Published : 07 Oct 2015 10:42 AM
Last Updated : 07 Oct 2015 10:42 AM

துர்காவதி தேவி 10

துர்கா பாபி (அண்ணி) என்று புரட்சி இயக்கத்தினரால் அழைக்கப்பட்டவரும் சுதந்திரப் போராட்ட வீராங்கனையுமான துர்காவதி தேவி (Durgawati Devi) பிறந்த தினம் இன்று (அக்டோபர் 7). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து :

l உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் பிறந்தார் (1907). அப்பா கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். தாத்தா ஒரு ஜமீன்தார். தன் பேத்தியின் அனைத்து விருப்பங்களையும் பூர்த்தி செய்தார். அதே ஊரில் ஆரம்பக் கல்வி கற்றார். 11-வது வயதில் இந்திய விடுதலைப் புரட்சி இயக்கத்தைச் சேர்ந்த பகவதி சரண் வோராவுக்கு மணம் முடிக்கப்பட்டார்.

l ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிக் கட்சியின் செயல்துடிப்பு மிக்க உறுப்பினராக மாறினார். கணவனும் மனைவியும் தங்களுக்குக் கிடைத்த செல்வத்தை விடுதலைப் போராட்ட இயக்கத்துக்கு செலவழித்தனர். அந்த இயக்கத்தினரிடையே துர்கா பாபி(அண்ணி)யாக வலம் வந்தார்.

l ஆங்கிலேயர்களால் படுகொலை செய்யப்பட்ட வீரர் கர்தார் சிங்கின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரது உருவப்படத்தை துர்கா தேவி தனது ரத்தத்தால் வரைந்தார். குண்டு தயாரிப்பதில் கணவருடன் சேர்ந்து மற்றவர்களுக்கு உதவினார். லாலா லஜ்பத் ராயின் மரணத்துக்குப் பழி வாங்குவதற்கான திட்டம் தீட்ட கட்சியின் கூட்டம் இவரது தலைமையில் நடைபெற்றது.

l பஞ்சாப் சிங்கத்தின் மரணத்துக்குக் காரணமான காவல்துறை அதிகாரி ஸ்காட்டை கொலை செய்ய முடிவு செய்யப்பட்டது. முதலில் தானே இந்தப் பணியை மேற்கொள்ள விரும்பினார். ஆனால், இறுதியில் பகத் சிங் மற்றும் சுகதேவிடம் இந்தப் பணி ஒப்படைக்கப்பட்டது. ஸ்காட்டுக்கு பதில் வேறு ஒரு காவலதிகாரி தவறுதலாக கொல்லப்பட்டு விட்டார்.

l பகத் சிங்கும் சுகதேவும் வேலை முடிந்தவுடன் இவர் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். பகத் சிங் தன் நீண்ட முடி, தாடியைக் களைந்தார். தனது கைக் குழந்தையை பகத் சிங்கிடம் கொடுத்துவிட்டு அவரது மனைவி போல துர்காவதி தேவி நடக்க, பின்னால் சுகதேவ் இவர்களது வேலைக்காரன் போல வேடமணிந்து, பெட்டி படுக்கையுடன் ரயில் நிலையம் சென்றனர்.

l இவர்களை பிடிப்பதற்காக ரயில் நிலையமெங்கும் நின்றிருந்த ஏறக்குறைய 500 போலீசாரின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு கொல்கத்தா சென்றனர். அங்கே அவர்கள் தங்குவதற்கான இடத்தையும் இவர்தான் ஏற்பாடு செய்தார். அதன்பிறகு நாடாளுமன்றத்தில் குண்டு வீசியதால், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட வீரர்களை விடுவிக்க பெரும் முயற்சி செய்தார்.

l தன் நகைகளை விற்று வழக்குக்காக செலவழித்தார். வீரர்களை விடுவிக்கும் முயற்சியில் ஈடுபட்ட இவரது கணவர், குண்டுகளை சோதிக்கும் சமயத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். ஆனாலும் இவர் தனது முயற்சிகளைக் கைவிடவே இல்லை. அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன. பகத்சிங் உட்பட மூவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு நேரடியாக களமிறங்கினார் இந்த வீராங்கனை.

l எப்போதுமே புரட்சி வீரர்களின் எதிரியாக செயல்பட்ட பஞ்சாபின் முன்னாள் கவர்னர் ஹெய்லியைக் கொல்ல முடிவு செய்தார். அவரை நோக்கி இவர் சுட்டதில் ஹெய்லி தப்பித்து விட்டாலும் அவரது உதவியாளர்கள் படுகாயமடைந்தனர். கைது செய்யப்பட்ட இவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

l சகாக்களையும் கணவரையும் விடுதலைப் போராட்டத்தில் பறிகொடுத்த இவருக்கு அவ்வப்போது தொல்லை கொடுத்து வந்த காவல்துறையினரிடமிருந்து தப்பித்து தன் 5 வயது மகனுடன் ஊர் ஊராகச் சென்றார். அந்த இடங்களில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

l 1940-ல் லக்னோவில் ஏழைக் குழந்தைகளுக்காக ஒரு பள்ளியைத் தொடங்கினார். நாடு விடுதலை அடைந்த பிறகு சாதாரண வாழ்க்கையை நடத்தி வந்தார். புரட்சி வீரர்களுக்கு வழிகாட்டியாகவும் ‘இந்திய அக்னி’ என போற்றப்பட்ட வீராங்கனையுமான துர்காவதி தேவி 1999-ல் 92-வது வயதில் மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x