Published : 17 Oct 2015 05:48 PM
Last Updated : 17 Oct 2015 05:48 PM
கியர்மோ டெல் டொரோ - தனித்துவம் வாய்ந்த மெக்ஸிகன் இயக்குநர். ஆரம்பத்தில் ஸ்பானிஷ் மொழியில் படங்கள் இயக்கி, அதன் மூலம் புகழ் பெற்று ஹாலிவுட்டுக்குள் நுழைந்தவர். இவரது படங்களின் ஸ்பெஷல், அதன் காட்சியமைப்பு, விசித்திரமான கதாபாத்திரங்களின் வடிவம், சற்றே திகிலான, ஃபேன்டசியான கதையமைப்பு உள்ளிட்டவை.
'பான்’ஸ் லாபரிந்த்' (Pan's Labyrinth) என்ற படம் மூலம் புகழடைந்த கியர்மோ, 'ஹெல் பாய்' (Hell Boy) போன்ற காமிக் பாத்திரத்தை வைத்தும் படமெடுத்துள்ளார். அதிலும் இவரது பாணியை விட்டுக் கொடுத்ததில்லை.
கியர்மோவின் சமீபத்திய படைப்பு 'க்ரிம்ஸன் பீக்'. (Crimson Peak). திகில், அமானுஷ்யம் கலந்த காதல் கதை என்று விளம்பரப்படுத்தப்பட்டு வெளியாகியுள்ளது.
18-ஆம் நூற்றாண்டில் நடக்கிறது கதை. எடித், சிறு வயதிலிருந்தே பேய்களை பார்க்கும் சக்தியுடையவள். இறந்து போன தன் அம்மாவை தான் முதலில் பேயாக பார்க்கிறாள். 'க்ரிம்ஸன் பீக்கை குறித்து எச்சரிக்கையாக இரு ' என்று சிறு வயது முதலே அம்மாவால் எச்சரிக்கப்படுகிறாள். வளரும் இளம்பெண் எடித்துக்கு எழுத்தாளராக வேண்டும் என்று ஆசை. ஆசையாக தான் பார்க்கும் பேய்களை வைத்து கதைகள் எழுதும் போது, 'பெண்ணான நீ காதல் கதைகளைத் தான் எழுத வேண்டும்' என பதிப்பாளரால் முத்திரையிடப்பட்டு நிராகரிக்கப்படுகிறாள்.
அவளது தந்தை கார்டர் அமெரிக்காவில் பெரிய தொழிலதிபர். புதிய ஆராய்ச்சிகளில் தன் நண்பர்கள் குழுவோடு முதலீடு செய்பவர். அப்படி தனது புதிய ஆராய்ச்சிக்கு நிதி தேடி தாமஸ் ஷார்ப் என்பவன், தனது சகோதரி லூசியுடன், இங்கிலாந்திலிருந்து வருகிறான். அவனைப் பார்த்த மாத்திரத்திலிருந்தே கார்டர் வெறுத்தாலும், எடித் அவன் பால் ஈர்க்கப்படுகிறாள். கார்டர் அவனது ஆராய்ச்சியை நிராகரிக்கிறார். தன் மகளுடன் தாமஸ் நெருக்கமாவதைப் பார்த்து, ஒரு டிடெக்டிவை வைத்து அவனைப் பற்றி விசாரிக்கிறார்.
தாமஸ் குறித்த உண்மைகள் அறிந்த கார்டர், அவனையும், அவன் சகோதரி லூசியையும் தனியாகக் கூப்பிட்டு எச்சரித்து ஊரை விட்டு ஓடவேண்டும் என்றும், தன் மகளை விட்டுவிட வேண்டும் என்றும் உத்தரவிடுகிறார். தன்னைப் பற்றிய உண்மை தெரிந்து விடக் கூடாது என்பதால் தாமஸ்ஸும் அவ்வாறே செய்கிறான். ஆனால் எடித் மேல் உள்ள காதலால் அவளிடம் மீண்டும் வருகிறான்.
அடுத்த நாள் கார்டர் கொடூரமாகக் கொல்லப்படுகிறார். தாமஸ்ஸை காதலிக்கும் எடித், இதற்குப் பின் அவனை மணந்து கொண்டு இங்கிலாந்து செல்கிறாள். அங்கு தாமஸ் குடும்பத்தின் பெரிய கோட்டை சரியாகப் பராமரிக்கப்படாமல் இருப்பதையும், ஆரய்ச்சிக்காக செலவாகும் பணத்தால் தாமஸ் கஷ்டப்படுவதையும் எடித் அறிகிறாள்.
தாமஸ்ஸின் சகோதரி லூசியோ எடித்தின் வருகை பிடிக்காமல் அவளிடம் கடுமையாக நடந்து கொள்கிறாள். சில நாட்களில் எடித்துக்கு அந்த இடத்தின் மர்மம் உறுத்துகிறது. மீண்டும் பேய்களும் தெரிய ஆரம்பிக்க, அவள் தாய் வழக்கம்போல க்ரிம்ஸன் பீக் குறித்து எச்சரித்துவிட்டு செல்கிறாள். தொடர்ந்து, அந்த கோட்டையின் இன்னொரு பெயர் க்ரிம்ஸன் பீக் என்பதை எடித் தெரிந்து அதிர்ச்சியாகிறாள். அந்த இடத்தின் மர்மம் என்ன, தன் தாய் ஏன் எச்சரித்தாள், ஏன் லூசிக்கு தன்னை பிடிக்கவில்லை, தன் தந்தையைக் கொன்றது யார், தாமஸ்ஸின் உண்மைக் கதை என்ன என்றெல்லாம் எடித் எப்படி தெரிந்து கொள்கிறாள் என்பதே மீதிக் கதை.
பிரதான பாத்திரங்களில் நடித்திருக்கும் மியா வாஷிகாவ்ஸ்கா, டாம் ஹிடில்ஸ்டன், ஜெஸிக்கா சாஸ்டைன் மூவருமே கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார்கள். டான் லாஸ்ட்ஸனின் ஒளிப்பதிவு பனி சூழ்ந்த க்ரிமஸன் பீக், அமானுஷ்யமான அதன் அறைகள் என அனைத்தையும் நமது இதயத்துக்கே கடத்துகிறது. கலை இயக்குநர் ப்ராண்ட் கோர்டன் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் கேட் ஹாலியின் பங்களிப்பும் படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய அம்சம். அந்த கால அமெரிக்க வீதிகள், கட்டிடங்கள், க்ரிம்ஸன் பீக் கோட்டை, நடிகர்களின் ஆடைகள் என அனைத்தும் அசலுக்கு நிகராக வடிவமைக்கப்பட்டுள்ளன.
க்ரிம்ஸன் பீக் படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் அதன் பிரம்மாண்ட காட்சிகளும், கதாபாத்திரங்களின் நடிப்பும் என்றால், மைனஸ், மற்றவையெல்லாம். திகில் படமென்று நினைத்து உட்காரும் பார்வையாளர்களுக்கு அந்த திகிலை வெகு சில இடங்களில் மட்டுமே இயக்குநர் தருகிறார். மற்றபடி வெகு சாதரணமான, எவரும் யூகிக்கக் கூடிய கதை, திரைக்கதையால் படம் சுவாரசியமில்லாமல் நகர்கிறது.
வழக்கமான கியர்மோவின் விசித்திர வடிவங்களும் படத்தில் மிஸ்ஸிங். பேய்களின் உருவம் கூட பயமுறுத்தவில்லை. இதையும் தாண்டி படத்தில் அதிகபட்ச வன்முறை சிதறிக் கிடக்கிறது. 'ஏ' சான்றிதழ் தந்திருந்தாலும், தியேட்டரில் பெரியவர்கள் கூட சில காட்சிகளில் வன்முறையைப் பார்க்க முடியாமல் முகத்தை மூடுகிறார்கள். தொழில்நுட்ப ரீதியில் அற்புதமான படைப்பாக இருக்கும் க்ரிம்ஸன் பீக், ஒரு முழு படமாக பார்க்கும்போது, படத்தில் இருக்கும் கோட்டையைப் போலவே ஓட்டைகளோடு தள்ளாடுகிறது.
இதை திகில் படம் என்று விளம்பரப்படுத்தியது ஏன் என்று தெரியவில்லை.
கட்டுரையின் தலைப்பு குறித்து யோசிக்கிறீர்கள் என்றால், படத்தில் இருக்கும் எதிர்மறை பாத்திரம் ஒன்று, எதிராளியின் கக்கத்தில், கண்களுக்கு கீழ் - மூக்குக்கு பக்கத்தில் என வித்தியாசமாக கத்தியால் குத்துகிறது. கழுத்துக்கும் - தோளுக்கும் இடையே குத்தும் வாங்குகிறது. இவையெல்லாம் நாம் வழக்கமாக பார்க்கும் 'குத்தில்' இருந்து வேறுபட்டு இருப்பதை கவனிக்காமல் இருக்க முடியவில்லை. மற்றபடி, படம் நம்மை எங்கெல்லாம் குத்துகிறது என்பதை முடிந்தால் அரங்குக்கு சென்று கண்டுகிழியுங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT