Published : 03 Nov 2015 10:42 AM
Last Updated : 03 Nov 2015 10:42 AM
‘‘இந்த வருஷம் நம்ம சவும்யா பிறந்தநாளுக்கு ஒரு திட்டம் வெச்சிருக்கேன். சவும்யா பேர்ல நாம நடத்துற பிஸினஸ் நல்லா போகுது. அதனால சவும்யா பிறந்தநாளுக்கு அவளோட ஸ்கூல்ல படிக்கிற ஆயிரம் குழந்தைகளுக்கும் சாக்லேட்டோட நல்ல புத்தகம் ஒண்ணும் பரிசா கொடுக்கலாம்னு இருக்கேன்’’
‘‘அதெல்லாம் வேண்டாங்க. எப்ப வும் மாதிரி சவும்யாவோட வகுப்பு குழந்தைகள் நாப்பது பேருக்கு மட்டும் சாக்லேட் கொடுத்தா போதும்!’’ என்ற லதா மீது சற்று கோபம் வந்தது அன்பழகனுக்கு.
‘என்ன இவள் இப்படிச் சொல்கிறாள். பள்ளிக் குழந்தைகளுக்கு புத்தகம் கொடுப்பது தவறா?’ என்று யோசித்தவன், ‘‘ஏன் லதா? சவும்யா பிறந்த பிறகுதான் நமக்கு நல்ல நேரம் ஆரம்பிச்சுது. அவ பேர்ல பிஸினஸ் ஆரம்பிச்சேன். வீடு வாங்கினோம். கார் வாங்கினோம். இப்பகூட அவ பேர்ல ஒரு நல்ல காரியம் செய்யணும்னு நினைச்சுத்தான் செய்யுறேன். செய்யக்கூடாதா?’’ என்றான்.
‘‘சவும்யா பேர்ல நல்ல காரியம் செய்யுறது தப்பு இல்லீங்க. ஆனா அவளோட பிறந்தநாளுக்காக பள்ளிக்கூடத்துல படிக்கிற ஆயிரம் குழந்தைகளுக்கும் சாக்லேட், புத்தகம்னு கொடுக்கிறது சரியா தோணல. நமக்கு வசதி இருக்கு. அவளோட பிறந்தநாளுக்கு இப்படி செய்துடுவோம். ஆனா அவகூட வசதியில்லாத குழந்தைகள் எத்தனையோ பேர் படிக்கிறாங்க. அவங்களுக்கு பிறந்தநாள் வரும்போது, ‘நம்ம அப்பா, அம்மாவால இப்படி செய்ய முடியலயே’ன்னு வருத்தப்படுவாங்க. நீங்க ஸ்கூல்ல எல்லாருக்கும் புத்தகம் கொடுக்க ஆசைப்பட்டா, உங்க பேரைச் சொல்லாம பள்ளி முதல்வரைப் பார்த்து அதுக்கு ஏற்பாடு செய்யுங்க. அதுதான் சரி’’ என்றாள் லதா.
அவள் சொல்வதை பெருமிதத்தோடு கேட்டுக்கொண்டிருந்த அன்பழகன், ‘‘அப்படியே செய்துடலாம்!’’ என்றான் மகிழ்ச்சியுடன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT