Published : 11 Dec 2020 11:44 AM
Last Updated : 11 Dec 2020 11:44 AM

சித்திரச்சோலை 20: மகிமாவும் மதுரை மல்லிகைப் பூவும்

மகிமா படத்துக்கு மாலை

சிவகுமார்

மதுரையின் பன்முகத் தோற்றங்களை PEN & INK முறையில் 100 சதவீதம் துல்லியமாக வரைந்து MULTIPLE FACETS OF MY MADURAI என்று ஓவிய ஆல்பம் குறிப்புகளுடன் 2007-ல் COFFEE TABLE BOOK ஆக வெளியிட்டுள்ளவர், மதுரையிலேயே பிறந்து வளர்ந்த மனோகர் தேவதாஸ்.

அப்பா 1920-களில் டாக்டராகப் பணிபுரிந்தவர். வளர் இளம் பருவத்திலேயே ஓவியங்கள் வரைய ஆரம்பித்தவர். யாரிடமும் ஓவியம் கற்கவில்லை. சுயம்பு.

69 ஓவியங்களுடன் அவர் வெளியிட்டுள்ள புத்தகத்தில் 1983 முதல் 2008-ம் ஆண்டு வரை வரைந்த ஓவியங்கள் பதிப்பிக்கப்பட்டுள்ளன.

துரதிர்ஷ்டவசமாக கண் விழித்திரையில் கோளாறு ஏற்பட்டு சிகிச்சையில் குணப்படுத்த வாய்ப்பில்லாதபோது 69 ஓவியங்களில் 20, 25 ஓவியங்கள் 35 சதவீதம் பார்வையுடன் பூதக் கண்ணாடியை ஒரு கையில் பிடித்துக்கொண்டு மிகுந்த பொறுமையுடன் தன்னம்பிக்கையுடன் வரைந்திருக்கிறார்.

அந்த மகத்தான ஓவியங்களில் சிவன் பார்வதி திருமணத்தைத் திருமால் நடத்தி வைப்பதாக வடிக்கப்பட்ட சிலை -சோமசுந்தரேஸ்வரர் மீனாட்சியைக் கரம் பிடிக்கும் சிலையை -அப்படியே உயிரோட்டத்துடன் வரைந்துள்ளார் மனோகர்.

மனோகருடன்.

யானை மலை -கோரிப்பாளையம் மசூதி- ஸ்பென்சர் கம்பெனி -சேதுபதி உயர்நிலைப்பள்ளி (மகாகவி பாரதியார் வேலை பார்த்த பள்ளி) வைகை ஆற்றில் உள்ள மைய மண்டபம், தேக்கடி வனப்பகுதியில் யானைக்கூட்டம், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அழகு சேர்க்கும் கிழக்கு -மேற்கு- வடக்கு -தெற்கு கோபுரங்களின் கம்பீரத் தோற்றம், கிழக்கு கோபுரத்துடன் இணைந்த பொற்தாமரைக்குளம் -அமெரிக்கன் கல்லூரி -அழகர் மலையிலுள்ள அழகர் கோயில் என அவர் ஓவியங்களைப் பார்த்துவிட்டால் முழுசாக மதுரை நகரைப் பார்த்த நிறைவு ஏற்பட்டுவிடும்.

மனோகர் தேவதாஸ் பி.எஸ்.சி., கெமிஸ்ட்ரி பட்டதாரி -அமெரிக்கன் கல்லூரியில் படித்தவர். அவர் காதல் மனைவி மகிமா சென்னையில் பி.ஏ., ஃபைன் ஆர்ட்ஸ் படித்தவர். பி.எட்., பட்டதாரி மதுரைக்காரர் மனோகர். சென்னை வந்து மகிமாவைச் சந்தித்து காதல் திருமணம் செய்து கொண்டார்.

மகிமா படிப்பில், துணிவில், தன்னம்பிக்கையில் மனோகரைவிடத் திறமைசாலி. மாதம் ஒரு முறை இருவரும் சென்னையிலிருந்து காரில் புறப்பட்டு மதுரை சென்று சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் பெற்றோருடன் தங்கிவிட்டு சென்னை திரும்புவது வழக்கம்.

மீனாட்சி கல்யாணம்

அன்றைய தினம் காலை 11 மணி வாக்கில் கிளம்பி காரில் மதுரை நோக்கிப் பயணமானார்கள். விழுப்புரத்தை அடைந்ததும் சாலை ஓரச் சிற்றுண்டி சாலையில் சாப்பிட்டுவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தார்கள்.

மகிமா, காரை நான் ஓட்டுகிறேன் என்று சொல்லி டிரைவர் சீட்டில் உட்கார்ந்தார். கார் ஓரு நாலைந்து மைல்தூரம் சென்றிருக்கும்.

முன்னால் ஒரு லாரி தாறுமாறாக சாலை முழுக்க பாம்பு ஊர்வது போல, வளைந்து வளைந்து சென்று கொண்டிருந்தது. லாரியை கிளீனர் ஓட்டிச் செல்ல, டிரைவர் பக்கத்திலே அமர்ந்திருந்தான். ஓவர் டேக் செய்ய வழியில்லாமல், இடது வலது என்று சாலை முழுக்க லாரி சென்று கொண்டிருந்தது. பொறுமை இழந்த மகிமா, லாரி இடது பக்கமாக வளைந்து செல்லும்போது வலது பக்கம் நுழைந்தார்.

கண்மூடி முழிப்பதற்குள் இடது பக்கம் சென்ற லாரி வலது பக்கம் வந்து காரின் மீது மோதி தூக்கி எறிந்துவிட்டது. சாலையிலிருந்து 6 அடி பள்ளமுள்ள சமவெளியில் கார் தெறித்து விழுந்தது. மனோகருக்கு உடம்பெல்லாம் காயம். தலையிலிருந்து ரத்தம். தொடையில் ஏதோ கிழித்து ரத்தம் பேன்ட்டை நனைத்துவிட்டது.

மகிமா எங்கே? காருக்குள் அவரைக் காணோம். தேடிக் கொண்டே போனால் நாணல் புதருக்குள் கிடக்கிறார். அள்ளி எடுத்து வந்து, அவசர, அவசரமாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை கொண்டு போனார்.

உடம்பெல்லாம் ரத்தவிளாறியாக இருந்த மனோகருக்கு, அடிபட்டதெல்லாம் வெளிப்பக்கம்தான். உள்ளே எந்த எலும்பு முறிவோ, இதயம், கல்லீரல், நுரையீரல், வயிற்றுப் பகுதி எதுவுமே பாதிக்கப்படவோ இல்லை.

ஆனால் மகிமாவுக்கு... வெளியிலே உடம்பில் சின்னக் கீறல் கூட இல்லை. உடம்பின் உள்பகுதி -அதாவது கழுத்துக்குக் கீழே உள்ள பகுதி இனி செயல்படாது.

கண்ணால் பார்க்கலாம். காதால் கேட்கலாம். வாயால் பேசலாம். சாப்பிடலாம். கழுத்துக்குக் கீழே அசைக்க முடியாது. அவ்வளவு ஏன் சிறுநீர், மலம் கூட கட்டுப்பாட்டில் இராது. நினைத்தபோது அது வெளியேறும்.

ஆஸ்பத்திரியில் ‘பெட்சோர்’ என்ற படுக்கைப் புண் வந்து முதுகுப்பக்கம் புண் ஏற்பட்டு சீழ் வடிந்து அந்த வளாகமே துர்நாற்றம் தாங்க முடியாமல் ஒரு பெண் அவஸ்தைப்பட்டு படுத்திருப்பதை மனோகர் பார்த்தார்.

வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல் அந்தப் பெண் படும் அவஸ்தையைப் பார்த்தார். எழுந்து நடமாட முடியாதவர்கள் அதிக நேரம் படுக்கையில்தான் இருக்க வேண்டும். நீண்ட நேரம், அதிகநாட்கள் படுக்கையில் இருந்தால் இந்தப் படுக்கைப் புண் வரவே செய்யும் என்றார் டாக்டர்.

என் மகிமா உயிரோடு இருக்கும் வரை அவளுக்கு இந்தக் கொடுமை நிகழ அனுமதிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்து கொண்டார் மனோகர்.

கிழக்கு கோபுரம்

உதவியாளரை உடன் வைத்து, தினமும் அவரே குளிப்பாட்டி தலைவாரி விட்டு, உடையணியச் செய்து, சக்கர நாற்காலியில் அமரவைத்து, டைனிங் ஹால் அழைத்துவந்து, அவரே ஸ்பூனால் ஊட்டிவிட்டு, 35 ஆண்டுகள் ராணி போல மகிமாவைப் பார்த்துக் கொண்டார்.

1972-ல் விபத்து நடந்தது. அடுத்த 20 ஆண்டுகளுக்குள் படிப்படியாக மனோகர் பார்வை குறைந்து கொண்டே வந்தது. மதுரை நகரின் பல தோற்றங்களையும் இவர் பூதக் கண்ணாடி உதவியுடன் போராடி வரைய மதுரையின் வரலாறு, அந்த ஊரின் அமைப்பு, மக்களின் கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் என எல்லாவற்றையும் பல நூல்கள் மூலம் தினந்தோறும் படித்து, ஓவியம் எந்தக் கோணத்தில் தீட்ட வேண்டும் என்று மகிமா சொல்வாராம்.

சென்னைப் பல்கலைக்கழகக் கட்டிடத்தை ஸ்டேண்டில் பலகை பொருத்தி, அதில் தாளைக் குத்தி, இரவு பகலாக மனோகர் குறைந்த பார்வையைக் கொண்டு வரைந்து முடிக்கிறார். ஒரு இரவு 1 மணி, மகிமா அழைத்தார். ‘‘மனோ! பல்கலைக்கழக நூலகக் கட்டிடத்தை வரைந்து முடிந்துவிட்டாயா? பார்க்கலாமா?’ என்றார்.

எடுத்துப் போய் கட்டிலருகே காட்டினார் மனோ.

‘‘குட், நல்லா வந்திருக்கு!’’ என்று மகிமா வாயிலிருந்து வந்தவைதான் கடைசி வார்த்தைகள்.

ஓவிய உபகரணங்களை எடுத்து ஓரம் வைத்துவிட்டு படுக்கை அருகே வந்தால், ஒரு நீண்ட பெருமூச்சு மகிமாவிடமிருந்து வந்தது. அதோடு அமைதியாகிவிட்டது.

யானை மலை

‘மகிமாவின் கடைசி மூச்சைப் பக்கத்திலிருந்து பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது!’ என்று நெகிழ்வோடு சொன்னார்.

2008-ல் அவங்க உலகத்தை விட்டுப் போயிட்டாங்க. நானும் ஓவியர் மணியம் செல்வமும் அவரைப் பார்க்க வீட்டுக்குப் போயிருந்தோம். 5 சதவீதம் பார்வை இருந்தது. வாசலில் வந்து எங்களை வரவேற்று கூட்டிக்கிட்டுப் போனாரு. உள்ளே போனதும், ‘சிவகுமார்! ஒரு நிமிஷம். என் மகிமாவுக்கு மதுரை மல்லிப் பூ ரொம்பப் பிடிக்கும். நீங்க வர்றீங்கன்னு மதுரையிலிருந்து வரவழைச்சு வச்சிருக்கேன். இந்த மாலைய மகிமா படத்துக்குப் போடுங்கன்னாரு.

அதுக்கப்புறம் அளவுக்கு மீறிய உற்சாகத்துடன் தன் சோக வாழ்க்கையை சிரிச்சுக்கிட்டே பகிர்ந்துகிட்டாரு. போண்டா, பஜ்ஜி பரிமாறினாங்க. ரசிச்சு சாப்பிட்டோம். ‘சார், நீங்க இருங்க. நாங்க புறப்படறோம்’னு சொன்னேன்.

மனோகருடன் மணியம் செல்வனும், நானும்.

வீட்டுக்கு வந்த விருந்தாளிகளை வாசல் வரைக்கும் போய் அனுப்பி வைக்கணும்னு மகிமா சொல்லியிருக்கா. அவ அன்புக் கட்டளையை மீறக்கூடாதுன்னு, தட்டுத் தடுமாறி வாசல் வரைக்கும் வந்து வழியனுப்பி வச்சாரு.

அவருடைய அசாத்திய ஓவியப் படைப்புகளுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவிச்சிருக்கு. அதை நேரில் போய் வாங்க முடியாதபடி கரோனா வந்து தடுத்து விட்டது.

கடந்த 6-ம் தேதி பேசியபோது, ‘சிவகுமார்! முழுசா பார்வை போயிருச்சு. நான் கவலைப்படலே. மடகாஸ்கர்லயிருந்து என் பொண்ணு சுஜாதா கடந்த மார்ச் சென்னை வந்து கரோனாவால விமான சர்வீஸ் பாதிக்கப்பட்டதனால 8 மாதமா எங்கூடத்தான் இங்க இருக்கா. இந்த சந்தோஷம் போனஸ் அல்லவா?’ என்றார்.

என்ன மாதிரி மனிதர். வணங்க வேண்டியவர் இல்லையா?

---

தரிசிப்போம்.

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x