Published : 31 Oct 2015 08:38 AM
Last Updated : 31 Oct 2015 08:38 AM
குறுகிய காலமே வாழ்ந்தாலும் ஆங்கில இலக்கியத்தில் மாபெரும் சாதனை படைத்து உலக அளவில் புகழ்பெற்ற கவிஞர் ஜான் கீட்ஸ் (John Keats) பிறந்த தினம் இன்று (அக்டோபர் 31). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* இங்கிலாந்து தலைநகர் லண்டனில் (1795) பிறந்தார். 9 வயதிலேயே தந்தை இறந்துவிட்டார். சிறிது காலத்தில் தாயையும் இழந்தார். இதனால் அவரும் சகோதரர்களும் எட்மான்டனில் உள்ள பாட்டி வீட்டில் வளர்ந்தனர். என்ஃபீல்டு நகரில் ஆரம்பக் கல்வி கற்றார்.
* இளம் வயதிலேயே துன்பங்களைச் சந்தித்ததால், வாழ்க்கை பற்றியும் அதன் துயரங்கள் பற்றியும் நன்றாகவே புரிந்து வைத்திருந்தார். சிறு வயது முதலே இலக்கியம், கவிதைகளில் அதிக நாட்டம் கொண்டிருந்தார். ஏராளமான நூல்களைப் படித்தார். சம்பாதிக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதால், மருத்துவப் படிப்பில் சேர்ந்தார்.
* மருத்துவத்தோடு, இலக்கியங்களையும் ஆழ்ந்து கற்றார். வகுப்பில் பேராசிரியர் பாடம் நடத்தும்போது இவர் தனது குறிப்பேட்டில் கவிதைகள் எழுதிக்கொண்டிருப்பாராம். இதை அவரது சக மாணவரான ஹென்றி ஸ்டீபன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
* மருத்துவக் குறிப்புகளைக்கூட இவர் கவிதையாக எழுதுவது உண்டு. ஒருமுறை தனது நோயாளியின் பேண்டேஜ் மீது நீண்ட கவிதையை எழுதினாராம். இதை மருத்துவமனையே வேடிக்கை பார்த்தது. இதையும் ஹென்றி ஸ்டீபன்ஸ் கூறியுள்ளார். இவர் இங்கிலாந்தின் பிரபலமான அறுவை சிகிச்சை நிபுணர், ஆராய்ச்சியாளர் ஆவார்.
* கீட்ஸ் எழுதிய முதல் புத்தகம் பெரிதாக கவனம் பெறவில்லை. இதனால் சோர்வு அடைந்தவர், நண்பர்களிடம் வலியச் சென்று கவிதையைக் காட்டி அபிப்பிராயம் கேட்டுள்ளார். அப்போதும் யாரும் கண்டுகொள்ளவில்லை. சிலர் கடுமையாக விமர்சித்தனர்.
* இதனால் அவமானம் அடைந்தார். ஆனால், இதுதான் புதிய பாணியைப் பின்பற்றுமாறு அவரைத் தூண்டியது. இவரது அடுத்த கவிதைத் தொகுப்பான ‘எண்டிமியான்’ புகழ்பெற்றதோடு இவரை முக்கிய இளம் கவிஞராக அடையாளம் காட்டியது.
* இவரது ‘டு ஆட்டம்’ கவிதை உலகப் புகழ் பெற்றது. ‘இசபெல்லா’, ‘தி ஈவ் ஆஃப் செயின்ட் ஆக்னஸ்’, ‘ஓட் டு எ நைட்டிங்கேல்’, ‘ஹைப்பரியான்’, ‘லாமியா’ உள்ளிட்ட கவிதைகள் பிரபலமானவை.
* பெரும்பாலும் உணர்ச்சிபூர்வமான காதல் கவிதைகளையே எழுதினார். அவற்றைப் படித்த பெண்கள் கவிதை வரிகளில் மயங்கி இவரை மானசீகமாக காதலித்தார்களாம்.
* தனிமையையும் இயற்கையையும் அவர் புரிந்துகொண்ட விதம் அபூர்வமானது. இவர் எழுதிய கடிதங்கள் அவரது வாழ்க்கைக் குறிப்பு போலவே இருந்தன. அவை கவிதை நடையுடன் திகழ்ந்தன. இவர் தனது சகோதரர்கள், சகோதரி, நெருங்கிய நண்பர்களுக்கு பல்வேறு தருணங்களில் எழுதிய கடிதங்கள்தான் இவரது வாழ்வுக்கும், ஒரு கவிஞராக இவரது வளர்ச்சிக்கும் ஆதாரங்களாக விளங்கின. இவரது கடிதங்களை ஆதாரமாகக் கொண்டு ‘பிரைட் ஸ்டார்’ என்ற படம் தயாரிக்கப்பட்டது.
* குறுகிய கால வாழ்க்கையில் தனது கவிதைகள் மூலம் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தவரும், ஆங்கிலக் கவிதை உலகின் அடையாளச் சின்னமாக போற்றப்படுபவரும், ஆங்கில இலக்கியத்தின் பொற்காலமாகக் கருதப்படும் ரொமான்டிக் காலப்பகுதியின் முக்கிய கவிஞருமான ஜான் கீட்ஸ் 26-வது வயதில் (1821) மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT