Published : 10 Oct 2020 04:01 PM
Last Updated : 10 Oct 2020 04:01 PM
‘உலகில் உள்ள மிகவும் சலிப்பான விஷயங்களில் ஒன்று இட்லி’ என்று வரலாற்று ஆசிரியர் எட்வர்ட் ஆண்டர்சன் ட்வீட் செய்த விவகாரம், அமெரிக்க அரசியலில் இட்லியை ஆவி பறக்கும் விவகாரமாக மாற்றியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3-ம் தேதி நடக்க உள்ளது. இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக ஜோ பிடனும், துணை அதிபர் வேட்பாளராக இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர்.
குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்ப் மீண்டும் அதிபராகப் போட்டியிடுகிறார். துணை அதிபர் வேட்பாளராக மைக் பென்ஸ் போட்டியிடுகிறார். அதிபர் வேட்பாளர்களுக்கான நேரடி விவாதங்கள் நடந்து வருகின்றன.
இந்தச் சூழ்நிலையில் ஜனநாயகக் கட்சி துணை அதிபர் வேட்பாளர் செனட்டர் கமலா ஹாரிஸ் (இவரின் தந்தை ஜமைக்காவில் பிறந்தவர். தாய் சென்னையைச் சேர்ந்தவர்) தன் தாயார், தன் விடுமுறை நாட்களில் தென்னிந்திய உணவான இட்லியைச் சமைத்து ஊட்டி எப்படியெல்லாம் அன்பு பாராட்டி வளர்த்தார் என்பது பற்றிப் பேசியிருந்தார். இந்த விஷயம் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய -அமெரிக்காவில் உள்ள வாக்காளர்களை வெகுவாகக் கவர்ந்தது. குறிப்பாக இந்திய வம்சாவளிகளிடம் ஈர்ப்பை ஏற்படுத்தியது.
இங்குள்ள அமெரிக்க வாழ் இந்திய வாக்காளர்கள் கருத்தைக் கவர, ட்ரம்ப் ஆதரவாளரான செனட்டர் ஹாரிஸ் என்பவர் புதுவித உத்தியில் அரசியல்வாதிகளை மட்டுமல்ல, தம் அமெரிக்க வாக்காளர்களையும் தம் இட்லி பேச்சால் கவர்ந்திழுக்க முயன்றார். அவர் சமீபத்தில், ‘நான் சாப்பிட்டுப் பார்த்த இந்திய உணவு வகைகளிலேயே ரொம்ப ‘போரிங்’ (சலிப்பான உணவு) இந்த இட்லி மட்டுமே’ என ட்விட்டரில் குறிப்பிட்டிருக்கிறார்.
அதை எதிர்த்து கமலா ஹாரிஸ் ஆதரவாளர்கள் விமர்சனத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். ‘இந்திய உணவு வகைகளிலேயே சிறந்தது இட்லி மட்டுமே. அதைக் கொச்சைப்படுத்துகிறார்’ என்கின்ற கருத்துகளுடன், ‘இட்லி தென்னிந்தியாவில் - இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே எப்படியெல்லாம் சிறந்தது’ எனப் பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளனர்.
இதையடுத்து அமெரிக்க ஊடகங்கள் ‘இட்லி’ என்ற வார்த்தைக்கு முதல் மரியாதை கொடுத்து, ‘எதிரானதாக’ இருந்தாலும், ‘ஆதரவானதாக’ இருந்தாலும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட ஆரம்பித்துள்ளன. உதாரணமாக உலக அளவில் பிரபலமான ஒரு ஆங்கிலப் பத்திரிகை இந்த இட்லி விவகாரம் பற்றி இப்படிக் கூறுகிறது.
‘இட்லி என்பது வேகவைத்த அரிசி ‘கேக்’ வகை ஆகும். இது வழக்கமாக சாம்பல் எனப்படும் ‘பயறு’ சார்ந்த காய்கறிக் கூட்டுகளுடன் சாப்பிடப்படுகிறது. இது குடலுக்கு உகந்த பிரதான காலை உணவு. குறிப்பாக இது தென்னிந்தியர்களிடையே பிரபலமானது. உணவு எழுத்தாளர் வீர் சங்க்வி இதை இந்தியாவிலும், உலகிலும் அறியப்பட்ட தென்னிந்திய உணவு என்று அழைக்கிறார். இப்படியான இட்லி தமிழ்நாட்டின் அரசியலிலும் பிரபலமாகியுள்ளது.
சில வருடங்கள் முன்பு ‘அம்மா’ உணவகங்களில் ரூ.1-க்கு அம்மா இட்லிகள், மலிவு விலையில் வழங்கப்பட்டன. அதனால் அந்தக் கட்சி பிரபலமாகி அடுத்த தேர்தலின் வெற்றிக்கும் காரணமானது. அதைப் பார்த்து சமீபத்தில் இந்தியாவை ஆளும் பாஜக தலைவர்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பெயரிடப்பட்ட மலிவான ‘மோடி இட்லி’களை கரோனா தொற்றுக் காலத்தின்போது சேலத்தில் ஏழைகளுக்கு வழங்குகிறார்கள். இங்கே 5 இட்லிகளின் விலை ரூ. 10 ஆகும். இப்போது ‘சிறந்தது அம்மா இட்லியா, மோடி இட்லியா?’ என்ற போட்டிப் பிரச்சாரம் போய்க்கொண்டிருக்கிறது’ என அந்தப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவில் சுமார் 30 லட்சம் இந்திய வம்சாவளிகள் வாக்காளர்களாக உள்ளார்கள். அவர்களின் கருத்தைக் கவரும் விதமாகவே இந்தப் பிரச்சாரம் செய்யப்படுவதாக அமெரிக்க வாழ் இந்தியப் பிரஜைகள் கருதுகிறார்கள். நியூகேஸிலிலுள்ள நார்த்ம்ப்ரியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவரான டாக்டர் ஆண்டர்சன் - ஒரு இந்திய உணவு விநியோக சேவையின் கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாகத் தனது இட்லி கருத்தை மீண்டும் வெளியிட்டார்,
“மக்கள் ஏன் இவ்வளவு விரும்புகிறார்கள் என்று புரியவில்லை. இப்போதும் நான் சொல்கிறேன். இந்திய உணவுகளிலேயே மிகவும் போரிங் நிச்சயம் ‘இட்லி’தான். அதை இப்பவும் சாப்பிட்டுப் பார்த்தேன். என்னால் முடியவில்லை. அதற்கு தோசை, மசால் தோசை, ஊத்தாப்பம் சிறப்பு. அவை நல்ல ருசியுடன், தரத்துடன் உள்ளன” என மீண்டும் சர்ச்சையைக் கொளுத்திப் போட்டுள்ளார்.
இதை வேடிக்கை பார்க்கும் இந்தியப் பிரஜைகள் ‘அமெரிக்க ஊடகங்களுக்கு இட்லியையும் தெரியவில்லை. இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் நடந்த இட்லி அரசியல் பற்றி விரிவாக எழுதவும் தெரியவில்லை’ என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.
அவர்கள் கொளுத்திப் போடும் இட்லி அரசியலுக்கு தமிழ்நாட்டிலிருந்து இனிமேல் கீழ்க்கண்ட மாதிரி ‘டிப்ஸ்’ கிடைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
டிப்ஸ்: 1
1999 வாக்கிலேயே தமிழக அரசியலில் இட்லி ரொம்பவும் பிரசித்தி பெற்றது. அப்போது மதுரை தொகுதியில் போட்டியிட்ட சுப்பிரமணியன் சுவாமி, ஒரு இட்லிக் கடை விவகாரத்தில்தான் சிக்கி வழக்குகளைச் சந்தித்தார். இட்லிக் கடை விவகாரம் என்றால் கூடவே இருக்கும் பெயர் சுப்பிரமணியன் சுவாமி.
டிப்ஸ்: 2
நடிகை குஷ்பூவுக்குக் கோயில் கட்டியதன் மூலம், ஒரு நடிகைக்குக் கோயில் கட்டிய பெருமையைத் தமிழர்கள் அடைந்த வரலாறு உண்டு. ஈரோட்டில் குஷ்பூ இட்லி என்று உற்பத்தி செய்யப்படுகிறது.
டிப்ஸ்: 3
ஜெயலலிதா மரணத்தில் ஆயிரம் மர்மங்கள். அதில் முக்கியமான ஒன்று கடைசியாக, “அம்மா 2 இட்லி சாப்பிட்டாங்க” என அதிமுக அரசியல் தலைகள் பலரும் மாற்றி மாற்றிப் பேட்டியளித்ததுதான். உண்மையிலேயே ஜெயலலிதா இட்லி சாப்பிட்டாரா இல்லையா என்பது இன்று வரை உள்ள சர்ச்சை.
டிப்ஸ்: 4
எடுத்து அடித்தால் முதுகு வீங்கிப் போகும் அளவுக்குக் கெட்டியான இட்லியைத்தான் ஆண்டர்சன் சாப்பிட்டிருக்க வேண்டும். ஈரோட்டில் கிடைக்கும் குஷ்பூ இட்லியையோ, மதுரை மல்லிகைப்பூ இட்லியையோ சாப்பிட்டிருந்தால் அவர் இப்படிப் பேசியே இருக்க மாட்டார்.
அன்னபூர்ணா சாம்பார் இட்லி, சரவணபவன் டென் இட்லி, பொடிமாஸ் இட்லி, சில்லி இட்லி, ஜிஞ்சர் இட்லி, குருமா இட்லி இப்படி விதவிதமான ‘வெரைட்டி’ இட்லிகளைக் கண்டிருந்தால - சாப்பிட்டிருந்தால், ஆண்டர்சனுக்குச் சலிக்குமா?
தன்னை மறந்து இட்லிக்கே பிரச்சாரம் செய்து, ஓட்டும் சேகரித்துவிட மாட்டாரா என்ன?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT