Published : 26 Feb 2021 09:56 AM
Last Updated : 26 Feb 2021 09:56 AM
புகழ்பெற்ற திரைக்கதாசிரியர் டி.என்.பாலு இறந்தபோது மரியாதை செய்ய அவர் வீட்டுக்குச் சென்றேன். தமிழ் சினிமாவில் அட்டகாசமான சிரிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த ஏகபத்தினி விரதன் பி.எஸ்.வீரப்பா அண்ணன், ஜெமினி நிறுவனத்தைச் சேர்ந்த ஜி.பி.சி.ராமமூர்த்தி ஆகியோரும் அங்கு வந்திருந்தனர்.
என்னைப் பார்த்த ராமமூர்த்தி, ‘‘சிவகுமார், சுபாவத்தால நீங்க நல்ல பிள்ளைன்னு எல்லாருக்கும் தெரியும். அதை விட சினிமாவுல நீங்க ஏற்று நடிச்ச வேடங்கள் உங்களை இன்னும் நல்ல மனிதரா மக்கள் மனசில இடம் பிடிக்கக் காரணமா இருந்துச்சு!’’ என்றார்.
‘‘பொன்னெழுத்தில பொறிக்க வேண்டிய வரிகள் ராமமூர்த்தி. ஒரு படத்தில் நடிக்க எம்.ஜி.ஆருக்கு என்ன சம்பளம் குடுத்தாங்களோ அதில 10 ஆயிரம் மட்டும்தான் குறைச்சு வில்லனா நடிக்கற எனக்குக் குடுத்தாங்க. எம்ஜிஆருக்கு ஒரு லட்சம்னா, எனக்கு 90 ஆயிரம் சம்பளம்.
ஆனா அந்த பத்தாயிரம் ரூபா வித்தியாசம் அவரை நாட்டின் முதலமைச்சரா உட்கார்ற அளவுக்கு மக்கள் மத்தியில் பேர் வாங்கிக் குடுத்திச்சு. எனக்கு, வட்டிக்கடை சேட் கூட கடன் தர பயப்பட்டான். வீரப்பாவுக்கு கடன் குடுத்தா திருப்பி வாங்க முடியாது. முரட்டு மனுசன். நம்மள அடிச்சு விரட்டிடுவான்னு நெனைச்சாங்க!’’ என்றார்.
இந்தக் கருத்தை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் உயிரே போனாலும் பொய் பேசமாட்டான் சத்யன் என்று சிவாஜி முதல் அத்தனை கதாபாத்திரமும் சொல்லும்படி அந்த வேடத்தை உருவாக்கியிருந்தார்கள். 1931-ல் 'பேசும் படம்' வெளியானது. இந்த 90 ஆண்டுகளில் மிகச்சிறந்த தமிழ்ப் படங்கள் என்று 100-ஐத் தேர்வு செய்தால் அதில் நிச்சயம் ‘உயர்ந்த மனிதன்’ படமும் இருக்கும்.
‘காக்கும் கரங்கள்’ படத்தில் என்னை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய ஏவிஎம், இருந்த ஒரு நல்ல காட்சியையும் அந்தப் படத்தில் வெட்ட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு எனக்குப் பெருத்த ஏமாற்றத்தையும், வலியையும் கொடுத்தது. அதற்கு வட்டியும் முதலுமாக உயர்ந்த மனிதனில் சிவாஜி நடித்த வேடத்தை விட அப்பழுக்கில்லாத அரிச்சந்திரனாக -சத்தியமூர்த்தியாக வாழ்ந்து காட்டும் வேடம் கொடுத்து என் நெஞ்சில் பால் வார்த்தது.
‘உத்தர் புருஷ்’ என்ற வங்காளப் படக்கதைதான் இதற்கு மூலம். பிரம்மாண்டமான குடும்பக் கதை படமாக இதை எடுக்க விரும்பி அப்பச்சி, வங்கப்படத்தில் முழுக்கதாநாயகனாக இருந்த என் பாத்திரத்துடன் சிவாஜி கதாபாத்திரத்தை விரிவுபடுத்தி ஜாவர் சீதாராமனை வைத்து திரைக்கதை அமைக்கச் சொல்லி முழுக்கதைக்கு வடிவம் கொடுத்தார்.
கொடைக்கானலில் பெரிய எஸ்டேட் வைத்திருக்கும் கோடீஸ்வரன் மகன் சிவாஜி. தன் நண்பன் அசோகனுடன் கொடைக்கானலுக்கு அடிக்கடி செல்லும் சிவாஜி எஸ்டேட் வாட்ச்மேன் மகள் வாணிஸ்ரீயைக் காதலிக்கிறார். அது எல்லை கடந்து வாணிஸ்ரீ கர்ப்பமுறுகிறார்.
சிவாஜியின் தந்தை இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு, தன் அந்தஸ்துக்குக் குழிபறிக்கும் வேலையை மகன் செய்துவிட்டான் என்று, வாணிஸ்ரீயைக் குடிசையோடு கொளுத்திவிட ஆள் அனுப்புகிறார். துப்பாக்கி முனையில் மகன் சிவாஜியை மிரட்டி செளகார் என்ற பெரிய இடத்துப் பெண்ணை மனைவியாக்குகிறார். சிவாஜியும் செளகாரும் ஊருக்குக் கணவன் மனைவியாக வாழ்கிறார்கள். உள்ளே ஒட்டும் இல்லை;உறவும் இல்லை.
தீயில் அகப்பட்ட வாணிஸ்ரீ, ஒரு குழந்தையைப் பெற்று வி.எஸ்.ராகவன்- சீதாலட்சுமியிடம் ஒப்படைத்து விட்டு உயிரை விடுகிறாள். சிவாஜி மில்லில் வேலை பார்க்கும் வி.எஸ்.ராகவன் இந்தக் குழந்தையை எடுத்து வளர்த்து அப்பாவி சத்யனாக (சிவகுமார்) ஆளான பையனை சிவாஜி வீட்டில் வேலைக்காரனாகச் சேர்த்து விடுகிறார். படத்தின் தொடக்கத்திலேயே சிவாஜி மகன் சிவகுமார் என்று ஆடியன்ஸுக்குச் சொல்லிவிட்டு, இருவரும் தங்கள் உறவு தெரியாமல் எப்படி அவஸ்தைப்படுகிறார்கள் என்று காட்டுவதுதான் திரைக்கதையின் சிறப்பு.
சத்யன் தன் மகன் என்று தெரியாமலே சிவாஜி அவன் மீது காட்டும் அபரிமிதமான அன்பும், கரிசனமும் செளகாருக்கு எரிச்சலை மூட்டுகிறது. உச்சகட்ட காட்சியில் விகேஆரும், மனோரமாவும் செளகாரின் வைர நெக்லஸைத் திருடி சத்யனின் பெட்டிக்குள் வைத்து - அவனுக்கு திருட்டுப் பட்டம் கட்டி, முதலாளியிடம் பிரம்படி வாங்கி வீட்டை விட்டு வெளியே துரத்தும் நிலைக்குக் கொண்டு வந்து விடுகிறார்கள்.
டிரைவர் மகள் பாரதி, சத்யனுக்கு எழுதப்படிக்கக் கற்றுக் கொடுக்கிறாள் -தன்னுடைய தாயார் படத்திற்கு கீழ், ‘அம்மா, இதுவரைக்கும் நான் பொய் சொல்லலே இனிமேலும் பொய் சொல்ல மாட்டேன்!’ என்று எழுதி வைத்திருப்பான் சத்யன்.
சத்யனை அடித்து துரத்திய சிவாஜியிடம் பாரதி அந்தப் படத்தைக் காட்டுகிறார். படத்தில் இருப்பது வாணிஸ்ரீ தன் மாஜி காதலி என்றறிந்து சிவாஜி ஒரு எக்ஸ்பிரஷன் கொடுப்பார் பாருங்கள். நினைத்தே பார்க்க முடியாது. அடுத்த கணம், சத்யன் தன் மகன்தான் என்றறிந்து ‘அய்யோ என் மகனையா அடித்தேன்!’ என்று அலறித்துடித்து அவனைத் தேடி வெளியே ஓடிவருவார்.
இதற்குள் நான் அழுதுகொண்டே, ‘அம்மா, நான் திருடலேம்மா. நான் பொய் சொல்லலேம்மா!’ன்னு வீதிலே போயிகிட்டிருப்பேன்.
மில் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டு அத்தனை கட்டிடங்களும் எரிந்து கொண்டிருக்கின்றன. தீ ஜூவாலைகளுக்கு நடுவே என் அம்மா வாணிஸ்ரீ முகம். ‘உலகமே உன்னை வெறுத்தாலும் நானிருக்கிறேன். வா மகனே!’ என்று அழைக்கும்.
அம்மாவே அழைக்கிறாள் என்று கொழுந்துவிட்டு எரியும் நெருப்புக்குள் நான் போவேன். எங்கெல்லாமோ தேடின சிவாஜி தொழிற்சாலை பக்கம் வர, சத்தியன் நெருப்புக்குள் போவதை ஊழியர்கள் சொல்வார்கள்.
‘நெருப்பிலே எரிந்த காதலியைக் காப்பாற்றாமல் இத்தனை நாள் குற்ற உணர்ச்சியில் செத்துக் கொண்டிருந்தேன். இன்று என் மகனைக் காப்பாற்ற முடியாவிட்டால் இந்த நெருப்பிலேயே நானும் மடிகிறேன்!’ என்று ஆவேசமாக சிவாஜி நெருப்புக்குள் நுழைந்து என்னைக் காப்பாற்றுவார்.
இந்த ‘க்ளைமேக்ஸ்’ நான்கு நாள் இரவு தினமும் 4 மணி நேரம் படமாக்கப்பட்டது. ஆஸ்பெஸ்டாஸ் ஓடுகள் மூலம், ஃபேக்டரி செட் போட்டு, ஜன்னல் கம்பிகள், கதவுகள், மாடித்தளம் என்று கட்டிடம் முழுவதிலும் சீமை எண்ணெயில் நனைத்த பஞ்சுத் திரிகளைச் சுற்றி ஒரே சமயத்தில் கொளுத்திவிட 20 அடி உயரத்திற்கு மேல் தீ நாக்குப் படர்ந்து பேயாட்டம் போட்டது.
கேமராக்கள் 4 உள்ளே ஒளித்து வைத்து ஒரே ஷாட்டில் நான் காம்பவுண்டிலிருந்து உள்ளே நுழைந்து போர்டிகோவைத் தாண்டி கட்டிடத்திற்குள் போய் மாடிப்படிகள் 30 தாண்டி அம்மா, அம்மா என்று கதறி அவளைத் தேட வேண்டும்.
கேமரா ஆரம்பித்தவுடனே நெருப்பின் சூடு 20 அடி தாண்டி எங்கள் அருகே வந்துவிட்டது. சரவணன் சார், ‘சிவா போக வேண்டாம்!’ என்றார். டைரக்டர் பஞ்சு, ‘டேய் சிவா! 4 கேமரா ஓடுது. பிலிமை வேஸ்ட் பண்ணிடாதே, போடா!’-ன்னு கத்தினாரு.
அவ்வளவுதான். சாமி வந்தவன் மாதிரி மடமடன்னு நுழைஞ்சு போர்டிகோ தாண்டி 4 பக்கமும் எரிகிற நெருப்புக்குள்ளே புகுந்து மாடிப்படி ஏறினேன். 2 கைப்பிடி கிரில்களிலும் பஞ்சு சுத்தி நெருப்பு- படிகளிலும் நெருப்பு கால் கொதிக்கக் கொதிக்க தாண்டித் தாண்டி மாடி ஏறி விட்டேன். சுற்றிலும் நெருப்பு இடைவிடாது எரிந்ததால் அந்தப் பகுதியிலிருந்த பிராணவாயுவை நெருப்பு உறிஞ்சிக் கொள்ள, சுவாசிக்க முடியாமல் மயங்கி கீழே விழுந்தேன்.
50 வயது தாண்டிய டைரக்டர் பஞ்சு சார், பையன் தனியா போயிருக்கான். பயந்திருவான்னு, வேட்டிய மடிச்சுக் கட்டிகிட்டு படியேறி நெருப்புக்குள்ளேயே ஓடிவந்து, ‘சிவா! தைரியமா இரு. நான் வந்திட்டேன்!’ என்றார். என்ன ஒரு மனிதாபிமானம்.
சிவாஜி இந்தப் பரபரப்பை எல்லாம் பார்த்திட்டு, ‘என்னடா அந்த சின்னப் பையன் இப்படி ஓடிட்டான். இப்ப நான் அவனை விட தைரியமா போய் அவனைக் காப்பாத்தணுமே!’ என்று சவாலாக ஏற்றுக்கொண்டு மேலே வந்து சேர்ந்தார்.
சிவாஜி எடைக்கு குறையாமல் நான் இருப்பேன். தரையில் கிடந்த என்னைத் தூக்கி தோளில் போட்டுக் கொண்டு நகர்ந்தால் எதிரே மேல் தளம் உடைந்து நெருப்புடன் கீழே விழுகிறது. மீண்டும் என்னைத் தளத்தில் கிடத்தி, கடப்பாறை கொண்டு சுவரை இடித்துத் தள்ளி -மாடியிலிருந்து என்னைத் தூக்கியவாறு கீழே குதிப்பது படமாயிற்று.
செளகார், இந்தத் தவிப்பையெல்லாம் கீழே இருந்து பார்த்து எப்படியாவது இவர்கள் உயிரோடு வரவேண்டுமே என்று கடவுளை வேண்டிக் கொண்டிருப்பார்.
சிவாஜி கீழே குதித்ததும், அருகே ஓடி வருவார். மயக்கத்திலிருந்த நான் லேசாக முழிச்சுப் பார்ப்பேன். அப்போது, ‘முதலாளி!’ என்று நான் சொல்ல, ‘இல்லடா சத்யா! நான் உன் அப்பன். உன்னைப் பெத்த அப்பன்டா!’ என்பார். புரியாமல் விழித்துக் கொண்டிருப்பேன்.
குழந்தையில்லாமல் இத்தனை காலம் ஏங்கிய நாம் நம் வீட்டில் நம் குழந்தை வளர்ந்தது தெரியாமல் இருந்துவிட்டோமே என்று கண்ணீர் வடித்துக் கதறும் செளகார், என்னைப் பார்த்து, ‘சிவகுமார் - அம்மா என்று ஒரு வார்த்தை சொல்லிக் கூப்பிடு. படம் பூராவும் நான் உன்னைக் கொடுமைப்படுத்தி இருக்கிறேன். நீ சொல்லும் அம்மா என்ற வார்த்தை ரசிகர்களிடம் எனக்கு நல்ல பெயரை வாங்கித் தரும்!’ என்றார்.
ஸ்கிரிப்டில் இல்லாத அந்த ‘அம்மா’ என்ற வார்த்தையை நான் உச்சரித்துக் கட்டிப் பிடிப்பேன். என்ன அற்புதமான காட்சி, எப்படிப்பட்ட படம்.
தந்தை மகன் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளாமலே ஒருவர் மீது ஒருவர் பாசம் வைத்திருப்பதாகப் பல காட்சிகளை வடிவமைத்திருந்தனர்.
வேலைக்காரர்களுக்கு என்று பல படுக்கைகள் உள்ள ஒரு பெரிய குடியிருப்பு. அதிலே நானும், விகேஆர், மனோரமா உள்ளிட்ட எல்லா வேலைக்காரர்களும் தங்கி இருப்போம். என் படுக்கைக்கு மேலே என் தாயார் படத்தை நான் மாட்டி வைத்திருப்பேன். விகேஆர் அந்தப் படத்தை கழட்டி குப்பைத் தொட்டியில் போட்டு விடுவார்.
அம்மா படத்தை எங்கெல்லாமோ தேடி குப்பைத் தொட்டியில் கண்டுபிடித்த எனக்கு, அம்மாவை அவமானப்படுத்திய வீட்டில் இனி இருக்க வேண்டாமென்று கோபமாக வெளியேறுவேன்.
அப்போது காரிலிருந்து இறங்கிய சிவாஜி, ‘எங்கே போகிறாய் சத்யா?’ என்று கேட்க நான் விவரத்தைச் சொல்லிக் கிளம்புவேன். ‘நான் உன் அப்பா ஸ்தானத்திலிருந்து சொல்றேன். நீ உள்ளே போ. அவங்களை நான் கண்டிக்கிறேன்!’ என்பார், சிவாஜி. நான் சமாதானமாகி வீட்டுக்குள்ளே செல்வேன்.
அதேபோல செளகாரும் -சிவாஜியும் மோதிக் கொள்ளும் காட்சியில் சிவாஜி வீட்டைவிட்டு வேகமாக வெளியேறுவார். நான் ஓடிப்போய் அவரின் இரண்டு கால்களையும் இறுக்கிப் பிடித்து -அன்னிக்கு தகப்பன் ஸ்தானத்திலிருந்து சொல்றேன் உள்ளே போ சத்யா!’ன்னீங்க. இன்னிக்கு உங்க மகன் ஸ்தானத்திலிருந்து சொல்றேன். உள்ளே போங்க எஜமான்!’ என்று கெஞ்சுவேன். ரெளத்திரத்தின் உச்சத்தில் இருந்தவர், பகலவனைக் கண்ட பனி போல, அப்படியே சாந்தமாகி வீட்டுக்குள் போவார்.
ஊருக்குள் இருக்கும் குழந்தைகளையெல்லாம் வரவழைத்து பிறந்த நாள் கொண்டாடுவார் செளகார். ‘நமக்குன்னு ஒரு குழந்தை இருந்தா எவ்வளவு சந்தோஷமா இருக்கும்!’ என்று சிவாஜியிடம் கூறும்போது, சத்யன் அவர்கள் பின்னால் வேலை செய்து கொண்டிருப்பதாகக் காட்டுவார்கள்.
ஆபீஸுக்கு செளகார் அனுப்பும் சாப்பாட்டில் உப்பு சப்பு இல்லாமல் இருப்பதை சத்யனிடம் ஒரு நாள் சிவாஜி சொல்வார். டிரைவர் மேஜரின் மகள் பாரதியிடம் சொல்லி, காரசாரமாக ஒரு நாள் சாப்பாடு செய்து வாங்கி வந்து சிவாஜிக்கு சத்யன் பரிமாறுவான்.
இதை வந்து பார்த்த செளகார், ‘கண்டவங்க செஞ்சு தர்ற சாப்பாடுதான் உங்களுக்குப் பிடிக்குதா?’ன்னு கோபித்துக் கொள்வார்.
எனக்கும், பாரதிக்கும், ‘என் கேள்விக்கென்ன பதில்!’ என்ற டூயட் கொடைக்கானலிலும், மை லேடீஸ் கார்டனிலும் படமாக்கினார்கள். LOVE -ஐ லோவ்-னு சொல்ற பையன் இங்கிலீஷ் பீட்டுக்கு டான்ஸ் ஆடுவானா? -பாட்டைத் தூக்கு என்று சொல்லிவிட்டார் ஏவிஎம்.
முருகன் சகோதரர்கள் சிவகுமாருக்கு ஒரு பாட்டு இருந்தே ஆக வேண்டும் என்று வற்புறுத்தி, பேக் ரவுண்ட் மியூசிக்கில் வெஸ்டர்ன் ட்யூனை மாற்றி கிளாசிக்கல் இசையைப் பின்னணியாக இணைத்து பாரதியை நான் எங்கும் தொடாமல் படமாக்கிப் படத்தில் சேர்த்தனர்.
கிளைமாக்ஸில் சிவாஜியிடம் பிரம்படி வாங்கிய காட்சி பார்த்து பதறாத தாய்மார்களே இருக்க மாட்டார்கள். படப்பிடிப்புக்கு 3 நாள் முன்னாடியே மேக்கப் ரூமில் 6 பிரம்பு தொங்கியது. ‘எதற்கு’ என்று கேட்டேன். ‘சிவாஜி அடிக்கும் காட்சியில் ஒரு பிரம்பு ஒடிந்துபோனால், அடுத்த பிரம்பு தரவேண்டுமே, அதற்கு!’ என்றனர்.
சிவாஜி, அப்படி ஆவேசமாக எந்தப் படத்திலும் யாரையும் அடித்திருக்க மாட்டார். செளகாரும், பாரதியும் இரண்டு புறமும் அவர் சட்டையைப் பிடித்து இழுக்க, சட்டையும் கிழிந்துபோகும். அவர் அடியை மட்டும் நிறுத்தவில்லை. கடைசியாக எட்டி ஒரு உதை விடுவார். தெறித்துப் போய் பக்கத்திலிருக்கும் சோபா மீது தடுமாறி விழுந்தேன். வலது கை மூட்டு கழண்டு வந்துவிட்டது. அப்போது ராம் தியேட்டர் அருகே 24 மணி நேர ஆஸ்பத்திரி ஒன்றிருந்ததால் இரவு பத்து மணிக்குப் போய் மூட்டை திரும்ப மாட்டிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.
----
அனுபவிப்போம்...
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT