Published : 12 Feb 2021 10:50 AM
Last Updated : 12 Feb 2021 10:50 AM
பேசும் சினிமா தமிழ்நாட்டில் அறிமுகமானதும், ஸ்டுடியோ அதிபர்கள்தான் ஆரம்பத்தில் அதை வளர்த்தெடுத்தவர்கள்.
மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர்தான் 1935-லேயே சேலத்தில் சொந்தமாக ஸ்டுடியோ கட்டி, படப்பிடிப்புத் தளம், புரொஜக்ஷன் தியேட்டர், எடிட்டிங் டிபார்ட்மெண்ட், உடையலங்காரப் பிரிவு, ஸ்டண்ட் பிரிவு, பிலிம் ப்ராசசிங் என ஒரு படத்தை எடுத்து முடிக்க வேண்டிய அத்தனை தொழில்நுட்பக் கருவிகளையும், கலைஞர்களையும் நியமித்திருந்தார்.
பட்சிராஜா ஸ்டுடியோ 1940-களின் தொடக்கத்திலேயே செயல்பட ஆரம்பித்துவிட்டது. ஸ்ரீராமுலு நாயுடுதான் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர். இவரைப் போலவே மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம் தயாரிப்பு, இயக்கம் இரண்டையும் கவனித்துக் கொண்டார்.
சென்ட்ரல் ஸ்டுடியோவில் ஜூபிடர் பிக்சர்ஸ் படங்கள் 1936-லேயே தயாராக ஆரம்பித்தன. ஏவிஎம் செட்டியார் 1949-ல் சென்னையில் சொந்தமாக ஏவிஎம் ஸ்டுடியோ கட்டி முடிக்கும் வரை கொல்கத்தாவுக்குப் போய்த்தான் 1935-ல் தனது முதல் படம் அல்லி அர்ஜூனா- அதைத் தொடர்ந்து ரத்னாவளி -நந்தகுமார் போன்ற படங்களைத் தயாரித்தார்.
ஜெமினி வாசன் 1940-ல்தான் ஜெமினி ஸ்டுடியோவை டைரக்டர் கே.சுப்ரமணியத்திடம் 86 ஆயிரத்து 467 ரூபாய் 9 அணா, 11 பைசாவுக்கு வாங்கிப் படம் எடுக்க ஆரம்பித்தார்.
ஸ்டுடியோ அதிபர்களிடமிருந்த சினிமா மெல்லக் கதாசிரியர்கள், டைரக்டர்கள், நடிகர்கள் கைக்கு மாறியது. டைரக்டர் ஸ்ரீதர் தனது 21-வது வயதிலேயே ‘ரத்தபாசம்’ படத்தின் கதை, திரைக்கதை ஆசிரியராக அறிமுகமானார்.
‘எதிர்பாராதது’, ‘அமர தீபம்’ போன்ற படங்களில் தனது படைப்புகளை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி சித்ராலயா என்ற சொந்த நிறுவனம் தொடங்கி, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’, ‘காதலிக்க நேரமில்லை’, ‘வெண்ணிற ஆடை’, ‘நெஞ்சிருக்கும் வரை’, ‘சிவந்த மண்’, ‘உத்தரவின்றி உள்ளே வா’ போன்ற நகைச்சுவையும் உருக்கமும் கலந்த படங்களைக் கொடுத்து முதல் படைப்பாளி, தயாரிப்பாளராக வெற்றி பெற்றார்.
அந்த வரிசையில் தொழில் நாடக கம்பெனியில் தயாரான கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுத ஆரம்பித்து சொந்தமாக ஸ்டுடியோ கட்டி ‘கற்பகம்’, ‘கை கொடுத்த தெய்வம்’, ‘பேசும் தெய்வம்’, ‘ஆதிபராசக்தி’ என்று கிராமியக் கதைகளில் இம்மண்ணின் பண்பாட்டு விழுமியங்களைத் திரைப்படங்களில் வெளிப்படுத்தினார்.
அதன் பிறகு ஏ.பி.நாகராஜன் நாடகங்களில் ஹீரோவாக நடித்துவிட்டு, 'நால்வர்', 'மாங்கல்யம்' போன்ற கதைகளில் திரைப்படக் கதாநாயகனாகவும் அறிமுகமானார். 'நான் பெற்ற செல்வம்', 'சம்பூர்ண ராமாயணம்', 'மக்களைப் பெற்ற மகராசி' போன்ற படங்களில் தன் பேனா முனையால் பெயர் எடுத்தவர். சொந்தமாக 'நவராத்திரி', 'திருவிளையாடல்', 'தில்லானா மோகனாம்பாள்', 'சரஸ்வதி சபதம்', 'திருமலை தென்குமரி', 'வா ராஜா வா' என்று புராண இதிகாசங்களைத் தூசி தட்டி தேனினும் இனிய தனது தமிழ் வசனங்களால், புகழ்மிக்க நட்சத்திரங்கள் உச்சம் தொடக் காரணமாக இருந்தார்.
டைரக்டர் கே.பாலசந்தரும் தொடக்கத்தில் நண்பர்களுக்குப் படத்தை டைரக்ட் செய்து கொடுத்து, கவிதாலயா என்ற நிறுவனத்தைத் தொடங்கி சொந்தமாக 'நெற்றிக்கண்', 'அக்னிசாட்சி', 'சிந்துபைரவி', 'புன்னகை மன்னன்', 'புதுக்கவிதை', 'நான் மகான் அல்ல' என்று பல படங்களைத் தயாரித்தார்.
நடிகர்களில் ஜெய்சங்கர்தான் முதன்முதலில் ஒரு டெக்னீஷியன் தயாரிப்பாளராக பிள்ளையார் சுழி போட்டவர். காஸ்ட்யூமர், ஒப்பனைக்கலைஞர், புரொடக்ஷன் மானேஜர் போன்றோரும் தயாரிப்பாளராகலாம் என்று குறைந்த பட்ஜட்டில், மிகக்குறைந்த நாட்களில் படத்தை முடித்து ஓரளவுக்கு கணிசமான லாபம் கிடைக்கும்படி படங்களில் நடித்துக் கொடுத்தார்.
அந்தக்காலகட்டத்தில்தான் பத்திரிகையாளர் ஒருவர் எந்த விதமான பொருளாதாரப் பின்புலமும் இல்லாமல் படம் தயாரிக்க வந்தார். ஜெமினி, செளகார் ஜானகி மூத்த ஜோடி. என்னோடு இளம் புதுமுகம் ஒன்று இணையாக நடித்தார்.
1966- டிசம்பரில் பூஜை போட்டார். அடுத்த ஆண்டு ஜனவரி 28-ம் தேதி படப்பிடிப்பை ஆரம்பித்தார். 4, 5 நாட்கள் படப்பிடிப்பு நடந்தன. அதன் பிறகு காணாமல் போய்விட்டார்.
இரண்டு ஆண்டுகள் கழித்து தலைகாட்டினார். எப்படியோ கொஞ்சம் பணம் புரட்டி விட்டேன். படத்தைத் தொடரலாம் என்றார்.
‘சித்தி’, ‘அண்ணாமலை’ என்ற புகழ்பெற்ற தொலைக்காட்சி தொடரை இயக்கிய சி.ஜே.பாஸ்கரின் தந்தைதான் அந்தப் படத்தின் இயக்குநர். தேர்ந்த எடிட்டரான ஜம்பு, ரொம்பவும் சாதுவானவர், அமைதியானவர். ஆந்திரா எல்லையோரம் உள்ள மதனப்பள்ளியில் அந்த புதுமுகத்துக்கும் எனக்குமான பாடலைப் படமாக்கினார்.
அடுத்த பிப்ரவரி மாதம் 18, 19 தேதிகளில் சாத்தனார் அணைப்பகுதியில் பாடல் காட்சியைப் படமாக்கலாம் என்று தேதி கேட்டார்.
தேதியைக் கொடுத்துவிட்டு, ‘இந்தப் படத்திற்கு இதுவரை ஏதாவது அட்வான்ஸ் எனக்கு கொடுத்துள்ளீர்களா?’ என்று கேட்டேன். ‘இல்லை’ என்று வெட்கத்துடன் சிரித்தார்.
‘போகட்டும். இப்போதாவது, ஏதாவது கொடுக்கும் உத்தேசம் உண்டா?’ என்று கேட்டேன். தயங்கித் தயங்கி பாக்கெட்டிலிருந்து கஷ்டப்பட்டு எடுத்து ரூ.1000 கொடுத்தார்.
வாங்கிக்கொண்டு, ‘அது சரி சாத்தனூர் பாடல் காட்சி படமாக்கப் போகிறீர்களே, பிலிம் நெகட்டிவ் வாங்கி விட்டீர்களா?’ என்று கேட்டேன்.(ஒரு ரோல் 1000 அடி, கருப்பு வெள்ளை நெகட்டிவ் பிலிம் விலை ரூ.250 அப்போது)
‘இல்லை!’ என்றார். ‘பிலிம் இல்லாமல் எப்படி அய்யா போவது? இந்தாருங்கள். 3 ரோல் நெகட்டிவ் வாங்கிக் கொள்ளுங்கள்!’ என்று அந்த ஆயிரத்தை நீட்டினேன்.
‘லபக்’கென்று வாங்கி பாக்கெட்டில் வைத்துக்கொண்டு புறப்பட்டார்.
சாத்தனூர் அணையை ஒட்டிய பூங்காவில் படப்பிடிப்பு. கேமரா, லைட்டிங் எல்லாம் தயார். எனக்கு மேக்கப் போட ஒப்பனையாளர் வந்து சேரவில்லை. வரவில்லையா- இவர் கூப்பிடவே இல்லையா? - தெரியாது.
படப்பிடிப்பு நம்மால் நிற்கக்கூடாது என்று பக்கத்துக் கடையில் திருப்பதி நாமக்கட்டியும், செந்தூரமும் வாங்கி வரச்சொன்னேன்.
ஓவியக்கலை பயின்றதில் உள்ள அனுகூலம், சாமர்த்தியமாக அந்த நாமக்கட்டியைத் தண்ணீரில் நனைத்து, தரையில் அரைத்து -அளவாக செந்தூரத்தை கலந்து தெருக்கூத்துக்கு மேக்-அப் போட்ட ஆள் மாதிரி நானே ஒப்பனை செய்து கொண்டேன். புருவம் வரைய நெருப்புப் பெட்டி வாங்கி, குச்சிகளை கொளுத்தி, அது எரிந்து முடிந்தவுடன் உள்ள கரியை புருவத்தில் தடவிக் கொண்டேன்.
பாடல் காட்சி தயாராகிவிட்டது. இந்த டான்ஸ் மாஸ்டர்கள் இருக்கிறார்களே. அவர்கள் கொடுக்கும் தொல்லை சொல்லி மாளாது.
தன் குருநாதனிடம் திட்டு வாங்கி, அடி வாங்கி, மாதக்கணக்கில், வருடக்கணக்கில் கற்றுக் கொண்ட நடனத்தை -ஏதோ ஒரு நாள் பாடல் காட்சியில் நடிக்க வரும் நடிகனிடம் -பம்பரம் போல சுழன்று ஆடிக் காட்டி பயமுறுத்துவார்கள்.
படப்பிடிப்பைப் பார்க்கும் ஆயிரக்கணக்கான பேர், ‘டான்ஸ் மாஸ்டர் என்ன பிரமாதமா ஆடறாரு. ஹீரோ தத்தி என்று சொல்லவைப்பதே சில மாஸ்டர்களின் நோக்கம்.
பாடல் இசையில் ‘டிங் டங் டடங்க்’ -என்று 3 விநாடிக்கு ஒரு மியூசிக் இருக்கும். கேமராவை WIDE ANGLE-ல் FRAME செய்து -கதாநாயகி தரையில் படுத்திருப்பாள். 10 அடி தூரத்திலிருந்து பாய்ந்து வந்து கதாநாயகன் அவளை மேலே தூக்க வேண்டும். டான்ஸ் மாஸ்டர் ‘ஸ்ட்ரெச்’ (STRECH) பேண்ட் போட்டிருப்பார். அது எப்படி வளைந்து ஆடினாலும் ரப்பர் போல வளைந்து கொடுக்கும்.
நான் போட்டிருப்பது COTTON PANT; TIGHT FIT. மாஸ்டர் அனாயாசமாக 3 விநாடியில் பாய்ந்து கதாநாயகியைத் தூக்க, ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.
10 அடி தூரத்திலிருந்து நான் பாய்ந்து வந்து, கதாநாயகியை தூக்கக் குனிந்தபோது, ‘டர்ர்ர்..!’ பேண்ட்டின் பின்பக்கம் 6 அங்குலம் கிழிந்து உள்ளே ஜட்டி தெரிந்தது. ரசிகர்கள் கைதட்டி கேலி செய்ய, அசடு வழிந்தவாறு பின்பக்கம் கையை வைத்து மறைத்துக் கொண்டே ‘VAN’க்குப் போய் -தையல் போட்டு, மாஸ்டரிடம் பக்குவமாக நிலைமையை விளக்கி, நிற்கும் கதாநாயகியை ஹீரோ தூக்குவது போல SHOT-ஐ மாற்றி எடுத்து முடித்தோம்.
இப்படியெல்லாம் துன்பப்பட்டு எடுத்த படம் 50 ஆண்டுகள் ஆகியும் இன்னும் வெளியாகவில்லை என்பதுதான் ஜோக்.
...
அனுபவிப்போம்...
தொடர்புக்கு: தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT