Published : 13 Nov 2020 10:52 AM
Last Updated : 13 Nov 2020 10:52 AM

சித்திரச்சோலை 12: என் ‘காந்தி ஓவியம்’

சிவகுமார்

உலகத்தின் எந்த மூலையில் போய் ‘இந்தியா’ என்று சொன்னாலும் அந்தப் பெயரை முன்னரே கேள்விப்பட்டிருப்பவருக்கு ‘ஓ! காந்தி தேசம்’ என்பது நினைவுக்கு வரும்.

அந்த அளவுக்கு தன்னுடைய எளிமையாலும், நேர்மையாலும், வெளிப்படைத் தன்மையாலும், அஹிம்சை என்ற ஒற்றை வார்த்தையாலும் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் மகாத்மா காந்தி.

அவரது அரசியல் கருத்துக்கு மாற்றுக்கருத்து இருக்கலாம். அதையெல்லாம் தாண்டி ‘காந்தி தேசம்’ என்று இந்தியாவுக்குப் பெயர் வையுங்கள் என்று ஒரு காலத்தில் காந்தியின் பிரதான சீடராக இருந்த பெரியார், காந்தி சுடப்பட்டபோது சொன்னார்.

காந்தியின் சாதனை மகத்தானது மட்டுமல்ல; மகாத்மியமானது. எனவேதான் அவரை உலகமே மகாத்மா என அழைக்கிறது. 19 வயசில லண்டன் போய் 2 வருஷம் 8 மாதம் ‘பார் -அட்-லா’ படிச்சாரு. 1893-ல் தென்னாப்பிரிக்காவுக்கு வர்றார். முதல் வகுப்பில் ரயில் பயணம் பண்ணிக் கொண்டிருக்கும்போது, பெட்டியோடு சேர்ந்து காந்தியை இழுத்து பிளாட்பாரத்தில் வீசி எறிந்தார்கள்.

அந்தக் கோபத்தில்தான், நிறவெறியை எதிர்த்து 20 ஆண்டுகள் அங்கே போராடினார். ஜோகன்ஸ்பர்க்கிலிருந்து 21 மைல் தூரத்தில இருக்கிற டால்ஸ்டாய் பண்ணையை ஏற்பாடு பண்ணினாங்க. தினந்தோறும் டால்ஸ்டாய் பண்ணையிலிருந்து ஜோகன்ஸ்பர்க்குக்கு 21 மைல் நடந்தே போவாராம். போக வர 42 மைல்.

டால்ஸ்டாய் பண்ணை ஒரு சின்ன சத்திரம் மாதிரி. திருவிழாவுக்குக் கோயிலுக்குப் போனா இடமில்லாம, எல்லோரும் இடிச்சுக்கிட்டு தரையில படுத்துத் தூங்குவாங்க. அந்த மாதிரி சேவா தளத் தொண்டர்கள் -எல்லோரும் வயசுக்கு வந்த பசங்க, புள்ளைங்க - 20 வயசு, 25 வயசுக்காரங்க -- ஒரே எடத்தில தூங்கறப்போ தவறுதலா கைபட்டா தப்பாயிடுமேன்னு பல ராத்திரி நைட் வாட்ச்மேன் மாதிரி காவல் காத்திருக்காரு காந்தி.

ஒரு நாள், அந்தப் பொண்ணுகளெல்லாம் கூப்பிட்டு, ‘கண்ணுகளா! நீங்க எல்லோரும் மொட்டை போட்டுக்குங்கன்னாரு. சலூனுக்கெல்லாம் போக வேண்டாம். நானே போட்டு விடறேன்னு அத்தனை பேருக்கும் பொறுமையா மொட்டை அடிச்சு விட்டாரு.

25 ஆண்டுகளுக்கப்புறம் எழுதறாரு. ‘அன்னிக்கு நான் செஞ்சது காட்டுமிராண்டித்தனமா தெரிஞ்சாலும் அந்தக் குழந்தைகளைக் காப்பாத்த வேற வழி தெரியலே!’ன்னு.

அதுக்கப்புறம் இந்தியா வந்து சபர்மதி ஆசிரமத்தில 16 ஆண்டுகள் இருந்தாரு. ஓலைக்குடிசை -மண் தரை -காத்து மண்ணுல கட்டின சுவரு. மின்சாரம் கிடையாது. போன் வசதி இல்லை. தண்ணீர்க் குழாய் ஊட்டுக்குள்ளே கிடையாது.

இடுப்புல 4 முழத் துண்டைக் கட்டிட்டு தரையில படுத்துக்குவாரு. ஒரு நாள் காலை 4 மணிக்கு ஒரு பக்கட்ல தண்ணியும், மண்வெட்டியும் எடுத்துட்டு வெளியே போனார். எதுக்குப் போனார்?

சபர்மதி ஆசிரமத்துக்கும், அகமதாபாத்துக்கும் இடையில ஒரு பொட்டல் காடு. அந்த எடத்தை திறந்தவெளி கழிப்பிடமா அந்த ஊர் ஜனங்க பயன்படுத்தினாங்க.

ஒரு ஆள் மலம் கழிச்சிட்டு போனதும் காந்தி போய், மண்வெட்டில கொஞ்சம் மண்ணை அள்ளி மலத்து மேலே போட்டுட்டு மண்வெட்டிய கழுவிக்குவாரு. அடுத்தவன் வேலையை முடிச்சிட்டுப் போனப்பவும் அதையே செஞ்சாரு. கூடப்போன அமெரிக்க பத்திரிகை நிருபர், ‘என்ன காந்தி பண்றீங்க?’ன்னு கேட்டான். ‘மனிதக்கழிவு மிகச்சிறந்த உரம்னு இந்த முட்டாள்கள்கிட்ட சொல்லிப் பார்த்தேன். யாரும் கேக்கற மாதிரி தெரியலே. அவங்களுக்கு புத்தி வர்ற வரைக்கும் நான் இதை செய்யறதைத் தவிர வேற வழியில்லே!’ன்னாரு.

தான் நடத்திய பத்திரிகைக்கு ‘ஹரிஜன்’னு பேரு வச்சாரு. தானிபென் அப்படின்னு ஒரு ஹரிஜனப் பெணணை ஆசிரமத்தில கஸ்தூரிபாவுக்கு துணையா இருக்கட்டும்னு சேர்த்தாரு.

‘‘ஆமாமா! சாக்கடை கழுவறதுக்கும், பத்துப் பாத்திரம் தேய்க்கறதுக்கும் ஒரு ஆள் இருந்தா நல்லதுதான்!’னு கஸ்தூரிபா சொன்னாங்க.

‘‘இல்லே, இல்லே.. சாக்கடை நீ கழுவு. பத்துப் பாத்திரம் நீ தேய். அந்த அம்மா சமையல் வேலையைச் செய்யட்டும்!’’னாரு.

காந்தியை எதிர்த்துப் பேச முடியாது.

தானிபென்னின் மகள் லட்சுமி 6, 7 வயசுப் பொண்ணு. காந்தி தத்து எடுத்துக்கறாரு. அகமதாபாத் -பம்பாய்ல இருக்கற ஆலை முதலாளிகளுக்கு செய்தி போகுது. ‘இந்த மனிதன் ஆசிரமம் நடத்தறாரா? சேரி நடத்தறாரா? நன்கொடையை நிறுத்துங்க!’ன்னு முடிவெடுக்கிறாங்க.

மாதக்கடைசில செக்கரட்டரி தலைய சொறிஞ்சான். ‘என்னய்யா?’ன்னு காந்தி கேட்டாரு. நன்கொடைகள் நின்னு போன விஷயத்தைச் சொன்னான்.

‘நல்லது. நம் எல்லோரும் சேரிக்கே போயிடலாம்! மூட்டை கட்டுங்க!’ன்னாரு காந்தி. ஒரு பணக்காரன் - கார்ல வந்தவன் - என்ன இங்கே களேபரம்னு கேட்டான். விஷயத்தைச் சொன்னாங்க. ஒரு மாசத்துக்கு ஆசிரமச் செலவுக்கு ஒரே செக்கா குடுத்திட்டுப் போயிட்டான்.

1931-ல தீண்டாமையை எதிர்த்து சாகும்வரை உண்ணாவிரதம்னு காந்தி ஆரம்பிக்கறாரு. டாக்டர்கள் சொல்றாங்க, உங்களுக்கு ஹார்ட் வீக்கா இருக்கு கிட்னி வீக்கா இருக்குன்னு.

நான் இடுகின்ற கட்டளையை நிறைவேற்ற வேண்டியது என் உடம்பின் வேலை. அப்படி நிறைவேற்றாத உடம்பு எனக்கு தேவையில்லைன்னு 5 அடி 5 அங்குலம் உள்ள அந்த எலும்பும் தோலுமான மனிதன் படுத்துக் கொண்டான்.

காஷ்மீர்லருந்து கன்னியாகுமரி வரைக்கும் நாடே தத்தளிக்குது. நேருவோட அம்மா சொரூபராணி -காஷ்மீர பிராமணக்குடும்பம் -வசதியான குடும்பம்- அரண்மனை மாதிரி வீட்டில் குடியிருக்கிறவங்க, செய்தி கேள்விப்பட்டு, ‘அரண்மனை வாசலைப் பெருக்கற தோட்டி கையால சாப்பிட்டு, ‘காந்திகிட்ட சொல்லுங்க. சொரூபராணி தோட்டி கையால சாப்பிட்டா- காந்தியைச் சாக வேண்டாம்னு சொல்லுங்க!’ன்னு தகவல் அனுப்பினாங்க.

அப்படி நாடே தத்தளித்தபோது -சாலைகள் திறந்து விடப்பட்டன. குளங்கள் திறந்து விடப்பட்டன. கோயில்கள் திறந்து விடப்பட்டன. பள்ளிகள் திறந்து விடப்பட்டன. அப்படி ஒரு மகத்தான மனிதர் காந்தி.

கடவுளைப் பற்றி காந்தி என்ன சொன்னாரு?

‘கடவுளுக்கு வடிவமில்லை. ஆண் பெண் அப்படிங்கிற பால் பேதமில்லை. அதனால்தான் சத்யமே கடவுள் -உண்மையே கடவுள்னு சொ்னனேன். வாதங்கள் செய்து கடவுளை நிரூபிக்க முடியாது. அது உணரக்கூடிய விஷயம். பகுத்தறிவினால் எதையும் சாதிக்க முடியும்ன்னு சொல்றது எப்படி முட்டாள்தனமோ -அதே மாதிரி கோயில்ல இருக்கிற சிலைகளில்தான் கடவுள் இருக்குன்னு சொல்றதும் முட்டாள்தனம். விக்ரகம் கடவுளை உணர்வதற்காக உருவாக்கப்பட்டவை. அதுவழியா கடவுளை உணரலாம். என் வாழ்க்கையில் நான் என்றுமே அசரீரி கேட்டதில்லை. தெய்வ தரிசனம் பார்த்ததில்லை. கடவுள் என்பவர் பசித்தவனுக்கு உணவு வேலை வடிவத்தில்தான் காட்சியளிக்க வேண்டும்!’ என்றார்.

பணக்காரர்களுக்கு என்ன சொன்னார்?

‘கடவுள் உனக்குப் பணம் கொடுத்தது உன் குடும்பத்துக்குப் போக மீதியை இந்த சமுதாயத்தோடு பங்கு போட்டுக் கொள்ளத்தான். இல்லையென்றால் ஒருநாள் ரத்தக்களரியோடு புரட்சி ஏற்படும். பொறுத்துக்கிட்டே இருப்பான். ஒருநாள் அடிச்சு நொறுக்கிட்டு உள்ள பூந்திடுவான். அதுக்கு முன்னாடி நீயே பங்கு போட்டுக்க.!’

பிர்லா காந்தியோட தீவிர பக்தர். - ஒரு பத்திரிகைகாரர் கேட்டாரு.

‘என்ன காந்தி! பெரிசா பேசறீங்க. சுத்தி வளைச்சுப் பாத்தா காங்கிரஸ் கட்சி பெரும் பணக்காரங்க கையிலதானே இருக்கு?’

‘கசப்பான உண்மை. அதான் நிஜம். தொண்டர்கள்கிட்ட நாலு அணா, நாலு அணாவா வசூல் செய்து பார்த்தோம். அந்த வசூல்ல பெரிய திட்டங்களை நிறைவேற்ற முடியலே. அதனால காங்கிரஸ் அவங்க கொடுக்கிற நன்கொடையிலதான் செயல்பட்டுக்கிட்டிருக்கு...!’

டெல்லிக்கு காந்தி போனா -பிர்லா சாரட் வண்டில ஸ்டேஷன் வருவார். ரயில்வே ஸ்டேஷன்ல குதிரைகளை அவுத்து விட்டுட்டு -சாரட்ல காந்திய உட்கார வச்சு கூட நாலு பேரைச் சேர்த்து பிர்லாவே சாரட் வண்டியை இழுத்துட்டு வருவார்.

காந்தியோட ஆஸ்ரமம், பால் பண்ணைக்கு வருஷத்துக்கு ரூ.50 ஆயிரம் செலவாகும். எல்லாத்துக்கும் காந்தி கணக்கு எழுதி வச்சு பிர்லாகிட்ட குடுப்பாரு. அதைத் திருப்பிப் பார்க்காம கிழிச்சுப் போட்டுட்டு பிர்லா பணத்தைக் குடுப்பாரு.

பிர்லா -ஹரிஜன்- ஆங்கிலேயேர் -யாருமே தீண்டத்தகாதவர் அல்ல. எதிரிகிட்டயும் நல்ல விஷயம் இருந்தா அதை ஏத்துக்கணும்னு சொல்லுவாரு காந்தி.

தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்ததும் நாட்டை சுத்திப் பார்க்கணும்னு ஆசைப்பட்டாரு.

இந்தியாவின் நீளம் 1,900 மைல்கள். அகலம் 1,200 மைல்கள். மொத்த நாட்டையும் ரயில்ல மூணாம் வகுப்பு பெட்டில பிரயாணம் செஞ்சு பாக்கறதுன்னு புறப்பட்டாரு.

ஒரு நாள் மதுரைக்கு ரயில்ல போறாரு. திண்டுக்கல் தாண்டி சின்னாளப்பட்டி பக்கம் ரயில் போகும் போதும் வழில நின்னுது. வயலில் வேலை செய்யற ஆளுகளைப் பாத்தாரு. தலையில துண்டு, இடுப்புல கோவணம். ‘ஏப்பா இதுதான் உங்க உடையா?’ன்னு கேட்டாரு.

‘எங்க சம்பாத்தியத்துக்கு இதுதான் போட முடியும்!’னாங்க.

மதுரையில ராத்திரி அவரால தூங்க முடியலே. இரவு முழுக்க யோசனையிலேயே படுத்திருந்தாரு.

மறுநாள் காலையில இடுப்புல 4 முழ வேட்டி- தோள்ல ஒரு துண்டு.

‘என்ன காந்தி?’

‘என் நாட்டு மக்களுக்கு முழுமையான உடை கிடைக்கிற வரைக்கும் இனி இதுதான் என் உடை!’ன்னாரு. தொடக்கக் காலத்தில நாடு பிரிவினை பற்றி ஜின்னா நினைத்ததே இல்லை. பின்னால 6 ஆண்டுகளுக்குப் பிறகு இஸ்லாம் மக்களுக்கு ஒரு நாடு வேண்டும் என்று கோரிக்கை வச்சாரு. பிரிட்டீஷ்காரன் இருக்கும்போதே நாட்டைப் பிரிக்கணும்னு நெனைச்சாரு. ஆனா இந்தியாவைப் பிரிப்பது என் உடம்பிலிருந்து உயிரைப் பிரிப்பது போன்றதுன்னு மறுத்தார் காந்தி.

விதி வசமாக நாடு பிரிக்கப்பட்டது.

1947 ஆகஸ்ட் 14 பாகிஸ்தானுக்கு சுதந்திரம். ஆகஸ்ட் 15 இந்தியாவுக்கு சுதந்திரம். -அறிவிச்சவுடனே ஒண்ணரைக்கோடி மக்கள் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவை நோக்கி இந்துக்களும், இந்தியாவிலிருந்து பாகிஸ்தானை நோக்கி முஸ்லிம்களும் 57 மைல் நடந்து போய் மோதிக் கொண்டார்கள்.

‘இதற்காகவா அஹிம்சையைப் போதித்தேன்?’ என்று நொறுங்கிப் போனார் காந்தி.

தீண்டாமையை எதிர்த்து, இனக்கலவரத்தை எதிர்த்துச் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார். பிரிவினை வேண்டாம் என்று கெஞ்சிப் பார்த்தார்.

இந்தியாவில் 2,089 நாள் சிறைவாசம்; தென்னாப்பிரிக்காவுல 249 நாள் சிறை வாசம் இருந்தும் மக்களைத் திருத்த முடியவில்லை. இங்கிலாந்து பிரதமர் சர்ச்சிலாகவோ, அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட் ஆகவோ, ராஜ தந்திரியாகவோ மக்கள் காந்தியைப் பார்க்கவில்லை.

புத்தராக, ஏசுவாக காந்தியைப் பார்த்தார்கள்.

அவர் பாதத்தைத் தொட்டு வணங்கினார்கள். ஆனால், அவர் உபதேசத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.

இருந்தும் அந்த 79 வயசுக் கிழவர் காலில் உலகமே வீழ்ந்து கிடந்ததால்தான் - நம் பாரதி பாடினான்...

‘வாழ்க நீ எம்மான்! இந்த வையத்து நாட்டிலெ்லாம்; தாழ்வுற்று வறுமை மிஞ்சி -விடுதலை தவறிக் கெட்டு- பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந்தன்னை வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா - நீ வாழ்க!’

இப்பேற்பட்ட ஆத்மாவான அந்த காந்தி உருவத்தை வரையாத ஓவியர் உலகில் பிறந்திருக்க முடியாது.

கன்னிமரா நூலகம் சென்னையில் மிகவும் பழமையானது. அதில் காந்தி சம்பந்தப்பட்ட புத்தகங்களுக்காக ஒரு முழு அறை ஒதுக்கியுள்ளார்கள். 29 வால்யூம்கள் 1960இன் தொடக்கத்தில் அங்கு இருந்தன.

உலகத்தில் எந்த நாட்டில் காந்தி கால் பதித்திருந்தாலும், அங்கு காந்தி பக்தர்கள் எடுத்த புகைப்படங்கள் அத்தனையும் அந்த நூல்களில் பதிப்பிக்கப்பட்டுள்ளன.

கோவை காந்தி வந்தபோது வேலாயுதன், காந்தியைப் படமெடுத்திருந்தாலும், அவர் பெயரோடு அந்தப் புகைப்படம் நூலில் அச்சாகி இருக்கும்.

அபூர்வத் தொகுப்பு. அதில் ஒரு பக்கத்தில் ஆழ்ந்த சிந்தனையோடு காந்தி எதையோ எழுதிக் கொண்டிருப்பது போன்ற புகைப்படம் ஒன்று இருந்தது. வழக்கமாக நாம் பார்க்கும் காந்தி படமல்ல அது. அதை எடுத்து வந்து பென்சில் ஸ்கெட்ச் 1 நாள் முழுக்க போட்டேன். PEN & INK முறையில் 2 நாட்கள் எடுத்துக் கொண்டு ‘லைன் டிராயிங்’-ல் (LINE DRAWING) வரைந்து முடித்தேன்.

என்னுடைய ஓவியங்களில் முழுமையான மனநிறைவு கொடுத்த படைப்புகளில் இதுவும் ஒன்று.

பொதுவாக எந்தப் படம் வரைவதென்றாலும் ‘அவுட் லைன்’ (OUT LINE)போட்டுத்தான் வரைவார்கள். லைன் டிராயிங் (LINE DRAWING) முறை என்றால் பக்கவாட்டுத் தோற்றமுள்ள இந்தப் படத்தில் அவுட்லைன் (OUT LINE) நிச்சயம் இருக்கும்.

ஆனால், இந்த ஓவியத்தில் OUT LINE எங்குமே இருக்காது.

மூக்குக் கண்ணாடி வரையும்போது சாதாரணமாக ஃபிரேம் (FRAME) வரைய நேர்க்கோடு போடுவார்கள். வட்டமான கண்ணாடி வரைய வட்டமாக கோடு போடுவது சகஜம். ஆனால், இந்தப் படத்தில் வட்டமான கண்ணாடியைக் கூட நேர்க்கோடுகளால், நீண்ட கோடுகளால் நான் வரையவில்லை.

காந்தி பிரதான ஓவியம்

பென்சிலால் ஸகெட்ச் போட்ட பிறகு அவர் முகத்தை நீண்ட நேரம் உற்றுப் பார்த்து ஸ்டடி (STUDY) செய்து, கன்னத்திலிருந்து கீழ்நோக்கிக் கோடுகள் வரும். கண்ணுக்கு அடியிலிருந்து கடைவாய்ப் பகுதிக்குக் கோடுகள் வளைந்து வரும். உதடுகளுக்குப் போடும் கோடுகள் மரவெட்டை உடம்பில் உள்ளது போல் வளைவாகக் கோடுகள் இருக்கும். நெற்றியில் சுருக்கங்கள் வரைய உதயசூரியன் கதிர்கள் போல கோடுகள் விரியும். காது மடல்களில் எப்படி வளைவுகள் உள்ளனவோ, அதைக் கோடுகளில் சாமர்த்தியமாகக் காட்டியுள்ளேன்.

பொதுவாக கண்கள் நேராகப் பார்ப்பது போல எந்த ஓவியரும் படம் வரைய ஆசைப்படுவார். கண்களில் உள்ள ஹை லைட் (HIGH LIGHT) ஓவியத்தின் உயிர். அதையெல்லாம் தவிர்த்துக் கீழே பார்ப்பது போல் வரைந்துள்ளேன்.

1963இல் வரைந்த இந்த ஓவியத்தின் பிரதி உலகெங்கிலும் உள்ள என் நண்பர்கள் இல்லங்களை அலங்கரிக்கின்றன. இந்தக் கட்டுரை வெளியாகும் போது டெல்லி, காந்தி மியூசியத்திலும் இந்த ஓவியம் இருக்க வாய்ப்புள்ளது.

தரிசிப்போம்...

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x