Published : 04 Nov 2015 10:13 AM
Last Updated : 04 Nov 2015 10:13 AM

ஜானகி அம்மாள் 10

தாவரவியல் நிபுணர், ஆராய்ச்சியாளர்

தாவரவியல் நிபுணரும் மரபினக் கலப்பு ஆராய்ச்சியாளருமான ஜானகி அம்மாள் (Janaki Ammal) பிறந்த தினம் இன்று (நவம்பர் 4). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l கேரள மாநிலம் தலச்சேரியில் (1897) பிறந்தார். முழு பெயர் ஜானகி அம்மாள் எடவலத்து காக்காட். தந்தை திவான் பகதூர் இ.கே.கிருஷ்ணன், சென்னை மாகாண துணை நீதிபதியாகப் பணியாற்றியவர். இயற்கை அறிவியல், தோட்டக்கலையில் ஆர்வம் கொண்டவர்.

l 19 குழந்தைகளைக் கொண்ட பெரிய குடும்பம் இவருடையது. பெண்கள் கற்பதே அரிதாக இருந்த அந்த காலத்தில், இவரது குடும்பத்தில் பெண்கள் உயர்கல்வியும் கற்க பெற்றோர் ஊக்கமளித்தனர். தந்தைபோல, தாவரவியலில் சிறு வயதில் இருந்தே அதிக நாட்டம் கொண்டிருந்தார் ஜானகி.

l தலச்சேரியில் பள்ளிப்படிப்பை முடித்தார். சென்னை ராணி மேரி கல்லூரியில் தாவரவியலில் இளங்கலைப் பட்டம், சென்னை மாநிலக் கல்லூரியில் ஹானர்ஸ் பட்டம் பெற்றார். உயிரி மரபியல் ஆராய்ச்சிகளில் ஆர்வம் காட்டினார். சென்னை மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

l அமெரிக்கா சென்று மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் 1925-ல் முதுநிலைப் பட்டம் பெற்றார். நாடு திரும்பியதும், சென்னை மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் கல்விப் பணியைத் தொடர்ந்தார். மீண்டும் மிச்சிகன் பல்கலைக்கழகத்துக்கு சென்று, கிழக்கத்திய நாடுகளின் முதல் ஃபெல்லோவாக சேர்ந்து, 1931-ல் டிஎஸ்சி பட்டம் பெற்றார். திருவனந்தபுரம் மஹாராஜா கல்லூரியில் தாவரவியல் பேராசிரியராக 2 ஆண்டுகள் பணியாற்றினார். கோவை கரும்பு வளர்ப்பு நிறுவனத்தில் 6 ஆண்டுகள் பணியாற்றினார்.

l உலகப் புகழ்பெற்ற தாவரவியலாளர் சிரில் டார்லிங்டனுடன் இணைந்து தாவர குரோமோசோம் அட்லஸ் என்ற வரைபடத் தொகுப்பை 1945-ல் வெளியிட்டார். லண்டனில் உள்ள ஜான் இன்னஸ் தோட்டக்கலை நிறுவனத்தில் இணை மரபியலாளராகப் பணிபுரிந்தார்.

l இந்திய தாவரவியல் சர்வே அமைப்பை சீரமைத்து, ஒருங்கிணைப்பதற்காக ஜவஹர்லால் நேருவின் அழைப்பை ஏற்று 1951-ல் நாடு திரும்பினார். அதன் தலைமை இயக்குநராகப் பொறுப்பேற்றார்.

l பல கலப்பு மரபின வகைகளை உருவாக்கினார். கரும்பு சம்பந்தமாக இவர் மேற்கொண்ட உயிர் கலவியல் ஆய்வுகள் பல சிறப்பினக் கலப்பு, மரபினக் கலப்பு வகை கரும்புகளையும் அதைச் சார்ந்த புல்லினங்களையும், புல்பேரினங்களையும் இணைத்து உருவாக்க வழிவகுத்தன.

l அலகாபாத் மத்திய தாவர ஆய்வகத் தலைவர், ஜம்மு மண்டல ஆராய்ச்சி ஆய்வக சிறப்பு அலுவலர் உள்ளிட்ட இந்திய அரசுப் பணிகளிலும், சிறிது காலம் டிராம்பே அணு ஆராய்ச்சி ஆய்வகத்திலும் பணிபுரிந்தார்.

l சென்னைக்கு 1970-ல் வந்தார். சென்னை பல்கலைக்கழக தாவரவியல் உயர் ஆய்வு மையத்தில் இணைந்து, மதுரவாயல் கள ஆய்வகத்தில் இறுதிவரை பணியாற்றினார். வெண்கோஷ்டம் போன்ற மூலிகைச் செடிகளின் பயன்பாடு குறித்து ஆராய்ந்தார்.

l மிச்சிகன் பல்கலைக்கழகம் இவருக்கு எல்எல்டி பட்டம் வழங்கியது. 1977-ல் பத்ம விருது பெற்றார். 2000-ம் ஆண்டில் வகைப்பாட்டியலுக்கான தேசிய விருது இவரது பெயரில் நிறுவப்பட்டது. இந்தியப் பாரம்பரிய தாவரவியல் அறிவை மீட்டெடுப்பது, திரட்டும் பணியில் வாழ்நாள் முழுவதும் ஈடுபட்ட ஜானகி அம்மாள் 87-வது வயதில் (1984) மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x