்து இரவு உணவு முடித்து, மீண்டும் ஒப்பனை செய்து கொண்டு சஷ்டி பிலிம்ஸ் ‘தேரோட்டம்’ -படப்பிடிப்பில் கலந்து கொள்ளச் சென்றேன். அகால மரணமடைந்த நடிகர் சசிகுமாரும் நானும் பத்மினி அம்மாவின் பிள்ளைகளாக அப்படத்தில் நடித்தோம்.
ஜேம்ஸ் பாண்ட் பாணி டிரஸ் அணிந்து கொண்டு பாலே டைப் மூவ்மெண்ட்ஸூடன் பாடல் படமாக்கப்பட்டது. மாஸ்க் செய்து பல ஷாட்கள் எடுக்க வேண்டி இருந்ததால் இரவு முழுதும் தாண்டி பகல் 12 மணி ஆகி விட்டது.
ஏற்கனவே தனியார் பஸ்ஸில் சீன், செட்,ஒப்பனை, உடைகள், நடிகர் பட்டாளத்துடன் சிவா டூரிஸ்ட் பஸ் திருப்பூருக்கு நேற்று புறப்பட்டு போய் விட்டது.
காலையில் பல்கூட துலக்காமல் நேற்றிரவு 10 மணிக்கு துவங்கிய பாடல்காட்சி இன்று 12 மணிக்குத்தான் முடிந்தது.
சஷ்டி பிலிம்ஸ் ஸ்டுடியோவிலிருந்து விமான நிலையத்திற்கு நேரே போய்ச் சேர கார் கொடுத்தனுப்பினார்கள். வழக்கமாக 15 நிமிடம் தாமதமாகக் கிளம்பும் FOCUR FRIENDSHIP விமானம் இன்று 1.50-க்கு சரியாகக் கிளம்பியது சந்தோஷமாக இருந்தது.
ரன்வே ரோடில் ஓடிய விமானம் மேலே பறக்க எத்தனைிக்கும்போது ‘படார் -படார்’ என்று சத்தம். அடுத்த நொடியில் விமானம் கடமுடவென்ற சத்தத்துடன் வடக்கும் தெற்குமாக கட்டுப்பாடு இழந்து தரையில் உரசிக் கொண்டே சென்று 5 ஆயிரம் அடி ரன்வே ரோட்டை விட்டு இறங்கி புல்வெளியில் நின்றது.
விமானத்தின் அடிபாகத்தில் -முன்பக்கமிருந்த சக்கரங்கள் கழன்று ஓடி விட மூக்கால் உரசியவாறு விமானம் ரன்வே ரோட்டில் ஓடியதால் அடிப்பக்கம் தீப்பற்றி புகை உள்ளே வந்தது.
விமானத்தில் பயணிகள் ஏற 10 அடி உயரம் ஏணி வைப்பார்கள். இப்போது ஏணிக்கு எங்கே போவது? முன்வாயில் வழியாக பயணிகள் குதித்து சீக்கிரம் வெளியேறுங்கள். விமானம் ஒரு வேளை வெடிக்கலாம் என்று அறிவிப்பு செய்தனர்.
80 வயது தாண்டிய பாட்டியும், தாத்தாவும் முன்பக்க வாயில் கதவருகில் நின்று கீழே பார்த்தால் குறைந்தது 8 அடி உயரம் இருக்கும். அவர்கள் வயதுக்கு குதிப்பது சாத்தியமில்லை. துணிந்து குதித்தால் கால் எலும்புகள் நொறுங்கிப் போக வாய்ப்புகள் அதிகம்.
அடுத்தவர்களை இறங்க விடாமல் வழியை அடைத்துக் கொண்டு நின்ற அவர்களை 4 பேர் தூக்கி தொங்க விட்டு இறக்கி விட்டனர். மற்றவர்கள் வேகமாகக்குதித்து வெளியேறினர். 48 பேர் பயணம் செய்யும் விமானம் அது. உயிர் தப்பியதில் மற்ற பயணிகள் சந்தோஷப்பட, இனி திருப்பூர் எப்படி போவது என்ற கவலை என்னைச் சூழ்ந்தது.
சஷ்டி பிலிம்ஸ் கார் என்னை விமான நிலையத்தில் இறக்கி விட்டு ஸ்டுடியோவுக்கு அப்போதே போய் விட்டது.
இனி ஒரு டாக்ஸி பிடித்து வீட்டுக்குப் போக வேண்டும். அதற்குள் நமக்கு திருப்பூர் போக கார் வேண்டும். ஆபத்பாந்தவனாக உள்ள ஒரே கம்பெனி ஏபிஎன் அவர்களுடையது. விமான நிலையத்திலிருந்து போன் செய்து நிலைமையை விளக்கி உடனடியாக ஒரு கார் ஏற்பாடு செய்யச் சொன்னேன்.
நம்முடைய பிரச்சனை அவர்களுக்குப் புரியாது. கம்பெனி கார்கள் படப்பிடிப்புக்குப் போய் விட்டதால் டூரிஸ்ட் கார் -புது கார் ஒன்று நாகர்கோயில் டிரைவர் -கொடைக்கானல் மலைகளிலெல்லாம் அனாயசமாக கார் ஓட்டுபவர் 4.30-க்கு என் வீடு வந்து சேர்ந்தார்.
கிண்டி ஸ்பிக் கம்பெனி பாலத்தை அடுத்து இடதுபுறமிருந்த பங்கில் பெட்ரோல் நிரப்பச் சொல்லி பயணமானோம். நாடகக் கான்ட்ராக்டருக்கு அப்போதே தந்தி அடித்து PLANE MET WITH ACCIDENT. COMING BY CAR... AROUND 11.45 PM WILL REACH என்று தகவல் அனுப்பி விட்டேன்.
இப்போது போல நேஷனல் ஹைவே பாதை அப்போது இல்லை. 50 ஆண்டுகளுக்கு முன் சாதாரண தார் ரோடு.
டிரைவர் அசுரன். காரின் ஸ்பீடோ மீட்டரின் கடைசி எண் 120. அதை தொடும் வரை அழுத்திக் கொண்டே காரை பறக்க விட்டார். திடீரென்று குறுக்கே ஒரு மொபட் வந்தால் பிரேக் சடன்-ஆக போட முடியாது. வண்டிக்குள் கனமான பொருள் இல்லாததால், டிரைவர் லேசாக பிரேக் போட்டாலும், பின் சீட்டிலிருந்து நான் சிதறி முன் சீட்டை தாண்டி பறந்து கொண்டிருந்தேன்.
உளுந்தூர் பேட்டைக்குள்ளே கார் நுழைந்து, ரோட்டில் மக்களை விரட்டியடித்து சீறிப்பாய்ந்தது. ஊர் முழுக்க விளக்கொளி தெருவில் குறைவாக இருந்தது. பதட்டத்தில் ஆத்தூர் ரோட்டில் -கள்ளக்குறிச்சி பாதையில் செல்ல வேண்டிய டிரைவர் திருச்சி பாதையில் 4 கி.மீ போய் விட்டார். பர்லாங் கல்லைப் பார்த்து பதறிப்போய் திரும்பி வந்து ஆத்தூர் சாலையில் ஓட்டினார்.
சேலம் வந்தபோது முதல்காட்சி முடிந்து தியேட்டரிலிருந்து மக்கள் சோம்பல் முறித்தவாறு ஸ்லோ மோஷனில் ரோட்டைக் கடந்து கொண்டிருந்தனர்.
அலறும் ஹார்னை அடித்து அவர்களை பதட்டப்படுத்தி திக்குமுக்காக மூலைக்கு ஒருவரை ஓட விட்டு தியேட்டரைக் கடந்தார் டிரைவர். அத்தனை கெட்ட வார்த்தைகள் அர்ச்சிக்கப்பட்டன. ஊத்துக்குளி வரும்போது ரயில்வே கிராஸிங். பெல் அடித்துக் கொண்டிருந்தது. காவலாளி கதவை பாதி வரை இழுத்து வந்து விட்டார். மூடினால் லாக் ஆகி விடும். பிறகு ரயில் கிராஸ் ஆன பிறகே திறக்கும். அப்படி ஆட்டோமேடிக் சிஸ்டம்.
காரிலிருந்து குதித்து, ‘அண்ணா, அண்ணா ஒரே செகண்ட், நாடகக் கொட்டகையில 7 மணியிலிருந்து மக்கள் காத்துகிட்டிருக்காங்க. இப்பவே 11 மணி ஆயிடுச்சு. கொஞ்சம் எங்களை போக விட்டு கதவை சாத்துங்க!’ன்னு காலில் விழாத குறையாக கெஞ்சி, ஊத்துக்குளியைக் கடந்தோம்.
அப்படி இப்படி திருப்பூருக்குள் நுழைந்து பல்லடம் சாலையிலுள்ள பொருட்காட்சி சென்ற போது இரவு 11.45 மணி.
முன்னரே தந்தி அடித்து விட்டதால் டிக்கட் யாரும் வாங்கவில்லை. அந்த நேரத்திலும், நான் நாடகம் போடுவேன் என்று நம்பி 200 பேருக்கு மேல் மைதானத்தில் காத்துக் கொண்டிருந்தார்கள்.
மேடை ஏறி நின்றேன். பஞ்சையாய், பராரியாய் தலைமுடி கலைந்து, முகமெல்லாம் சோர்ந்து கண்கள் இடுங்கி, பரிதாபமாகக் காட்சி அளித்தேன்.
‘கொடுத்த வாக்கை காப்பாற்றி விட்டேன். இப்போதே நாடகம் போடச் சொன்னால் அரை மணி நேரத்தில் ஒப்பனை முடித்து ஆரம்பித்து விடுவேன். நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்!’ என்றேன்.
ஆயிரமிருந்தாலும் உள்ளூர்காரன். அந்தக் கால ரோட்டில் கிட்டத்தட்ட 400 கிலோமீட்டர் தூரத்தை அம்பாசடர் காரில் 7 மணி நேரத்தில் அதுவும் இரவில் பயணித்து வருவது ஆபத்தான காரியம்.
நேரில் பார்த்த மகிழ்ச்சியில், ‘பரவாயில்லை நாளையே நாடகம் போடுங்கள்!’ என்று மக்கள் சொல்ல கையெடுத்துக் கும்பிட்டு நன்றி சொன்னேன்.
மறுநாள் திங்கள்கிழமை நிம்மதியாக நாடகம் போட்டாலும் விடுமுறை நாளில் வரும் கூட்டத்தில் பாதி தேறினாலே பெரிய விஷயமாக இருந்தது. கண்காட்சி நாடகத்திற்கு டிக்கெட் வாங்கி வர பொதுவாக யோசிப்பார்கள்.
டூரிஸ்ட் கார் வாடகை, சிவா டூரிஸ்ட் பஸ் ஒரு நாள் கூடுதல் வாடகை -வசூல் சரியில்லை என்றதால்,
கான்ட்ராக்டரை கசக்கி பிழிய வேண்டாமென்று, முடிந்ததை கொடுங்க்ள் என்று சொன்னபோது, பேசியதில் பாதிதான் கொடுத்தார்.
அனாவசிய அலைச்சல், அரை அரங்கம் காலியாக இருக்கும் போது நாற்காலிகளைப் பார்த்து நடிக்கும் கொடுமை, பேசிய தொகை பெற முடியாத நிலைமை இதையெல்லாம் தாண்டித்தான் வளரும் கலைஞன் நாடக அனுபவங்களை பெற முடிகிறது.
---
அனுபவிப்போம்....
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT