Published : 26 Oct 2020 10:59 AM
Last Updated : 26 Oct 2020 10:59 AM

சித்திரச்சோலை 7: பிலால் ஓட்டல் ஓவியமும் ஒரு பிரியாணிப் பொட்டலமும் 

சிவகுமார்

காலை 5.30 மணிக்கு போட் கிளப் சென்று 45 நிமிடம் நடைப்பயிற்சி முடிச்சிட்டு, வாரத்தில் ஒரு நாள் சென்னை நகரில், ஒரு நாள் பீச்சிலிருந்து சென்ட்ரல் ரயில் நிலையம், ஜெனரல் ஆஸ்பத்திரி வழியே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் -ஓட்டல் எவரெஸ்ட், ஓவியக்கல்லூரி, தினத்தந்தி அலுவலகம், தாசப்பிரகாஷ் ஓட்டல், ஈகா தியேட்டர், பச்சையப்பன் கல்லூரி, அண்ணாநகர் ஆர்ச், லயோலா கல்லூரி, வள்ளுவர் கோட்டம் வழி வீடு வந்து சேர்வேன்.

அடுத்த வாரம் பெசன்ட் நகர், இந்திரா நகர், சாஸ்திரி நகர், கஸ்தூரிபா நகர், மத்திய கைலாஸ், கவர்னர் மாளிகை, சைதாப்பேட்டை கோர்ட் வழி வீடு திரும்புவேன்.

இன்று பாரிஸ் கார்னர், செயின்ட் மேரிஸ் சர்ச், அர்மீனியன் தெரு, பாம்பே மியூச்சுவல் பில்டிங் எதிரே ஹைகோர்ட் வளாகம் சென்றேன்.

1960-ல் 19 வயதில் ராபின்ஹூட் சைக்கிளில் சென்று பாரிமுனையிலுள்ள ரவுண்டானா புல்வெளியில் சைக்கிளை ஸ்டேண்டில் நிறுத்தி - கேரியரில் வண்ணக்கலவை வைக்கும் பீங்கான் பிளேட்டைப் பொருத்தி -சைக்கிள் சீட் மீது FIXING BOAD-ல் ஒட்டியுள்ள வெள்ளை HAND MADE தாளில் 3 மணி நேரம் -காலை 6 மணி முதல் 9 மணி வரை நின்றுகொண்டே வரைந்த அந்த நாள் நிழலாடியது.

60 ஆண்டுகளுக்கு முன்பு எந்த இடத்தில் நின்று வரைந்தேனோ அந்த இடத்தில் நின்று புகைப்படம் எடுத்தபோது ஒரு வினாடியில் கேமராவில் தெரிந்த பிம்பத்தை வரைய 3 மணி நேரம் கால்கடுக்க நின்றதை எண்ணியபோது அது முன் பிறவியோ என்ற எண்ணம் வந்தது.

எதிரே உள்ள நீதிமன்றத்தைப் பார்த்ததும், நீதிபதி ஏ.எஸ்.பி. ஐயர் நினைவுக்கு வந்தார். சட்டக்கல்லூரி முதல்வராகப் பணிபுரிந்தவர் நீதிபதியாகப் பதவியேற்றார்.

தன்னுடைய பதவிக் காலத்தில் அதிகாலை வீட்டிலிருந்து தன் செல்ல நாய்க்குட்டியைப் பிடித்துக் கொண்டு பார்க்கில் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி செய்வார்.

அந்த நேரத்தில் ஒரு வழக்கறிஞரோ, தனி நபரோ நெருங்கினால் 10 அடி தூரத்தில் நின்று கும்பிடு போட்டுவிட்டு வாய்திறக்காமல் சென்றுவிடுவார். கும்பிடு போட்ட வக்கீல் இன்றைய வழக்கில் வாதி அல்லது பிரதிவாதிக்கு வாதாடுபவராக இருக்கலாம். அவர்களோடு பேச்சுக் கொடுத்தால், இங்கேயே தன் வாதத்திறமையை நிரூபித்து -தான் அளிக்கப்போகும் தீர்ப்பில் நடுநிலை தவற வைக்கலாம் என்று, தனது பதவிக்காலம் முடியும் வரை, வீட்டிலோ, வெளியிலோ, உறவுக்காரர்கள், நண்பர்களோடு நெருங்கிய தொடர்பு வைத்துக் கொள்ளாமல் வாழ்ந்தார்.

அர்மீனியன் தெருவில் சர்ச்சை ஒட்டியுள்ள செயின்ட்மேரி பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்த ஆர்.எஸ்.நாயகம்தான் எனக்கு ஓராண்டு ஆங்கில இலக்கணம் பிழையறக் கற்றுக் கொடுத்தார்.125 ரூபாயில் எனிகார் (ENICAR) கைக்கடிகாரம் வாங்கிப் பரிசளித்தேன். ‘படிக்கின்ற பிள்ளை நீ செலவு செய்ய வேண்டாம்!’ என்றார். இது எளிய குருதட்சணை என்று கையில் வாட்ச்சைக் கட்டிவிட்டேன்.

திரும்பி வரும் வழியில் புகாரி தாண்டியதும் எல்.ஐ.சி கட்டிடம் கண் சிமிட்டியது.

1961- செப்டம்பர் 24-ம் தேதி வெலிங்டன் தியேட்டருக்கு எதிர் பிளாட்பாரத்தில் பிலால் ஓட்டல் வாசலிலிருந்து எல்.ஐ.சி கட்டிடத்தையும், மவுண்ட்ரோட்டையும் இரண்டரை மணி நேரத்தில் வரைந்தது நினைவுக்கு வந்தது. அடுத்த ஆண்டு சைனா எல்லையில் போர் தொடுத்தபோது யுத்த நிதி வேண்டி நேரு அறிவிப்பு செய்திருந்தார். எங்கள் கல்லூரிக்கு காமராஜரும், பக்தவத்சலமும் வந்திருந்தனர். ஆசிரியர்களும், மாணவர்களும் தங்கள் படைப்புக்களை விற்று எங்களால் முடிந்த நிதி மேடையில் கொடுத்தோம். நான் வரைந்த எல்.ஐ.சி ஓவியத்தை ஒரு வெள்ளைக்காரர் வாங்கிக் கொண்டு ரூ. 500 கொடுத்தார். அதை என் பங்கு நிதியாகக் கொடுத்தேன்.

பக்தவத்சலம் பட்டதாரி. வழக்கறிஞர். அவர் ஓவியம் பற்றி உயர்ந்த நடையில் பேசினார். காமராஜர் 8-ம் வகுப்பைத் தொட்டவர். மைக்கைப் பிடித்தார். ‘கலைன்னா என்னன்னேன்? மொதல்ல அது கலைஞனை சந்தோஷப்படுத்துதுன்னேன். அப்புறம் பாக்கறவங்க, கேக்கறவங்களை சந்தோஷப்படுத்துது. அதுதான கலைன்னேன்!’ இதை விடக் குறள் போல நறுக்குத் தெரித்தாற் போல விளக்க முடியுமா?

யுத்த நிதிக்கு ஒரு எல்.ஐ.சி படம் விற்று விட்டதால் நமக்கு இன்னொரு எல்.ஐ.சி படம் வேண்டுமே என்று கல்லூரி நேரத்தில் பகல் உணவுக்குப் பிறகு சைக்கிளில் மவுண்ட்ரோடு வந்தேன். ஸ்பென்ஸர் கட்டிடம் எதிரே மவுண்ட்ரோடு காவல் நிலையம். அங்கே சைக்கிளை ஸ்டேண்ட் போட்டு நிறுத்தி ‘FRAME’-ஐ முடிவு செய்தேன்.

ஓவியத்தின் வலது முனையில், சவுக்கு மரங்களின் கீழே சிவப்புக்கட்டிடத்தில் மவுண்ட்ரோடு போலீஸ் ஸ்டேஷன். அடுத்து நீளமான ரோஸ்கலர் பழங்கால கட்டிடத்தின் மேல் GO WITH CALTEX - மஞ்சள் நிற போர்டு. தூரத்தே எல்.ஐ.சி கட்டிடம். இன்னும் தூரத்தில் மங்கலாக துன் பில்டிங் -முன்னால் மரப்புதர். அதன் இடதுபுறம் கெயிட்டி தியேட்டர் போகும் சாலை -படத்தின் இடது முனையில் உள்ள மரங்கள் காயிதே மில்லத் கல்லூரி மரங்கள்.

இதை ‘கம்போஸ்’ செய்து இரண்டரை மணி முதல் ஐந்தரை மணி வரை வரைந்து முடித்தேன். FORE GROUND-ல் ஒரு கை ரிக்சா போய்க் கொண்டிருந்தது. அதன் முன்னே கல்லூரிப் பெண்கள் வெளியூர் பஸ் நிற்கிறது. அதற்கு எதிரில் அரசு பஸ். நீலமும், சிவப்புமாக இரண்டு கார்கள் வரைந்துள்ளேன்.

எந்த பஸ்ஸும், காரும், ரிக்சாவும் சிவகுமார் படம் வரைகிறான் என்று அங்கேயே நிற்காது. அவை போய்க் கொண்டே இருக்கும். ‘FLASH’ போல அந்த ஒரு விநாடி படத்தை மனதில் இருத்தி, ரிக்சா மறைவதற்குள் அதை வரைந்து விட வேண்டும். பஸ் காணாமல் போவதற்குள் வரைந்து விட வேண்டும்.

இப்போது நினைத்தால், இந்த ஓவியத்தை முதலில் எப்படி ஆரம்பித்தோம், எல்.ஐ.சி கட்டிடம் முதலில் வரைந்தோமா, சவுக்கு மரங்கள், அடியில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனை முதலில் வரைந்தோமா என்று கேட்டால் உடனே சொல்ல முடியாது.

ஒரு கட்டத்தில் கண்கள் பார்க்கும். கைகள் அனிச்சை செயல்போல வண்ணங்களை குழைத்து தாளில் விளையாடும். இவற்றின் ஒத்திசைவு மூளை செய்யும் மாயாஜாலம் - அடுத்த ஓவியத்தில் படத்தின் இடதுபுறம் நீல வண்ணத்தில் உள்ளது துன் பில்டிங். அதன் கீழ் மரங்கள் ஓட்டுக்கட்டிடம், அதன் இடது புறம் கெயிட்டி தியேட்டர் செல்லும் பாதை, நடுவில் தெரியும் மஞ்சள் கட்டிடம். ஒரு காலத்தில் நேரு கபே ஆக - 1958-ல் இருந்து பின்னர் MECO TRONIC -இசைத்தட்டு விற்பனை நிலையமாக மாறிவிட்டது. அந்த மஞ்சள் நிற கட்டிடத்தின் இடது புறம் சாந்தி தியேட்டர் செல்லும் வழி. வலதுபுறம் உள்ளடங்கி இருப்பது தேவி பாரடைஸ் தியேட்டர் வளாகம். நமக்கு வலது புறத்தில் இருப்பது புகாரி ஓட்டல்.

ஊரிலிருந்து 85 ரூபாய் மணியார்டர் வந்ததும் - மாத பட்ஜெட் போடும் முன் அரை பிளேட் பிரியாணி, ஒரு டபுள் ஆம்லட், பீச் மல்பா சாப்பிட்டு இரண்டரை ரூபாய் பில் கொடுத்த ஓட்டல் அது.

அடுத்து, எழும்பூர் ரயில் நிலையம் 3-வது பிளாட்பாரம் -மக்கள் முன்னும் பின்னும் இடித்துத் தள்ளிக் கொண்டே இருப்பார்கள். எல்லாம் சமாளித்து ஒன்றரை மணி நேரத்தில் வரைந்த வாட்டர் கலர் ஓவியம். இந்த ‘துன்’பில்டிங் புகாரி ஓட்டல் வரைய நான் மீண்டும் தேர்ந்தெடுத்த இடம் பிலால் ஓட்டல் வாசல். அங்கு பிளாட்பாரத்தில் சைக்கிளை ஸ்டேண்ட் போட்டு நிறுத்தி 1961-ல் வரைந்த ஓவியம் அது.

அடுத்து கார்ப்பரேஷன் கட்டிடத்தினுள் கம்பீரமாக நிற்கும் லார்டு ரிப்பன் சிலை. இவர் பெயரால் ரிப்பன் பில்டிங் என்று அதற்குப் பெயர் வைத்தனர். ஒரே நாளில் சைக்கிளில், சென்னையிலுள்ள முக்கிய கட்டிடங்கள் சிலைகளை பென்சில் ஸ்கெட்ச் போடுவது என்று முடிவெடுத்து வரைந்த 12 ‘ஸ்கெட்ச்சு’களில் லார்டு ரிப்பன் சிலையும் ஒன்று.


கூவம் ஆறு சென்னையில் பிரசித்தி பெற்றது. இந்த ஆற்று வழி ஆங்கிலேயேர் காலத்தில் மகாபலிபுரம் வரை சுமார் 50 மைல் படகுகள் வழியே போக்குவரத்து நடந்து கொண்டிருந்தது. மரச்சாமான்கள், தானிய வகைகள் போக பயணிகளும் படகு வழி ஒரு காலத்தில் பயணம் செய்திருக்கிறார்கள்.

இந்த பிலால் ஓட்டல் பின்னாளில் என் வாழ்க்கையில் சிக்கலை உண்டாக்கி விட்டது.
1974-ல் நான் திருமணம் செய்து கொண்டேன். சென்னை ‘கிங் இன்ஸ்டிட்யூட்டில் ரிசர்ச் லேபரெட்டரியில் பணிபுரிந்த எம்எஸ்சி., பிஹெச்டி பட்டம் பெற்றவர், கோயமுத்தூர்காரர்’ டாக்டர் வீரண்ணன். அவரோடு 1970 முதல் எனக்கு தொடர்பு. பின்னாளில் சிவகுமார் கல்வி அறக்கட்டளை தொடங்கப்பட்டபோது அந்த அறக்கட்டளையின் செயலாளராக இருந்தவர். என் தாயாருக்கு மூத்த மகன் போன்றவர்.

திருமணமான காலகட்டங்களில் மாதத்தில் ஒரு நாள் நானும் டாக்டர் வீரண்ணனும் பிலால் சென்று அசைவ ஐட்டங்களை ஒரு கட்டு கட்டி, வயிற்றை நிரப்பிக் கொண்டு, என் துணைவியாருக்கும் ஒரு பொட்டலம் பிரியாணி வாங்கி வந்து கொடுப்பேன். இது ஓராண்டுக்கு மேல் தொடர்ந்தது என்று நினைக்கிறேன்.

என் துணைவியார் வாயில்லா பூச்சி. அவர் தனக்கு எவை பிடிக்கும்; எவை பிடிக்காது என்று என்னிடம் சொன்னதே இல்லை. சொல்ல நான் வாய்ப்புக் கொடுத்ததும் இல்லை. திருமணமாகி 1 ஆண்டு வரை தன்னுடைய துணிமணிகள் அடங்கிய பெட்டியை தரைத்தளத்தில் உள்ள என் தாயார் அறையில் வைத்துக் கொண்டு - மாடியில் எங்களுக்கு என்று படுக்கை அறை, பீரோக்கள் இருந்தும், ஒரு பீரோவில் தன் துணிமணிகளை வைத்துக் கொள்ளாமல், தினம்தோறும் கீழேயுள்ள பெட்டியில் துணியை எடுத்துக் கொண்டு மேலே வந்து குளித்து விட்டு உடை மாற்றுவாராம்.

இதை நான் கண்டுபிடித்துக் கேட்டபோது ஓராண்டு முடிந்து விட்டது. ‘நீங்களும் சொல்லவில்லை. அதனால் படுக்கை அறை பீரோவை நானும் பயன்படுத்தவில்லை!’ என்றார்.

இப்பேற்பட்ட மெளனியான அவர் ஒரு நாள் பொங்கி வெடித்து, ‘ஏய்யா...மாசம் ஒரு நாள் உங்க பிரண்ட்டை கூட்டீட்டுப் போய் பிலால்ல திருப்தியா சாப்பிட்டு கடனேன்னு ஒரு பொட்டலம் வாங்கிட்டு வந்து எனக்குத் தர்றீங்களே! நான் யாரு? உங்க சம்சாரந்தானே? ஒரு நாள் தனியா என்னைக் கூட்டீட்டுப் போய் சாப்பாடு வாங்கித் தந்திருக்கக் கூடாதா?’ன்னு கேட்டார். புதுச் செருப்பால் அடித்தது போல் இருந்தது.

ஒண்ணு காதலிச்சு கல்யாணம் பண்ணியிருந்தா பொண்டாட்டி மேல கரிசனம் இருக்கும். கல்யாணத்துக்கப்புறம் பொண்டாட்டிய நேசிக்கறவனும் அதைச் செய்வான்.

கடமைக்காக கல்யாணம் பண்ணின என்னை மாதிரி ஜடங்களுக்கு சம்சாரங்கள் சொன்னாத்தானே உறைக்குது? வயசு ஆக, ஆக சுயநலம் காரணமாக நம் தாய்க்கு அடுத்து நம்மை கவனித்துக் கொள்பவள் மனைவி என்பது ஆழமாகப் புரியும்போது அவள் மீது அன்பு, பரிவு காட்டுவதாக நடிக்கிறோம். இந்தத் தவறை ஆரம்பத்திலேயே திருத்திக் கொண்டு - அவளும் ஓர் ஆத்மா, நம் காவல் தெய்வம் என்பதை புரிந்து கொண்டு நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஓவியக்கலையை விட்டு விலகி நெடுந்தூரம் - 55 ஆண்டுகள் கடந்து வந்து விட்டேன். இருப்பினும் இப்பிறவியில் லட்சிய நோக்கோடு துறவி போல் அப்போது எளிமையாக வாழ்ந்த வாழ்க்கை மிகவும் உன்னதமாகவே தோன்றுகிறது.

தரிசிப்போம்...

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x