Published : 07 Oct 2020 06:31 PM
Last Updated : 07 Oct 2020 06:31 PM
'சென்னை சூப்பர் கிங்ஸுக்குப் பெரிய கோலம் போடு…
தமிழ்நாட்டு ஸ்டைலுல சிக்குக்கோலம் போடு…
நம்ம ஊரு பாணியில வளைச்சு வளைச்சுப் போடு…
நம்ம சிங்கம் தோனிக்கு சொக்கக் கோலம் போடு…'
இப்படிப் பாரம்பரியமான கோலம் போடும் கலையோடு கிரிக்கெட்டையும் இணைத்து ரகளையாக ஒரு பாடல் யூடியூபில் ஒலிக்கிறது. இந்தப் பாடலுக்கு சுவாமிநாதன் செல்வகணேஷ் இசையமைத்திருக்கிறார். முத்தாய்ப்பாக இணையத்தில் வைரலாகியுள்ள 'மிஸஸ். ஜானகி', "ஸ்கூல், காலேஜ் லீவுன்னா கூத்தடிக்க வேண்டியது… அப்படியே கோலமும் போடு… மரமண்டைக்கு அப்போதான் மேத்ஸ் (Maths) வரும்" எனச் செல்ல அதட்டல் போடுகிறார்!
கிரிக்கெட் ரசிகர்களின் அமோக ஆதரவுடன் நடந்துவருகிறது ஐபிஎல் தொடர். கடந்த சில போட்டிகளில் சிஎஸ்கே தோற்றதால் சோர்ந்திருந்த அதன் ரசிகர்கள் அண்மையில் சிஎஸ்கே, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக ஒரு விக்கெட்டைக்கூடப் பறிகொடுக்காமல் வென்றதில், 'திரும்ப வந்துட்டோம்னு சொல்லு…' என சிலிர்த்துக் கொண்டிருக்கின்றனர்.
'எங்க தல தோனிக்குப் பெரிய விசிலப் போடு' என்கிற சிஎஸ்கே அணி ரசிகர்களின் பாடல் மிகவும் பிரபலம். அண்மையில் சிஎஸ்கே அணிக்கு ஆதரவாக யூடியூபில் 'சென்னை சூப்பர் கிங்ஸுக்குப் பெரிய கோலம் போடு' என்னும் பாடல் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது.
கிரிக்கெட்டும் கோலமும்
கிரிக்கெட்டுக்கும் கோலத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனாலும், தற்போது கிரிக்கெட் ரசிகர்களின் உதடுகளும் 'கோலம்' எனும் வார்த்தையை உச்சரிக்கின்றன. வீட்டின் வாசலில் அரிசி மாவைக் கொண்டு கோலமிடுவது நம்முடைய பாரம்பரியமான கலை. கோலம் போடும் கலையை ஐபிஎல் தொடர் நடந்துகொண்டிருக்கும் இந்தக் காலத்தில் கிரிக்கெட்டோடு தொடர்புபடுத்தி மக்களிடம் பிரபலப்படுத்துவதுதான் தன்னுடைய நோக்கம் என்கிறார், பிரபல இன்டீரியர் டெகரேட்டரான பார்கவி மணி.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பார்கவிக்கு ஏற்பட்ட உடல், மனரீதியான பாதிப்பிலிருந்து மீண்டுவருவதற்குக் கோலம் போடும் பயிற்சி பெரும் உதவியாக இருந்ததைக் குறிப்பிடும் அவர், கிரிக்கெட் அனைவரையும் ஒன்றிணைக்கும் விஷயமாகப் பார்க்கப்படும்போது, கோலத்தின் மூலமாகவும் நாம் ஒன்றிணைவது சாத்தியம்தான் என்பதை முன்னெடுக்கவே இந்த வீடியோவைத் தயாரித்ததாகச் சொல்கிறார்.
ரசிகர்களும் தாங்கள் போடும் விதவிதமான கோலங்களின் ஒளிப்படங்களை kolampodu@gamil.com என்னும் அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். அன்றாடம் கோலம் போடும் பயிற்சியால் நம் உடலுக்கு உண்டாகும் நன்மைகள், விதம் விதமாகக் கோலம் போடும் கலையைப் பற்றியும் பார்கவி தன்னுடைய வலைதளத்தில் (kolampodu.com) பேசும் காணொலிகளும் உள்ளன.
'சென்னை சூப்பர் கிங்ஸுக்குப் பெரிய கோலம் போடு' பாடலைக் காண:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT