Published : 22 Nov 2015 01:43 PM
Last Updated : 22 Nov 2015 01:43 PM
ஜான்சி போரில் முக்கிய பங்காற்றிய சுதந்திரப் போராட்ட வீராங்கனை ஜல்காரிபாய் (Jhalkaribai) பிறந்த தினம் இன்று (நவம்பர் 22). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* உத்தரப் பிரதேச மாநிலம் புந்தேல்கண்ட் பகுதியில் போல்ஜா என்ற கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் (1830) பிறந்தார். சிறு வயதிலேயே தாயை இழந் தார். இவரை ஒரு ஆண் போல வளர்த்தார் தந்தை. குதிரையேற்றம், வாள்வீச்சு உள்ளிட்ட அனைத்து கலைகளையும் இளம் வயதிலேயே கற்றுத் தேர்ந்தார்.
* ஒருமுறை காட்டில் தன்னைத் தாக்க வந்த புலியை கோடரியால் வெட்டிக் கொன்றார். ஒரு செல்வந்தரின் வீட்டில் திருடுவதற்காக ஆயுதங்களுடன் வந்த கொள்ளையர்களுடன் சண்டையிட்டு அவர்களை விரட்டியடித்தார். இச்சம்பவங்களால் புந்தேல்கண்ட் முழுவதும் இவரது புகழ் பரவியது.
* ஜான்சி ராணி லட்சுமிபாயின் பீரங்கிப் படையை சேர்ந்த பூரண் சிங்கை திருமணம் செய்துகொண்டார். ராணி போலவே தோற்றமளித்த இவரை ராணியிடம் அழைத்துச் சென்று அறிமுகப் படுத்தினார் கணவர். உருவ ஒற்றுமையைக் கண்டு வியந்த ராணி, இவரது போர்த்திறன், துணிச்சல், வீரத்தைக் கண்டு அதிசயித்தார். ஜல்காரிபாயையும் தன் படையில் சேர்த்துக்கொண்டார்.
* அதுமுதல் கடும் பயிற்சிகளை மேற்கொண்டு, அனைத்து போர் முறைகளிலும் சிறந்து விளங்கினார். துப்பாக்கி சுடுவது, பீரங்கிகளை இயக்குவதிலும் வல்லமை பெற்றார்.
* உருவத்திலும் வீரத்திலும் தன்னைப் போலவே இருக்கும் இவர் மீது ஜான்சி ராணிக்கு நேசம் பிறந்தது. ராணிக்கு உற்ற தோழியானார். முக்கிய முடிவுகள் எடுப்பதில் ராணிக்கு ஆலோசனை கூறும் நிலைக்கு உயர்ந்தார்.
* ஜான்சி கோட்டையின் மீது ஆங்கில அரசு பலமுறை படை எடுத்தது. ஒவ்வொரு முறையும் படையெடுப்புகளை ஜான்சி ராணியின் வீரப் படை சாமர்த்தியமாக முறியடித்தது. அதில் இவரது பங்கு முக்கியமானது.
* முதல் இந்திய சுதந்திரப் போரின்போது (1857), மிகப் பெரிய படையுடன் ஆங்கிலப் படை ஜான்சியை முற்றுகையிட்டது. கல்பி என்ற இடத்தில், மற்ற புரட்சிப் படைகளுடன் இணைவதாகத் திட்டமிட்டிருந்த ஜான்சி ராணிக்கு, பெரிய படையை எதிர்த்துப் போரிடுவது சவாலாக இருந்தது.
* ராணி வேடத்தில் தானே முன்னின்று போரிடுவதாக கூறினார் ஜல்காரிபாய். இதற்காக தந்திரமான வியூகம் வகுத்த அவர், கோட்டையில் இருந்து ராணியை தப்பவைத்தார். அதே நேரத்தில் ஜான்சி படைக்குத் தலைமை வகித்து பராக்கிரமத்துடன் போரிட்டார். ஆனால், மாபெரும் படையை வெகுநேரம் எதிர்த்துப் போராட முடியாமல் எதிரிகளிடம் பிடிபட்டார்.
* ஜான்சி ராணியை பிடித்துவிட்டதாக எக்காளமிட்டது ஆங்கிலப் படை. ‘உங்களை என்ன செய்வது?’ என்று ஆங்கில அரசு கேட்க, ‘தூக்கிலிடுங்கள்’ என்றார். பின்னர், அவர் ராணி அல்ல என்ற உண்மையை அறிந்த அரசு, அவரது வீரத்தையும் விவேகத்தையும் பாராட்டி விடுதலை செய்தது.
* ஜான்சி போரின்போது (1858) ஜல்காரிபாய் தனது 28-வது வயதில் வீரமரணம் அடைந்ததாக சில குறிப்புகள் கூறுகின்றன. அவர் 60-வது வயதில் 1890-ல் மறைந்ததாக சில குறிப்புகள் கூறுகின்றன. ஜல்காரிபாயின் வீரவரலாறு புந்தேல்கண்ட் பகுதி மட்டுமின்றி, உத்தரப் பிரதேசம் முழுவதும் நாட்டுப்புறப் பாடல்கள் வாயிலாக நூற்றாண்டு கடந்த பிறகும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT