Published : 24 Nov 2015 11:43 AM
Last Updated : 24 Nov 2015 11:43 AM

பண்டிட் ஹீராலால் சாஸ்திரி 10

சுதந்திரப் போராட்ட வீரர்

சுதந்திரப் போராட்ட வீரரும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவருமான பண்டிட் ஹீராலால் சாஸ்திரி (Pandit Hirala# Shastri)பிறந்த தினம் இன்று (நவம்பர் 24). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள ஜாப்னர் என்ற இடத்தில் விவசாயக் குடும்பத்தில் (1899) பிறந்தார். அதே ஊரில் ஆரம்பக் கல்வி பயின்றார். ஜெய்ப்பூர் மஹாராஜா கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்து ‘சாகித்ய சாஸ்திரி’ பட்டம் பெற்றார். இத்தேர்வில் முதல் மாணவனாகத் தேர்ச்சியடைந்தார்.

# பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட வேண்டும் என்பது பள்ளிப் பருவத்திலேயே இவரிடம் கிளைவிரித்த சிந்தனை. அதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வேட்கையுடன் களமிறங்கினார். 1921-ல் இந்திய அரசுப் பணியில் சேர்ந்தார். கடும் உழைப்பு, செயல்வேகத்தால் உள்துறை, வெளியுறவுத் துறைகளின் செயலராக உயர்ந்தார்.

# அரசுப் பணியை 1927-ல் ராஜினாமா செய்தார். ஜெய்ப்பூரில் இருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ள வனஸ்தளி என்ற பின்தங்கிய கிராமத்தை தனது கனவுத் திட்டத்தின் களமாக அமைத்துக்கொண்டார். அங்கு ‘வனஸ்தளி வித்யாபீடம்’ என்ற கல்வி அமைப்பை 1929-ல் தொடங்கினார்.

# பலருக்கு பயிற்சி அளித்து, செயல்திறன் வாய்ந்த ஊழியர்கள் குழுவை உருவாக்கினார். கிராம மறுசீரமைப்புக்கான திட்டங்களை வகுத்து, சிறப்பாக செயல்படுத்தினார். இவர் உருவாக்கிய செயல்வீரர் கள் பல்வேறு பகுதிகளில் அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

# மக்களை ஒன்றுதிரட்டி சுதந்திரப் போராட்டத்துக்கு தயார்படுத்தினார். ஜெய்ப்பூர் ராஜ்ய பிரஜா மண்டலி என்ற குழுவில் இணைந்தார். இதன் பொதுச் செயலராக 2 முறையும், தலைவராக 2 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

# அரசியல் களத்தில் முழுமூச்சுடன் செயல்பட்டார். மக்களின் உரிமை களுக்காகப் போராடினார். 1939-ல் சத்தியாக்கிரகப் போராட்ட இயக் கத்தை வழிநடத்தியதால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

# சுதந்திர இந்தியாவில் ராஜஸ்தான் மாநில அரசு அமைக்கப்பட்டதும், அதன் முதல் முதல்வராக 1949-ல் பொறுப்பேற்றார். மன்னராட்சி நடந்த சமஸ்தானங்களை ஒருங்கிணைப்பதிலும் அப்பகுதிகளில் சிறந்த நிர்வாக அமைப்பை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகித்தார்.

# முதல்வர் பதவியை 1951-ல் ராஜினாமா செய்தார். பின்னர் 2-வது மக்களவையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏழை எளியவர்களின் முன்னேற்றத்தை மட்டுமே வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு இறுதி மூச்சுவரை பாடுபட்டார். தொலைநோக்கு சிற்பி, மக்களால் விரும்பப்படும் தலைவர் எனப் போற்றப்பட்டார். தனது எண்ணத்தை தெளிவாக, துணிச்சலுடன் வெளியிடக்கூடியவர்.

# கட்டுக்கோப்பான, வளமான ராஜஸ்தானை உருவாக்குவதற்கு வலுவான அடித்தளம் அமைத்ததில் முக்கிய பங்காற்றியவர். இவர் ஆரம்பித்த வனஸ்தளி வித்யாபீடம், பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிறுவனமாக இன்றளவும் செயல்பட்டு வருகிறது . நாடு முழுவதும் இருந்து மட்டுமல்லாமல், நேபாளம், இலங்கை, கம்போடியா, கென்யா, தான்சானியா, ஜப்பான், ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் இங்கு கல்வி பயில்கின்றனர்.

# இவரது சேவையைப் போற்றும் வகையில் மத்திய அரசு 1976-ல் அஞ்சல் தலை வெளியிட்டது. இறுதிவரை மக்கள் பணியாற்றிய ஹீராலால் சாஸ்திரி 75-வது வயதில் (1974) மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x