Last Updated : 19 Oct, 2015 12:56 PM

 

Published : 19 Oct 2015 12:56 PM
Last Updated : 19 Oct 2015 12:56 PM

யூடியூப் பகிர்வு: குறும்படம் - பரிதாப செல்ல மனிதர்கள்!

வயிறார சாப்பிடுகிறார்களோ இல்லையோ, வாய்நிறைய பேச, பார்க்க, படிக்க, செல்ஃபிக்க இன்று செல்போன்கள் வந்துவிட்டன. காலாற நடக்கிறார்களோ இல்லையோ... காதுகிழிய செல்போன்களில் எந்நேரமும் பேசிக்கொண்டேயிருக்கும் மனிதர்களை அங்கங்கே பார்க்காமல் இருக்க முடிவதில்லை.

பெரியவர்கள் என்றில்லை, குழந்தைகள்கூட இந்த மாயமந்திரத்தில் சிக்கிக்கொண்டன. இந்தப் பிரச்சனை எப்போதாவது என்றால் பரவாயில்லை. சூரியன் உதிக்கும் முன்பே ஆரம்பித்துவிடுகிறது. நள்ளிரவு வரை நம்மை உண்டு இல்லையென்று செய்துவிடுகிறது.

சரி, பரபரப்பிலிருந்து தப்பித்து ஓர் இயற்கையின் எழிலான சூழ்நிலைக்குச் சென்று தியானிக்கலாம் என்றால், அங்கேயும் ஊரே கேட்பது போல செல்போன் உரையாடல், ஒரு விழாவின் சுவாரஸ்யத்தைக்கூட உருப்படியாக அனுபவிக்க முடியாது, ஒரு விளையாட்டின் வெற்றியைக்கூட பகிர்ந்துகொள்ளமுடியாது, நண்பர்கள் கூடி சந்தித்துக்கொள்ளும் ஓர் அழகான சந்திப்புகூட முழுமையாக அமைந்துவிடாது, அவ்வளவு ஏன்? கணவன் - மனைவி இக்காலத்தில் அரிதாக சந்தித்துக்கொள்ளும் படுக்கையில்கூட நிம்மதி கிடையாது...

செல்போனின் அத்தியாவசிய பயன்பாடுகள் கூட நமக்கு மறந்துவிட்டது. யதார்த்தமாக எதிரெதிரே உள்ள மனிதர்களிடத்தில்கூட இடைஞ்சலாக கள்ளிச்செடிளாக இந்த செல்போன்கள் என்பதை 'ஐ ஃபர்கெட் மை செல்போன்' என்ற இந்தக் குறும்படத்தில் பொட்டில் அடித்ததுபோல் கூறியுள்ளார் இயக்குநர் மைல்ஸ் க்ராஃபோர்ட்.

மையக் கதாபாத்திரமாக சார்லேனே டெகுஸ்மேன் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றுள்ள இக்குறும்படத்தில்தான் நாம் சிந்திக்கத்தான் எவ்வளவு விஷயங்கள்... பாவம் மனிதர்கள்... செல்போன்களின் ஆதிக்கத்தில்..!