Published : 14 Oct 2015 09:16 AM
Last Updated : 14 Oct 2015 09:16 AM
இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி என்று தெரியும். இந்தியக் குடிமைப் பணிகள் தேர்வு என்று அழைக்கப்படும் ஐசிஎஸ் தேர்வில் முதன்முதலாக வெற்றிபெற்ற பெண் யார் தெரியுமா? அவர்தான் சி.பி. முத்தம்மா.
கர்நாடகாவின் குடகு மாவட்டத்தின் விராஜ்பேட் நகரில் 1924-ல் பிறந்தவர் முத்தம்மா. தனது 9-வது வயதில், தனது தந்தையைப் பறிகொடுத்தார். எனினும், வைராக்கியம் கொண்ட அவரது தாய், தனது நான்கு குழந்தைகளையும் நன்கு படிக்க வைத்தார். மடிகேரி புனித ஜோசப் பெண்கள் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த முத்தம்மா, சென்னை பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியில் பட்டப்படிப்பை மேற்கொண்டார். மூன்று தங்கப் பதக்கங்களுடன் படிப்பை முடித்த அவர், சென்னை பிரெசிடென்சி கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டப் படிப்பை முடித்தார்.
1949-ல் ஐசிஎஸ் தேர்வில் வென்ற பின்னர், வெளியுறவுத் துறையில் சேர்ந்தார். ஆண் அதிகாரிகளின் ஆதிக்க மனப்பான்மைக்கு எதிராகப் போராடினார். சவால்களை வெல்வதைப் பழக்கமாகக்கொண்டிருந்த முத்தம்மா, பெண்களுக்கு எதிராக இருந்த அரசு விதிகளை எதிர்த்து நீதிமன்றத்தை அணுகினார். அந்த வழக்கை விசாரித்த வி.ஆர். கிருஷ்ணய்யர் தலைமையிலான மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கியது. இந்தியப் பெண்கள் வரலாற்றில் மிக முக்கியமான தீர்ப்பு அது. பின்னர், ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா ஆகிய மூன்று கண்டங்களின் பல்வேறு நாடுகளில் இந்திய வெளியுறவுத் துறையில் பணியாற்றினார். 1970-ல் ஹங்கேரிக்கான இந்தியத் தூதர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது. 1982-ல் ஓய்வுபெற்ற முத்தம்மா, பல்வேறு விஷயங்களைப் பற்றிய கட்டுரைகளை எழுதினார். 2009 அக்டோபர் 14-ல் காலமானார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT