Published : 27 Oct 2015 06:41 PM
Last Updated : 27 Oct 2015 06:41 PM

ஏழைக் குழந்தைகளின் படிப்புக்கு விளையாட்டாய் உதவும் நிதர்சன முயற்சி!

வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் அடிக்கடி கேட்கும் வார்த்தை 'போய்ப் படி' என்பதுதான். படித்து முடி; பிறகு விளையாடப் போகலாம் என்பதுதான் பெற்றோர்களின் முதல் வார்த்தையாக இருக்கிறது. அதற்கு மாறாக சாய் கிருஷ்ணன் என்பவர், முதலில் விளையாடுங்கள்; பிறகு படிக்கலாம் என்று தன் பகுதி மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார்.

இந்த ஆச்சரிய தொடக்கத்தின் அடிப்படைக்கு என்ன காரணம்? நிதர்சனம் அறக்கட்டளையின் நிறுவனரான சாய் கிருஷ்ணனிடம் இது குறித்துப் பேசினேன்.

"என்னுடைய குடும்ப சூழ்நிலையால், பள்ளிப் படிப்பையே தொடர முடியவில்லை. சென்னை, பெரம்பூருக்கு அருகிலுள்ள எங்களின் ஊரான மேட்டுப்பாளையம், அடிப்படையில் செருப்புத் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. கால மாற்றத்தால் எங்களின் தொழில் நலிவடைந்துவிட்டது. பெரும்பாலானவர்கள், வீட்டு வேலைகள் உள்ளிட்ட கிடைக்கும் வேலைகளைச் செய்து வருகிறார்கள். பலரின் நிலை அதைவிட மோசமாக இருக்கிறது. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம், போதிய கல்வியறிவு இல்லாததுதான். இதனை மாற்ற எதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது.

நண்பர் ஒருவரின் வீட்டு மொட்டை மாடியில் ட்யூஷன் எடுக்க ஆரம்பித்தோம். முதலில் 20 பேர் வந்து சேர்ந்தனர். நாளாக நாளாக அவர்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. முதல் 10 நாட்கள் வந்தார்கள். அப்படியே நிற்க ஆரம்பித்தார்கள். நான் நேரடியாக அவர்களின் வீட்டுக்கு சென்று காலில் விழாத குறையாகக் கேட்டு திரும்ப அழைத்து வருவேன். திரும்பவும் நின்றுவிடுவார்கள். கால்பந்து. சதுரங்கம், ஓவியம் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடலாம் என்று கூறி, அவர்களை திரும்ப அழைத்து வருவேன். சிறிது நாட்களுக்கு இதுவே தொடர்கதையாக இருந்தது.

ஒரு நாள், ஏன் தினமும் விளையாடிய பின்னர் படிக்கக்கூடாது என்ற எண்ணம் எழுந்தது. அப்போது மாணவர்கள் தினமும், கோலி, பம்பரம், காற்றாடி, சுவெரேறிக் குதிப்பது உள்ளிட்ட ஆபத்தான, பயனில்லாத விளையாட்டுகளை விளையாடிக் கொண்டிருந்தனர். எட்டாம் வகுப்பு மாணவன் சரியாக எழுதப்படிக்கத் தெரியாமல் இருந்தான்.

அதனால் முதலில் விளையாட்டு; பின்னர் கல்வி என்று முடிவு செய்தோம். மாலை 4 மணியில் இருந்து 5.30 மணி வரை சதுரங்கம், கேரம், கைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடச் சொன்னோம். விளையாட்டு உபகரணங்கள், எங்கள் பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவியான மகாலட்சுமியிடம் ஒப்படைக்கப்பட்டன. மாணவர்கள் தினமும் குறிப்பிட்ட நேரத்தில் விளையாடிவிட்டு, பின்னர் படிக்க வேண்டும். தொடக்கத்தில் 20 மாணவர்களோடு, மொட்டை மாடியில் ஆரம்பிக்கப்பட்ட ட்யூஷன், இப்போது 200 மாணவர்களுடன் மாநகராட்சிப் பள்ளியில் நடந்து கொண்டிருக்கிறது. மூடப்படும் நிலையில் இருந்த பள்ளி அது. எங்களின் முயற்சியை அறிந்த நகர ஆணையர், நேரில் வந்து எங்களை ஊக்குவித்து, மாநகராட்சிப் பள்ளியில் படிப்பதற்கான இடத்தையும் ஒதுக்கிக் கொடுத்தார்.

மாணவிகளையும் படிக்க வைக்க வேண்டும் என்பதே எங்களின் முக்கிய நோக்கமாக இருந்தது. அவர்கள் தொலைக்காட்சியை விடுத்து, வெளியுலகத்தைப் பார்க்க விரும்புவதே இல்லை. கடைகளில் 100 ரூபாய்க்கும், 150 ரூபாய்க்குமே வீடியோ கேம்கள் சல்லிசாகக் கிடைக்கின்றன. இவையிரண்டால் உடல் நலத்தோடு, மன நலமும் சேர்ந்து கெடுகிறது.

விளையாட்டுக்குப் பின்னர் எப்படி மாணவர்களை படிப்பில் ஈடுபடுத்த முடிகிறது?

பள்ளி முடிந்து வந்த உடனே, விளையாடச் செல்லலாம். ஆனால் ஒன்றரை மணி நேரம் கழித்து, படிக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்த நாள் விளையாட்டுக்கு அனுமதியில்லை. இதை முழுமையாகப் பின்பற்றுகிறோம். இதனால் மாணவர்கள், தெருவில் வீணாகச் சுற்றிக் கொண்டிருப்பதில்லை. இந்த மாற்றமே நல்ல தொடக்கமாக இருக்கிறது.

ஒவ்வொரு வார இறுதியிலும், மாணவர்களின் நிறை, குறைகளை அவர்களையே பேசச் சொல்கிறோம். இது அவர்களிடத்தில் தன்னம்பிக்கையைக் கொண்டு வந்திருக்கிறது. அருகில் வசிக்கும் கல்லூரி மாணவர்கள், 1 முதல் 9-ம் வகுப்பு வரையான மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்குப் பாடம் எடுக்கிறார்கள். 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு, வெளியில் இருந்து ஆசிரியர்கள் வரவழைக்கப்படுகின்றனர். கடின முயற்சியால் கடந்த ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வில், அனைவரும் தேர்ச்சி பெற்றனர். எங்கள் மாணவர் ஒருவர் கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பில் 462 மதிப்பெண்கள் எடுத்தார்.

இந்த முறையை எங்கள் தெருக்களுக்கும் விரிவுபடுத்துங்கள் என்று மற்ற வீதி மாணவர்கள் கேட்கிறார்கள். விளையாட்டுக்கு பின்னர் படிப்பு என்னும் யுக்தி, நன்றாகவே வேலை செய்கிறது. இலவசக் கணினி வகுப்பு, தமிழ்நாடு அரசுப் பணி போன்றவைகளுக்கும் விரைவில் பயிற்சி கொடுக்க இருக்கிறோம்" என்பவரின் குரலில் தெறிக்கிறது நம்பிக்கை.

நிதர்சனம் அறக்கட்டளையின் ஃபேஸ்புக் இணைப்பு: >நிதர்சனம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x