Published : 06 Oct 2015 09:46 AM
Last Updated : 06 Oct 2015 09:46 AM
தமிழகத்தில் முதன்முதலாக அரசாங்க வேலைகளில் தலித்துகளுக்கும் பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு பெற்றுத் தந்தவர் பரமசிவ சுப்பராயன்.
1889-ல் நாமக்கல் மாவட்டத்திலுள்ள (அப்போது சேலம் மாவட்டத்தில் இருந்தது!) போச்சம்பாளையத்தில் பிறந்தார் சுப்பராயன். சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்ற பின்னர், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் அயர்லாந்து டப்ளின் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பில் பட்டம் பெற்றார். 1918-ல் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரானார்.
ஆரம்ப காலத்தில் நீதிக்கட்சிக்கு ஆதரவு தெரிவித்தாலும், பின்னர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பிரிவான சுயாட்சி கட்சிக்கு மாறினார். 1926-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, சென்னை மாகாணத்தின் முதல்வரானார். 1927-ல் இரட்டை ஆட்சி முறையின் நிறை குறைகளை ஆராய சைமன் குழுவை சென்னைக்கு அனுப்பியது ஆங்கில அரசு. அதை எதிர்த்து அமைச்சரவையில் பெரும்பாலானோர் குழப்பம் ஏற்படுத்த, சுப்பராயன் பதவி விலகினார். பின்னர், நீதிக்கட்சியினரின் ஆதரவால் முதல்வராக 1930 வரை தொடர்ந்தார். தன் பதவிக் காலத்தில் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டை அமல்படுத்தினார்.
தமிழ்நாடு அரிஜன் சேவா சங்கத்தின் தலைவரானார். 1930-களில் சேலத்தில் மதுவிலக்கை அமல்படுத்தினார். இந்தியா விடுதலைக்குப் பின்னர் 1949-வரை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினராகச் செயல்பட்டார். 1962-ல் மகாராஷ்டிரத்தின் ஆளுநராகப் பதவி வகித்தபோதே அக்டோபர் 6-ல் காலமானார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT