Published : 04 Jan 2021 11:01 AM
Last Updated : 04 Jan 2021 11:01 AM

சித்திரச்சோலை: 27 உலகம் சுற்றிய ஓவியர்கள்

சிவகுமார், ட்ராட்ஸ்கி மருது | கோப்புப் படம்.

சிவகுமார்

நம்ம ஊரில் பாரா முகமாக கவனிக்கப்பட்டாலும் ஓவியத்திற்காக உலகமே சுற்றி வந்த நண்பர்கள் நம்மிடம் பலர் உண்டு. அவர்களில் சட்டென்று எனக்குள் வருபவர்களில் ஒருவர் ட்ராட்ஸ்கி மருது. அடுத்தவர் எம்.சேனாதிபதி.

இவர்களில் முதலாமவர் வெகுஜனப் பரிச்சயமானவர். இரண்டாமவர் பரிச்சயம் குறைவு. இருவரில் முன்னவர் என்னுடன் பயிலாத, அடுத்த தலைமுறை ஓவியர். அடுத்தவர் ஓவியக் கல்லூரியில் என்னுடன் பயின்றதோடு ஓவியம் வரைய என்னுடனே ஊர் ஊராகச் சுற்றியவர்.

உருவத்தை உருவமாக உள்ளது உள்ளபடி காட்ட நவீன புகைப்படக் கருவிகளும், உடம்புக்கு உள்ளிருக்கும் அவயங்களைக் காட்ட எக்ஸ்ரே, ஸ்கேன் எல்லாம் வந்து விட்ட பிறகு ஓவியங்களுக்கும், ஓவியர்களுக்கும் என்ன வேலை? மனித குலத்தின் ஆன்மாவை, ஆழ்மனதில் பொங்கிப் பிரவாகமெடுக்கும் பல உணர்வுகளுக்கு வடிவம் கொடுக்க யார் இருக்கிறார்கள்? அந்த வேலையைச் செய்பவர்களே நவீன ஓவியர்கள்.

அதைப் பற்றி ஏற்கெனவே ஓவியர்கள் ஆதிமூலம், பாஸ்கர் மூலம் நான் சொல்லிவிட்டேன். அந்த வரிசையில் அவர்களை அறியாதவர்கள் கூட அறியக்கூடிய நவீன ஓவியங்களின் தளகர்த்தர் ட்ராட்ஸ்கி மருது. சமகால ஓவிய வெளிக்குள் புயலாக வந்தவர். அதே வேகத்தில் தனக்கான ரசிகர்களை, மேதைகளை கவ்விக் கொண்டார். வெகுஜனப் பத்திரிகைகளில் ஜெயராஜ், மாருதி ஓவியங்களைக் கொண்டாடிய வாசகர்கள் எல்லாம் மருதுவின் ஓவியத்தைக் கொண்டாடாமல் போயிருக்க வாய்ப்பில்லை.

ட்ராட்ஸ்கியுடன் ஒரு விழாவில்...

ஆகப்பெரும் எழுத்தாளர்கள் கூட தன் எழுத்து ‘ட்ராட்ஸ்கி மருது’வின் ஓவியத்தைத் தாங்கி வராதா என ஏக்கம் கொண்டிருந்தார்கள் என்பதைப் பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படி என்னதான் அந்த ஓவியங்களுக்குள் இருக்கிறது? அவர் இழுக்கும் ஒவ்வொரு கோடுகளுக்குள்ளும் எப்படியான ஆன்மா ஒளிந்திருக்கிறது என்பதை அடியாழமாக உணர்ந்ததாக அவர்களே சொல்லியிருக்கிறார்கள். அதை தன் ஆல்பத்தில், வரவேற்புக் கூடத்தில் அழகிய பிரேமிட்டு வைத்திருப்பதாகவும் புளகாங்கிதப்பட்டு இருக்கிறார்கள்.

ட்ராட்ஸ்கி எனக்கு அடுத்த தலைமுறை ஓவியர் என்பதால் அவரை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்போ, நெருங்கிப் பழகும் வாய்ப்புகளோ பெரிதாக ஏதும் ஏற்பட்டதில்லை. ஒரு நிகழ்ச்சி அல்லது விழா. ஓவியக் கண்காட்சி என இருவரும் அபூர்வத்திலும் அபூர்வமாகவே சந்தித்திருக்கிறோம். அவரின் ஓவியங்களை நானும், என் ஓவியங்களை அவரும் பார்த்து ஒருவருக்கொருவர் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டதும் உண்டு.

ட்ராட்ஸ்கி மருதுக்கு மிக ஆரோக்கியமான குடும்பப் பின்னணி அமைந்திருந்தது அவரது அதிர்ஷ்டம்.

அப்பா மருதப்பன், காந்தி மீது கொண்ட அளவற்ற பக்தியால் 14 வயதிலேயே வீட்டை விட்டு ஓடி வார்தாவில் காந்தி ஆசிரமத்தில் 2 ஆண்டுகள் தங்கி இருந்தவர்.

வீட்டுக்கு ஒரே பிள்ளை என்று ஆசிரம நிர்வாகிகள் தெரிந்துகொண்டு எப்படியோ சமாதானப்படுத்தி மதுரைக்கே அனுப்பி வைத்தனர்.

ட்ராட்ஸ்கி ஓவியம்

வெள்ளை அரசின் பிடியிலிருந்து தப்பி, மதுரை வந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த கோல்வின், டி. சில்வாவுடனும் , என்.எம்.‘பெரேரா’வுடனும் தொடர்பு ஏற்பட்டு ட்ராட்ஸ்கிவாதியாக பொதுவுடமை இயக்கத்தில் சேர்ந்து பணிபுரிந்தார்.

மருதப்பனின் தந்தை -ட்ராட்ஸ்கியின் தாத்தா -ராமசாமி மதுரை எர்ஸ்கின் மருத்துவமனை (இப்போது ராஜாஜி மருத்துவமனை) கட்டப்பட்டபோது அதன் கருங்கல் கான்ட்ராக்டராக இருந்தவர்.

ட்ராட்ஸ்கியின் இன்னொரு தாத்தா கார்மேகம் கலைவாணரின் பல நாடகங்களைத் தயாரித்தவர். இன்னொரு நாடக ஆசாமி யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளையின் நெருங்கிய நண்பர். மதுரகவி பாஸ்கரதாஸ் போன்றவர்கள் கார்மேகத்தால் போற்றி வளர்க்கப்பட்டவர்கள்.

இதுபோல் நாடகப் பின்னணி, பொதுவுடமை சித்தாந்த உணர்வு, பெரியாரின் தொடர்பு, புத்தகம் வாசிப்பு பழக்கம் இப்படிப்பட்ட சூழலில் மருதப்பன் வாழ்ந்ததால் தன்னுடைய வாரிசுகளுக்கு ட்ராட்ஸ்கி, திலகர், போஸ், மருதநாயகம், வாசுகி என புரட்சியாளர் பெயர்களையும், தமிழ்ப் பெரியார் பெயர்களையும் சூட்டி மகிழ்ந்தார்.

புத்தக வாசிப்பு பழக்கத்தோடு கார்ட்டூன் படங்கள் ஆங்கிலத் திரைப்படங்களைச் சிறு வயதிலேயே பிள்ளைகள் பார்க்கச் செய்தார்.

பிகாசோ, சால்வடார் டாலி போன்றோர் பொதுவுடமை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களைப் பற்றி சிறு வயதிலேயே பிள்ளைகளுக்குச் சொல்லி வளர்த்திருக்கிறார்.

மதுரையில் குடியிருந்த பகுதிக்குப் பக்கத்திலேயே அழகர் கோயில், மீனாட்சி அம்மன் கோயில், கலையும், கலாச்சாரமும் கலந்த பகுதி. கோயில் சிற்பங்களும், இவர்களது மூதாதையர் கோயில் -தமுக்கம் மைதானம் பக்கத்திலுள்ள கருப்பண்ணசாமி கோயிலில் நடக்கும் திருவிழா, கலை நிகழ்ச்சிகள் எல்லாம் ட்ராட்ஸ்கியை ஓவியக் கலைஞனாக வடிவெடுக்க உதவியுள்ளன.

லட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் ட்ராட்ஸ்கியின் ஒன்றுவிட்ட பெரியப்பா மகன். திரைப்படக் கதாசிரியர் எம்.எஸ். சோலைமலை தாத்தா முறை.

1967 தேர்தலுக்கு 500க்கும் மேற்பட்ட தட்டிகளிலும், சுவர்களிலும் ஓவியம் மூலம் விளம்பரம் செய்ய அப்பா ஊக்குவித்தார்.

அந்தத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. மதுரையில் இவர் வரைந்த அண்ணா ஓவியங்கள் அலங்கரித்த வளைவுகள் வழியாக, அமெரிக்கன் கல்லூரி சாலையில், முதல்வர் அண்ணாவும், மந்திரிகளும் ரதத்தில் வெற்றி ஊர்வலம் வந்தது நெகிழ்வான காட்சி.

கும்பகோணம் ஓவியக்கல்லூரி முதல்வராக முதலில் இருந்த ஓவியர் தனபால்தான் ஞானத்தந்தை. சென்னையில் தனபால் முதல்வராக வந்தபோது ட்ராட்ஸ்கி அங்கு மாணவராகச் சேர்ந்தார். ஆசிரியர்கள் ஏ.பி.சந்தானராஜ், அந்தோனிதாஸ், அல்ஃபோன்சோ, முருகேசன், ஆர்.பி. பாஸ்கரன், தட்சிணாமூர்த்தி ஆகியோரின் செல்லப்பிள்ளையாக இருந்தார்.

வெளியுலகில் கே. மாதவன், கோபுலு ஓவியங்கள் பிரமிப்பூட்டின. ஓவியக்கல்லூரியில் படிக்கும்போதுதான் உலகளாவிய பார்வை விரிந்தது. நவீன ஓவியங்கள் வழியும் தன்னை செழுமைப்படுத்திக் கொண்டார்.

தொடக்கத்தில் ஆதிமூலம் வேலை பார்த்த நெசவாளர் பணி மையத்தில் -விஜயவாடாவில் பணி. அடுத்து அவருடன் சென்னையில் பணி. 9 ஆண்டுகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை பார்த்து அலுத்துப் போய் சுதந்திரமாகச் செயல்பட வெளியேறினார்.

1977-ல் தமிழக அரசு சிறந்த ஓவியருக்கான விருது தந்தது; கலைஞர் முதல்வராக இருந்த காலத்தில் கலைமாமணி விருது, மாணவராக இருந்தபோதே நாடு முழுவதும் நடைபெற்ற ஓவியக் கண்காட்சிகளில் கலந்து கொண்டதோடு வெளிநாடுகளிலும் பங்கேற்றதுண்டு.

1980-களிலிருந்து இலக்கியப் பத்திரிகைகள், வணிக பத்திரிகைகள் இரண்டின் வழி நவீன ஓவியங்களை மக்களிடம் கொண்டு சென்றவர்கள் ஆதிமூலமும், ட்ராட்ஸ்கியும்.

நான் வரைந்த ஓவியர் சேனாதிபதி

பத்திரிகை ஓவியம், நவீன ஓவியம் இரண்டுக்கும் இடையே உள்ள சுவர்களைத் தகர்த்தவர்கள் இதே ஆதிமூலமும் ட்ராட்ஸ்கியும். திரைப்படத்துறையில் 30 ஆண்டுகளாக ஆர்ட் டைரக்டராகவும், ஸ்பெஷல் எஃபக்ட் டைரக்டராகவும் பணிபுரிகிறார்.

1985 - காலகட்டத்திலேயே முதன் முதலாக கணினியை ஓவியத்தில் பயன்படுத்தியவர். திரைப்படத்துறையில் முதலில் கம்யூட்டரைப் பயன்படுத்த வழி செய்தவரும் இவர்தான். இப்போது VIRTUAL PRODUCTION -சார்ந்து பணி தொடர்கிறது.

கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் இடம் பெற்ற கலைச்சிற்பங்கள், பண்பாடு, கலாச்சார ஓவியங்களில் இடம் பெற்றது ட்ராட்ஸ்கியின் கை வண்ணமே. பார்த்துப் பார்த்து தினசரி கலைஞர் இவருக்கு ஆலோசனைகள் வழங்கியது கூடுதல் சிறப்பு.

தமிழகத்தில் இன்று புகழோடு இருக்கும் எல்லா ஓவியர்களைப் போல இவரும் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, மலேசியா, கம்போடியா, அரபு நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து உலக நாடுகளின் ஓவியப் பாணியை ஸ்டடி செய்து வந்துள்ளார்.

இந்தியாவில் மட்டுமல்லாது உலகின் பல நாடுகளிலுள்ள ஆர்ட் கேலரிகளில் இவரது ஓவியங்கள் உள்ளன.

ஓவியக்கல்லூரியில் 1959 முதல் 1965 வரை என்னோடு பயின்றவர் ஓவியர் எம்.சேனாதிபதி. என்னுடைய வகுப்புத் தோழர். 1960-களில் சைக்கிளில் சென்னையிலிருந்து மகாபலிபுரம் நான் ஓவியம் வரையச் சென்றபோது அவரும் என்னோடு தனது சைக்கிளில் வந்து ஓவியம் தீட்டினார். அப்படியே திருக்கழுக்குன்றம் -செங்கல்பட்டு சென்னை என்று சைக்கிளில் ஒரு சுற்று என்னோடு வந்தவர்.

திருப்பதி கோயிலை வரைய 1962 -அக்டோபர் தசரா விடுமுறையில் ஒரு வாரச் செலவு 35 ரூபாய் எடுத்துக் கொண்டு வந்த நண்பர்.

1963-ல் திருவண்ணாமலைக்கு விடுமுறையில் படம் வரையச் சென்றபோது என்னோடு வந்து சத்திரத்தில் தங்கி விடியும் முன் காடுகளை கழிப்பறையாய் பயன்படுத்தி -காசு கொடுத்து ஓட்டலில் குளித்து 4 நாள் திருவண்ணாமலை கோயிலின் பல தோற்றங்களை ஓவியமாகத் தீட்டியவர்.

ஓவியர் சேனாதிபதி

கொஞ்சம் வசதியுள்ள வீட்டுப் பிள்ளை. அதனால் 1965-ல் ஓவியக்கல்லூரி படிப்பு முடியும் முன்பாகவே துணிந்து ஏப்ரல் 19-ம் தேதி சைதாப்பேட்டையில் திருமணம் செய்து கொண்டவர்.

ஓவியர்கள் ஊரை விட்டு ஒதுங்கி ஒரு கிராமத்தை உருவாக்கி அங்கே வாழ வேண்டும் என்று அன்றைய முதல்வர் கே.சி.எஸ். பணிக்கர் சோழ மண்டலம் என்ற ஒரு பகுதியை ஈஞ்சம்பாக்கத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் உருவாக்கிய போது அந்தப் பகுதியில் இவரும் பணம் கட்டி, இடம் வாங்கி, வீடு கட்டி, ஓவியனாக இன்றும் வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்தி வருபவர். சரவணன் என்ற ஒரு மகனும், ஹேமலதா என்று ஒரு செல்ல மகளும் உண்டு. அவர்களும் தந்தையின் வழியில் ஓவியர்களாக வாழ்க்கையைத் தொடர்கிறார்கள்.

சேனாதிபதி வரைந்த ஓவியம்

1988-ல் பிரிட்டீஷ் கவுன்சில் ஏற்பாட்டில் லண்டன், பிரான்ஸ், ஹாலந்து, பெல்ஜியம், மேற்கு ஜெர்மனி எல்லாம் சுற்றி அந்த நாட்டின் கலைகளையும் கலாச்சாரத்தையும் ஆய்வு செய்து வந்திருக்கிறார்.

2006-லிருந்து 2016-க்குள் சீனா, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, துபாய், அபுதாபி என பல நாடுகளுக்கும், அந்த நாட்டின் ஓவியக்கலை வளர்ச்சியை அறியச் சென்று வந்திருக்கிறார்.

தனி ஒருவராக பல ஓவியக் கண்காட்சிகளை சென்னை, பெங்களூரு, பம்பாய், கொல்கத்தா போன்ற நகரங்களில் பல முறை நடத்தியுள்ளார்.

1987-1988 மற்றும் 1995-ல் லலித் கலா அகாடமியின் தேர்வுக்குழு உறுப்பினராக இருந்தவர். தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர். உலகின் பல நாடுகளில் உள்ள கேலரிகளில் இவரது ஓவியங்களும் இடம் பெற்றுள்ளன.

---

தரிசிப்போம்.
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x