Published : 15 Oct 2015 10:27 AM
Last Updated : 15 Oct 2015 10:27 AM
20-ம் நூற்றாண்டின் தலைசிறந்த நகைச்சுவை எழுத்தாளரும் நாவலாசிரியர், கவிஞர், கட்டுரையாசிரியர் என பன்முகத் திறன் கொண்டவருமான பி.ஜி.வுட்ஹவுஸ் (பெல்ஹம் கிரென்வில் வுட்ஹவுஸ்) (P.G.Wodehouse) பிறந்த தினம் இன்று (அக்டோபர் 15). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l இங்கிலாந்தில் கில்ட்ஃபோர்ட் என்ற நகரில் பிறந்தார் (1881). தந்தை அப்போதைய பிரிட்டிஷ் காலனி நாடான சீனாவில், ஹாங்காங் நகரில் மாஜிஸ்திரேட்டாகப் பணிபுரிந்தவர். இதனால் இங்கிலாந்தில் பிறந்த இவரும் இவரது அம்மாவும் அங்கே அழைத்து வரப்பட்டனர். இரண்டு வருடங்களுக்குப் பிறகு, ஏற்கெனவே அங்கே இருந்த அண்ணனுடன் சேர்த்து மீண்டும் இங்கிலாந்து அனுப்பி வைத்தனர்.
l அங்கே வசித்து வந்த தாத்தா, பாட்டி வீட்டருகே ஒரு ஆயாவின் பராமரிப்பில் வளர்க்க வைத்தனர்.
l கப்பற்படையில் தன் மகனை சேர்க்க வேண்டும் என்பது அப்பாவின் விருப்பம். ஆனால் மகனின் கண்பார்வை மிகவும் மோசமாக இருந்ததால் அவரின் ஆசை நிறைவேறவில்லை. பள்ளி விடுமுறை நாட்கள் உறவினர்களின் வீடுகளில் கழிந்தன. அங்கே ஏற்பட்ட மகிழ்ச்சியும் வெறுப்பும் கலந்த அனுபவங்கள் பின்னாளில் இவரது எழுத்துகளில் வெளிப்பட்டன.
l தன் அண்ணனுடன் டல்விச் கல்லூரியில் பயின்றார். கிரிக்கெட், ரக்பி, பாக்சிங் விளையாட்டுகளில் சிறந்து விளங்கினார். படிப்பிலும் முத்திரை பதித்தார். லத்தீன், கிரேக்க மொழிகளைப் பயின்றார். இவர் நல்ல பாடகரும்கூட. இலக்கிய ஆர்வத்துக்குத் தீனி போட, கல்லூரி இதழ்களில் எழுதுவதிலும் எடிட் செய்வதிலும் ஈடுபட்டார்.
l அப்பா பணி ஓய்வு பெற்ற பிறகு குடும்ப நிதி நிலைமை மோசமான தால், மேற்படிப்பு படிக்க முடியவில்லை. ஒரு வங்கியில் வேலை கிடைத்தது. ஆனால் அந்த வேலை அவருக்குப் பிடிக்கவில்லை. ஓய்வு நேரங்களில் எழுதி வந்தார். இவரது ஆரம்பக்கால நாவல்கள் பெரும்பாலும் பள்ளிக்கூடக் கதைகளாகவே இருந்தன. பின்னர் நகைச்சுவை புனைக் கதைகளை எழுத ஆரம்பித்தார்.
l 1900-ம் ஆண்டில் ‘மென் ஹூ மிஸ்ட் தேர் வோன் வெட்டிங்ஸ்’ என்ற இவரது முதல் நாவல் வெளிவந்தது. தொடர்ந்து பல வெற்றிகரமான நாவல்களை எழுதினார். இவற்றில் பல விற்பனையில் சாதனை படைத்தன. தனது நாவல்களில் பெஸ்டி வூஸ்டர், ஜீவஸ் போன்ற மீண்டும் மீண்டும் இடம்பெறும் பல கதாபாத்திரங்களைப் படைத்தார்.
l இந்தக் கதாபாத்திரங்கள் வாசகர்களிடையே மிகவும் பிரபலமடைந் தன. இவரது பெரும்பாலான புனைக்கதைகளின் கதைக்களம் இங்கிலாந்தாக இருந்தாலும், இவர் தன் வாழ்வின் பெரும்பகுதியை அமெரிக்காவில்தான் கழித்தார். சில நாவல்கள் மற்றும் சிறுகதை களை நியுயார்க் மற்றும் ஹாலிவுட் பின்னணியிலும் படைத்துள்ளார்.
l கே பால்டன், ஜேரொம் கென் ஆகியோருடன் இணைந்து பிராட்வே இசை நகைச்சுவை நாடகங்களை எழுதியுள்ளார். இவை அமெரிக்க இசை நாடக வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தன. இசை நாடகம், பாடல்கள் இயற்றியுள்ளார்.
l இவரது படைப்புகள் முதல் உலகப் போருக்கு முன்னும் பின்னும் இருந்த ஆங்கிலேய மேல்தட்டு மக்களின் வாழ்க்கையை பிரதிபலித்தன. ஜெர்மன் படைகளால் கைது செய்யப்பட்ட இவர், அரசியல் ரீதியாகவும், சமுதாய ரீதியாகவும் பல கடுமையான நெருக்கடிகளை சந்தித்தார்.
l ஆனால், எப்போதுமே எழுதுவதை மட்டும் இவர் நிறுத்தியதே இல்லை. இன்றும் உலகம் முழுவதும் வாசிக்கப்படும் படைப்பாளியாக புகழ் பெற்றுள்ளார். 70 ஆண்டுகள் தொடர்ந்து எழுதி வந்த, சாதனைப் படைப்பாளியான பி.ஜி. வுட்ஹவுஸ் 1975-ம் ஆண்டு மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT