Published : 07 Dec 2020 10:40 AM
Last Updated : 07 Dec 2020 10:40 AM

சித்திரச்சோலை 19: கலைஞரைக் கவர்ந்த ஓவியம்

சிவகுமார்

1988 நவம்பர் 14-ம் தேதி அருணாசலம் ஸ்டுடியோவுல மனித ஜாதி ஷூட்டிங்ல இருந்தேன். கலைமணிதான் புரொட்யூஸ் பண்ணி டைரக்ட் பண்ணிகிட்டிருந்தாரு. நாலு மணி வாக்குல ஒரு போன் வந்தது. கனிமொழி பேசினாங்க. ‘சார், அப்பா உங்க வீட்டுக்கு இன்னிக்கு வர்றேன்னிருக்காங்க’ன்னாங்க. எனக்கு ‘ஷாக்’. ‘ஏம்மா நீயும், அம்மாவும்தானே பெயிண்டிங்ஸ் பார்க்க வர்றேன்னீங்க?’ உண்மையிலேயே அப்பா வர்றாரா?’ன்னு கேட்டேன். ஆமான்னாங்க. எனக்கு இன்ப அதிர்ச்சியாயிருந்தது.

ஷூட்டிங்கை உடனே ஸ்டாப் பண்ணீட்டு 5 மணிக்கு கிளம்பி கோடம்பாக்கம் ஹை-ரோட்டுல வர்றேன். பாண்டி பஜார் வந்துருச்சு. ஒரு மாலை வாங்கிட்டேன். வீட்டுக்குப் போன 10 நிமிஷத்துல கனிமொழி, ராஜாத்தி அம்மா, கலைஞர் கார்ல வந்தாங்க.

அவருக்கு மாலை போட்டேன். ‘என்னய்யா மாலை?’ன்னு கேட்டாரு. ‘மூணு தடவை முதலமைச்சரா இருந்தவர் நீங்க. வீட்டுக்கு வர்ற உங்களுக்கு இதைக் கூட செய்யலைன்னா எப்படி?’ன்னு சொன்னேன். உள்ளே கூட்டிட்டுப் போனேன். ஒன்றரை மணி நேரம் பொறுமையா என் பெயிண்டிங்ஸ் பார்த்தாரு!’ன்னா எப்படியிருக்கும்?

கலைஞர் முகம் அறிமுகமாகும் முன் அவர் எழுத்துகள் என் நேசிப்புக்கு உள்ளாயின. பராசக்தி, மனோகரா, அனார்கலி, சேரன் செங்குட்டுவன் வசனங்கள் 10, 12 வயதில் முதலில் மனப்பாடமாகி விட்டன.

அதன் பிறகுதான் திமுகவில் அவரும் ஒரு தலைவர் என்பதை அறிந்து கொண்டேன். பள்ளிப் பாடங்களை விட அவரது அடுக்கு மொழி, உணர்வுபூர்வமான வசனங்களும், பின்னாளில் அவர் எழுதிய ‘சங்கத்தமிழ்- குறளோவியம்’ -போன்ற நூல்களும் தமிழை நேசிக்கக் காரணமாயின.

சிவகுமார் நூறு பூக்களை மூச்சு விடாமல் சொல்லி அசத்துவார் என்கிறீர்களே, அந்த 100 பூக்களின் பெயரை சங்கத்தமிழ் -நூலின் முதல் பாடலில் -கபிலப்புலவன் குறிப்பிட்டதைத்தான் மனப்பாடம் செய்தேன்.

ஓவியக்கல்லூரியில் படித்த காலங்களில், மெரினா கடற்கரையில் திமுக கூட்டங்கள் அடிக்கடி நடக்கும். 6.30 மணிக்கு மாலையில் தொடங்கினால் கடைசியில் கலைஞர் அடுத்து அண்ணா பேசும்போது 10 மணி ஆகி விடும். பலநாள் இரவு சாப்பாடு சாப்பிட முடியாமல் ஒரு வாழைப்பழமும், ஆரஞ்சு சோடாவும் சாப்பிட்டு பசியாற்றிய சம்பவங்கள் பல உண்டு.

சிவகுமார் வரைந்த ஓவியம்

கொல்லர் உலையில் இரும்பை வைத்து படிப்படியா சூடேற்றி, செக்கச்செவேல் என்று இரும்பு ஆன பிறகு வெளியே எடுத்துச் சம்மட்டியில அடிப்பது போல, கலைஞர் உரை கொஞ்சம், கொஞ்சமாக சூடேறி உச்சத்தைத் தொடும்போது கூட்டம் உணர்ச்சிப் பெருக்கால் தங்களை மறந்து கைதட்டும் கணங்களை நான் பலமுறை பார்த்தவன்.

நடிகனாகி 1973-ல் மே மாதம் 29-ம் தேதி 'அரங்கேற்றம்' படத்தின் 100-வது நாள் விழாவில், ஏவிஎம் ராஜேஷ்வரி திருமண மண்டபத்தில், முதலமைச்சராக இருந்த கலைஞரிடம் கேடயம் பரிசு பெற்றேன்.

அதன் பிறகு 15 ஆண்டுகளில் அவரைச் சந்திக்க வாய்ப்பு ஏற்படவில்லை. 1988-ல் சிவச்சந்திரன் இயக்கிய, ‘என்னுயிர் கண்ணம்மா’ படத்தின் 50-வது நாள் விழா பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. கலைஞர் இருக்கும் மேடையில் நான் முதன்முதலில் பேசியது அன்றுதான். அந்தப் படத்தின் படப்பிடிப்பின் போதுதான் லட்சுமி-சிவச்சந்திரன் காதல் முகிழ்ந்து கல்யாணத்தில் முடிந்தது.

பாசப்பறவைகள், பாடாத தேனீக்கள் -இரண்டும் பூம்புகார் புரொடக்ஷன்ஸ் என்ற கலைஞரின் குடும்பத் தயாரிப்பு.

1988- மார்ச் 31-ம் தேதி 'பாசப்பறவைகள்' ரீ-ரிகார்டிங் செய்வதற்கு முன்பு முழுப்படத்தையும் பார்க்க, சென்னை மியூசிக் அகாடமி எதிரில் உள்ள சுப்ரகீத் என்ற ப்ரிவ்யூ தியேட்டருக்கு கலைஞர் வந்தார். முதன் முறையாக எனது துணைவியாரை அவருக்கு அறிமுகப்படுத்தினேன்.

படம் பார்த்து முடித்த பின், என்னுடைய ‘டொயோட்டா’ காரில் அவரை அமர்த்தி நானே காரை ஓட்டிச் சென்று அவரது கோபாலபுரம் வீட்டில் இறக்கிவிட்டு வந்தேன்.

அரங்கேற்றம் 100-வது நாள் விழாவில்...

1988 மே மாதம் 25-ம் தேதி காரைக்குடியில் ‘இசைஞானி’ என்ற பட்டம் இளையராஜாவுக்கு கலைஞர் வழங்கும் நிகழ்ச்சி மகாத்மா காந்தி மைதானத்தில் நடைபெற்றது. பழ.கருப்பையா ஏற்பாடு செய்திருந்தார்.

தமிழண்ணல், வைகோ, தென்னரசு, விஜயகாந்த், எஸ்.பி. முத்துராமன், ஏ.எஸ்.பிரகாசம், ஜி.கே. வெங்கடேஷ் ஆகியோருடன் நானும் வாழ்த்திப் பேசினேன்.

1988-ஜூன் 17-ம் தேதி திருவெற்றியூர் எம்எஸ்எம் தியேட்டரில் ‘பாசப்பறவைகள்’ 50-வது நாள் விழா பெருங்கூட்டத்தில் நடைபெற்றது. ‘சேரன் செங்குட்டுவன்’-என்ற ஓரங்க நாடக வசனம் கலைஞர் எழுத, ‘ராஜா ராணி’ படத்தில் சிவாஜி ஒரே டேக்கில், சுமார் 5 நிமிட நீளமுள்ள அந்த வசனத்தைப் பேசி நடித்தது இன்று வரை ஒரு ரெக்கார்டு.

அந்த முழு வசனத்தையும் ரசிகர்கள் கூட்டத்தில் கலைஞர் முன் பேசிக் காட்டினேன். ஆனால் அவரோ 1952-ல் 'பராசக்தி' படம் வெளியான சமயம் திமுக பிரச்சார நாடகத்தில் புறநானூற்று தாயின் பெருமையைச் சொல்லும் நீளமான வசனத்தை -அக்காலத்தில் சிவாஜி நாடகத்தில் பேசியதை - ஒரு வார்த்தை பிசகாமல் பேசி என்னை மிஞ்சி கைதட்டல் பெற்றார். 36 வருடங்களுக்கு முன்பு எழுதிய வசனத்தை அரசியலில் எத்தனையோ நிகழ்வுகள் ஏற்ற, இறக்கங்களைப் பார்த்தவர் -இன்று பேசியது பிரமிப்பாக இருந்தது.

கலைஞருடன் பேட்டி.

அதே 1988, ஜூலை 17-ம் தேதி ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழின் சிறப்பாசிரியராக நான் கலைஞரை பேட்டி எடுத்தேன்.

* கடவுள் நம்பிக்கை சிறு வயதில் உங்களுக்கு நிச்சயம் இருந்திருக்கும். காரணம் உங்கள் தந்தையார் பக்தி மான்.

* சிறு வயதில் நீங்கள் கும்பிட்ட சாமி பெயர் என்ன? எத்தனை ஆண்டு கும்பிட்டீர்கள்?

* பகுத்தறிவுச் சிந்தனை எந்த வயதில் முளைவிட்டது?

* இது ஆன்மிக பூமி. வள்ளுவர், திருமூலர், நாவுக்கரசர், சம்பந்தர் என அத்தனை பெரியோர்களும் இறைவன் இருப்பைப் பற்றி பாடியுள்ளார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாத்திகவாதிகள் பெரியார் போல் இருந்திருக்கிறார்களா?

* எஸ்.எஸ்.எல்.சி தேர்வு நீங்கள் ஏன் எழுதாமல் விட்டீர்கள்? ஒழுங்காக கல்லூரி சென்று தமிழ் படித்திருந்தால் யாரைப் போல உருவாகி இருப்பீர்கள் என்று கேட்டபோது ‘ஐஏஎஸ் திரவியம் போல உருவாகியிருப்பேன்!’ என்றார்.

* 12 வயதில் -ஊமைப்படமாக மகாபாரதம் - அர்ஜூனன் கதையை முதன் முதல் தியேட்டரில் பார்த்ததாகச் சொன்னார்.

* 12 வயதில் செல்வசந்திரா என்ற நாவல் கையெழுத்துப் பிரதியாக எழுதியதாகவும் -இன்றும் அது பத்திரமாக உள்ளதாகவும் சொன்னார்.

* எம்.ஆர்.ராதா நாடகத்தை நாகப்பட்டினத்தில் பார்த்தபோது நாமும் இப்படி நாடகம் எழுத வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டு பின்னாளில் ‘தூக்கு மேடை’ எழுதி ராதாவுக்குக் கொடுத்ததாகச் சொன்னார்.

வீட்டில் எனது ஓவியங்களை பார்க்கிறார்

1988 நவம்பர் -14-ம் தேதி எங்கள் இல்லத்திற்கு கலைஞரும், ராஜாத்தி அம்மாவும், கனிமொழியும் வந்தார்கள். அப்போதுதான் எனது ஓவியங்களை ஒண்றரை மணி நேரம் பொறுமையாக அமர்ந்து பார்த்தார். மகாபலிபுரம் புலிக்குகை ஓவியத்தைப் பார்த்ததும் ‘காஞ்சித்தலைவன்’ படத்திற்கு எம்.ஜி.சக்ரபாணியும் நானும் இங்கு சென்றுதான் வசனம் எழுதினேன்’ என்றார்.

‘இவ்வளவு பெரிய ஓவியனாக, இத்தனை ஓவியங்கள் தீட்டியிருப்பாய் என்று எதிர்பார்க்கவில்லை. இதற்குப் பிறகு ஏனப்பா நடிக்க வந்தாய்?’ என்று கேட்டார்.

‘நீங்களெல்லாம் என் வீட்டுக்கு வரவேண்டும் என்பதற்காகத்தான். நான் வெறும் ஓவியனென்றால் நீங்கள் வருவீர்களா?’ என்றேன்.

1989-ல் அக்டோபர் 25-ம் தேதி என் தாயார் மறைந்தபோது 26-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு வந்து மரியாதை செய்து சென்றார்.

1997-ல் சூர்யாவின் முதல் படம், ‘நேருக்கு நேர்’ - ‘நீங்கள் பார்த்து ஆசி கூற வேண்டும்!’ என்றேன். 4 ஃபிரேம்ஸ் தியேட்டருக்கு துணைவியுடன் வந்து பார்த்து, ‘தந்தை எட்டடி பாய்ந்தால் பிள்ளை பதினாறு அடி பாய்ச்சல்!’ என்று வாழ்த்தி எழுதிக் கொடுத்தார்.

என் குடும்பத்தாருடன் கலைஞர்.

2007- பிப்ரவரி -21,ல் ‘பருத்தி வீரன்’ படம் பார்த்து விட்டு வாயடைத்துப் போய் வீடு சென்றார்.

‘தம்பி 1942-லிருந்து எனக்குத் திரையுலகுடன் தொடர்பு உண்டு. 'பருத்தி வீரன்' படத்தில் ஒரு காட்சி கூட இப்படித்தான் வரும் என்று ஊகிக்க முடியவில்லை. எப்படிப்பா இப்படியெல்லாம் இன்றைய இளைஞர்கள் யோசிக்கிறார்கள். அந்த க்ளைமாக்ஸில் லாரிக்காரர்கள் கதாநாயகியை பாலியல் வன்கொடுமை செய்யும் காட்சியைப் பார்த்ததும் 3 நாட்களாக எனக்குத் தூக்கம் வரவில்லை.

ஒரு வீடு. கதவு திறந்திருக்கிறது. உள்ளே கும்மிருட்டு, ஒரு லாரிக்காரன் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு உள்ளே போய் இருளில் மறைகிறான். அடுத்து ஒருவன். அதற்கு அடுத்து ஒருவன். ‘விடுங்கடா.. வலி தாங்க முடியலே, போங்கடா!’ பெண் முனகும் சத்தம். இப்படி ஒரு வலியான காட்சியை நான் பார்த்ததே இல்லை!’ என்றார்.

நேருக்கு நேர் ப்ரிவ்யூ

2006-ல் செப்டம்பர் 11-ம் தேதி சூர்யா-ஜோதிகா திருமணம் அடையாறு பார்க்கில் நடைபெற்றது. நேரில் வந்து மாங்கல்யம் தொட்டு ஆசி கூறினார்.

2007-ல் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பெரியார் ஓவியம் தீட்டினேன். எனது ஓவியங்களைப் பார்த்த சகோதரர் வைகோ, ‘பெரியார் படம் வரையாமல் உங்கள் ஓவியக்கலை முழுமை அடையாது’ என்றார்.

பெரியாரை வரைந்து கலைஞரிடம் காட்டிய போது மெளனமாகப் புன்னகைத்தார். ‘அது சரி, என்னை எப்போது வரையப் போகிறாய்?’ என்று கேட்டார். நான் பேசாமல் இருந்தேன்.

‘நீங்கள் கருப்புக்கண்ணாடி அணிந்துள்ளீர்கள். ஓவியத்திற்கு அழகே கண்கள்தான். உங்களுக்கு அழகான காந்தக்கண்கள். அப்படி ஒரு படம் வேண்டும். தலையில் முடியுடன் இருந்தால் இன்னும் நல்லது. என் இளமைக்கால கலைஞரின் தோற்றம். அதையே வரைந்து தருகின்றேன்!’ என்றேன்.

சூர்யா -ஜோதிகா திருமணம்.

அவர் 1969-ல் முதல்வராக 45 வயதில் பதவி ஏற்றபோது அலுவலகங்களில் வைக்க எடுத்த புகைப்படத்தின் பிரதி கிடைத்தது. நடு வகிடு. அலை, அலையாகச் சுருள்முடி. ராஜபல்லின் கீழ் பகுதி சற்றே உள்வாங்கி இருக்கும். எப்போதும் சிரித்த களையான முகம். இரண்டு கண்களுக்கும் இடையே உள்ள இடைவெளி சற்று அதிகம் இருக்கும்.

அதை வரைந்து கொடுத்தபோது அவரது பார்வையில் நன்றியும் நெகிழ்ச்சியும் தெரிந்தது.

2009- நவம்பர் 15-ம் தேதி திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் முக்தா சீனிவாசனின் 80-வது பிறந்த நாள் விழா கலைஞர் தலைமையில் நடைபெற்றது. 1949-ல் 'மந்திரிகுமாரி' படத்திற்கு வசனம் எழுத சேலம் சென்ற காலம் தொட்டு முக்தாவுக்கும் இவருக்கும் உள்ள நட்பை விளக்கிப் பேசினேன்.

கடைசி சந்திப்பு

2017- செப்டம்பர் 13-ம் தேதி கடைசியாக அவரை கோபாலபுரம் வீட்டில் சந்தித்தேன். 90 சதவீதம் நினைவுகள் மறந்த நிலை. 'மனோகரா' -தர்பார் சீனில் சிவாஜி பேசும் உணர்ச்சி மிக்க கலைஞர் வசனத்தை நான் பேசி வீடியோவில் பதிவு செய்து, கலைஞர் வீட்டு டி.வி திரையில் போட்டு வால்யூமைக்கூட்டி அவரைக் கேட்கச் செய்தேன்.

‘புருஷோத்தமரே! புரட்டுக்காரியின் உருட்டும் விழியிலே உலகத்தைக் காண்பவரே என்று ஆரம்பித்து, பாவி பார் பத்தினியை இழந்த படுபாவி பார்! நீயும் உன் பஞ்சணை ராணியும் படும் பாட்டை பார்!’ என்று உரக்கக் கத்தி- வாளை சிவாஜி உருவும் வசனம் கேட்டபோது சிலையாக இருந்த அவர் முகத்தில் வலது கண்ணின் ஓரம் ஒரு நீர்த்திவலை உருண்டு கன்னத்தில் சரிந்தது. பாதம் தொட்டு வணங்கி விடைபெற்றேன்.

---

தரிசிப்போம்...
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x