Published : 16 Oct 2020 11:31 AM
Last Updated : 16 Oct 2020 11:31 AM
பள்ளி இறுதி வகுப்பு முடித்து, கிராமத்தில் ஓராண்டு இருந்த போது திரைப்பட நடிகர், நடிகைகளின் முகங்கள், அரசியல் தலைவர்கள் என சுமார் 250 -படங்கள் வரைந்திருப்பேன். அதனால் மனித முகங்களில் மாறுபட்ட அமைப்பு நன்றாக மனதில் பதிந்திருந்தது.
மோகன் ஆர்ட்ஸில், 10 அடி, 20 அடி பேனர் ஓவியங்களை எளிதில் வரைய கற்றுக் கொள்ள முடியாது. ஆகவே பத்திரிகையில் வரும் படங்களை போல வரைந்து பழகினேன்.
ஓவியர் சுந்தரமூர்த்தி அறிவுரைப்படி புகாரி ஓட்டலுக்கு எதிரே இருந்த குட்டி தர்க்கா வாசலில் பழைய JOHN BULL- LIFE, ILLUSTRATED WEEKLY புத்தகங்களை போட்டு விற்பனை செய்து கொண்டிருந்தார் ஒருவர்.
அவரிடம், வெளிநாட்டு ஓவியர்கள் தீட்டிய வண்ணப்படங்கள் அச்சாகி இருந்த சில புத்தகங்களை விலைக்கு வாங்கி வந்தேன்.
மோகன் ஆர்ட்ஸில் யாரும் சொல்லித் தராமலே- அந்த புத்தகத்திலிருந்த ஓவியங்களை வண்ணத்தில் வரைய ஆரம்பித்தேன்.
பைனா குலர் கையில் வைத்தவாறு ஒரு பைலட் படத்தை முதன் முதல் ஓரளவு திருப்தியாக வரைந்த அன்று மனம் குதூகலித்தது. ‘ஜான்புல்’ -பத்திரிகையில், தொப்பிக்காரன் ஒருவன் ஒரு பெண்ணின் கழுத்தை நெரித்துக் கொல்வது போன்ற ஓவியம் என்னைப் பெரிதும் கவர்ந்தது.
அதை முனைப்புடன் வண்ணத்தில் வரைந்த அன்று ஆகாயத்தில் மிதந்தேன். பகல் உணவுக்கு ‘கீதா கபே’ செல்லும் வழியில் மவுண்ட் ரோடு தலைமை தபால் நிலையம் உள்ளது. அதன் வாசலில் ‘மாற்றுத்திறனாளி’ ஒருவர் -ஒரு கால் ஊனமானவர், வருவோர் போவோரை 10 நிமிடம் நிற்க வைத்து பென்சிலால் அவர்கள் முகத்தை ஸ்கெட்ச் செய்து காட்டி அசத்திக் கொண்டிருந்தார்.
ஒரு நாள் அவர் பக்கம் சென்றேன். -‘சார்! உங்க முகம் ரொம்ப அழகா இருக்கு. ஒரு படம் வரைஞ்சு தரட்டுமா?’ என்று கேட்டார். மெளனமாக பாக்கெட்டில் கைவிட்டு, சுருட்டி வைத்திருந்த ‘பைலட்’ வண்ண ஓவியத்தை விரித்துக் காட்டினேன். ‘வாத்தியாரே! வணக்கம்’ -என்றார்.
என்ன ஒரு பூரிப்பு. ஒரு வித்தைக்காரன், இன்னொரு வித்தைக்காரனைப் பார்த்து பணிவாக சல்யூட் அடிக்கும் போது ஒரு கர்வம் ஒரு வினாடி வருமே. அதை அனுபவித்துப் பார்க்க வேண்டும்.
பேனர் ஓவியங்களை விட உயர்ந்தது, ஆனந்த விகடன், கல்கி, கலைமகள் -இதழ்களுக்கு அட்டைப் பட ஓவியம் வண்ணத்தில் வரைவது. அதில் 1950-களில் சக்கரவர்த்தியாக விளங்கியவர் கே. மாதவன். அவருடைய மாமா மகன் ஓவியர் ஆர். நடராஜன் அவர்கள். மோகன் ஆர்ட் எப்போதாவது ஒரு தரம் வருவார். எப்படியோ அவரை அறிமுகம் செய்து கொண்டேன்.
கீதா கேபிலிருந்து வடக்காக நரசிம்மன் குறுக்கு தெருவில் போனால் வாலர்ஸ் ரோடு வரும். பிரம்மச்சாரியான அவர், மாடியில் ஓர் அறையில் தங்கி ஓவியங்கள் வரைவார். பகல் உணவுக்கு இருவரும் ஒன்றாக ‘கீதா கபே’ செல்வோம்.
ஒரு கட்டத்தில், பேனர் ஆர்ட்டிஸ்ட்டாவது மிகவும் சிரமம் என்பதையும், கடினமான உழைப்பும், மிகக்குறைவான ஊதியமும் கிடைக்கும் தொழில் என்பதையும் உணர்ந்து அந்த நிறுவனத்தை விட்டு - 10 மாத பயிற்சிக்கு பிறகு -1959 ஏப்ரல் 15-ந்தேதி விலகினேன்.
‘கனவுகளோடு சென்னை வந்து திக்குத் தெரியாமல் நடுரோட்டில் நிற்கிறேனே!’ என்று தவித்தேன். அடுத்து என்ன செய்வது -எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற கலக்கம் ஏற்பட்டது.
ஓவியர் சுந்தர மூர்த்தி, ‘தம்பி! லட்சிய நெருப்பு அணையாத ஜோதி மாதிரி. உனக்குள்ள எப்பவும் எரிஞ்சுகிட்டே இருக்கணும். அந்த நெருப்பை இரும்பு கூண்டுக்குள்ளே வச்சு ‘வெல்டு’ பண்ணி, காத்து புகாம வச்சாக்கூட
-காலப்போக்கில காத்திலயும், மழையிலயும், துருப்புடிச்சு அந்த கூண்டுல ஓட்டை விழும். அந்த ஓட்டை வழியா, உன் ஜோதி வெளிய வந்திடும். அந்த மாதிரி தைரியத்தை கை விடாதே!’ன்னு ஆறுதல் சொன்னார்.
ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு கிழக்குப் பக்கம் ‘பொன்னலூரி பிரதர்ஸ்’னு ஒரு சினிமா கம்பெனி இருந்திச்சு. அதுக்குப் பின்னாடி நிறைய காலி இடம். அதில ‘ஷெட்’ போட்டு யுனைட்டட் ஆர்ட்டிஸ்ட்ஸ் (UNITED ARTISTS)ங்கிற பேர்ல ஆர்.நடராஜன், சுந்தரமூர்த்தி, கே.வி.ராகவன், வேதாசலம் - என நான்கு ஓவியர்கள் கூட்டாகச் சேர்ந்து ஒரு பேனர் கம்பெனி துவக்கி, 4 பேருமே பேனர் வரைஞ்சிட்டிருந்தாங்க.
மோகன் ஆர்ட்ஸ் -நிறுவனத்திலிருந்து விலகினதை நடராஜன் சார்கிட்ட சொன்னேன். ஓவியம் போதை தர்ற கலை- பாக்கறவங்களுக்கு நாமும் அது மாதிரி வரையலாம், ஓவியனாகலாம்னு சாதாரணமா ஆசை வரும்.
ஆனா கே. மாதவன் மாதிரி ஓவியம் வரைய 1000 ஓவியர்கள்ளே ஒருத்தனால கூட முடியாது. ‘ஏன் வாழ்க்கையை வீணாக்கறே -ஊருக்குப் போயி, பழையபடி எஞ்சினியரிங் காலேஜ்ல சேர்ந்து படி’ன்னு சொன்னாரு.
நெருப்புக்குழிக்குள்ளே நிர்வாணப்படுத்தி தூக்கிப் போட்ட மாதிரி பொங்கிப் பொங்கி அழுதேன்.
‘சார்! ஓவியக்கலை மேல நான் வச்சிருக்கிற வெறியை இப்ப உங்களால புரிஞ்சுக்க முடியாது. ஆனா என்னிக்காவது ஒரு நாள், நீங்க பாராட்டற மாதிரி நான் படங்கள் வரைஞ்சு தீருவேன்’ -அப்படின்னு ஆவேசமா பதில் சொன்னேன். அப்ப எனக்கு 17 வயசு முடியற நேரம்.
என் வேகத்தை பார்த்து, - ‘ஸ்கூல் ஆப் ஆர்ட்!’(பின்னாளில் ஓவியக்கல்லூரியாக உயர்ந்தது) வாத்தியார்கள்ளே கிருஷ்ணாராவை எனக்குத் தெரியும் - ‘நான் ஒரு லெட்டர் தர்றேன். அவரைப் போய் பாரு!’ன்னாரு. பார்த்தேன். ‘நுழைவுத் தேர்வு எழுது. நிச்சயம் இடம் கிடைக்கும்!’ன்னார் கிருஷ்ணாராவ் வாத்தியார்.
மோகன் ஆர்ட்ஸில் வரைஞ்சிருந்த சில ஓவியங்களை ENTRANCE EXAM HALL எடுத்துட்டுப் போயிருந்தேன் -பரீட்சை எழுத வந்த வெளியூர் பசங்க, அதைப் பார்த்திட்டு, ‘நீங்க எந்த கிளாஸ் வாத்தியார் சார்!’னு கேட்டாங்க.
உங்களை மாதிரி நானும் தேர்வு எழுதத்தான் வந்திருக்கேன்னு சொன்னேன். ‘இப்படியெல்லாம் படம் வரைஞ்ச நீங்களும், இனிமேதான் இதில சேரப்போறீங்களா -டேய்! வாடா ஊருக்குப் போகலாம். இவங்களெல்லாம் உட்டுட்டு, நமக்கு எங்கே எடம் கிடைக்கப்போகுதுன்னு 2 பேர் தேர்வு எழுதாமலே ஊருக்கு கிளம்பிட்டாங்க.
நுழைவுத் தேர்வுக்கு 200 பேர் விண்ணப்பிச்சிருந்தாங்க. ஆனா வந்தது 50 பேர். அதில 20 பேர் மட்டும் தேர்வானாங்க. ஜெனரல் டிராயிங் 2 வருஷம், பெயிண்டிங் 3 வருஷம், அட்வான்ஸ் பெயிண்டிங் 1 வருஷம் - ஆக, நாங்க படிச்சபோது 6 வருஷம் கோர்ஸ் - டிப்ளமோ சர்டிபிகேட்தான் தருவாங்க. பின்னாலதான் டிகிரி ஆயிருச்சு.
ஓவியக்கல்லூரி மாணவன் ஆனதும் தவறாம ராத்திரியில நடராஜன் சாரை பார்ப்பேன். OIL PORTRAIT -தைல ஓவியமாக ராஜாஜி- எம்.எஸ்.சுப்புலட்சுமி, காந்தி, நேரு, படங்களை நடராஜன் வரையும்போது நானும், ஓவியர் மாருதியும் (ரங்கநாதன்) கைகட்டி, அவர் பின்னால் நின்று மணிக்கணக்கில் பார்த்துக் கொண்டிருப்போம்.
‘கல்யாணப்பரிசு’ -படத்திற்கு மவுண்ட் ரோடு ரவுண்டானா -இப்ப அண்ணா சிலைக்கு எதிரில் - ஒரு நீள பேனர் யுனைட்டட் ஆர்ட்டிஸ்ட்ஸ் வரைஞ்சு வச்சிருந்தாங்க. ‘ஜெமினி - சரோஜா தேவி’ சைக்கிள் ஓட்டீட்டு வர்ற மாதிரி -ஜெமினியின் அழகான முகம் -சரோஜா தேவியின் கவர்ச்சித் தோற்றம் -எல்லாம் 4 ஓவியர்களும் சேர்ந்து வரைஞ்சிருந்தாங்க.
சாமி கோயிலுக்கு தரிசனம் பண்ணப் போற மாதிரி, தினம் இரவு போய் 15 நிமிடம் அதைப் பார்த்துக் கொண்டிருப்பேன்.
‘காஸினோ’ தியேட்டர்ல ‘செங்கோட்டை சிங்கம்’ -படத்துக்கு காண்டா மிருகத்து மேல உதயகுமார் (கன்னட ஹீரோ) உட்கார்ந்து கத்தியால அதை குத்தற மாதிரி ‘கட்அவுட்’ - இப்பவும் அப்படியே மனக்கண்ல இருக்கு.
வெளியூர்களுக்குப் போய் ஸ்பாட்-ல உட்கார்ந்து நான் வரைஞ்ச ஓவியங்களை எடுத்து வரச் சொல்லி -கே. மாதவன் சாரை பாக்க வச்சு, அவர் மகனை ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸில சேர தூண்டுதலா இருந்தவர் ஓவியர் நடராஜன்.
ஒரு கட்டத்தில் மைசூருக்கு ஓவியம் தீட்ட நான் சென்றபோது வாத்தியாரான அவரும் வந்து என்னோடு ‘ஸ்பாட் பெயிண்டிங்’ செய்தார். பிறகு சினிமா நடிகனாகி விட்டேன். ஓய்வு நேரத்தில் வரைந்த படங்களை அவரிடம் காட்டுவேன். நுட்பமாக பார்த்து சில திருத்தங்கள் சொல்வார்.
‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ -படத்தில் ஹீரோவாக நடிக்க வைத்த டைரக்டர் பாலச்சந்தருக்கு நன்றி தெரிவிக்க அவர் ஓவியத்தை வரைந்தேன். நடராஜன் சாரிடம் காட்டினேன். சிறு, சிறு திருத்தங்கள் செய்து கொடுத்தவர் -‘நடிக்கப் போயி எத்தனை வருஷம் ஆச்சு?’ன்னு கேட்டாரு. ‘8 வருஷம்!’ அப்படின்னேன். ‘8 வருஷம் ஆகியும் தொழிலை மறக்கமா இருக்கியேப்பா!’ன்னு பாராட்டினார்.
அத்தோடு என் ஓவியம் வரையும் தொழில் முற்றுப் பெற்றுவிட்டது. வளர்ச்சி நின்று விட்டது. உன் குருநாதர் உனது குறைகளை சுட்டிக் காட்டி திருத்திக் கொண்டே இருக்க வேண்டும். அவர் வாயார பாராட்டினால் அதோடு நம் வளர்ச்சி நின்று விடும் என்பதை உணர்ந்தேன்.
ஒரு கட்டத்தில் சோவியத் கலாச்சார மைய அரங்கில் நடராஜன் சார் ஓவியக் கண்காட்சியை நான் திறந்து வைத்தேன். நான் அவருக்கு மாலை போட்டேன். ‘இல்லை நான்தான் உனக்குப் போட வேண்டும்!’ என்று எனக்கு அதைப் போட்டு விட்டார்.
ராயப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் அருகே ஆண்டியப்பன் தெரு மாடியில் இருந்தபோது கடைசியாக சந்தித்தது. பிறகு ஓராண்டுக்கு மேல் -நடிப்புத் தொழிலில் பிஸியாகி அவரை சந்திக்க முடியாமல் போய் விட்டது. பின்னர் அவர் எங்கு இருக்கிறார் என்று தீவிரமாக தேடினேன்
ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி எதிரில் காட்டுக்குள் உள்ள அனாதை விடுதியில் இருக்கிறார் என்று கேள்விப்பட்டு அதிர்ந்து போய் விட்டேன்.
ராயப்பேட்டை புதுக்கல்லூரி எதிரில், ஆங்கில பாடபுத்தகங்களை அச்சிடும் சம்பா பப்ளிகேஷனில் - பாட புத்தகங்களில் வரும் கதைகளுக்கு - பள்ளிக்கூடம், வகுப்பறை உள்பகுதி -விளையாட்டு மைதானம், இதில் மாணவ மாணவிகள் 5 வயது, 6 வயதுப் பெண்கள் இருப்பது போல அற்புதமாக வரைஞ்சு கொடுத்திருக்கிறார் நடராஜன்.
ஒருநாள் பகல் 12 மணிக்கு மாரடைப்பு வந்து ரோட்டில் விழுந்து விட்டார். யாருமே ஒரு நாள் முழுதும் கவனிக்கவில்லை. சூரிய ஒளி தாக்கி (SUN STROKE) விழுந்தவரின் கண்பார்வை பாதிக்கப்பட்டு விட்டது. மறுநாள் யாரோ புண்ணியவான் பார்த்து தர்மாஸ்பத்திரியில் சேர்த்து குணமாகி, இப்போது அனாதை இல்லத்தில் இருப்பதாக சொன்னார்கள்.
அங்கு, கிழிந்து போன லுங்கியில் ஓட்டை விழுந்த முழங்கை பனியனில், 10 நாள் வெள்ளை தாடியுடன் அவரைப் பார்த்து அப்படியே தரையில் உட்கார்ந்து அழுதேன். போய் கட்டிப் பிடித்துக் கொண்டேன். யாரோ ஒரு தன்னார்வலர் நடத்தும் அனாதை இல்லம். வேளைக்கு சாப்பாடு என்பதெல்லாம் கிடையாது. காலை, மாலை விமானப்பயணிகள் சாப்பிட்டு மீதம் விட்ட ரொட்டி, கேக், பிரைடு ரைஸ் -சேகரித்து வந்து ராத்திரி 11 மணிக்கு எழுப்பி தருவார்களாம். கொடுமை, கொடுமை.
உடனே ‘உதவும் கரங்கள்’ -வித்யாகருக்கு போன் செய்து என் குருநாதர் மோசமான நிலையில் உள்ளார். எப்படியும் அவருக்கு அடைக்கலம் தரவேண்டும் என்றேன்.
தனியாக ஒரு பெரிய அறை -புதிதாக கட்டப்பட்ட இல்லத்தில் ஒதுக்கித் தந்தார். வயது 86-ஐ தாண்டியாயிற்று. அசைவம் விரும்பி சாப்பிடுவார். திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் வட்டாரத்தில் அசைவம் சமைக்கக் கூடாது.
என் உதவியாளர் மூலம், சென்னையில் பிரியாணி வாங்கி ஒவ்வொரு வியாழக்கிழமையும் பகல் 12 மணிக்கு தவறாமல் அனுப்பி வைத்தேன். ஒரு கட்டத்தில் அவர் உடல்நலம் கருதி வித்யாகர் தடுத்து விட்டார். சூர்யா- ஜோதிகா திருமணத்திற்கு 14 நாள் முன் இவ்வுலகை விட்டு விடைபெற்றுக் கொண்டார்.
சுபகாரியம் ஏற்பாடு செய்து விட்டு, அது நடக்கும் முன் துக்க காரியத்திற்கு செல்லக்கூடாது என்பதால் ஓவியர் சுந்தரமூர்த்தி, ஓவியர் மாருதி, ஓவியர் மணியம் செல்வம் மூவரையும் காரில் அனுப்பி இறுதி அஞ்சலி செலுத்திஅடக்கம் செய்ய ஏற்பாடு பண்ணினேன்.
ஒரு ஓவியனின் சகாப்தம் இப்படி முடிந்து விட்டது. இந்தியாவில் ஓவியனாக பிறப்பது பாவம், சாபம் என்று அடிக்கடி சொல்வேன். -ஓவியர் மாதவனும் -நடராஜனும் பிரான்சில் பிறந்திருந்தால் அவர்கள் திறமைக்கு இருவரும் ஆளுக்கு ஒரு தீவு சொந்தமாக வாங்கியிருப்பார்கள். என்ன செய்வது?
தரிசிப்போம்..
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT