Published : 09 Nov 2020 11:16 AM
Last Updated : 09 Nov 2020 11:16 AM

சித்திரச்சோலை 11: அந்த ‘கன்’ மெட்டல் ‘ட்யூப்ளே’ சிலை!

ஓவியக்கல்லூரியில் கமர்ஷியல் ஆர்ட் பிரிவு எடுத்து படித்தவர் தயாளன். என்னை விட நான்கைந்து வயது மூத்தவர். இலங்கைக்கு பாக்கு ஏற்றுமதி வியாபாரம் செய்தவர் அவர் அப்பா. கும்பகோணம் ஓவியப்பள்ளியில் கொஞ்ச காலம் படித்து விட்டு சென்னை வந்து எங்கள் கல்லூரியில் சேர்ந்து படித்தார்.

பாண்டிச்சேரியில் அவருக்கு வீடு இருந்தது. அம்மா, அப்பா அங்கே 107 கொசக்கடை தெருவில் குடியிருந்தனர். ‘ஸ்பாட் பெயிண்ட்டிங்’ (SPOT PAINTING) ஊர் ஊராகப் போய் செய்ய வேண்டும். ஆனால், செலவு அதிகம் ஆகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

‘என்னய்யா! யோசிக்கறே? பாண்டிச்சேரி ஊர் அமைப்பே வித்தியாசமாக இருக்கும். எங்க வீட்ல தங்கிக்கலாம். 2 நாள் வாய்யா!’ன்னு தயாளன் கூப்பிட்டாரு.

பாண்டிச்சேரி செல்லும் ரயில் பெட்டிகளை விழுப்புரத்தில் கழட்டிவிட்டு,பாண்டியன் எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ் போய் விடும். தனியே ஒரு என்ஜின் வந்து இந்தப் பெட்டிகளை இணைத்துகொண்டு போய் பாண்டியில் சேர்க்கும்.

பாண்டி ட்யூப்ளே சிலை முன்பு குடும்பத்துடன்

1961 அக்டோபர் 21ஆம் தேதி விடியற்காலை 5.30 மணிக்கு ரயில் பாண்டியை அடைந்தது. தயாளன் சைக்கிள் ரிக்ஷாவில் தன் வீட்டுக்கு அழைத்துப் போனார். தெருக்களெல்லாம் நேராகச் சென்றன. ஸ்கேல் வைத்து கோடு போட்ட மாதிரி வீடுகள். ஒரு அங்குலம் கூட நீண்டு, வெளியே துருத்திக் கொள்ளாமல் வரிசையாக கட்டப்பட்டிருந்தன. பிரெஞ்சுக்காரன் ஆட்சியில் உருவான நகரம்.

நகரத்தின் மற்றொரு பகுதி உழைப்பாளர்கள் வாழும் இடம். திரும்பிய பக்கமெல்லாம் குடிசைகள். சைக்கிள் ரிக்ஷாக்கள், சாராயக்கடைகள், பக்கத்திலேயே திறந்வெளியில் மீன் வறுவல் தயாரிப்பு. பொதுவாகவே பாண்டிச்சேரி அமைதியான நகரம். யாரும் கத்திப்பேச மாட்டார்கள். சண்டை சச்சரவு குறைவு. போலீஸ்காரர்கள் கெடுபிடி எதுவுமே இராது.

தயாளன்

தயாளனுக்குப் பூர்வீகம் விருதுநகர். சொந்தக்காரங்க எல்லாரும் அங்கதான் இருந்தாங்க. எங்க நண்பர்கள் குழாம்ல வயசில பெரியவர் தயாளன். அதனால விருதுநகர்ல அவருக்குப் பெண் பார்த்து முடிவு செய்தார்கள்.

நெருக்கமான நாலஞ்சு நண்பர்கள் அவரோட கல்யாணத்துக்கு வரணும்ன்னு வற்புறுத்தினாரு. நாங்க பட்ஜட் போட்டு செலவு பண்ற பசங்க.

நீங்க ஒண்ணும் கவலைப்பட வேண்டாம். செளகார்பேட்டையில எங்கப்பாவுக்கு ஒரு வட்டிக்கடை இருக்கு. ஒரு ஆள் அதைப் பார்க்கறாரு. கைச்செலவுக்கு பணம் குடுன்னு தினம் 10, 20 வாங்கி வந்து தர்றேன். அதெல்லாம் சேர்த்து வச்சு 4 பேருக்கு போக வர ரயில் டிக்கெட் வாங்கிக்கோங்கன்னு சொன்னாரு. தினம் அதே மாதிரி 10, 20 கொண்டு வந்து எங்கிட்டதான் குடுத்தாரு.

விருதுநகரில் கல்யாணம்

விருதுநகர்ல ராஜா வீட்டு கல்யாணம் மாதிரி சாரட் வண்டில உயரமான கருப்பு குதிரைகள் பூட்டி -பொண்ணு மாப்பிள்ளை குட்டியும் குழுவானுகளையும் அதில ஏத்தி ஊர்வலமா கூட்டிட்டு வந்தாங்க. கல்யாண வீட்ல நான் பழைய சட்டை போடக்கூடாதுன்னு தயாளனுக்குப் புதுசா தச்சிருந்த டீ சர்ட், பேண்ட், பெல்ட்டெல்லாம் எனக்கு மாட்டி விட்டார் தயாளன். இளமை, ஏழ்மை, கபடமற்ற நட்போடு நாங்க வாழ்ந்த அந்த வாழ்க்கை திரும்ப வராது.

சென்னை புதுப்பேட்டையில் 47 திருவேங்கடநாயக்கன் தெருவில் 15 ரூபாய் வாடகையில் 7 ஆண்டுகள் இருந்ததாக முன்னரே சொல்லியுள்ளேன்.

எதிர் அறையில் பாலாபழனூர் தங்கியிருந்தார். லயோலா கல்லூரியில் பி.ஏ., ஹானர்ஸ் (BA Hons) படித்தவர். தந்தை அரவிந்த் பாலா சுதந்திரப் போராட்டங்களில் கலந்து கொண்டவர். மிராஸ்தார் குடும்பம். திருவேட்டக்குடி- காரைக்காலை அடுத்த கிராமம். 20, 30 ஏக்கர் விவசாய நிலம் இருந்தது.

பாலாவுடன்.

சட்டக்கல்லூரியில் 2 ஆண்டு படித்த காலத்தில் எனக்கு ரூம் மேட்டாக இருந்தார். ‘டேபிள் மேனர்ஸ்’ (TABLE MANNERS) எல்லாம் சொல்லிக் கொடுத்தவர். பார்ட்டியில் விஐபிக்கள் சாப்பிடும்போது, சத்தம் போட்டு பேசக்கூடாது. வாய்க்குள் சாதம் போட்டால், வாயை மூடிக் கொண்டு மென்று விழுங்க வேண்டும். ‘நாப்கின்’-ஐ எப்படி மடியில் எப்படி ஒழுங்காக விரித்துப் போட வேண்டும். ‘நைஃப் ஃபோர்க்’ (KNIFE - FORK) பயன்படுத்தி -கையால் நூடுல்ஸைத் தொடாமல் - எப்படி சாப்பிடுவது எல்லாம் கற்றுக் கொடுத்தவர். ‘டை’ கட்டவும் அவர்தான் கற்றுக் கொடுத்தார்.

அவரது தாய்மாமன் இலங்கையில் கத்தோலிக்க சாமியாராக இருந்தார். கத்தோலிக் பாதர்கள் பிரம்மச்சாரிகள். அந்த ‘ரெவ்-பாதர்’ ஆரோக்யம் (REV/FATHER- AROKIAM) தான், விகடனில் ஒரு பக்கம் அச்சாகியுள்ள விஷயத்தை போஸ்ட் கார்டில் சிறியதாக அழகாக எப்படி எழுதுவது என்று கற்றுக் கொடுத்தார்.

புதுப்பேட்டை ஒண்டுக்குடித்தன வீட்டுப் பெண்ணை பாலா காதலித்தார். வீட்டில் எதிர்ப்பு. 7 ஆண்டுகள் காத்திருந்து வேளாங்கண்ணி மாதா கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். புதுப்பேட்டை ஒண்டுக்குடித்தன வீட்டில் இருந்த எல்லோரும் அரசு போக்குவரத்துக் கழக பஸ்ஸில் வேளாங்கண்ணி கல்யாணத்துக்குச் சென்று வந்தோம்.

பாலா- பிலோமினா தம்பதி

அதிமுக தொடங்கி மளமளவென்று வளர்ச்சியடைந்தபோது பாண்டிச்சேரி தொகுதிக்கு ஒரு பட்டதாரியை நிறுத்த எம்.ஜி.ஆர் விரும்பினார்.

அப்போது என்.சி. ராகவாச்சாரியின் ஜூனியராக ஹைகோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்த பாலாவுக்கு அதிர்ஷ்டம் அடித்தது. அரசியலில், எந்த வித விருப்பமும் இல்லாதவர் எம்.ஜி.ஆர் செல்வாக்கால் மத்தியில் சரண்சிங் மந்திரிசபையில் சில நாட்கள் அமைச்சராக இருந்தார். வாடிகன் சிட்டி போய் போப் ஆண்டவரைச் சந்தித்தார். தென் அமெரிக்கா- மெக்ஸிகோ எல்லாம் அமைச்சராகச் சுற்றுலா சென்று திரும்பிய சமயம் சரண்சிங் மந்திரிசபை கலைக்கப்பட்டு விட்டது.

என்னுடைய ஓவியங்களைப் பார்த்து உச்சிமோந்து பாராட்டிய பாலா - ‘டேய் தம்பி! என்னதான் பிரமாதமா படம் வரைஞ்சாலும் நீ சினிமாவுலதான்டா ‘ஷைன்’ பண்ணுவேன்னு, கைத்தறி பொருட்காட்சியில், ‘பாவையின் பார்வை’ என்ற நாடகத்தில் முதன் முதல், 2 மணி நேரம் பெரும் கூட்டத்தில் உணர்ச்சிகரமாக நான் நடித்ததைப் பார்த்துச் சென்னவர்.

எம்ஜிஆருடன் பாலா

உதய்சங்கர் உன்னை மாதிரி பெரிய ஓவியர். ஆனா, லண்டன்ல போய் ஓவியக்கலை படிக்கறப்போ, ‘அன்னா பாவ்லோவா’-ன்னு ரஷ்யன் டான்ஸரோட பழக்கமேற்பட்டு, பின்னாளில் உலகத்தில பெரிய பாலே டான்ஸரா பேர் வாங்கினாரு. அப்படி நீயும் நடிகனாத்தான்டா பேர் வாங்குவேன்னு சொன்னாரு.

அவரோட சட்டம் படிச்சு பாண்டிச்சேரியில் நீதிபதியான ஜான் ஆம்ரூஸ்-ஐயும் ஒரு நாள் பாண்டியில் சந்தித்தேன்.

அக்டோபர் 22ஆம் தேதி, தயாளன் வீட்டிலருந்து ஒரு பெடல் கட்டை இல்லாத ஓட்டை சைக்கிளை எடுத்துகிட்டு அதிகாலை 5.30 மணிக்கு பாண்டி கடற்கரையில இருக்கிற லைட் ஹவுஸ் போய் சேர்ந்தேன். அங்கிருந்து தெற்கு நோக்கி நூல் புடிச்ச மாதிரி ட்யூப்ளே தெரு போகுது. தெருவின் நடுவில், இந்தியக் கட்டிடக்கலை சிற்பங்கள் அடங்கிய கல் மேடை மேலே ‘கன் மெட்டல்’ல (GUN METAL) செஞ்ச ‘ட்யூப்ளே’ சிலையை நிறுவியிருக்காங்க.

விடியறதுக்குள்ளேயே பென்சில் ஸ்கெட்சை முடிச்சு கடலுக்கு மேல சூரியன் உதிச்சு அந்த மஞ்சள் வெளிச்சம் சிலை மேலே படற அழகை வேகவேகமா வரைய ஆரம்பிச்சேன்.

பாலா ஸ்கெட்ச்

சூரியன் மேல வந்திட்டா, அந்த மஞ்சள் கலரின் அழகு கிடைக்காது. 3 மணி நேரம் உட்கார்ந்து வரைஞ்சு முடிச்சேன்.

அதுக்கப்புறம் நடிகனாகி பாண்டி போனபோது ட்யூப்ளே சிலையைக் கடற்கரைக்கு எடுத்துட்டுப் போய் வச்சிட்டாங்க.

1970களில் மேஜர் சுந்தரராஜன் குழுவுடன் சேர்ந்து பாண்டிக்கு நாடகம் போடப் போனோம். நாடகக் கம்பெனி செயலாளர் சந்தானம் கறாரான ஆசாமி, நாடகம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே கான்ட்ராக்டர்கிட்ட பணம் வசூல் பண்ணிருவாரு.

பிலோமினா மகனுடன்.

பாண்டிச்சேரில என்னமோ நாடகம் முடிஞ்சப்புறம் வாங்கிக்கலாம்னு நினைச்சிருந்தாரு.

கடைசில வசூலை எடுத்துட்டு கான்ட்ராக்டர் காணாம போயிட்டாரு. அன்னிக்கு காலையில நானும், மேஜரும் ரேடியோ ஸ்டேஷன்ல பேட்டி குடுத்ததுக்கு ரெவினியூ ஸ்டாம்புல கையெழுத்து வாங்கிட்டு ஆளுக்கு 200 ரூபாய் குடுத்தாங்க. அந்த 400 ரூபாயில அரசு போக்குவரத்துக் கழக பஸ்ல டிக்கெட் வாங்கி, சினிமா ஹீரோ பஸ்ல சென்னை வந்த நாட்களை நினைச்சா வாழ்க்கை எவ்வளவு சுவாரஸ்யமானதுன்னு புரியுது.

---

தரிசிப்போம்...
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x