Published : 16 Nov 2020 10:55 AM
Last Updated : 16 Nov 2020 10:55 AM
எஸ்.எஸ்.எல்.சி., படிப்பு முடித்து கிராமத்தில் 1958 ஜூன் வரை இருந்த ஓராண்டு இடைவெளியில் ‘பேசும்படம்’, ‘குண்டூசி’ -பத்திரிகைகளில் வந்த சினிமா நடிகர், நடிகைகளை வரைந்த அனுபவம் கைகொடுக்க, 1961-ல் ‘நவ இந்தியா’ - பத்திரிகை கொடுத்திருந்த விளம்பரத்தைப் பார்த்து படங்கள் வரைந்து அனுப்பினேன்.
‘உங்களுக்குப் பிடித்த நடிக, நடிகையர் படங்களை ஓவியமாக வரைந்து அனுப்புங்கள், தரமான ஓவியங்களை - உங்கள் பெயர் விலாசத்துடன் அச்சிடுவோம்!’ என்ற வரிகள் என்னைக் கவர்ந்தன.
ஓவியக்கல்லூரி தோழர்களிடம், ‘டேய்! அடுத்த 3 வாரங்களுக்கு என்னோட ஓவியங்கள் ‘நவ இந்தியா’ -பத்திரிகையில் வரப்போகுதுன்னு நெஞ்சை நிமிர்த்திச் சொன்னேன். ‘ஏன், எடிட்டர் உனக்குத் தெரிஞ்சவரா?’-ன்னு கேட்டாங்க. ‘அதெல்லாம் இல்லை. வேடிக்கை பாருங்கள்னு சொல்லி, முதல் வாரம் சிவாஜி- ‘ராஜாராணி’ படத்தில ‘படுக்கை புரட்சி-ன்னு ஒரு ஓரங்க நாடகம் வரும். அதில நடு வகிடு எடுத்து நரைச்ச முடி ‘விக்’ வச்சு -விபூதிப் பட்டை குங்குமம் -தொங்கு மீசையுமா சிவாஜி நடிச்சிருப்பாரு. அந்த முகத்தை வரைஞ்சு கா.ரா.பழனிசாமி, காசீகவுண்டன்புதூர் -கோவை மாவட்டம்னு விலாசம் குடுத்திருந்தேன்.
அதை பப்ளிஷ் பண்ணினாங்க. அடுத்த வாரம் ‘சம்பூர்ண ராமாயணம்’ -படத்தில சீதை வேஷம் போட்ட பத்மினி படத்தை வரைஞ்சு, ‘கே.ஆர்.பழனிசாமி, ஜெனரல் பேட்டர்ஸ் ரோடு, மவுண்ட் ரோடு, சென்னைன்னு மோகன் ஆர்ட்ஸ் விலாசம் குடுத்திருந்தேன். அதையும் வெளியிட்டாங்க.
மூணாவதாக ‘யார் பையன்’ என்ற படத்தில் நடித்த டெய்சி இரானி படத்தை வரைந்து, ‘பாலதண்டபாணி, சென்ட்ரல் லாட்ஜ், பொள்ளாச்சி’-ன்னு விலாசம் குடுத்திருந்தேன். அதுவும் நவ இந்தியாவுல வெளியாச்சு.
ஒரே நபர் வரைஞ்ச படம்னா ஒரு வாரந்தான் போடுவாங்க. நான் சவால் விட்டவனாச்சே. பெயர்களில் சிறுமாற்றம் -மூணு வித்தியாசமான விலாசம் குடுத்தவுடனே வெளியிட்டுட்டாங்க.
இது நடந்தது 1961 -மே மாதம் 7-ம் தேதி.
இந்தப் படங்களை பேப்பர்ல பார்த்துட்டு, காசீகவுண்டன் புதூர் விலாசத்துக்கு காஞ்சிபுரத்திலிருந்து செளந்தரராஜன்னு ஒரு இளைஞர் கடிதம் எழுதி, ‘ஓவியம் நல்லாருந்தது’ன்னு பாராட்டியிருந்தார். ஊருக்குப் போன கடிதம் ரீ டைரக்ட் ஆகி சென்னை விலாசத்திற்கு வந்தது.
பேனா நண்பர்கள்ங்கிற கலாச்சாரம் தொடங்கிய காலம் அது. நானும் அவரும் முன்பின் சந்திக்காமலே, பிசிராந்தையார்-கோப்பெருஞ்சோழன் மாதிரி கடிதம் வழி நட்பைத் தொடர்ந்தோம்.
‘காஞ்சிபுரம் கோயில்கள் ஓவியம் தீட்ட வருகிறேன்!’ என்று அவருக்கு 1962-ல் கடிதம் போட்டேன். ‘எப்ப வேண்ணாலும் வாங்க. எங்க வீட்லதான் தங்கணும்!’னு வேண்டுகோள் வச்சாரு.
‘ஹோட்டல்ல தங்கற அளவுக்கு நமக்கு வசதி கிடையாது. 20 ரூபாய் பட்ஜட்டில் 1962 -மே மாதம் 4-ந்தேதி காஞ்சிபுரம் கிளம்பினேன். காலை 6.45 க்கு பஸ் புறப்பட்டு 8.30-க்கு காஞ்சிபுரம் போய்ச் சேர்ந்தது. ஒரு சைக்கிள் ரிக்ஷா ஏற்பாடு செய்து, சின்னக் காஞ்சிபுரம், காந்தி ரோடு, 491- எண்ணில் துரைசாமி முதலியார் நடைக்கடை வாசலில் போய் இறங்கினேன்.
அளவான உயரம். மாநிறம். சுருட்டை முடி, சிங்கப்பல்லோடு ஓர் இளைஞன் கடையில உட்கார்ந்திருந்தார். அவர்கிட்ட போய், ‘துரை செளந்தரராஜன் இருக்காருங்களா?’ன்னு கேட்டேன்.
‘நான்தான் செளந்தரராஜன். நீங்க யாரு?’ ன்னாரு. பேர் சொல்லி, ‘சென்னையிலிருந்து வர்றேன்’னேன். ‘அடடா, நீங்களா?’ ன்னு கட்டிப்புடிச்சு வரவேற்றார்.
முன்பின் அறிமுகமில்லாத ஒருவர் - ஆனால் கடிதம் வழி பரிச்சயமானவர் -நேரில் சந்திப்பதை எல்லாம் அனுபவித்தால்தான் புரியும்.
ஏதோ போன ஜென்ம பந்தம் மாதிரி. அவரைப் பற்றி எல்லாம் தெரியும். ஆனால் இப்போதுதான், ரத்தமும் சதையுமாகப் பார்க்கிறேன்.
ஏதோ பல ஆண்டுகள் நெருங்கிப் பழகியவர்கள் போல, அந்தச் சந்திப்பு இருந்தது. சத்தியமூர்த்தி என்று அவருக்கு அண்ணன். அவர்தான் முதல் நாள் சைக்கிளில் அழைத்துச் சென்று ஒவ்வொரு கோயிலாகக் காட்டினார்.
துரைசாமி முதலியாருக்குக் குழந்தைகள் இல்லை. செளந்தரராஜனுக்குக் கூடப்பிறந்தவர்கள் பலர். ஆகவே பெரியப்பா, செளந்தரை தத்து எடுத்துக் கொண்டு நகைக்கடை நிர்வாகத்தை அவரிடம் ஒப்படைத்திருந்தார்.
முதல் நாள் ஊரிலுள்ள கோயில்களைப் பார்த்து ஓவியம் தீட்டும் கோணங்களைத் தேர்வு செய்து கொண்டேன்.
மறுநாள் வரதராஜ பெருமாள் கோயில் சென்று தடாகம், மெயின் கோபுரம் இரண்டையும் கம்போஸ் செய்து வாட்டர் கலர் -ஓவியம் காலை 10.30-க்குள் முடித்து விட்டேன்.
என் பொதுவான சுபாவம் -பெட்ரோல் போடாமல் கார் எடுக்க மாட்டோம் என்பது போல -எதுவும் சாப்பிடாமல் வெளியில் செல்லமாட்டேன். இன்று வரை காலை நடைப்பயிற்சிக்கு முன்னால் 2 டம்ளர் தண்ணீர் குடிப்பேன். வீடு திரும்பிய பின் வெளியில் செல்ல நேர்ந்தால் காலை 6 மணிக்குக்கூட பழைய சாதம் மோர், அல்லது சிற்றுண்டி அருந்தாமல் வெறும் வயிற்றோடு சென்றதில்லை.
அன்று, படம் வரையும் ஆர்வத்தில் வெறும் வயிறோடு போய் வரைந்து முடித்ததும் பசி வயிற்றைக் கிள்ளியது. காமாட்சி பவன் சென்று டிபன் சாப்பிட்டேன். இரவு நேரங்களில் செளந்தரின் பெரியப்பா வீடு மொட்டை மாடியில் நண்பர்களுடன் அரட்டை அடித்தோம். தண்ணீர் கலக்காத பாலை சுண்டக்காய்ச்சி முக்கால் லிட்டர் கொடுத்து மூச்சு முட்ட குடிக்கச் சொல்லி துன்புறுத்துவார் செளந்தர். பாவாடை தாவணியில் பார்த்த உருவமா - இது பூ வாடை வீசி வர பூத்த பருவமா?’ என்ற சிவாஜி பாடலை அன்றிரவு நான் பாடினேன்.
வரதராஜ பெருமாள் கோயில் தடாகத்தை ஒட்டி 100 கால் மண்டபம் ஒன்றுள்ளது. அதில் வரிசையாக உள்ள தூண்களின் அழகை ஓர் ஓவியமாகத் தீட்டினேன்.
பக்தி இலக்கியங்கள் வந்த காலத்திலேயே ‘சைவம் ஒசத்தியா, வைணவம் ஒசத்தியா?ங்கிற வாதம் இருந்திருக்கு. அது இன்னமும் தொடருது.
ஏகாம்பரேஸ்வரர் கோயில் போய் படம் வரைய ‘பர்மிஷன்’ கேட்டேன். நிர்வாகிக்கு அப்ப என்ன பிரச்சினையோ, யார் மேல கோபமோ தெரியவில்லை. ‘மெட்ராஸ்லருந்து படம் வரைய வந்திருக்கீங்களா? கோயில் தென்னை மரங்கள் எல்லாம் காயுது. உங்க பிரின்சிபல்கிட்ட சொல்லி அந்த மரத்துக்கெல்லாம் தண்ணி விட ஏற்பாடு பண்ணுங்கோ’ன்னாரு.
‘இது சரியா வராது’ன்னு வரதராஜ பெருமாள் கோயில் ஓவியங்களை எடுத்து வந்து காட்டினேன். ‘பெருமாள் கோயில்ல பர்மிஷன் குடுத்திட்டாங்க; நீங்கதான் பிடிவாதம் பிடிக்கறீங்க!’ என்றேன். ‘ஓ, அவா பர்மிஷன் குடுத்திட்டாளா? அப்ப சரி, இன்னிக்கே நீங்க படம் வரையலாம்!’ன்னு சொன்னாரு.
கோபுர வாசல்படி மட்டும் ஒரு நாள். மூல விக்ரஹத்திற்கு முன்னால் உள்ள பிரகாரத்தை வரைய 3 மணி நேரம். கோபுர வாசல், தெப்பக்குளம், பிரகாரம் மூன்றையும் ‘கம்போஸ்’ செய்து ஒரு படம் என்று அருமையான படங்கள் வரைந்து முடித்தேன். விக்டோரியா டெக்னிக்கல் இன்ஸ்டிட்யூட்டில் கோபுரவாசல், தெப்பக்குளம் ஒட்டிய கோபுரம் ஓவியம் ஒரிஜினல் விற்று விட்டதற்கு இப்போது வருந்துகிறேன்.
துரை.செளந்தரராஜன் நட்பு 60 ஆண்டு கடந்தும் தொடர்கிறது. என் திருமணத்திற்கும் வந்தார். அவர் பிள்ளைகள் திருமணத்திற்கு சூர்யா, அவர் அம்மா சென்று வந்தார்கள்.
காஞ்சிபுரம் பயணத்தில் ஒரே ஒரு வருத்தம். என்னோடு ஓவியக்கலை பயின்ற ரகுராமனுக்கு 1962 மே 7-ம் தேதி திருமணம் காஞ்சியில். முந்தின நாள் அவரை வீட்ல பார்த்து எப்படியும் நாளைக்கு கல்யாணத்திற்கு வர்றேம்பான்னு சொல்லிட்டு வந்தேன்.
ஏகாம்பரேஸ்வரர் கோயில் பிரகாரத்தை, சீக்கிரம் வரைஞ்சு முடிக்க முடியலே. வாட்டர் கலர் ஓவியம் ஒரே மூச்சில் வரைந்து முடிக்க வேண்டியது. ஒரு நாள் விட்டு, அதைத் தொடர்ந்து ஆயில் பெயிண்டிங் மாதிரி வரைய முடியாது.
‘12 மணிக்கு ஓவியம் முழுமை பெற்ற போது திருமணம் முடிந்துவிட்டது.
‘சரி ஒரு தந்தி அடிக்கலாம்!’ என்று போஸ்ட் ஆபீஸ் போனேன். உள்ளூராக இருந்தாலும் தந்தி அடிக்க 2-64 பைசா ஆகும் என்றார்கள்.
20 ரூபாய் பட்ஜெட்டில் - 4 நாள், காஞ்சிபுரம் பயணம், சாப்பாட்டுச் செலவு முடித்தாக வேண்டும். தந்தி அடித்தால் காஞ்சி - சென்னை பஸ் கட்டணம் கையைக் கடிக்கும்.
அதனால் உடன் படித்த தோழனுக்கு காஞ்சியில் கல்யாணம் நடந்து நேரிலும் செல்ல முடியவில்லை; உள்ளூரிலிருந்து உள்ளூருக்கே வாழ்த்துத் தந்தியும் அடிக்க முடியவில்லை.
இந்த மனக்குறை இன்னும் உள்ளது.
தரிசிப்போம்...
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT