Published : 27 Oct 2015 10:48 AM
Last Updated : 27 Oct 2015 10:48 AM

தியோடர் ரூஸ்வெல்ட் 10

அமெரிக்க அதிபராக மிக இளம் வயதில் பொறுப்பேற்றவரும், சிறந்த எழுத்தாளருமான தியோடர் ரூஸ்வெல்ட் (Theodore Roosevelt) பிறந்த தினம் இன்று (அக்டோபர் 29). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியில் செல்வச் செழிப்பான குடும்பத்தில் (1858) பிறந்தார். தந்தை வியாபாரி. பெரும்பாலும் வீட்டிலேயே கல்வி கற்றார். தளராத முயற்சியால் தனது பலவீனங் களையும் பலமாக மாற்றிக் கொண்டது இவரது தனிச் சிறப்பு.

l விலங்கியலில் அதிக நாட்டம் கொண்டிருந்தார். இறந்த உயிரி னங்களை சேகரித்து வீட்டிலேயே பதப்படுத்தி வைத்தார். அதற்கு ‘ரூஸ்வெல்ட் மியூசியம் ஆஃப் நேச்சுரல் ஹிஸ்ட்ரி’ என்று பெய ரிட்டார். அதுபற்றி ஆராய்ச்சி செய்து 9-வது வயதில் ‘தி நேச்சுரல் ஹிஸ்டரி ஆஃப் இன்செக்ட்ஸ்’ என்ற கட்டுரையை எழுதினார்.

l குத்துச்சண்டையிலும் ஈடுபாடு உண்டு. தந்தை தந்த உற்சாகத்தால் பல நாடுகளுக்கும் சென்று போட்டிகளில் கலந்துகொண்டு விருதுகளைப் பெற்றார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். கொலம்பியா சட்டக் கல்லூரியில் சேர்ந்தவர், பாதியிலேயே வெளியேறி குடியரசு கட்சியில் இணைந்தார்.

l மனைவியும் மகளும் அடுத்தடுத்து இறந்த பிறகு, தனிமையில் வாழ்ந்தார். ஏராளமான புத்தகங்களைப் படித்தார். 1888-ல் நடந்த அதிபர் தேர்தலில் பெஞ்சமின் ஹாரிசனுக்கு பிரச்சாரம் செய்தார். பெஞ்சமின் அதிபரானதும், இவரை சிவில் சர்வீஸ் ஆணையராக நியமித்தார். 1894-ல் நியூயார்க் நகர போலீஸ் கமிஷனரானார். ஊழல் மலிந்திருந்த காவல் துறையை அடியோடு மாற்றினார்.

l கடற்படையில் இவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது. அப்போது நடந்த அமெரிக்க ஸ்பெயின் போரில் சிறப்பாக பங்காற்றினார். அரசியலில் மீண்டும் முனைப்புடன் இறங்கி, நியூயார்க் மாநில ஆளுநரானார்.

l 1896 அதிபர் தேர்தலில் வில்லியம் மெக்கின்லேவுக்காக பிரச்சாரம் செய்தார். அவர் அதிபரானார். இவர் துணை அதிபரானார். அதிபர் மெக்கின்லே 1901-ல் படுகொலை செய்யப்பட, துணை அதிபராக இருந்த இவர் தனது 42-வது வயதில் அமெரிக்க வரலாற்றிலேயே இளம் அதிபராக பொறுப்பேற்றார்.

l பாதுகாப்பு, பொருளாதாரம், போக்குவரத்து சேவைகள், உணவுப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என அனைத்து துறைகளையும் மேம்படுத்த பல சீர்திருத்த திட்டங்களைக் கொண்டுவந்தார். நாட்டின் கொள்கைகளை மறுசீரமைப்பு செய்தார்.

l செல்வாக்கு மிக்கத் தலைவராகத் திகழ்ந்தவர், 1904 தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிபரானார். சிறந்த வெளிநாட்டுக் கொள்கையை வகுத்தார். கியூபா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு உதவியதோடு, உலகப் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பல உதவிகளை வழங்கினார்.

l 1909-ல் பதவிக்காலம் முடிந்த பிறகு, அமேசான் வனப்பகுதிக்கு சென்று வாழ்ந்தார். மீண்டும் எழுத்துப் பணியைத் தொடங்கினார். ‘தி நேவல் வார் ஆஃப் 1812’, ‘தி வின்னிங் ஆஃப் தி வெஸ்ட்’, ‘ஆப்பிரிக்கன் கேம் ட்ரைல்ஸ்’ ஆகிய இவரது நூல்கள் மிகவும் பிரசித்தம்.

l தலைவர்களாலும் மக்களாலும் ‘டெடி’, ‘டிஆர்’ என்று குறிப்பிடப் பட்டார். 1906-ல் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார். தலைமைப் பண்பு மிக்கவர், உயர்ந்த லட்சியங்கள் கொண்டவர், தொலைநோக்கு சிற்பி என்று பெயர்பெற்ற தியோடர் ரூஸ்வெல்ட் 61-வது வயதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு (1919) இறந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x