Last Updated : 12 Nov, 2015 11:33 AM

 

Published : 12 Nov 2015 11:33 AM
Last Updated : 12 Nov 2015 11:33 AM

இதுதான் நான் 1 - சந்தோஷ தருணங்கள்!

வணக்கம் சகோதர, சகோதரிகளே… நண்பர்களே!

நான் உங்க பிரபுதேவா. எனக்கு இப்போ 42 வயசு. ‘ஏம்பா உன்னோட வயசை எங்கக்கிட்டே சொல்றே’ன்னு கேக்காதீங்க. என்னோட அப்பாவுக்கு இந்த வயசு இருந்தப்போ எனக்கு கொஞ்சம் கொஞ்சமா ஞாபகம் துளிர் விடுற பருவம். எனக்கு ஆறு, ஏழு வயசு இருக்கும். அந்த நாட்களில் அப்பா கொஞ்சமும் பரபரப்பு குறையாம வேலை வேலைனு ஓடிக்கிட்டே இருந்தது கண்களில் அப்படியே நின்னுக்கிட்டிருக்கு.

இன்னைக்கு அப்பாவுக்கு வயசாயிடுச்சு. அதேபோல, அம்மாவுக்கும் வயசாயிடுச்சு. எனக்கு அதை பார்க்கப் புடிக்கல. என் கண் முன்னே சுறுசுறுப்பா சுத்திக்கிட்டிருந்த அப்பாவ சின்ன வயசில் எப்படி பார்த்தேனோ… அப்படியே இப்பவும் பார்க்கணும்னுதான் ஆசை. அம்மாவையும் அப்படித்தான் பார்க்கணும். அதெல்லாம் முடியுமா? அதனாலதானோ என்னவோ ஞாபகங்கள் மேல எனக்கு பெருசா பிரியம் இல்லாமப் போச்சு.

இன்னைக்கு சினிமா வேலையில பரபரப்பா பறந்துக்கிட்டிருந்தாலும் கொஞ்ச நேரம் கிடைச்சுட்டா, அந்த நேரத்தைப் பள்ளிக்கூட நண்பர்களோட செலவிடத் தோணும். அதுவும் நாலாம் கிளாஸ், அஞ்சாம் கிளாஸ், ஆறாம் கிளாஸ்ல கூட படிச்ச நண்பர்கள். ஒவ்வொருவருமே சின்ன வயசு நினைவுகளை ரயில் பெட்டி அளவுக்கு, உள்ளுக்குள் கொட்டி வச்சிருப்போம். நாங்களும் அப்படித் தான். அந்த வயதில் கலாட்டா பண்ணினது முதல் கவலையில்லாம சுத்தினது வரை பல விஷயங்களை சந்தோஷமாக அசை போடுவோம். அதையெல்லாம் நினைச்சுக் கிட்டே ஒவ்வொருவரும் அவங்க அவங்களோட வேலைய பார்க்க போயிடுவோம். ‘பால்ய வயதில் இருந்த சந்தோஷம் இப்போ இல்லையே’ என்ற நினைப்பு மனசில் எப்பவுமே எல்லாருக்கும் இருக்கத்தானே செய்யுது!

எவ்வளவோ பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் இன்னைக்கு யாரோட கவனிப்பும் இல்லாமல் தனிமைப்பட்டு கிடக்கிறாங்க. நான் சொல்றவங்க எல்லாம் மிகப்பெரிய ஜாம்பவான்கள் என்று கொண்டாடப்பட்ட பிரபல ஆளுமைங்க. வயதின் காரணமாக அவங்களை எல்லாம் இந்த சமூகம் கண்டு கொள்வதே இல்லை. ‘ஒரு காலத்தில் எவ்வளவு பிஸியாக இருந்தோம். பேச்சுத் துணைக்குக்கூட இன்னைக்கு ஆள் இல்லையே’ என்று அவங்க நெனைச்சுப் பார்க்குறது எவ்வளவு பெரிய வலி! பலருக்கும் இந்த நிலை வரும். ஏன் அதை யாருமே யோசிக்கிறதில்ல?

என் புது வீட்ல என்னோட போட்டோ வையோ, மற்ற யாரோட போட்டோவையோ நான் மாட்டி வைக்கவே இல்லை. அதை பார்க்குறப்போ, ‘எப்போ இது நடந்தது, எதுக்கு இப்படி நடந்தது’னு நினைவை கொடுக்கும். அதுவும் ஒருவித வலிதானே.

