Last Updated : 24 Jan, 2021 03:11 PM

 

Published : 24 Jan 2021 03:11 PM
Last Updated : 24 Jan 2021 03:11 PM

யூடியூப் பகிர்வு: நல்ல நேசிப்புக்காக ஏங்கும் ''திரு.மதி'' குறும்படம்

தெருக்களில், கடை வீதிகளில், ரயில் பயணங்களில் திருநங்கைகளை எங்கு பார்த்தாலும் வெளிப்படையாக கேலி செய்வது, கேலியான பார்வையால் துளைப்பது போன்றவற்றை நம்மையறியாமல் செய்துவிடுகிறோம். ஆணாகவும் இன்றி பெண்ணாகவும் இன்றி ஆண்பெண்ணாக காட்சியளிப்பவர்களை ஒரு பொருட்டாகவே யாரும் எடுத்துக் கொள்வதில்லை. சமூகத்தின் விளிம்புநிலையில் ஒதுக்கப்பட்ட அவர்களையும் அவர்களது வாழ்க்கையையும் புரிந்துகொள்ள ஏனோ நமக்கும் நேரமில்லை.

திரு.மதி குறும்படம். திருநங்கையின் வாழ்வை, வலிமிக்க உண்ர்வுகளை சில மணித்துளிகளே எடுத்துச் சொல்கிறது. இன்று சமூகத்தில் அவர்களுக்கு சட்டரீதியாக சில அங்கீகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் திரைப்படங்களிலும் பொது இடங்களிலும் மக்கள் மத்தியிலும் என யதார்த்த வாழ்வில் நல்ல அங்கீகாரம் கிடைத்திருக்கிறதா என்றால் அது கேள்விக்குறிதான்.

இக்குறும்படத்தில் கடற்கரையில் தனது குறும்படத்திற்கான கதை ஒன்றை எழுத வந்தமர்கிறார் ஒரு இளைஞர். அவ்வழியே வரும் திருநங்கை அவரிடம் யாசகம் பெற்றுக்கொண்டு அப்படியே சென்றுவிடாமல் அருகில் வந்து அமர்கிறார். இடையூறு செய்யாமல் சில வார்த்தைகளை அந்த இளைஞரிடம் பேசுகிறார். கடற்கரையில் தனியே சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் இளைஞரிடம் என்ன ''லவ்வா'' என்றுவிட்டு ''எங்களையெல்லாம் பார்த்தா மனுஷங்களாகவே தெரியல இல்ல....'' என்று கேட்கிறார்.

''இல்ல தப்பா நினைச்சிக்காதீங்க நான் வேற ஏதோசிந்தனையில் இருந்தேன்'' என்கிறார் இளைஞர். ''என்ன கவிதை எழுதறீங்களா'' என்று மீண்டும் கேட்க ''இல்லை கதை எழுதறேன்.... நல்ல ஷாட் பிலிம் எடுக்க ஒரு லவ் ஸ்டோரி எழுதறேன். உணர்வுபூர்வமா வித்தியாசமா இது வேறலெவல்'' என்கிறார்.

''அப்படின்னா என்னை ஹீரோயினா போடுங்க. ஏன்னா உலகமே எங்களை வித்தியாசமாத்தானே பாக்குது'' என்று கூறும் திருநங்கை ''நாங்களும் பொண்ணுங்கதான் தெரியுமா ஆனா அது எங்களுக்கு மட்டுமே தெரியும்'' என்று கூறி தொடர்ந்து தனது காதல் வலிகளை பகிர்ந்துகொள்கிறார்.

யாரோ ஒரு இளைஞனின் பார்வையில் தென்படும் ஒரு திருநங்கை தன்னை அல்லது தங்களைப் போன்றவர்களின் பிரச்சினைகளைப் பேசும்போதே நம்மையும் காதுகொடுத்து கேட்கவைத்துவிடுகிறார் இயக்குநர். நம்மால் திருநங்கையின் ஆதங்கத்தைப் பொருட்படுத்தாமல் புரிந்துகொள்ளாமல் இருக்க முடியவில்லை.

திருநங்கைகள் காதலை மனசுக்குள்ளேயே வைத்து மருகிக்கிடப்பது ஒருவித சோக சுகம்தான்.... ,இவர்களுக்கும் காதல் ஏற்படும் என்பதும் அது தோல்வியில்தான் முடியும் என்பதும் கசப்பான உண்மை.

''எங்களோட காதல்லாம் முரளி படத்துல வர்ற காதல் மாதிரி சொல்லாமலே முடிஞ்சி போயிரும்.....'' என்று அந்த திருநங்கை சொல்லும்போது நம் மனம் சற்றே கரைந்துவிடுகிறது. திருநங்கை விடைபெற்று செல்வதையே பார்த்துக்கொண்டிருக்கும் இளைஞரின் மனதில் தோன்றுகிறது... நான் எடுக்கப்போகும் குறும்படத்தின் பெயர் 'மிஸ்டர். லேடி' (திரு.மதி) என்று.

இணையதளங்கள் பலவற்றிலும் காதல் என்ற பெயரில் எத்தனையோ குறும்படங்கள் கொட்டிக்கிடக்கின்றன. வேகாத கத்திரிகாய் கொத்சு கணக்காய் கிளறி வைத்திருக்கும் அத்தகைய குறும்படங்களைப் பார்க்கும்போது காதலாவது கத்திரிகாயாவது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. ஆனால் சுபாஷ், ரெஜினாவின் இயல்பான நடிப்பில் சதீஷ்ராஜ் லோகநாதன் சிறப்பாக இயக்கியுள்ள ''திரு.மதி'' குறும்படம் காதல் எனும் அனுபவத்தை ஒரு வித்தியாசமான குரலில் பதிவு செய்துள்ளது; ''அட'' என்று சொல்ல வைக்கிறது. ஒரு புதிய புரிதலும் கிடைக்கிறது.

சவுரவ் கோஷ் ஜுனோ இமாகுலேட் மென்மையான இசையில், சஜித் குமார் வி.யின் அழகிய ஒளிப்பதிவில் மனோகர் டி.எப்.டெக் படத்தொகுப்பில் கலாட்டா தமிழ் உருவாகிக்கியுள்ள 7 நிமிடங்களே உள்ள இச்சின்னஞ்சிறு குறும்படம் நல்ல பார்வையாளர்களை நிச்சயம் ஏமாற்றாது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x