Last Updated : 08 Jun, 2014 10:00 AM

 

Published : 08 Jun 2014 10:00 AM
Last Updated : 08 Jun 2014 10:00 AM

விற்பனைக்கு வந்த தாத்தாவின் பொக்கிஷம்!

கட்டங்களுக்குள் அடைபட்ட சித்திரங்களாக நகரும் காமிக்ஸ் கதைகள் நம் மனதில் மாறாமல் தங்கியிருப்பவை. பலரின் பால்ய நினைவிலிருந்து பிரித்தெடுக்க முடியாதவை. வெளிநாட்டு காமிக்ஸ் புத்தகங்களின் தாக்கத்தில் தமிழிலேயே நேரடியாக உருவாக்கப்பட்ட காமிக்ஸ் புத்தகங்கள் நம் பார்வையில் அதிகம் படாதவை. தமிழில் காமிக்ஸ் தயாரிப்பில் முழுமூச்சுடன் இயங்கியவர்களில் முக்கியமானவர் முல்லை தங்கராசன்.

லாரி ஓட்டுநராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய முல்லை தங்கராசன், ‘டிரைவர்’ என்ற மாத இதழை நடத்தினார். நான்கு சக்கர வாகன ஓட்டுநர்களுக்கான குறிப்புகள், சாலை விதிகள் உள்ளிட்ட விஷயங்களைத் தாங்கிவந்த இதழ் அது. 1969-ம் ஆண்டு ஒரு சித்திரக் கதையில் சினிமாவைப் புகுத்தினார்.

எம்.ஜி.ஆர். போலவே தோற்றம் கொண்ட ஒருவர்தான் அந்த சித்திரக்கதையின் நாயகன். எம்.ஜி.ஆர். மற்றும் அறிஞர் அண்ணாவிடம் அந்தப் புத்தகத்தைக் கொடுத்து வாழ்த்து பெற்றார் தங்கராசன்.

மாயாஜால, மந்திரக் கதைகள் எழுதுவதிலும் தனிச்சிறப்பு பெற்றவராக விளங்கியவர் இவர். பின்னர், முத்து காமிக்ஸ் நிறுவனத்தில் பதிப்பாசிரியராகவும் பணிபுரிந்தார். அந்நிறுவனத்திலிருந்து வெளியே வந்த பின்னர் மாயாவி என்ற பெயரில் காமிக்ஸ் புத்தகங்களை வெளியிட்டார். சிறுவர்களுக்கான கதைப் படங்கள் கற்பனையைத் தூண்டும் விதத்தில் அமைய வேண்டும் என்ற கொள்கை கொண்ட இவர், முழு வண்ணத்திலான காமிக்ஸ் புத்தகங்களையே உருவாக்கினார்.

தமிழ் காமிக்ஸ் உலகில் குறிப்பிடத் தக்க சாதனையைச் செய்த இவர், காமிக்ஸ் ரசிகர்களின் உலகுக்கு வெளியே அறிமுகமே ஆகாதவர். இவரைப் பற்றியும் இவரது காமிக்ஸ் புத்தகம்பற்றியும் சமீபத்தில் தெரியவரக் காரணம், அமெரிக்காவில் வசிக்கும் இவரது பேரன் மதன்ராஜ் மெய்ஞானம்தான்.

இவர் பணிநிமித்தமாக கலிபோர்னியாவில் சில ஆண்டுகளாக வசித்துவருகிறார். திரைப்படத் துறையில் ஆர்வமுள்ள இவர், குறும்படங்களில் உதவி இயக்குநராகவும் பணிபுரிகிறார். ஒரு விடுமுறை நாளில் இவர் ‘டோர்சே புக்ஸ்’ என்ற அமேசான் இணையதள விற்பனை அங்காடியில் இருக்கும் புத்தகங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது ஒரு புத்தகம் இவரது பார்வையில் பட்டது. கண்களில் ஆனந்தக் கண்ணீர் பொங்க, அந்தப் புத்தகத்தை உடனடியாக வாங்கிவிட்டார் மதன்ராஜ்.

‘ஸ்ரீ வெங்கடேசுவரர் புராணச் சித்திரங்கள்’ என்ற பெயர் கொண்ட அந்தப் புத்தகம், தமிழில் அதிக முறை பதிப்பிக்கப்பட்ட காமிக்ஸ் புத்தகம், அதிகம் விற்பனையான காமிக்ஸ் புத்தகம், அதிக மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்ட தமிழ் காமிக்ஸ் புத்தகம் என்று பல்வேறு சிறப்புகளைப் பெற்றது.

எஸ். கணேசன் என்ற ஓவியர் வரைந்த வண்ண ஓவியங்களுடன் 1971-ல் இரண்டு ரூபாய்க்கு விற்கப்பட்ட அந்தப் புத்தகத்தை 40 ஆண்டுகளுக்குப் பின்னர் மதன்ராஜ் வாங்கியபோது அதன் விலை பல ஆயிரம் ரூபாய். காமிக்ஸ் புத்தகங்களின் பொக்கிஷ மதிப்பு எத்தகையது என்பதை அறிய இந்த ஒரு தகவல் போதும்!

கிங் விஸ்வா, காமிக்ஸ் ஆர்வலர்,
தொடர்புக்கு: prince.viswa@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x