Published : 02 Oct 2015 02:02 PM
Last Updated : 02 Oct 2015 02:02 PM

அலமாரியில் பழுப்பேறிக் கிடந்த சத்திய சோதனை

சமீப காலமாக அலமாரியில் பழுப்பேறிக் கிடக்கும் நூல்களை தேடித்தேடி படிப்பதென்பது எனது வழக்கமாகியிருக்கிறது. அதில், 'படித்து முடித்துவிட்டேன்!' என்ற இறுமாப்புடன் முடிவு கட்டிவிட்ட புத்தகங்கள் பல கைக்கு கிடைத்து திரும்ப ஒரே மூச்சில் வாசித்து முடித்துள்ளேன். அவை படிக்காத புத்தகங்கள் வரிசையிலேயே கைகோர்த்து நிற்க வெட்கி தலைகுனிந்து போகிறேன்.

ராகுல சாங்கிருத்தியானனின் வால்காவிலிருந்து கங்கை வரை, வெ.சாமிநாதசர்மா மொழிபெயர்ப்பு கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு, எங்கெல்ஸின் குடும்பம், தனிச்சொத்து, அரசு, கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம், வனவாசம் என பலவற்றை படித்து பிரமித்துப் போவதோடு, வெட்கி தலைகுனிந்தும் போகிறேன்.

மறுவாசிப்பு என்பது புதிய பயணம், நேற்று புரியாதவை, இன்று புரிகின்றன. இன்று புரியாதது நாளை புரியக்கூடும் என்ற உணர்வை இது உணர்த்தாமல், நேற்று வரை அறியவில்லை, புரியவில்லை, புலப்படவேயில்லை என்ற நிலையை இன்றைய வாசிப்பு அனுபவம் ஏற்படுத்துகிறது.

அந்த வகையில் இன்று அலமாரியில் தேடியபோது மிகவும் பழுப்பேறி ஒரு புத்தகம். கனமான பைண்ட் செய்யப்பட்ட அட்டை போட்டும் பின் அட்டை கிழிந்து சில பக்கங்கள் காணாமல் போயிருந்தது. அந்த புத்தகம் சத்தியசோதனை.

நான் 10-ம் வகுப்பு முடித்து 11-ம் வகுப்பு அடியெடுத்து வைத்த 14 வயது பிராயம் அது. கோவை மாவட்டத்தில் உள்ள காந்தி அமைதி நிறுவனம் 15 நாட்கள் காந்திய சிந்தனை வகுப்புகளை நடத்தி விட்டு, தொடர்ந்து, மாணவ-மாணவிகளுக்கு ஒரு கட்டுரை போட்டியை மாவட்ட அளவில் நடத்தியது. அதில் நான் எழுதிய கட்டுரை முதல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு ‘சத்திய சோதனை!’ நூல் பரிசாக வழங்கப்பட்டது. அதை வழங்கியது காந்தி அமைதி நிறுவன நிறுவனர் எஸ்.பி.சடகோபால்.

சத்திய சோதனையை அந்த வயதில் பலமுறை படிக்க முயற்சித்துள்ளேன். ஒரு முறை முழுசாக படித்தும் முடித்துவிட்டேன். அதெல்லாம் 20 வயதுக்குள் முடிந்து விட்டது. இப்போது எடுத்து புரட்டுகிறேன். மலைப்பாக இருக்கிறது.

13 வயதில் தனக்கு மணமான விஷயம் குறித்து 3-வது அத்தியாயத்தில் குறிப்பிடும்போது மலைப்பை ஊட்டி விடுகிறார் காந்தியடிகள். அது இப்படி நீளுகிறது.

‘நாங்கள் சகோதரர்கள் மூவர். மூத்தவருக்கு முன்னாலேயே திருமணம் ஆகிவிட்டது. இரண்டாவது சகோதரருக்கும், எனக்கும், என் பெரியப்பா மகன் ஒருவருக்கும் ஒரே சமயத்தில் திருமணம் செய்து வைத்துவிடுவது என்று பெரியவர்கள் முடிவு செய்து விட்டார்கள். இப்படி முடிவு செய்ததில் எங்களுடைய நன்மையை குறித்தோ, எங்கள் விருப்பத்தை பற்றியோ அவர்களுக்கு சிந்தனையே இல்லை. அவர்கள் சவுகரியத்தையும் சிக்கனத்தையும் மாத்திரமே பற்றிய விஷயம் அது.

இந்துக்களின் கல்யாணம் என்றால் சாதாரண விஷயம் அன்று. பெரும்பாலான மாப்பிள்ளை வீட்டாரும், பெண் வீட்டாரும் விவாகத்தினாலேயே நாசத்தை தேடிக்கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் சொத்தை வீணாக்குகிறார்கள். காலத்தையும் வீணாக்குகிறார்கள். ஆடைகள் தயாரிப்பது, நகைகள் செய்வது, விருந்துகளுக்கு வேண்டிய திட்டங்கள் போடுவது என்ற வகையில் முன்னேற்பாடுகளுக்கே பல மாதங்கள் ஆகி விடுகின்றன.

விருந்து பட்சணங்கள் தயாரிப்பதில், அளவிலும், வகையிலும், ஒவ்வொருவரும் மற்றவரை விஞ்சி விட வேண்டும் என்று முயல்கிறார்கள். பெண்களுக்கு குரல் நன்றாக உள்ளதோ இல்லையோ, ஏகக் கூப்பாடு போட்டு பாடுகிறார்கள். நோய்வாய்ப்படவும் செய்கிறார்கள்; அண்டை வீட்டுக்காரர்கள் அமைதியோடு இருக்க முடியாதபடியும் செய்து விடுகிறார்கள்.

இத்தகைய கூச்சல் குழப்பங்களையும், விருந்து இலைகளில் மிஞ்சியதையும், குப்பைகளையும், மற்றும் சகல ஆபாசங்களையும் பக்கத்து வீட்டுக்காரர்களும் சகித்துக் கொள்கிறார்கள். ஏனெனில் தாங்களும் அவ்வாறே நடந்து கொள்ள வேண்டிய ஒரு சமயம் வரும் என்பது அவர்களுக்கும் தெரியும். இந்த தொல்லைகளெல்லாம் ஒரே சமயத்தில் தீர்ந்து போவது எவ்வளவோ நல்லது என்று என் பெரியோர்கள் எண்ணினர்.

இப்படி செய்தால் செலவும் குறைவாக இருக்கும். ஆடம்பரமும் அதிகமாக இருக்கும். மூன்று தடவைகளில் செலவழிப்பதற்கு பதிலாக ஒரே தடவையில் செலவிடுவதனால் பணத்தையும் தாராளமாக செலவிடலாம். என் தந்தைக்கும் பெரியப்பாவுக்கும் வயதாகி விட்டது. அவர்கள் விவாகம் செய்து வைக்கவேண்டியிருந்த கடைசிக் குழந்தைகள் நாங்கள். தங்கள் கடைசிகாலத்தில் சந்தோஷமான காரியத்தை செய்துவிட்டு போவோமே என்றும் அவர்கள் எண்ணியிருக்கக்கூடும்!’ இப்படி ஹேஸ்யங்கள் ததும்ப விவரணைகள் கூடிச் செல்கிறது. திருமணம் முடிந்த பிறகு அந்த முதல் இரவு குறித்து இப்படி சொல்கிறார்.

'எதுவுமே அறியாத இரண்டு குழந்தைகள், எந்த சிந்தனையும் இல்லாமல் வாழ்க்கையில் தாமே குதித்தன. முதல் இரவில் நான் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்பதை என் அண்ணன் மனைவி எனக்கு முழு போதனை செய்திருந்தார். என் மனைவியை அப்படி தயார் செய்திருந்தவர் யார்? என்பது எனக்கு தெரியாது. அதைப்பற்றி அவளிடம் கேட்டதும் இல்லை. நாங்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டபோது ஒரே நடுக்கம்தான். சொல்லிக் கொடுத்திருந்த பாடம் ஒரு துளியும் அப்போது உதவவில்லை. இத்தகைய காரியங்களில் உண்மையில் எந்த விதமான போதனையும் அவசியமில்லை. ஜன்மாந்தர வாசனைகளே எல்லாவிதமான யோசனைகளையும் அனாவசியமானவை என்று ஆக்கி விடக்கூடியவை. நாளடைவில் ஒருவரையாருவர் அறிந்து கொண்டோம். ஆனால், கணவன் என்ற அதிகாரத்தை நான் உடனே மேற்கொண்டுவிட்டேன்!'

லெளகிக வாழ்க்கையிலிருந்து அரசியல் வாழ்க்கை வரை படிக்கப் படிக்க, காந்தியின் உள் மனதில் இருந்து காந்தியத்தின் தத்துவச்சுவடுகள் எப்படியெல்லாம் உருவாகியிருக்கும். உலகமே போற்றத்தக்க அளவில் அது வளர்ந்ததன் உள்வெளிப்பாடுகளையும், அரிச்சந்திரனையும், சிரவணனையும் வரலாற்று புருஷர்கள் என்று அறியாமையில் மூழ்கி அந்தப் பாத்திரங்களாகவே தன்னை கற்பிதம் கொண்டு வாழ்ந்த காந்தியை படிக்கும் போது ஒவ்வொரு உன்னதர்களும் தம் வாழ்க்கையை காந்திக்குள்ளிருந்து தரிசிக்க முடிகிறது.

எண்ணி பத்து நிமிடத்தில் ஒரே மூச்சில் ஏழெட்டு அத்தியாயங்கள் படித்து முடித்து விட்டேன். என்ன ஆச்சர்யம். அப்போதுதான் இன்று காந்தி பிறந்த நாள் என்பதை உணர்ந்து கொள்கிறேன். நேற்று வரை, சற்று முன்வரை கூட காந்தி ஜெயந்தி என்று புத்திக்கு தெரிந்தாலும், இந்த புத்தகத்தை எடுக்கும்போதும் அறியாமல் வாசிக்கும்போதும் நிச்சயமாக காந்தியின் பிறந்தநாள் என்று உணராமலே கையிலெடுத்திருந்தேன் என்பது சத்தியமான உண்மை.

அப்படித்தான் பல விஷயங்கள் உணராமலே திட்டமிட்டது போல நடந்துவிடுகின்றன. காந்தியும், இந்த சத்தியசோதனை புத்தகம் எனக்கு பரிசாக கிடைத்ததும் அப்படித்தான். அதில் இன்றளவும் என்னை கையை பிடித்துக் கொண்டு ஓடிவரும் நேர்மையான எழுத்தும் இதற்குள்ளிருந்து புறப்பட்டதுதான். நதிமூலம், ரிஷிமூலம் என்பார்களே. அதுபோல எனக்கான எழுத்து மூலத்தின் பிதாமகர் காந்தி.

ஒண்டிப்புதூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும்போது என் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் தோழன் சிவராஜ் பள்ளி இலக்கிய விழா கட்டுரை போட்டியில் கலந்து கொள்கிறான் என்று அறிந்து தமிழம்மா பழனியம்மா ஆசிரியையிடம் நானும் பெயரைக் கொடுத்ததும், காந்தியடிகளின் இளமைப்பருவம் என்ற தலைப்பிலான கட்டுரையில் தோன்றிற் புகழொடு தோன்றுக என்ற குரலை ஆரம்பத்தில் எழுதி காந்திக்கு ஒப்பீடு காட்டி எழுதத் துவங்கியதும், அந்தப் போட்டியில் சிவராஜ் 3 ம் பரிசும், நான் 2ம் பரிசும் பெற்றதும் நினைவிற்கு வருகிறது.

அந்த போட்டிப் பரிசளிப்புவிழா பள்ளியில் நடந்த மாணவர் போராட்டத்தில் தள்ளிப்போனதும், கடைசியில் பள்ளி ஆண்டுவிழா நிகழ்ச்சியில் நான் பெற்ற கட்டுரை போட்டி பரிசுக்கு வழக்கம் போல் அளிக்கும் புத்தகப்பரிசு இல்லாமல் வெறும் சான்றிதழ் மட்டுமே வழங்கப்பட்டதில் மனம் கலங்கிப்போனதும் நினைவில் ஆடுகிறது.

அப்போதிருந்து எப்போதும், எங்கே கட்டுரைப் போட்டி என்றாலும் அதில் கலந்து கொள்வதும், காந்தி குறித்த தலைப்பு என்றால் அதில் ஓடோடிச் சென்று கரைந்து போவதும் அடிக்கடி நிகழ்ந்த ஒன்று. அப்படித்தான் காந்தி அமைதி நிறுவனம் நடத்திய காந்திய சிந்தனை வகுப்புகளில் தொடர்ந்து இரண்டு வருடம் கலந்து கொண்டு அவர்கள் நடத்திய கட்டுரைப்போட்டியில் பங்கேற்றதும் நடந்தது.

அந்த காந்திய சிந்தனை வகுப்பு நிறைவுவிழாவிலேயே போட்டி முடிவு அறிவிப்பும், பரிசளிப்பும். போட்டி அறிவிப்புக்கு முன்னதாக காந்தி அமைதி நிறுவன தலைவர் சடகோபன் முன்பு குட்டி, குட்டியாய் இரண்டு புத்தகங்கள். அதன் மீது இரண்டு குட்டி புத்தகங்களுக்கும் தலைவன் போல் பெரிய புத்தகமாய் இந்த சத்திய சோதனை.

10 பைசா, 12 பைசா கொடுத்து ராணியும், குமுதமும் வாங்கவே வக்கில்லாத காலத்தில் 10 ரூபாய் மதிப்புள்ள சத்தியசோதனை. தடியான புத்தகம். பரிசு பெரும்போது என்ன பெருமை? அது எனக்கே எனக்கே கிடைக்காதா சொக்கா? என்ற ஏக்கம். அதே போல் பரிசு அறிவிக்கப்படுகிறது. முதல் பரிசு எஸ்.வேலுச்சாமி என்று அறிவிக்கிறார் அறிவிப்பாளர். நூற்றுக்கணக்கானோர் கூடியிருக்கும் அவையில் ‘வேலுச்சாமி’ என்று யாருமில்லை.

ஒண்டிப்புதூர் அரசு மேல் நிலைப்பள்ளி, 11ம் வகுப்பு ஆங்கில வழியம் படிக்கும் வேலுச்சாமி என்று திரும்ப அறிவிப்பு. நான் தயங்கித் தயங்கி எழுந்திருக்கிறேன். நெஞ்சம் முழுக்க பட,படப்பு. வேலுச்சாமி என்று வேறுயாரும் இருந்து விடக்கூடாதே என்ற எதிர்பார்ப்பு. ஐயா, நான் வேலாயுதசாமி. எஸ்.வேலாயுதசாமி. அது என் கட்டுரையான்னு பாருங்க. கட்டுரைப் போட்டியில் பரிசுக்குரிய கட்டுரையை திரும்ப எடுத்து ஆராய்கிறார்கள்.

அதோ! எனது கட்டுரைதான். முத்துமுத்தான கையெழுத்தில். காந்தி வழி என்ற தலைப்பு ஹெச் பென்சிலில் அழகழகாய்.. 'அந்த கட்டுரை என்னுதுதான் ஐயா..!' படபடக்க நான் குரலை வெளிப்படுத்திய வேளை, பரிசு தரும் தலைவர் உச்சி மோந்து கொள்கிறார்.

புத்தகத்தோடு எழுதி ஒட்டப்பட்டிருந்த சான்றிதழில் 'வேலுசாமி' என்ற பெயரில் இருந்த 'லு' வை தனது பேனாவினால் அடித்துவிட்டு, 'லாயுத' ஆகிய எழுத்துக்களை ஏரோ மார்க் போட்டு மேலே எழுதி, என் கையில் சத்தியசோதனை புத்தகம் அளிக்கப்படுகிறது.

அரங்கு கொள்ளாத கைதட்டல். காந்தியுடனான அந்த கைகோர்ப்பும், அதற்கு கிடைத்த கைதட்டலும், மறுபடியும் திருத்தப்பட்டு சுருக்கப்பட்ட பெயரும்தான் இன்று என் எழுத்துக்கும், பத்திரிக்கை தொழிலுக்கும், இரண்டுக்குள்ளும் மூழ்கி நிற்கும் அர்ப்பணிப்புக்கும் மூலக்காரணியாக விளங்கியிருக்கிறது என்பதை இந்த புத்தகத்தின் வாசத்தில் உணரும்போது என் மனம் லேசாகி போவதை தவிர்க்க முடிவதில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x