Published : 15 Oct 2020 08:13 AM
Last Updated : 15 Oct 2020 08:13 AM

தோனியை விடவும் ஒரு படி மேலே சென்ற கோலி: வைடு முடிவுகளை கேப்டன்களிடம் விட்டு விட வேண்டும் என்று வலியுறுத்தல்

ஹைதராபாத் அணிக்கு எதிராக 19வது ஓவரில் ஷர்துல் தாக்கூர் வீசிய வைடு பந்தை நடுவரை முறைத்து, பாடி லாங்குவேஜ் காட்டி வைடு கொடுக்க விடாமல் சிஎஸ்கே கேப்டன் தோனி செய்தது சர்ச்சையான நிலையில், பெங்களூரு அணியின் இந்திய கேப்டன் விராட் கோலி தோனியைக் காட்டிலும் ஒரு படி மேலே போய்விட்டார்.

இந்நிலையில் ஆட்டத்தின் நுட்பங்களை அறிந்த சுனில் கவாஸ்கர் போன்றவர்களே ‘தோனி தன் அணிக்காக பேசினார் இதில் தவறில்லை’ என்று கூறும் அளவுக்கு ஐபிஎல் கிரிக்கெட்டினால் கிடைக்கும் ‘பலாபலன்கள்’ வேலை செய்கிறது.

இந்தச் சர்ச்சைகளை அடுத்து விராட் கோலி ஒரு படிமேலே போய், “வைடு அல்லது இடுப்பு உயரத்துக்கு வரும் பந்துகள் குறித்த ரிவியூ செய்யும் முடிவை பீல்டிங் கேப்டன்களுக்கே தர வேண்டும்” என்று கூறியுள்ளார்.

சரி இப்படி ஒவ்வொன்றுக்கும் ரிவியூ செய்து கொண்டேயிருந்தால் போட்டி என்றைக்கு முடிவது?

கோலி கூறியதாவது, “வைடு அல்லது இடுப்பு உயரத்துக்கு மேல் வரும் புல்டாஸ் பந்துகள் நோ-பால் போன்ற நடுவர் முடிவுகளின் மீது பீல்டிங் கேப்டனுக்கு ரிவியூ வாய்ப்புத் தர வேண்டும்.

ஏனெனில் ஐபிஎல் தொடர் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. இது போன்ற சின்னச் சின்ன விஷயங்கள் பெரிய விளைவுகளை ஏற்படுத்தி விடும். இது ஒரு வேளை ஒரு ரன்னில் போட்டியை தோற்கும் போது ஏதாவது ஒரு தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய முடியாத நிலையில் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்” என்றார்.

தேர்ட் அம்பயர் அவுட் கொடுத்தால் கூட வெளியேறுவதா வேண்டாமா என்ற முடிவைக் கூட பேட்ஸ்மெனுக்கே விட்டு விடலாம் என்று அடுத்த கோரிக்கை வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x