எப்பவுமே எனக்கு இதோ… இந்தத் தருணம்தான் பிடிச்சிருக்கு. ‘லிவ் தி மோமெண்ட்’ எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதை சரியா வாழ்ந்துட்டே இருப்போம்கிற முயற்சியிலதான் நான் இருக்கேன். பொதுவா, 10 வயசு நினைவுகளை 15 வயசில் பேசுவோம். அதுவொரு சுவாரஸ்யம். 20 வயசு அனுபவங்களை 30 வயதில் பேசுவதிலும் ஒரு சுவாரஸ்யம் இருக்கத்தான் செய்யும். ஆனால், அந்தந்த நேரத்தை அப்போதே சந்தோஷம் பொங்க அனுபவிக்கிறது எல்லாத்தையும்விட கொண்டாட்டம்தானே!

இப்படி ஞாபகங்கள் மேல அதிக ஆர்வம் காட்டாம இருந்த நான், ‘தி இந்து’ வாசகர்களாகிய உங்கக்கூட தொடர்ந்து இணைந்திருக்கப் போறேன். நானே இதுவரை புரட்டிப் பார்க்காத பக்கங்களை, எட்டிப் பார்க்காத நினைவுகளை, வாராவாரம் இந்தத் தொடர் மூலம் பார்க்கப் போறேன்.

‘என்கிட்டேயும் இவ்ளோ நினைவுகள் இருக்கு’ என்பதை உங்ககிட்டே சொல்லப் போறேன். நான் கடந்து வந்த நாட்களை உங்கக்கிட்டே படிக்கக் கொடுக்கப் போறேன்.

ஞாபகமே வேண்டாம்னு சொல்லிட்டு என்னோட நினைவுகளை சொல்லப் போறேன்னு ஷாக் ஆக வேண்டாம். என் நினைவுகள் எனக்கு மட்டும்தான் ஃபீலிங் கொடுக்கும். இது உங்களுக்கு சுவாரஸ்யமா இருக்கலாம், பிடித்துப் போகலாம், பிடிக்காமலும் போகும். ஒருவேளை சலிப்பை ஏற்படுத்தவும் வாய்ப்பு இருக்கு. ஏன், மனசை விட்டு விலக முடி யாத சுகமாகவும் இருக்கலாம். அப்படி நினைத்துத்தான் இதை எழுதப் போறேன்.

நடிக்கிறேன், நடனம் ஆடுறேன், படங்கள் இயக்குகிறேன். இப்போ படத் தயாரிப்பு வேலைகளும் நடக்குது. என்னோட சின்ன வயசுல இருந்தே பொழுதுபோக்கு விஷயங்களைத் தேடித்தான் மனசு ஓடிக் கிட்டிருக்கு. ஏதோ ஒரு வழியில் மத்தவங்கள சந்தோஷப்படுத்தும் விதமாத்தான் என் வேலை இருந்துவருது. அதில்தான் எனக்கு விருப்பமும்கூட. அப்படித்தான் இந்தத் தொடர் எழுதுவதையும் உங்கள சந்தோஷப்படுத்தும் விஷயமாக எடுத்துக்க வேண்டும். அது தான் இந்தத் தொடரின் அடிப்படையா இருக்க வேண்டும் என்றும் விரும்புறேன்.

‘இப்படி ஒரு தொடர் எழுதலாமே?’ என்று ‘தி இந்து’ கேட்டதும், கொஞ்சம்கூட யோசிக்காம எழுத ஒப்புக்கொண்டேன். என் மனதில் என்ன தோன்றுகிறதோ அந்த விஷயங்களை எல்லாம் உங்ககிட்ட பகிர்ந்துக்கப் போறேன். இதில் என்னுடைய புத்திசாலித்தனத்தை நீங்க எதிர்பார்க்கக் கூடாது. இங்கே நான் எதுவாகவும் இருக்கலாம். ஆனால், படிக்கும்போது உங்களுக்கு நூறு சதவீதம் கொண்டாட்டமாக இருக்கும். நிச்சயம் அதுக்கு நான் கேரண்டி.

உங்கள்,
பிரபுதேவா

- இன்னும் சொல்வேன்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x