Published : 02 Nov 2020 11:30 AM
Last Updated : 02 Nov 2020 11:30 AM
பறவைகள், விலங்குகளில் ஆண் இனத்தை அழகாகப் படைத்த இறைவன் மனிதப்பிறவியில் மட்டும் பெண்களை அழகாகப் படைத்து சதி செய்துவிட்டான் என்று நான் வேடிக்கையாகச் சொல்வதுண்டு. 100 பெண்களில் 90 பேருக்கு ஏதோ ஒரு வகையில் ஆண்களை ஈர்க்கும் அழகு இருக்கும். ஆனால், ஆண்களில் 40க்கும் குறைவானவர்களே கம்பீரமாகவும், அழகாகவும் இருப்பார்கள்.
அதில் ஆண்களே பொறாமைப்படும் அழகுள்ளவர் ஜெமினிகணேசன். அலை, அலையான தலை முடி, அளவான நெற்றி. கிளிமூக்கு. முத்துப்பல் வரிசை. வடிவான முகம். யோகாசனம் 16 வயதிலிருந்து செய்து வந்தபோதும் நான் செய்ய முடியாத, சிரமமான ஆசனங்களையெல்லாம் தன் வாலிபப் பருவத்தில் செய்து காட்டியவர்.
அதேபோல கடுமையான உடற்பயிற்சியும் செய்து, ‘சரஸ்வதி சபதம்’ படத்தில் பீமனைப் போல தோற்றமுள்ள ‘மல்லனை’ தலைக்கு மேல் தூக்கிப்போடும் காட்சியில் நடித்து, ஏ.பி.என்., அவர்களே மூக்குமேல் விரல் வைக்கும்படி செய்தவர்.
சென்னை புறப்படும் முன் சினிமா நடிகர்கள் படங்களை நான் ஓவியமாக வரைந்து அவர்களுக்கே அனுப்பிய செய்தியை இந்தத் தொடரில் ஏற்கெனவே எழுதியிருக்கிறேன்.
அப்படி ஓவியம் அனுப்பியதில் எம்.ஜி.ஆர் அலுவலகத்திலிருந்து மேனேஜர் புகைப்படம் அனுப்பியிருந்தார். நாகையா போஸ்ட் கார்டில் பிரிண்ட் செய்யப்பட்ட படத்தை அனுப்பியிருந்தார். சிவாஜி, சாவித்ரி சார்பில் பதில் வரவில்லை.
ஆனால் ஜெமினி கணேசன் மட்டும் தன்னுடைய லெட்டர் பேடில் தனிப்பட்ட முறையில் என் ஓவியத்தைப் பற்றிப் பாராட்டி, ‘சித்திரமும் கைப்பழக்கம்’ என்பது போல வருங்காலத்தில் நீ பெரிய ஓவியனாக வாழ்த்துகள்’னு எழுதி ஆங்கிலத்தில் ‘ஆர்.கணேஷ்’ என்று கையெழுத்துப் போட்டு -அழகான அவரது புகைப்படம் ஒன்றையும் இணைத்து அனுப்பியிருந்தார்.
சினிமா உலகத்தையே அன்று வென்று விட்ட மகிழ்ச்சி எனக்கு. ஊரைச் சுற்றி கம்பீரமாக ராஜநடை போட்டேன்.
சென்னை வந்து ஓவியக்கலை பயின்ற காலத்தில், ஊர்ப்பக்கம் இருந்து நண்பர்கள் யாராவது வந்தால் அவர்களுக்கு, நடிகர்களைப் பார்க்க முடியாவிட்டால் பரவாயில்லை -அவர்கள் வீடுகளையாவது பார்த்தாக வேண்டும் என்ற ஆவல் இருந்தது. எனக்கு சொந்தமாக சைக்கிள் இருந்ததால், வாடகைக்கு ஒரு சைக்கிள் எடுத்துக் கொண்டு ராயப்பேட்டை சென்று லாயிட்ஸ் ரோட்டில் எம்ஜிஆர் வீடு. சிவாஜி அரண்மனை போன்று கட்டி தி.நகர் தெற்கு போக் ரோட்டில் குடியிருந்த அந்த வீடு. நுங்கம்பாக்கம் திருமூர்த்தி நகரிலிருந்த ஜெமினி கணேசன் வீடு- ஹபிபுல்லா சாலையில் இருந்த சாவித்ரி வீடு எல்லாம் சுத்திக் காட்டுவேன்.
காலம் மாறி, ஓவியன் நடிகனாக அவதாரம் எடுத்த பின்னர், ‘கந்தன் கருணை’யில் நான் முருகனாக நடித்தபோது சிவன்- பார்வதியாக ஜெமினி -சாவித்ரி நடித்தனர். அந்தச் சூழலில் பேச வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஏ.பி.என்., ‘சரஸ்வதி சபதம்’ என்ற சொந்தப் படம் எடுத்த போது ஜெமினி மாமாவுடன் பேச வாய்ப்புக் கிடைத்தது.
1966 - ஜூலையில் ‘அம்புலிமாமா’ பத்திரிகையை பல ஆண்டுகளாக நடத்தி வரும் நாகி ரெட்டியார் சந்தமாமா பப்ளிகேஷன்ஸ், ‘பொம்மை’ என்ற இதழைக் கொண்டு வந்தது. ஜூ.வி, பத்திரிகை அளவு பெரியது. புகைப்படங்கள் ஆஃப்செட்டில் பிரிண்ட் ஆகி, அசத்தலாக இருக்கும். ‘பக்தா’ புகைப்படக்காரர் -‘கல்கி’யின் தீவிர வாசகரும், ‘பேசும்படம்’ சினிமா இதழில் உதவி ஆசிரியராக இருந்தவருமான ‘சாரதி’ ஆசிரியர் பொறுப்பேற்றார். ‘பொம்மை’ -1966 அக்டோபர் இதழில் முதன்முதல் என் பேட்டி வந்தது.
அந்தப் பேட்டியை படித்த ஜெமினி மாமா ‘டேய் சிவகுமாரா... பொம்மை பேட்டில உன் முகத்தை நீயே வரைந்த ‘செல்ஃப் போர்ட்ரைட் (SELF PORTRAIT) பாத்து பிரமிச்சுப் போயிட்டேன். ‘லைன் டிராயிங்’ல (LINE DRAWING) கன்னத்தில வேர்வை துளி நிக்கற மாதிரி வரைஞ்சிருக்கியே, சூப்பர்!’ அப்படின்னாரு.
‘அதென்ன மாமா, உங்க படத்தையே, அதை விட பிரமாதமா வரைஞ்சிருக்கேன்!’னேன். ‘எம் படம் உனக்கு எப்படி கிடைச்சுது?’ ன்னு கேட்டாரு. கிராமத்துக்கு அவர் லெட்டர் போட்ட கதையைச் சொன்னேன். ‘டேய், டேய்.. அந்தப் படத்தை நாளைக்குக் கொண்டு வந்து காட்டு!’ன்னாரு.
மறுநாள் படப்பிடிப்பின்போது ஓவியத்தை எடுத்து வந்து காட்டினேன். உற்றுப் பார்த்தார் ‘கிளாஸி’ (GLAZY) ஆக இல்லை என்றறிந்து, உண்மையிலேயே வரைஞ்சதுதான் என்று உறுதிப்படுத்திக் கொண்டார். ‘கிளாஸ் ஆர்ட்டிஸ்ட்-ப்பா (CLASS ARTIST) நீ. இந்தப் படம் எனக்குத்தானே கொண்டு வந்தே?’ன்னு கேட்டாரு.
‘ஆமா! உங்களுக்குக் காட்டத்தான் கொண்டு வந்தேன்!’னேன்.
‘அப்ப குடுக்க மாட்டியா?’
‘அசல் மனிதர் நீங்க இருக்கும்போது டூப்ளிகேட் உருவம் உங்களுக்கு எதுக்கு?’ன்னு எடுத்திட்டுப் போயிட்டேன்.
தான் ஒரு பெரிய நடிகர்ங்கிற பந்தா இம்மியளவு கூட அவர்கிட்ட பார்க்க முடியாது. ‘அம்மன் தாலி’ன்னு ஒரு நாடகம் போட்டேன். அதுக்கு ஏ.பி.என்., நாகேஷ் ரெண்டு பேர் கூட ஜெமினி மாமாவும் வந்து பொன்விழா நாடகத்துக்கு வாழ்த்தினாரு.
பி.ஆர். பந்துலு ‘கங்கா கெளரி’ன்னு ஒரு புராணப்படம் மைசூர் பிரிமியர் ஸ்டுடியோவுல எடுத்தாரு. அதுக்காக பெங்களூரு வரைக்கும் ஜெமினி மாமாவோட விமானத்தில போய், அங்கிருந்து 90 மைல் மைசூர் கார்ல போவோம்.
திடீர்னு என் கை பிடிச்சு ரேகை பார்க்க ஆரம்பிச்சுட்டாரு. ‘டேய்! மாப்பிள்ளே -பொம்பளைங்ககிட்ட கொஞ்சம் எச்சரிக்கையா இருந்துக்க’ அப்படின்னாரு.
‘நீங்க மட்டும், பிருந்தாவனத்து நந்தகுமாரன் மாதிரி கோபிகா ஸ்திரிகளோட விளையாடுவீங்க. நான் மட்டும் யோக்கியனா இருக்கணுமா?’-ன்னேன்.
‘‘டேய், டேய்.. வேண்டாண்டா. இப்ப இருக்கிற பெரிய ஹீரோக்கள்ல நான் படிச்சு பட்டம் வாங்கினவன். உலக வரலாற்றை இன்னும் படிச்சிட்டிருக்கிறவன். அன்டர் த சன் (UNDER THE SUN) எனக்குத் தெரியாத விஷயமில்லே. ஆனா, பெண்கள் விஷயத்தில் மட்டும் கடவுள் எனக்கு ஒரு வீக்னஸ் வச்சிட்டான். நீ மாட்டிக்காதே!’ன்னாரு.
படப்பிடிப்பு முடிஞ்சா எல்லோரும் மைசூர் சுஜாதா ஓட்டல்லதான் தங்குவோம். நம்ம ஊர் உட்லண்ட்ஸ் மாதிரி -பழைய காலத்து பாப்புலர் ஓட்டல். ‘உனக்கு ஒருத்தரை அறிமுகப்படுத்தறேன்!’னு பக்கத்து ரூம் கூட்டிட்டுப் போனாரு. கசங்கிப்போன கதர்சட்டை. வேஷ்டி, வேலைக்காரன் மாதிரி கைகட்டி தோளை குறுக்கீட்டு ஒருத்தர் நின்னாரு.
‘இவருதான் கன்னட ஹீரோ ராஜ்குமார்!’ அப்படின்னாரு.
எனக்கு அதிர்ச்சி. தமிழ்நாட்டில சிவாஜி-எம்.ஜி.ஆர் ரெண்டு பேரோட பாப்புலாரிட்டியையும் சேர்த்து ஒத்தை ஆளா கர்நாடகத்தை ஆண்டுகிட்டிருக்கற நடிகர் வேலைக்காரன் மாதிரி கைகட்டி குறுகி நிக்கறாரு!
அடக்கம், அடக்கம்ங்கிறாங்களே. அப்படி ஒரு பண்பான மனிதனை -பிரபலமானவரை -இதுவரைக்கும் நான் பார்த்ததேயில்லை.
‘கர்நாடகாவின் கலையுலகக்கடவுள் நீங்கள்!’ன்னேன். ‘ஆனா, முருகர்னா நீங்க மட்டும்தானே? அதை நான் போட முடியாதே’ன்னாரு. ஜோக்குக்கு சொல்றாருன்னு நெனைச்சேன்.
அவர் இறந்து போனப்போ -பெங்களூர்ல நண்பர் அமுதவன் கூட அவர் வீட்டுக்குப் போயிருந்தேன். அவர் துணைவியார் பர்வதம் அம்மாள் - ‘டிவியில சிவகுமார் படம் எப்ப வந்தாலும், ‘அம்மா, அம்மா.. சீக்கிரம் வா... முருகர் படம் போட்டிருக்காங்க!’ன்னு கூப்பிடுவார்’ என்று சொன்னபோது அந்த ஆத்மாவை மனதால் வணங்கினேன்.
ஜெமினி மாமா சிவன் வேடம், நான் விஷ்ணு வேடத்தில் அப்படத்தில் நடித்தோம். மாமா எப்போதும் அசைவம்தான் சாப்பிடுவார். நான் கடவுள் வேடம் போடும் சமயம். அசைவம் சாப்பிட மாட்டேன் என்று ஏ.பி.என் அவர்களுக்கு வாக்குக் கொடுத்திருந்தேன்.
படத்தின் கடைசிநாள் படப்பிடிப்பு. ‘டேய் மாப்பிள்ளே‘ படமே முடிஞ்சு போச்சு. இன்னிக்கு ஊருக்குப் போறப்பவாவது அசைவம் சாப்பிடலாம் வா!’ன்னு கூப்பிட்டாரு.
அவருக்கு அடுக்கடுக்கா அசைவ அயிட்டங்கள் கேரியர்ல வந்திருந்திச்சு. சுஜாதா ஓட்டல் எவர்சில்வர் பிளேட் பெரியது. பல ஆண்டுகள் பயன்படுத்தி சைனிங் எல்லாம் போனது.
‘என்னோடயே சாப்பிடலாம் வா!’ன்னு அவர் பிளேட் முன்னாடி உட்கார வச்சு இந்த ‘லெக் பீஸ்’ சாப்பிடுன்னு எடுத்து என் கையில குடுத்தாரு.
‘லிவர் பீஸ்’ ஒண்ணு எடுத்தாரு. ஒரு வாய் கடிச்சிட்டு ‘டேய், செம டேஸ்ட் இந்தா!’ன்னு மீதிய என் வாயில ஊட்டி விட்டாரு. ‘பிறந்த 10-வது மாதம் அப்பாவை இழந்தவன் நான். ஒரு வேளை அப்பா இருந்தா இப்படித்தான் பாசம் காட்டியிருப்பாரோ!’ன்னு நினைக்க கண்கள் ஓரத்தில நீர் கட்ட சபரி கொடுத்த பழத்தை ராமர் சாப்பிட்ட மாதிரி -சிலிர்ப்போட சாப்பிட்டேன்.
அவரோட 80-வது பிறந்த நாள். சதாபிஷேகம். கலைஞர் திருமண மண்டபத்தில் நடந்தது. துணைவியோடு போயிருந்தேன்.
அவருக்கு என்ன பரிசு கொடுக்கலாம் என்று பிள்ளைகளிடம் கேட்டேன். ‘உங்களைப் பார்க்கும் போதெல்லாம், ‘டேய், மாப்பிள்ளே! என் ஓவியத்தை குடுடா!’ன்னுதானே கேட்டிருக்காரு. உங்க பெயிண்டிங்கை விட சிறந்த பரிசு எதுவுமே இருக்க முடியாது!’ன்னு சூர்யா சொல்ல, பார்சல் செய்து எடுத்துப் போனோம். க்யூ வரிசை. எனக்குப் பின்னால் கவிஞர் வைரமுத்து நின்று கொண்டிருந்தார். ‘என்ன பிரதர் பரிசு தரப்போறீங்க?’ன்னு கேட்டாரு.
‘அதுதான் சஸ்பென்ஸ். இதுக்குள்ள என்ன இருக்குன்னு மாமா சரியா சொன்னா குடுப்பேன். இல்லை எடுத்திட்டுப் போயிடுவேன்னு சொன்னேன்.
‘காதல் மன்னன்’ என்று பட்டம் பெற்று கோகுல கிருஷ்ணனாக வாழ்ந்த மாமா -பாப்ஜியுடன் ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தார்.
‘மாமா, இதுக்குள்ளே என்ன இருக்கு. சொல்லுங்க பார்க்கலாம்!’ என்றேன்.
‘வேற என்னடா, என்னோட ஓவியம்தான்!’ அப்படின்னாரு. பிரிச்சுக் கையில கொடுத்தேன். அப்படி ஒரு புன்சிரிப்பு. டாக்டர் கமலா செல்வராஜ் ஓடி வந்தார். படத்தை வாங்கிப் பார்த்தார். அவரும் அழகாக வரைவார்.
‘எங்க அப்பா மேல அவ்வளவு பிரியமா சார் உங்களுக்கு?’ன்னு கேட்டார்.
ஈ, எறும்புக்குக் கூட தீங்கு நினைக்காத ஆத்மாம்மா உங்கப்பா!’ என்றேன். நெகிழ்ச்சியில் கண்களை துடைத்துக் கொண்டார்.
தரிசிப்போம்...
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT