Published : 03 Oct 2015 10:30 AM
Last Updated : 03 Oct 2015 10:30 AM

ஜான் கோரி 10

குளிர்பதனத் தொழில்நுட்பத்தின் (ஏர் கண்டிஷன்) தந்தை என்று போற்றப்படும் ஜான் கோரி (John Gorrie) பிறந்த தினம் இன்று (அக்டோபர் 3). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலம் சார்லஸ்டன் நகரில் (1803) பிறந்தார். நியூயார்க் அருகே ஃபேர்ஃபீல்டு நகரில் மருத்துவம் பயின்றார். 1827-ல் பட்டம் பெற்று, மருத்துவப் பணியில் ஈடுபட்டார்.

l புளோரிடாவின் அப்பலாச்சிகோலா என்ற இடத்தில் குடியேறினார். அங்கு 2 மருத்துவமனைகளில் பணிபுரிந்தாலும் வருமானம் போதுமானதாக இல்லை. இதனால் போஸ்ட் மாஸ்டர், நோட்டரி பப்ளிக், வங்கி அதிகாரி போன்ற பணிகளில் ஈடுபட்டார். ஒரு ஹோட்டலும் நடத்தினார். மக்கள் மத்தியில் பிரபலமானவர் 1837-ல் அந்த ஊரின் மேயரானார்.

lசமுதாய சேவைகள், வர்த்தகத்தில் நாட்டம் செலுத்தினார். வெப்ப மண்டல நோய்கள் குறித்த ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார். சுகாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டார். சமரச மைய நீதிபதியாக 1841-ல் நியமிக்கப்பட்டார்.

l அப்பகுதியில் மலேரியா, மஞ்சள் காமாலை வேகமாகப் பரவின. மற்ற வேலைகளை விட்டுவிட்டு, நோய்களை குணப்படுத்தும் முயற்சியில் முழு மூச்சாக இறங்கினார். இதற்கான சிகிச்சை முறையைக் கண்டறிவதில் முழு நேரத்தையும் செலவிட்டார்.

l காற்று மாசுபாடு காரணமாக மலேரியா பரவுவதாக நம்பப்பட்ட காலம் அது. (கொசுவே காரணம் என்று பின்னாளில் நிரூபிக்கப்பட்டது.) நோயாளிகளின் அறைக்குள் மாசுக் காற்றை வரவிடாமல் தடுத்து, அந்த அறையைக் குளிர்வித்து வெப்பத்தைக் குறைத்தால் காய்ச்சலின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தலாம் என்று எண்ணினார்.

l புளோரிடாவில் குளிர்காலம் தவிர மற்ற நேரங்களில் பனிக்கட்டிகள் கிடைப்பது அபூர்வம். எனவே பனிக்கட்டி தயாரிப்புக் கருவியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். மருத்துவத் தொழிலை விட்டுவிட்டு, பனிக்கட்டிக் கருவிக்கு இறுதி வடிவம் கொடுப்பதில் முழுமூச்சாக இறங்கினார்.

l மலேரியா, அறைகளைக் குளிரூட்டும் முறைகள், பனிக்கட்டி உற்பத்தி தொடர்பாக பல கட்டுரைகளை வெளியிட்டு வந்தார். இவரது கட்டுரைகள் பிரபல அறிவியல் இதழ்களில் வெளிவந்தன.

l பல ஆண்டுகால ஆராய்ச்சிக்குப் பிறகு, பனிக்கட்டிகளை உருவாக்கி அறையைக் குளிரூட்டக்கூடிய நீராவியில் இயங்கும் கருவியைக் கண்டறிந்தார். அதற்கு 1848-ல் காப்புரிமை பெற்றார். இந்த சாதனத்தை அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்வதற்கான நிதியுதவி பெற 7 ஆண்டுகள் பாடுபட்டார். ஆனால், அவரது முயற்சி வெற்றி பெறவில்லை. சொந்தக் கையிருப்பையும் இழந்தார்.

l தற்போதைய அனைத்து விதமான ஏர் கண்டிஷன் கருவிகளின் பெரும்பாலான நுட்பங்கள், முதன்முதலாக இவர் கண்டறிந்த குளிரூட்டும் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டவையே. குளிர்பதன இயந்திரம், பனிக்கட்டி தயாரிக்கும் வழிமுறை, ஏர் கண்டிஷன் கருவிகளை முதன்முதலில் உருவாக்கியவர் என்ற பெருமையைப் பெற்றார்.

l பொருளாதாரரீதியில் சற்று நொடித்துப்போனாலும் கடைசி வரை மனிதநேயத்துடன் விளங்கிய ஜான் கோரி, உடல்நலம் பாதிக்கப்பட்டு 52-வது வயதில் (1855) மறைந்தார். அமெரிக்காவில் பல அமைப்புகளுக்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. புளோரிடாவில் இவரது சிலை அமைக்கப்பட்டுள்ளது. இவர் கண்டுபிடித்த பனிக்கட்டிக் கருவி புளோரிடாவின் ஜான் கோரி மியூசியம் ஸ்டேட் பார்க்கில் வைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x