Published : 11 Dec 2020 02:38 PM
Last Updated : 11 Dec 2020 02:38 PM
இறந்த பின்புதான் அவரைப் புகைப்படத்தில் பார்க்கிறேன். அதுவும் செல்போனில் குனிந்தபடியே எதையோ தேடிக் கொண்டிருக்கும் தோற்றம்.
அவரை நேரில் பலமுறை பார்த்திருக்கிறேன். ஒரே ஒரு முறை பேசியுமிருக்கிறேன். படிப்பு வாசனையற்ற அப்பாவுக்கு அவர் கடவுள் மாதிரி. நல்லது கெட்டது எல்லாவற்றுக்கும் இவரிடம் சென்றுதான் அபிப்ராயம் கேட்பார்.
நான் பிளஸ் 2 முடித்த சமயம். ‘பையனை மேற்கொண்டு என்ன படிக்க வைக்கலாம்?’ என்று அப்பா கேட்டது இவரிடம்தான். கியர் பாக்ஸ் பொறியியல் தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் தொழிலதிபர். 60 சதவீதமே இருந்த என் மதிப்பெண்ணைக் கேட்டுவிட்டுச் சொன்னார்.
‘இவன் படிச்சு என்ன ஆகப்போவுது? ஒர்க்ஷாப்ல விடு. வேலை பழகட்டும்!’ என்றார். அதன்பின் அங்கே நான் 3 நாள் வேலை பார்த்தது, பிறகு வேறு கம்பெனிக்குப் போனதெல்லாம் இங்கே முக்கியமில்லை.
ஆனால், அவரைப் பற்றி வரும் தகவல்கள் எல்லாம் மெய்சிலிர்க்க வைப்பதாக இருக்கும். 1980களில், தமிழக அரசியலில் எப்படி எம்.ஜி.ஆரோ? திரையுலகில் ரஜினி எப்படியோ அப்படி, கோவையில் தொழிலதிபர் என்றால் இவரே பேசப்பட்டார்.
1980 தொடக்கத்தில் இரண்டே இரண்டு பேர்தான் கோவையில் ஜப்பான் தயாரிப்பான டொயோட்டா கார் வைத்திருந்தார்கள். அதில் ஒன்று இவருடையது. மொழுமொழுவென்று கோழி முட்டை போலவும் கண்ணாடி போலவும் மின்னும் அந்த சந்தன நிறக் கார், சாலையில் செல்லும்போதெல்லாம் பலரையும் மயக்கும்.
அவர் கார் ஓட்டிச் செல்லும் அழகே தனி. ரோட்டில் யாசகர்கள் யாராவது தென்பட்டால் காரின் டிரைவர் சீட் கறுப்பு நிறக் கண்ணாடி சன்னமாகத் திறக்கும். அதற்குள்ளிருந்து சுண்டப்படும் நூறு ரூபாய்த் தாள் (அந்தக் காலத்தில் ஐநூறு, ஆயிரம் ரூபாய் தாள்கள் புழக்கத்தில் இல்லை) தெறித்து வந்து யாசகர்களின் காலடியில் விழும். இப்படி விழும் நாலைந்து நூறு ரூபாய்த் தாள்களை ஒரே நபர் சாலையில் கண்டெடுத்து வந்ததாகக்கூடக் காட்டியிருக்கிறார்.
இவர் கார் செல்லும் வழியெங்கும் உள்ள சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், பாப்பம்பட்டி, பீடம்பள்ளி, இருகூர், அத்தப்பகவுண்டன் புதூர், குளத்தூர், நீலம்பூர், சித்தநாயக்கன் பாளையம் ஊர் மக்களுக்கு, இப்படிப் பணத்தை வீசிச் செல்லுவது சாந்தி கியர்ஸ் முதலாளிதான் என்பது தெரியும்.
விளம்பரத்தை விரும்பாதவர்
1980- 90களில் கோவை சுற்றுவட்டாரத்தில் உள்ள பள்ளிகளுக்குப் புதிய கட்டிடங்கள், வகுப்பறைகளைக் கட்டிக் கொடுத்திருக்கிறார். அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு தனி உதவித்தொகை வழங்கியிருக்கிறார். முதலில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு என ஆரம்பித்தவர், பிறகு 6-ம் வகுப்பில் இருந்தே உதவித்தொகை கொடுக்க ஆரம்பித்தார். ஆனால் எந்த இடத்திலும், எந்த நிகழ்ச்சிக்கும் இவர் வரமாட்டார். ஆபீஸ் சிப்பந்திகளே வருவர். அதிலும் இவரைப் பற்றிய பேச்சு, புகைப்படம், சலனப் படம் எதுவும் வராது. வரக்கூடாது.
அன்றைக்கு இவர் நடத்திய கியர் பாக்ஸ் தயாரிப்பு கம்பெனியின் ஏ, பி, சி என்று வரும் மூன்று யூனிட்டுகளிலும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நவீன இயந்திரங்கள்தான் இருக்கும். ஒரு பக்கம் லேத்தில் கடைந்த சக்கரங்களை அடுக்கிக் கொடுத்தால் மறுபக்கம் அந்த மெஷின், அவற்றைப் பற்சக்கரங்களாக மென்று துப்பி விடும். அளந்தெடுத்தால் 0.0001 பிழைகூடக் காட்டாது.
சுண்டு விரல் அளவு பற்சக்கரங்கள் முதல் பெரிய டைனோசர் அளவு பற்சக்கரங்கள் வரை உற்பத்தியில் முன்னணி வகித்தது இவர் நிறுவனம். அதேபோல் இவர் ஆரம்பித்த காஸ்டிங் தொழிற்சாலையும் நவீன மயம்தான். 1980-களிலேயே பொறியியல் தொழில்நுட்பத்தில் இவரை அடித்துக்கொள்ள ஆளில்லை.
பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் பகுதி நேர விரிவுரையாளராக இருந்துகொண்டே வீட்டில் லேத் மெஷினை வைத்துப் பணி செய்து வாழ்வில் உயர்ந்தவர் என்று என் அம்மாவும் அப்பாவும் அவர் தொழில் ஆரம்பித்த அரிச்சுவடி குறித்துக் கதை, கதையாய்ச் சொன்னதுண்டு. இவர் கம்பெனி பணியாட்களிடம் புறப்படும் இவரைப் பற்றிய ஒவ்வொரு அனுபவமும் ஆச்சரியமூட்டுபவையாக இருக்கும்.
ஒரு முறை பல கோடி ரூபாய் செலவில் வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட ஒரு தானியங்கி மெஷின் பழுதாகி விட்டது. மணிக்குப் பல லட்சம் ரூபாய் உற்பத்தி கொடுக்கும் இயந்திரம். அதைச் சரிசெய்யக் குறிப்பிட்ட நாட்டிலிருந்தே பொறியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்கள் வர ஒரு வாரம் ஆகிவிட்டது. அவர்களும் மெஷினுடன் மல்லுக்கட்டிப் பார்த்தார்கள். வேலைக்கு ஆகவில்லை. இரண்டு நாட்கள் மொத்தம் ஆறு ஷிப்ட்டுகள். வெளிநாட்டுப் பொறியாளர்கள் தளர்ந்து விட்டனர்.
அசாத்தியத் திறமைசாலி
ஒரு நாள் இரவு பன்னிரண்டு மணிக்குத் தொழிற்சாலை வந்தவர் நிலையைப் புரிந்து கொண்டார். டிரைவரை அழைத்தார். டிக்கியில் தன் ஒர்க்கிங் டிரஸ்ஸை எடுத்து வரச்செய்து அணிந்துகொண்டு களத்தில் இறங்கினார். ஒரே ஒரு பயிற்சிப் பையனும், டிரைவரும் மட்டுமே உதவிக்கு. நான்கு மணி நேரம். மெஷின் இயங்க ஆரம்பித்துவிட்டது. வெளிநாட்டுப் பொறியாளர்கள் மூக்கில் விரல் வைக்காத குறைதான்.
இன்னொரு சம்பவம். இவரின் பி யூனிட்டுக்கு எதிரில் ஒரு பிரபல பொறியியல் கம்பெனி. அவர்கள் சுவிட்சர்லாந்தில் இருந்து தருவித்த இயந்திரம் பழுது. அதன் கியர் வீல் ஸ்பேர் தேவைப்பட்டது. குறிப்பிட்ட கம்பெனிக்கே எழுதிக் கேட்டார்கள். அந்த கியர் வீலின் வருகைக்காக மெஷின் இயங்காமல் இருந்தது. ஒரு மாதம் கழித்தே அந்த வீல் வந்தது. பிரித்துப் பார்த்தார்கள். அதில் Shanthi gears Made in India எனப் பொறிக்கப்பட்டிருந்தது.
சம்பந்தப்பட்ட சுவிஸ் கம்பெனிக்கு போன் செய்து கேட்டதில், ‘உலகத்திலேயே தரமான கியர் வீல் இதுதான்!’ என்றனர். தன் கம்பெனி தலைவாசலில் இருக்கும் நிறுவனத்தில் தயாராகும் கியர் வீல், சுவிட்சர்லாந்து போய் அதுதான் உலகத் தரமானது என்று தன் வாசலுக்குள்ளேயே நுழைகிறதென்றால் அந்த அனுபவம் அவர்களுக்கு எப்படியானதாக இருந்திருக்கும்?
சேவையிலும் கால் பதித்தார்
இவர் தன் தொழிலை வெவ்வேறு துறைகளுக்கு விரிவுபடுத்தியதுடன் சேவைத் துறைகளிலும் கால் பதித்தார். அதில் ஒன்று கட்டுமானம். எல் அண்ட் டி போல உலகத்தரமான சாலை அமைக்க விரும்பியவர், தான் அன்றாடம் பயணிக்கும் சித்தநாயக்கன் பாளையத்திலிருந்து (இவரின் மாமியார் ஊர், அங்கே இவருக்கு நிலபுலன்கள் உண்டு) பாப்பம்பட்டி பிரிவு வரை சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் அகண்ட, தரமான சாலையை முழுக்க முழுக்க அவர் செலவிலேயே அமைத்தார். இதுபோன்ற சேவையின் ஓர் உச்சம்தான் சாந்தி சோஷியல் சர்வீஸ்.
1 ரூபாய்க்கு இட்லி, தோசை, வடை பொங்கல், 18 ரூபாய்க்கு முழுச் சாப்பாடு. தினசரி திருப்பதி கோயிலில் அன்னதானத்திற்கு எப்படி க்யூ நிற்குமோ அப்படியான மக்கள் வெள்ளத்தைச் சாந்தி கேன்டீனில் காணலாம். இங்கே முதியவர்களுக்கு, ஏழை எளியவர்களுக்கு இலவசமாக உணவு அளிக்கும் தனி விடுதியும் உண்டு. அதன் பக்கத்திலேயே பெட்ரோல் பங்க். மற்ற பங்க்குகளில் இல்லாத தரம், விலையும் குறைவு. மருத்துவப் பரிசோதனைகள்.. வெளியே ஒரு சி.டி ஸ்கேன் ரூ. 500 என்றால் இங்கே ரூ.100. மருந்து மாத்திரைகளும் கம்பெனி விலைக்கே. ஒரு கட்டத்தில் தன் பொறியியல் தொழிலை விட்டுவிட்டு சோஷியல் சர்வீஸிலேயே இறங்கினார். கோயமுத்தூரே, சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியத்தையும் அவர் கேன்டீனைப் பற்றியுமே பேசியது.
அப்படியானவர் புகைப்படங்கள், சலனப் படங்கள் எந்த பத்திரிகை, மீடியாக்களிலும் வெளியானதில்லை. அதை அவர் விரும்பியதில்லை. இன்று ‘சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியம் காலமானார்!’ என்ற செய்தியுடன் முகம் தெரியாத புகைப்படம் முகநூல் உள்ளிட்ட வலைதளங்களில் காண்கிறேன். அவர் உயிரோடு இருந்திருந்தால் இந்தப் படத்தையும் அனுமதித்திருக்க மாட்டார் என்பதுதான் உண்மை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT