Published : 01 Oct 2015 02:08 PM
Last Updated : 01 Oct 2015 02:08 PM
ஒரு பேட்டி வாசித்தேன்... ஒவ்வொரு பெண்ணும் பெண்மை, மென்மை என்ற போலித்தனங்களில் இருந்து வெளியே வர வேண்டும் என்று!
இந்த சமூகத்தைப் பொறுத்தவரை, ஒரு பெண் என்பவள் சின்ன வார்த்தையை சாதாரணமாக பேசினால் கூட அதைப் பெரிதுப்படுத்துவது வழக்கமாக போய்விட்டது. அதற்காக அவளை என்ன வேண்டுமானாலும் பேசலாம், அவளின் தரத்தை குறைப்பதாக நினைத்துக் கொண்டு தரம் குறைந்த வாரத்தைகளை அவள் மீது வீசலாம் என்றாகிவிட்டது. அலுவலகம், கலைத்தொழில் எல்லாவற்றிலும் பெண் மேலே வரும்பொழுது இந்த விமர்னங்களை தாண்டாமல் வர முடிவதில்லை.
இந்த வார்த்தைகளை எதிர்கொள்ளும் பெண்கள் அப்படியே சுருண்டு முடங்கி விடுகிறார்கள். என் தோழி ஒருத்தி இருக்கிறாள். நல்ல நிலைமையில் இருப்பதால் எல்லாருக்கும் நடக்கும் தாக்குதல்கள் நடக்கும். ஆனால், அவள் இருக்கும் இடத்தில இப்படி ஏதாவது கேட்டால் முடங்கிப்போக மாட்டாள். அனைவருக்கும் உதாரணமாய் எழுந்து இன்னும் உறுதியுடன் ஓர் அலட்சியப்பார்வை பார்த்துவிட்டு கடந்துவிடுவாள். அந்த வார்த்தைகள் தனக்கானது இல்லை என்று காதிலியே போட்டுக்கொள்ள மாட்டாள். பேசுபவர்கள் தானே பேசி பேசி ஓய வேண்டியதுதான். அவளின் மன உறுதி என்னை அசர வைக்கும், வைத்துக்கொண்டு இருக்கிறது.
உடை பற்றி, நம் கேரக்டர் பற்றி, எதைப் பற்றி வேண்டுமானலும் பேசட்டும். நாம் நாமாக இருக்க வேண்டும். எந்த வார்த்தைகளின் சுழலிலும் மாட்டிக் கொள்ளக்கூடாது. எதற்குமே கலங்கக் கூடாது என்பதைக் கற்றுக்கொண்டால் ஒவ்வொரு பெண்ணுமே வெற்றியாளர்கள்தான்.
பெண்களை முடக்குவது இந்த சமூகத்தில் உதிர்க்கும் பெரும்பாலான வார்த்தைகள்தான். நேற்று ஜீன்ஸ் இன்று லெக்கின்ஸ் நாளை ஷார்ட்ஸ் என்று ஏதாவது தாக்குதல்கள் வந்துக் கொண்டேதான் இருக்கும். அடுத்து "நீ இப்படி, அவள் அப்படி, அவள் உடை சரியில்லை, அவள் பேச்சு சரியில்லை... எப்படி எதிர்த்துப் பேசுகிறாள், என்ன திமிர், நாலு ஆண்களுக்கு சரி சமமாக நிற்கிறாள்... என்ன பொம்பளை" என்று பல பல விமர்சனங்களை அள்ளி வீச சமூகம் எப்பொழுதும் தயாராக இருக்கிறது.
"நீ மென்மையானவள், மேன்மையானவள்... உன்னை யாரும் எதுவும் பேசி விடக் கூடாது. உன்னை தவறாக பேசிவிடுவார்கள். எனவே மௌனமாக செல், உன் கருத்துகளை உரக்கக் சொல்ல உனக்கு உரிமை இல்லை. அப்படி சொன்னாலும் உன்னால் எதிர்த்து நிற்க முடியாது" என்ற வார்த்தைகளே திரும்ப திரும்ப பெண்களுக்கு சொல்லிக் கொடுப்படுகின்றன.
நம் வீட்டில் வளரும் பெண் குழந்தைகள் படிக்க வைப்பது சுதந்திரமாக, தன்ன்மபிக்கையாக செயல்படத்தான். யாரையும் சாராமல் தன் காலில் நிற்கத்தான் கஷ்டப்பட்டு கல்வி அளிக்கிறோம். ஆனால், வருங்காலத்தில் அவள் அழகிய தேவதைச் சிறகுகளோடு வெளியே வரும்பொழுது அவள் இன்னும் இந்த வார்த்தைகள், உடை பற்றிய விமர்சனங்கள் எதிர்கொள்ள நேரிடலாம்.
அவர்களைப் இப்பொழுதே தயார்ப்படுத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உடல் உறுதிக்கு உணவு அளிப்பது, மூளைக்கு கல்வி அளிப்பது மட்டும் வளர்ப்பு இல்லை. ஒவ்வொரு பெண்ணுக்கும், பெண் குழந்தைக்கும் மன உறுதி அவசியம். துணிச்சலுடன் உலகை நேர்க் கொள்வது மிக அவசியம். 'ஆணாதிக்கம் ஒழிக' என்று கூவிவிட்டு வேலையை பார்ப்பது தவறானது. யாரையும் ஆதிக்கம் செய்ய விடாமல் இருக்க பெண்களுக்கு மன உறுதி தேவைப்படுகிறது. யாரையும் சாராமல் இருக்கும்பொழுது யாரும் அத்தனை எளிதாக ஆதிக்கம் செய்து விட முடியாது.
பத்து வருடங்களுக்கு முன் உள்ள நான் என்கிற கிர்த்திகாவே சாதாரணமானவள்தான். ஒவ்வொரு வார்த்தைக்கும் ரியாக்ட் செய்து, கலங்கி வேலை ஓடாமல் நின்றுக் கொண்டிருப்பாள். இப்பொழுது அப்படி இல்லை. இந்த மன உறுதியை கற்றுக் கொடுத்ததில் சமூக வலைதளத்துக்கும் பெரும் பங்கு உண்டு.
சமூக வலைதளத்தில் இயங்கத் தொடங்கியபோது, வெளி உலகத்தில் இருக்கும் வக்கிரங்கள் பற்றி அதிகம் அறியவில்லை. பாலியல் வக்கிரங்கள், பெண்களை எளிதாக வார்த்தைகளால் தாக்குவது, போட்டோக்கள் எடுத்து போட்டு அசிங்கமாக பேசுவது என்ற பலவற்றை வீட்டிலிருந்தே ஒரு திரையில் சந்திக்க முடிந்தது. அவற்றை எல்லாம் கடப்பது அவை பாதிக்காமல் எப்படி இருப்பது எல்லாம் இங்கு பழகிக் கொண்டது மட்டுமல்லாமல், யாராவது பயந்து செல்ல முடிவெடுத்தால் அவர்களுக்கும் சொல்ல முடிகிறது. நம் உடலிலோ, நியாயமான வார்த்தைகளிலோ வக்கிரம் இல்லை... பார்க்கும் பார்வையில் மட்டுமே. அடுத்தவர் பார்வைக்காக நாம் கவலைப்பட முடியாது என்று எடுத்து சொல்லும் துணிச்சலை கொடுத்தது சமூக வலைதளம்.
எதிர்கால பெண் குழந்தைகள் இன்னும் வெளி உலகில் வர வேண்டிய அவசியத்திலும், வேலைப் பார்க்க வேண்டிய கட்டாயத்திலும் உள்ளனர். உங்கள் வீட்டுக் கண்மணிகளுக்கு மன உறுதி அளிக்க வேண்டும். பெண்மை, மென்மை இரண்டையும் உதறவிட்டு எந்த இழிவு சொற்களும் தனக்கானது அல்ல என்று போய்க்கொண்டே இருக்க தயார்படுத்த வேண்டும்.
இப்படிச் செய்தால் மன அழுத்தங்கள், தற்கொலைகள் பலவற்றை தவிர்க்கலாம். மகளை நேசிக்கும் எந்த அப்பாவும் மகளுக்காக மன உறுதியை அளிப்பார் என்ற நம்பிக்கையுடன் இந்த முழு நிலா வேகமாக போகும் சூரியன் உதிக்கும் விடியலை காபிக் கோப்பையுடன் ரசிக்கிறேன்.
கிர்த்திகா தரன் - தொடர்புக்கு kirthikatharan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT