Published : 21 Oct 2015 12:08 PM
Last Updated : 21 Oct 2015 12:08 PM

ஆல்ஃபிரட் நோபல் 10

டைனமைட் வெடி பொருளை கண்டுபிடித்தவர்

உலகின் மிக உயரிய பரிசாகக் கருதப்படும் நோபல் பரிசை உருவாக்கியவரும் ஸ்வீடன் நாட்டு அறிவியலாளருமான ஆல்ஃபிரெட் நோபல் (Alfred Bernhard Nobel) பிறந்த தினம் இன்று (அக். 21). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோமில் பிறந்தார் (1833). தந்தை கண்டுபிடிப்பாளர் மற்றும் பொறியியலாளர். இதனால் இயல்பாகவே இவருக்கும் பொறியியலில் குறிப்பாக வெடிபொருட்கள் தொழில்நுட்பத்தில் ஆர்வம் இருந்தது. ராயல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் இவருக்கு கல்வி பயிலும் வாய்ப்பு கிடைத்தது.

l தந்தையுடன் இணைந்து ஆய்வகத்தில் பரிசோதனைகளில் உதவினார். இவரது தந்தை செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சென்று அங்கு இயந்திர கருவிகள் மற்றும் வெடி உற்பத்தியாளராக வெற்றிகரமாகத் திகழ்ந்தார். எனவே தன் மகனை தனிப்பட்ட முறையில் பல ஆசிரியர்களிடம் அனுப்ப முடிந்தது.

l இதனால், வேதியியல் மற்றும் மொழிகளில் சிறந்து விளங்கினார். ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மனி மற்றும் ரஷ்ய மொழிகளில் சிறந்து விளங்கினார். 1850-ல் பாரீஸ் சென்றார். 18 வயதில் கண்டுபிடிப்பாளர் ஜான் எரிக்சன் என்பவரின் கீழ் சிறிது காலம் பணிபுரிந்தார். அமெரிக்காவில் 4 ஆண்டுகள் வேதியியல் ஆய்வுகளை மேற்கொண்டார்.

l 1857-ல் எரிவாயு மீட்டர் குறித்த தனது கண்டுபிடிப்புகளுக்கான முதல் காப்புரிமையை பெற்றார். குடும்பம் மீண்டும் ஸ்வீடன் திரும்பியது. இவர் வெடிபொருட்கள் குறித்த ஆய்வில் முழு மூச்சாக ஈடுபட்டார். குறிப்பாக நைட்ரோகிளிசரினின் பாதுகாப்பான உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் அதிக ஆர்வம் காட்டினார். 1863-ல் வெடி மருந்தைக் கண்டுபிடித்தார்.

l பல சிறிய பெரிய விபத்துகளை சந்தித்தாலும் மனம் கலங்காமல் தன் கண்டுபிடிப்புகளின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்த தொழிற்சாலைகளை உருவாக்கினார். பல முயற்சிகளுக்குப் பிறகு நைட்ரோகிளிசரினை விட எளிதாகக் கையாளக் கூடிய மற்றும் பாதுகாப்பான டைனமைட்டையும், சேஃப்டி பவுடரையும் 1867-ல் இவர் கண்டுபிடித்தார்.

l இதற்கு அமெரிக்காவில் காப்புரிமை பெற்றார். 1875-ல் டைனமைட்டை விட மேலும் ஸ்திரத்தன்மை வாய்ந்த பிளாஸ்டிக் ஜெலட்டினைக் கண்டுபிடித்தார். சிறிய ஆயுதங்களுக்குத் தேவைப்படும் புகை வெளியிடாத பாலிஸ்டைட் வகை கன் பவுடரையும் கண்டுபிடித்தார். ஆயுதத் தயாரிப்பாளராகவும் விளங்கினார்.

l இவரது கண்டுபிடிப்புகள் மூலம் அளவற்ற செல்வத்தை ஈட்டினார். போஃபர்ஸ் என்னும் பெரிய ஆயுத உற்பத்தி நிறுவனத்துக்கு உரிமையாளரானார். இவரது நினைவாக நோபலியம் என்று ஒரு தனிமத்துக்கு பெயரிடப்பட்டது. எண்ணெய் கிணறுகளில் முதலீடு செய்ததன் மூலமும் ஏராளமான செல்வத்தை குவித்தார்.

l சர்வதேச அளவில் 350 காப்புரிமைகளைப் பெற்றார். சமாதானத்தைப் பெரிதும் விரும்புபவராக இருந்தாலும், இவரது மரணத்துக்கு முன் 90 ஆயுத தொழிற்சாலைகளை நிறுவினார். இதனால் இவரை ‘மரணத்தின் வியாபாரி’ என்று கூட பலர் குறிப்பிட்டனர். 1884-ல் ராயல் ஸ்வீடிஷ் அகாடமியில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது கடைசி உயிலின் மூலம் தான் ஈட்டிய செல்வத்தில் பெரும் பகுதியை தன் பெயரிலான அறக்கட்டளைக்கு வழங்கினார்.

l இதன் மூலம் கிடைக்கிற வருவாயைக் கொண்டு வேதியியல், இயற்பியல், மருத்துவம், இலக்கியம், சமாதானம் ஆகிய துறைகளில் சிறப்பான சேவைகளையும் கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்துபவர்களுக்கு விருது வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவித்திருந்தார்.

l உலகம் முழுவதும் உள்ள தலைசிறந்த அறிவியலாளர்கள், இலக்கியவாதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படவும் புகழடையவும் காரணமாக இருந்த தொலைநோக்கு சிந்தனை கொண்ட ஆல்ஃபிரெட் நோபல் 1896-ல் பெருமூளை ரத்தக் கசிவு காரணமாக 63-வது வயதில் மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x