Published : 13 Jun 2014 10:25 AM
Last Updated : 13 Jun 2014 10:25 AM
மின்இணைப்பு பெறுவது, மின்சாரக் கட்டணத்தை நாமே கணக்கிட்டு தெரிந்துகொள்வது, இணையதளம் வழியாக மின்கட்டணத்தை செலுத்துவது ஆகியவை குறித்து பார்த்தோம். விளக்கங்கள் தொடர்கிறது..
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் இணையதளத்தில் (www.tnebnet.org) நம் பெயரில் கணக்கு தொடங்கினால் ஒரு கணக்கில் எத்தனை மின் இணைப்புகளை பதிவு செய்ய முடியும்?
நீங்கள் குடியிருக்கும் வீடு சொந்தமோ, வாடகையோ, குத்தகையோ எப்படி இருந்தாலும் அதன் மின் இணைப்பு எண்ணைக் கொண்டு மேற்கண்ட இணையதளத்தில் ஒரு கணக்கு தொடங்க முடியும். இதில் சட்ட சிக்கல் ஏதும் இல்லை. அதேபோல நண்பர்கள், உறவினர்களின் எண்களையும்கூட அதில் பதிவு செய்து வைக்கலாம். அவர்களது கட்டணத்தையும் அதன்மூலமாகவே செலுத்தலாம். உங்களது மாதாந்திர மின் பயன்பாட்டு அளவு, பல மாதங்களுக்கான மின் கட்டண அட்டவணை போன்ற அனைத்தையும் இதன்மூலம் தெரிந்துகொள்ளலாம்.
மின் கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தலாமா?
கணக்கெடுக்கும் முன்பே நீங்கள் கையில் இருக்கும் தொகையையோ அல்லது அதைவிட அதிகமாகவோ செலுத்தலாம். இந்த தொகை உங்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டு, ஒவ்வொரு முறை கணக்கீட்டுக்குப் பிறகும் தானாகவே கழிக்கப்படும். நுகர்வோரின் பணம் மின் வாரியக் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒவ்வொரு நாளுக்கும், ஆண்டுக்கு 9% அளவில் வட்டியும் உங்கள் கணக்கில் சேர்க்கப்படும்.
மின் கட்டணம் செலுத்த மின் கட்டண அட்டை அவசியமா?
மின் கட்டணம் செலுத்த செல்லும்போது மின் கட்டண அட்டை அவசியமல்ல. ஆனால், உங்கள் வீட்டின் மின் இணைப்பு எண்ணை சரியாகத் தெரிந்துவைத்திருப்பது அவசியம். அது தெரிந்திருந்தால், அட்டை அவசியமல்ல.
மின் கட்டணத்தை அவரவர் பகுதியில் உள்ள அலுவலகத்தில்தான் கட்ட வேண்டுமா?
பெரும்பாலான மின் கட்டண வசூல் மையங்கள் தமிழகம் முழுவதும் கணினிமயம் ஆக்கப்பட்டுவிட்டன. எனவே, தங்களது மின் மண்டலம், வட்ட எல்லைக்கு உட்பட்ட எந்த பிரிவு அலுவலகத்திலும், மின் இணைப்பு எண்ணை தெரிவித்து, கட்டணம் செலுத்தலாம்.
கட்டணம் செலுத்த கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பயன்படுத்த முடியுமா?
காசோலை, வரைவோலை அல்லது ரொக்கமாக மட்டுமே செலுத்த முடியும். வங்கியில் பணமின்றி காசோலை திரும்பினால், மின் இணைப்பு தற்காலிகமாக துண்டிக்கப்படும்.
கட்டணம் தொடர்பான சந்தேகங்கள், பிரச்சினைகளுக்கு எந்த அலுவலரை அணுகுவது?
மின் பயனீட்டு கணக்காளர், கணக்கீட்டு ஆய்வாளர், வருவாய் ஆய்வாளர், துணை நிதிக் கட்டுப்பாட்டு அலுவலர் ஆகியோரிடம் அலுவலக நேரத்தில் போன் மூலமாகவோ, நேரிலோ புகார் தரலாம். இதில் பிரச்சினை ஏற்பட்டால் செயற்பொறியாளர், மேற்பார்வை செயற்பொறியாளர், மின் நுகர்வோர் குறைதீர் மையம் மற்றும் குறை தீர்ப்பாளரை அணுக வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT