Published : 19 Oct 2015 10:27 AM
Last Updated : 19 Oct 2015 10:27 AM
சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழ் அறிஞருமான நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை (V.Ramalingam Pillai) பிறந்த தினம் இன்று (அக்டோபர் 19). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l நாமக்கல் அடுத்த மோகனூரில் (1888) பிறந்தார். தாய் கூறிய இதிகாச, புராணக் கதைகளைக் கேட்டு வளர்ந்தார். பொய் பேசக்கூடாது, நல்லவனாக விளங்க வேண்டும் என்ற தாயின் அறிவுரை அவர் மனதில் ஆழமாக பதிந்தது.
l நாமக்கல்லில் தொடக்கக் கல்வி, கோவை மெட்ரிக் பள்ளியில் உயர்நிலைக் கல்வி, திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்றார். எழுதுவது, ஓவியம் வரைவதில் சிறந்து விளங்கினார். விடுதலைப் போராட்ட இயக்கத்தில் 1906-ல் இணைந்தார்.
l தலைமைக் காவலரான தந்தை வெங்கடராமன், இவரையும் காவல் துறையிலேயே சேர்த்துவிட பெருமுயற்சி எடுத்தார். இவருக்கு விருப்பம் இல்லாததால் வீட்டைவிட்டு வெளியேறினார். 15 நாட்கள் வெளியே சுற்றித் திரிந்து வீடு திரும்பினார்.
l அவரை மேலும் வற்புறுத்தாமல் நாமக்கல் வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்தர் பணி வாங்கித் தந்தார் தந்தை. அதிலும் மனம் செல்லவில்லை. பணியை உதறினார். தந்தை முயற்சி எடுத்து, ஒரு பள்ளியில் ஆசிரியர் வேலை பெற்றுத் தந்தார். இவர் அடிக்கடி அரசியல் கூட்டங்களில் கலந்துகொண்டு பேசியதால், வேலையில் இருந்து நீக்கப்பட்டார்.
l திலகர் போன்றவர்களின் தீவிரப்போக்கால் ஈர்க்கப்பட்டவர், முழு மூச்சாக அரசியலில் இறங்கினார். பின்னர் காந்தியின் அகிம்சை, அறவழிக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டார். அறப்போராட்டத்தால் மட்டுமே நாடு விடுதலை அடையும் என்ற முடிவுக்கு வந்தார். காங்கிரஸில் இணைந்தார்.
l எளிய சொற்களால் கவிதை பாடி, தேசிய, காந்தியக் கொள்கைகளைப் பரப்பினார். தேசபக்திப் பாடல்கள் பாடியும், ஆவேச உரைகள் நிகழ்த்தியும் இளைஞர்கள் மனதில் எழுச்சியை ஏற்படுத்தினார். ஏராளமான கவிதைகள் எழுதிக் குவித்தார். ‘தேசியக் கவி’ என்று போற்றப்பட்டார்.
l திருச்சி மாவட்ட காங்கிரஸ் செயலாளர், கரூர் வட்டார காங்கிரஸ் தலைவர், நாமக்கல் வட்டார காங்கிரஸ் தலைவர் ஆகிய பதவிகளை வகித்தார். 1932-ல் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். உப்பு சத்தியாகிரகத் தொண்டர்களின் வழிநடைப் பாடலுக்காக இவர் இயற்றித் தந்ததுதான் ‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’ என்ற பாடல்.
l மலைக்கள்ளன், மரகதவல்லி, கற்பகவல்லி, காதல் திருமணம் உள்ளிட்ட பல நாவல்களை எழுதியுள்ளார். இவரது ‘மலைக்கள்ளன்’ நாவல், எம்ஜிஆர் நடிப்பில் திரைப்படமாக வந்தது. இசை நாவல், கட்டுரை, சுயசரிதம், புதினம், திறனாய்வு, நாடகம், கவிதைத் தொகுப்பு, சிறு காப்பியம், மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் அனைத்துக் களங்களிலும் முத்திரை பதித்தவர். மொத்தம் 66 நூல்களை எழுதியுள்ளார்.
l நாடு விடுதலை அடைந்த பிறகு தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டார். பத்மபூஷண் விருது பெற்றார். சாகித்ய அகாடமியின் தமிழ்ப் பிரதிநிதியாக பொறுப்பு வகித்தார்.
l தேசியக் கவிஞர், காந்தியக் கவிஞர், காங்கிரஸ் புலவர், அரசவைக் கவிஞர் என்றெல்லாம் போற்றப்பட்ட நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை 84-வது வயதில் (1972) மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT