Published : 22 Jan 2021 10:58 AM
Last Updated : 22 Jan 2021 10:58 AM

சித்திரச்சோலை 32: ‘முற்பிறவி- மறுபிறவி!’

குமாரி பத்மினியுடன். திருமலை தென்குமரி படத்தில்

சிவகுமார்

1964-ஜூன் 8-ந்தேதி கன்யாகுமரிக்கு ஸ்பாட் பெயிண்டிங் செய்ய கிராமத்திலிருந்து கோவை வந்து தனுஷ்கோடி எக்ஸ்பிரஸ் பிடித்து மதுரை வந்து இறங்கினேன். விலைவாசி கடந்த 6 ஆண்டுகளில் ஏறினாலும் ஊரிலிருந்து மாமா அனுப்பும் 80 ரூபாய்க்கு மேல் ஒரு பைசா அதிகம் கேட்க மாட்டேன்.

மவுண்ட்ரோடு விக்டோரியா டெக்னிக்கல் இன்ஸ்டிட்யூட்டில் ஒரு ஆண்டுக்கு எப்படியும் 5, 6 ஓவியங்களை வெளிநாட்டினர் வாங்கிப் போவார்கள். 500 ரூபாய்க்கு ஓவியம் விற்றால் 20 சதவீதம் கமிஷன் போக 400 ரூபாய் கிடைக்கும்.

குருவி சேர்ப்பது போல இவற்றை சேர்த்து வைத்து கோடை விடுமுறை கிருஸ்துமஸ் விடுமுறை -தசரா விடுமுறை நாட்களில், ஏதாவது ஒரு புராதன கோயில்கள் உள்ள ஊரைத் தேர்வு செய்து அங்கு போய் மிகக்குறைந்த செலவில் எங்காவது ஓசியில் கூட தங்கி ஓவியம் தீட்டி வருவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தேன்.

மதுரையில் ஒரு நாள் தங்கி விட்டு, நண்பர் சந்திரசேகரும், நானும் 10-ந்தேதி நெல்லை எக்ஸ்பிரஸ் பிடித்து பிற்பகல் 1.45-க்கு திருநெல்வேலி போய்ச் சேர்ந்தோம். அங்கிருந்து அடுத்த பஸ் பிடித்து நாகர்கோயில் வழி கன்யாகுமரிக்கு 5.30 மணி அளவில் சென்று சேர்ந்தோம்.

தேவஸ்தான அறை 2 ரூபாய் வாடகையில் பிடித்து உடமைகளை மட்டும் உள்ளே வைத்துவிட்டு, வெளியில் காற்றோட்டமாக வெராண்டாவில் படுத்துக் கொண்டோம்.

நான் வரைந்த கன்யாகுமரி ஓவியம்

ஜூன் 14-ந்தேதி குமரி அம்மன் கோயிலை ஒட்டிய காம்பவுண்ட் சுவற்றில் வந்து ஆக்ரோஷமாக மோதும் அலைகளை வரைந்தோம்.

காந்தி மண்டபத்திலிருந்து மேற்கே நடந்து நீச்சல் குளத்துக்கு இடையில் ஒரு இடத்திலிருந்து பார்த்தால், இந்த மகா சமுத்திரத்து அலைகள் பிளந்த பாறை ஒன்றின் மீது நுரைகள் கடல் மட்டத்துக்கு மேல் பறப்பதைப் பார்த்து பரவசமடைந்து 2 மணி நேரம் வரைந்தேன். புகைப்படம் எடுத்து வந்து வரைவதல்ல இது. எந்த அலையும் நாம் படம் வரைவதற்காக நின்று ‘போஸ்’ (POSE) கொடுக்காது. 2 மணி நேரத்தில் ஆயிரக்கணக்கான அலைகள் வந்து பாறையில் மோதி விட்டு செல்லும். ஒரு அலையை மனதில் பதிய வைத்து அதற்கேற்ப வந்து போகும் அலைகள் நுரைகளில் தெரியும் வண்ணங்களை ஓவியத்தில் தீட்ட வேண்டும்.

ஓவியர்களுக்கு -வாட்டர் கலர் ஓவியர்களுக்கு - இது சவாலான இடம்.

அடுத்தநாள் ‘BATHING GHAT’ என்று சொல்லப்படும் சதுரமான கிணறு போன்ற இடத்தில் அமர்ந்து வடமேற்காகப் பார்த்து காந்தி மண்டபத்தின் தோற்றம், பின்னால் கேப் ஹோட்டல் கேரளா கெஸ்ட் ஹவுஸ் இரண்டையும் ‘கம்போஸ்’ செய்து வரைந்தேன்.

இன்னொரு ஓவியம் காந்தி மண்டபத்திலிருந்து ஒரு பர்லாங் தூரத்தில் மேற்கே கட்டுப்பட்டுள்ள நீச்சல் குளத்தருகே அமர்ந்து, கிழக்கே தெரியும் காந்தி மண்டபம், குமரி அம்மன் கோயில் மதில் சுவர், ‘பேத்திங் காட்- விவேகானந்தர் பாறை (இப்போது அதன் மீது விவேகானந்தர் மண்டபம் கட்டப்பட்டுள்ளது) இவற்றை கம்போஸ் செய்து சமுத்திர அலைகள் கரையைத் தழுவும் காட்சிகளை வரைந்தேன்.

ஜூன் 13-ந்தேதி மாலை 5 மணி பஸ்ஸில் நாகர்கோயில் பயணமானோம். திரும்பிய பக்கமெல்லாம் தென்னந்தோப்பும் வயல்வெளிகளும் சொர்க்க பூமியாக அந்த இடத்தைக் காட்டியது.

நான் வரைந்த கன்யாகுமரி ஓவியம்

தென்னந்தோப்பை எப்படியும் வரைந்தே தீருவது என்று முடிவு எடுத்து நான் நாகர்கோயிலுக்கு முன்னால் கோட்டார்-பறக்கை ரோடு சந்திப்பில் இறங்கி விட்டோம்.

சூரியன் மறைந்து லேசாக இருட்ட ஆரம்பித்து தெருவிளக்குகள் விழித்துக் கொண்டன. ஒரு சிறு ஓட்டலில் தங்க இடம் கேட்டோம். அறைகள் வாடகைக்கு இங்கு கிடையாது. இது உணவு விடுதி என்றால் கல்லாப்பெட்டி மனிதர்.

விறகுத் தொட்டி ஒன்றில் போய் இரவு மரங்களுக்கு நடுவில் எங்காவது படுக்க இடம் கொடுக்க முடியுமா என்று கேட்டேன். ‘இரவில் நாயை அவிழ்த்து விட்டுவிடுவோம். புது ஆளைக் கண்டால் அது தொடை சதையை பிய்த்து விடும்!’ என்றார்.

நன்றாக இருட்டி விட்டது. பக்கத்து சலூனிலிருந்து முடிதிருத்தும் கலைஞர் வந்து, ‘என்ன விஷயம்? ரொம்ப நேரமாக இங்கேயே நிற்கிறீர்களே?’ என்றார்.

‘வந்தாரை வாழ வைக்கும் தங்கத்தமிழ் நாட்டில் சொந்தக்காரன் தங்கவே இடம் கிடைக்கவில்லை!’ என்று வசனம் பேசினேன்.

‘சலூனுக்கு மேலே இரண்டு அறைகள் காலியாக உள்ளன. முதலாளியை கூட்டி வருகிறேன்!’ என்று போனவர், பத்து நிமிடத்தில் உடம்பெல்லாம் திருநீறு பட்டை அடித்து நெற்றியில் குங்குமமும் வைத்து கறுப்பான ஒரு அன்னக்காவடி ஆசாமியை அழைத்து வந்தார்.

‘இவர்தான் எங்க கட்டடத்து முதலாளி!’ என்றார். பாதம் வரை குனிந்து கும்பிடு போட்டு அவரோடு போனோம். மாடியில் அறையைக் காட்டினார். வாடகை எவ்வளவு என்றேன். 30 ரூபாய் என்றார். ‘ஒரு நாளைக்கா, மாதவாடகை 30 ரூபாயா?’ என்றேன்.

‘‘என்னய்யா கிண்டல் பண்றே? ஒரு நாளைக்கு 30 ரூபாய்!’’ என்றார். உடனே எனக்கு கடும் கோபம் வந்து விட்டது.

‘‘அய்யா! உங்களுக்கு பிள்ளைகள் இருக்காங்களா?’’

‘‘ 2 பசங்க. ஒருத்தன் எஸ்எஸ்எல்சி படிக்கறான். ஒருத்தன் 8-வது!’’ - என்றார்.

‘‘அவங்க சென்னை வரட்டும் கவனிச்சுக்கறேன்!’’ என்றேன்.

‘என்ன, என்ன?’’ என்றார்.

‘‘மேல படிக்க அவங்க மெட்ராஸ் வந்தா நான் கவனிச்சுக்கறேன்!’’ என்றேன்.

‘‘என்னய்யா பயமுறுத்தறே?’’

‘‘பின்ன என்னய்யா! படிக்கற புள்ளைங்க நாங்க. பெத்தவங்க வாயைக் கட்டி வயித்தக்கட்டி ஏதோ கொஞ்சம் காசு கொடுத்து எங்களை படிக்க வைக்கறாங்க. எங்ககிட்ட போய் ஒரு நாளைக்கு 30 ரூபாய் கேக்கறீங்களே. இது நியாயமா?’’

‘‘சரி இப்ப நீ எவ்வளவு தரமுடியும்னு சொல்லு!’’

‘‘என்னைக் கேட்டா? நீங்க சும்மா தங்க வச்சு, 3 வேளை சோறும் போட்டு மரியாதை பண்ணணும்!’’

‘‘அதிகமா பேசறே! தொலைஞ்சு போகுது ஒரு நாளைக்கு ரூ. 3 கொடு!’’ என்றார்.

வாய் உள்ள புள்ளைதானே பொழைக்கும்.

இரவு தங்கிக் கொண்டு அதிகாலை சுசீந்திரம் செல்லும் வழியில் அழகான தென்னந்தோப்பு ஒன்றைக் கண்டுபிடித்து முதன் முதலாக படம் முழுவதும் தென்னை மரங்களாக வரைந்தேன்.

பிற்பகல், எங்கள் அறையிலிருந்து கிழக்காக சுசீந்திரம் செல்லும் தார்சாலை, இருபக்கமும் தென்னந்தோப்பு அழகாக காட்சியளிக்கவே அதை வரைய ஆரம்பித்தோம். திடீரென ஒருவர் வந்தார்.

‘‘நீங்க மெட்ராஸ்தானே?’’

‘‘ஆமாம்!’’

‘‘மெட்ராஸ்ல, புதுப்பேட்டை முதல் தெருதானே?’’

‘‘ஆமா!’’

‘‘வீட்டுக்கு முன்னால கடப்பைக் கல்லு மேல உட்கார்ந்து படம் வரைவீங்களே, அது நீங்கதானே?’’

‘‘அட, ஆமாப்பா! நீங்க யாரு?’’

‘‘என்னைத் தெரியலியா சார்? நான் டிராஃபிக் கான்ஸ்டபிள் உங்க வீட்டுக்கு அடுத்து 4-வது வீட்டில் குடியிருந்தேன். என் பேர் அண்ணாமலை. சொந்த ஊர் இது!’’ என்றார்.

பக்கத்திலே உள்ள குடிசை வேய்ந்த டீக்கடைக்கு அழைத்துப் போனார். கைமுறுக்கு, எள்ளுருண்டை, தண்ணீர் கலக்காத பசும்பால் அரை டம்ளர் வாங்கிக் கொடுத்தார். அந்த ருசியை அடிக்க இதுவரை எந்த தின்பண்டமும் சாப்பிட்டதில்லை..

நான் வரைந்த கன்யாகுமரி ஓவியம்

அண்ணாமலை, தென்காசியில் போய் தங்க நாராயணதாஸ் காந்தி என்ற தன் நண்பர் விலாசம் கொடுத்தார். தென்காசியில் நாராயணதாஸ் வீடு கண்டுபிடித்து விட்டோம். அவர் தனது நண்பர் முகைதீன் பிச்சை புதிதாக கட்டியுள்ள பங்களாவில் மாடியில் ஒரு அறை ஒதுக்கித் தந்தார்.

‘‘ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே -குற்றால அழகை நாம் காண்பதற்கு வண்ணக்கிளியே!’ என்று பாவை விளக்கு படத்தில் சிதம்பரம் ஜெயராமன் அருமையாக ஒரு பாட்டு பாடுவார்.

அதைக் கற்பனை செய்து கொண்டு குற்றலாம் வந்தால் அருவி வறண்டு கிடந்தது. நூலிழை போல வெள்ளையாக நீர் அருவியில் வந்து கொண்டிருந்தது. பெரிய ஏமாற்றம்.

இந்த ஒரு இரவு இங்கே எப்படியாவது தங்கி, மழை வருகிறதா என்று பார்ப்போம். இல்லாவிடில் மதுரை கிளம்பி விடலாம் என்று தீர்மானித்தோம்.

என் நண்பர் சந்திரசேகர். குற்றாலத்திலிருந்த ஓட்டல் முதலாளியிடம், ‘‘வருங்காலத்தில் சினிமாவில் நடிக்கப் போகிறவர் இவர், இன்றிரவு உங்கள் ஹோட்டலில் தங்க இடம் கொடுங்கள்!’’ என்று கேட்டார்.

அது உணவு விடுதி. தங்கும் அறைகள் ஏதும் இல்லை. பரவாயில்லை. எல்லோரும் சாப்பிட்டுப் போன பிறகு கல்லாப்பெட்டியோரம் நாங்கள் படுத்துக் கொள்கிறோம் என்று பேசி முடிவு செய்து இரவைச் சந்தித்தோம்.

அன்று இரவு மலைப்பகுதியில் சுமாராக மழை பெய்ததால் அருவியில் நீர் கொஞ்சம் கண்ணுக்குத் தெரியும் அளவு வீழ்ந்து கொண்டிருந்தது.

நேரடியாக அருவியை வரைய தண்ணீர் பிரவாகம் எடுத்து பரவலாக வர வேண்டும்.- அதற்கு வாய்ப்பில்லை என்பதால் குளியல் அறையை ஒட்டி சிவப்பு பூ பூத்த வாகை நாராயண மரம் ஒன்று பரந்து விரிந்து இருந்தது. அதை மையப்படுத்தி-கிளைகளின் இடையே தூரத்தில் அருவி தெரிவது போல சாமர்த்தியமாக படத்தை நானும் சந்திரனும் வரைந்து முடித்தோம்.

ஜூன் 19- ந்தேதி கடைசியாக இந்தப் படத்தை வரைந்து விட்டு மதுரைக்கு பஸ் பிடித்து பயணத்தை துவங்கினோம்.

7 ஆண்டு படப்பிடிப்பில் கடைசியாக நான் பயணித்து ஓவியங்கள் தீட்டிய இடம் கன்னியாகுமரி, குற்றாலமும்தான்.

1964-ல் எந்த இடத்தில் உட்கார்ந்து காந்தி மண்டபத்தை ஓவியமாகத் தீட்டினேனோ, அதே இடத்தில் 6 ஆண்டுகள் கழித்து 1970-ல் திருமலை தென்குமரி’ படத்தில் குமாரி பத்மினியுடன் காதல் காட்சியில் நடிக்கும் பேறு பெற்றேன்.

அது முற்பிறவி - இது மறுபிறவி போல் உணர்ந்தேன்.

------

ஓவியர் சந்திரசேகர் பற்றி...

1959-ல் ஓவியக்கல்லூரியில் நான் சேர்ந்த நாள் முதல் இன்று வரை என்னோடு தொடர்பில் இருக்கும் நண்பர்

ஓவியர் சந்திரசேகர். அவர் கமர்ஷியல் பிரிவு எடுத்துப் படித்தார். நான் ஃபைன் ஆர்ட்ஸ் படித்தேன். ஆசிரியர் எனக்கு சந்தானராஜ், அவருக்கு கிருஷ்ணாராவ். ஆனால் ஜெனரல் டிராயிங் என்ற முதல் இரண்டாண்டு படிப்பில் எல்லோரும் ஒரே வகுப்பு மாணவர்கள். முதலாண்டுக்கு முருகேசன் மாஸ்டர், இரண்டாம் ஆண்டுக்கு அந்தோணிதாஸ் ஆசிரியர்கள்.

ஓவியர் சந்திரசேகர்

ஓவியக்கலையில் ‘தியரி’ என்று எதுவும் சொல்லித்தரப்படவில்லை. பிராக்டிகல்தான். மனித உருவங்களைப் பார்த்து வரைவது, இயற்கை காட்சிகளை, தெருக்களை, கடல் அலைகளை வரைவது, நவீன ஓவியம் தீட்டுவது என்று தங்களுக்கு பிடித்ததை வரைவார்கள்.

காலை நேரம் கட்டாயம் மாடல் ஸ்டடி இருக்கும். வயதான பாட்டி, தாத்தா, நடுவயதுப் பெண், மரம் அறுக்கும் தொழிலாளி, 10 வயதுப் பெண்- என்று வீதியில் அலையும் மக்களை அழைத்து வந்து போஸ் செய்யச் சொல்வார்கள். காலை 9 முதல்1 மணி வரை மாடலுக்கு 10 ரூபாய் அரசு தரும். ஒரு வாரம் வந்தால் ரூ. 50 கிடைக்கும்.

பிற்பகலில் பிடித்தமானதை வரையலாம். அந்த நேரங்களில் சென்னையின் பல பாகங்களிலும், ஸ்பாட் பெயிண்டிங் செய்ய கிளம்பி விடுவேன். தசரா விடுமுறை, கோடை விடுமுறையில் தஞ்சை, திருச்சி , மதுரை, கன்யாகுமரி, திருப்பதி என்று நான் வெளியூர்களில் ஓவியம் தீட்டச் செல்லும் போது சந்திரசேகர் தவறாது கலந்து கொள்வார். மகாபலிபுரம், மதுரை, கன்யாகுமரி, குற்றாலம் எல்லாம் உடன் வந்துள்ளார். அவர் ஓவியங்கள் தரமாக இருக்கும்.

சந்திரசேகர் வரைந்த ஓவியங்கள்

கல்லூரி படிப்பு முடிந்ததும், ஃப்ரீலேன்சராக கல்லூரிகள் பதிப்பிக்கும் புத்தகங்களுக்கு ஓவியங்களும், முகப்பு அட்டையும் தயாரித்துக் கொடுத்தார். சென்னை தமிழ்ப் பதிப்பாளர்களுக்கு -தமிழ்நாடு குடும்பக்கட்டுப்பாடு வாரியம் -நாகர்கோயில், கன்யாகுமரியில் நடத்திய விளம்பரக் கண்காட்சிக்கு ஓவியங்கள் தீட்டித் தந்தார்.

1971 -முதல் 1992 வரை 22 ஆண்டுகள் மெட்டல் பாக்ஸ் நிறுவனத்தில் சீனியர் ஓவியராக பணியாற்றினார்.

சந்திரசேகர் வரைந்த ஓவியங்கள்

2009-ல் மகாபலிபுரத்தில் ‘ஒன் மேன் ஷோ’! வின்யாசா ஆர்ட் காலரியில் 2007 மார்ச் முதல் மே வரை 2 மாதங்கள் ஒன் மேன் ஷோ தேர்வுக்குழு உறுப்பினராக இருந்தவர். மீனம்பாக்கம் -கேந்திர வித்யாலயா, கிழக்கு, மேற்கு முகப்பேரில் உள்ள வேலம்மாள் பள்ளி, சின்மயாநகர்பள்ளி, அகர்வால் வித்யாலயா - என நிறைய பள்ளிகளுக்கு சென்றவர்.

CHILDREN‘S DAY STAMP DESIGN தபால் துறைக்கு வரைந்து FR. ZEROME D SOUZA CENTINARY STAM DESIGN இவர் வரைந்து கொடுத்ததுதான்.

சந்திரசேகர் வரைந்த ஓவியங்கள்

இவரது திறமைக்கும் உழைப்புக்கும் வெளிநாடுகளில் பிறந்திருந்தால் குறைந்தபட்சம் விசாலமான ஒரு பண்ணையும், நடுவில் ஒரு அழகிய பங்களாவும் வாங்கியிருக்கலாம்.

ஆனால் 35 ஆண்டுகள் வாடகை வீட்டில் வசித்து 2009-ல் சென்னையின் புறநகர்ப்பகுதியான குளத்தூரில் 900 சதுர அடியில் ஒரு ஃபிளாட் வாங்கி குடியிருக்கிறார். ஒரு மகன் பத்து வயது தாண்டி அகால மரணமடைந்து விட்டான் மகள் பள்ளி ஆசிரியை. மாப்பிள்ளை சாஃப்ட் வேர் எஞ்சினியர். பேரக் குழந்தைகள் இரண்டு எளிமையில் இனிமை காண்பவர் சந்திரசேகர்.

---

தரிசிப்போம்...

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x