Published : 07 Oct 2020 12:10 PM
Last Updated : 07 Oct 2020 12:10 PM
பெண்களை எப்படி வளர்க்க வேண்டும் என்று அறிவுரைகள், ஆலோசனைகள் சொல்லும் இந்த சமூகம் முதலில் 'பெண்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை ஆண்களுக்கு போதிக்க ஏனோ மறந்துவிடுகிறது' என்பதை சுட்டிக்காட்டுகிறது சமீபத்தில் வெளியாகியுள்ள 'மனிதி' குறும்படம்.
பெண்கள் எப்படி உடை அணிய வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என விதிகளை சமுதாயம் இன்னமும் வகுத்துக்கொண்டிருக்கிறது என்றால் இன்னமும் பிற்போக்கு வட்டத்திற்குளிருந்து நாம் வெளியே வரவில்லை என்றுதான் அர்த்தம்.
சிந்தனை வளர்ச்சியற்ற இச்சசூழலில் உருவாகும் போக்கிரி இளைஞர்கள் சிலரே பெண்களை கிள்ளுகீரையாக நினைக்கிறார்கள்; நிறைய குற்றங்கள் மலிய அவர்களே காரணமாகிறார்கள். இளம் பெண்களை விரட்டும் ஆண்களை சரண்யா என்ற கதாபாத்திரன்மூலம் பெண்ணின் மேன்மையை பாடம் புகட்டி மிரட்டியுள்ளது 'மனிதி'.
இந்தியாவில் தனியே போகும் பெண்களை விரட்டுவது; நான்கு பேர் சேர்ந்து கூட்டுப் பலாத்காரம் செய்வது இன்னமும் நின்றபாடியில்லை. தவறான நோக்கத்தோடு பெண்களை பின்தொடரும் இளைஞர்களே உணரும்படியான புரிதல்களை உருவாக்க வேண்டிய தேவைகள் நாளுக்கு நாள் அதிகரிதது வருகிறது.
இதை சிறப்பாகச் செய்துள்ள கதை, கனக்கச்சிதமான எடிட்டிங், ஒரு நல்ல திரைப்படத்திற்கான சிறந்த திரைக்கதை நேர்த்தி, பங்கேற்ற அனைவரது இயல்பான நடிப்பு போன்றவற்றால் 'மனிதி' பார்வையாளனின் கவனத்தை ஈர்க்கிறாள்.
இப்படத்தின் ஒரு காட்சியில் சரண்யா நாப்கின் குறித்த விழிப்புணர்வுக்காக தன் சகாகக்களுடன் புறப்பட்டு செல்வதை மகளின் தந்தையின் தமக்கை பார்த்து தவறாக எண்ணிவிடுவார். சரண்யாவின் தந்தைக்கு போன் செய்வார்.
''உம் மக பசங்களோட சுத்திகிட்டிருக்கா, அப்படியே ஜாலியா போய்ட்டிருக்கா '' என்ற புகாரை தொலைபேசி வழியே கேட்க நேரும் பெண்ணின் தந்தை எந்தவித பதற்றமும்அடையமாட்டார். சிறு புன்னகைக் கீற்றோடு டூ வீலரை எடுத்துக்கொண்டு சரி போய் பார்ப்போம் என்று புறப்படுவார்.
ஒருவகையில் இப்படம் மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வை மையமாக கொண்டிருக்கிறது, ஆதரவற்ற ஊனமுற்ற குழந்தைகள் இல்லத்திற்கு சென்று அவர்கள் பயன்படுத்த நாப்கின்களை வழங்கிவிட்டு திரும்புகிறார்கள் இந்த கல்லூரி மாணவ மாணவியர். படத்தின் பிராதான பிரச்சாரமாக இடம்பெறும் மாதவிடாய், நாப்கின் பற்றிய விழிப்புணர்வு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை சின்னஞ்சிறு காட்சிகளின் வழியே உணர்த்திவிடுகிறார்கள். அவற்றோடு இன்றைய பெண்களுக்கு தேவையான துணிச்சலையும் முன்வைக்கிறது என்பதுதான் இப்படத்தின் கூடுதல் பலம்.
சாலையில் எங்கு சென்றாலும், தன்னை தவறான நோக்கத்தோடு விரட்டும் இளைஞர்களை சரண்யா எதிர்கொள்கிறாள். ஒருநாள் தனது தோழியுடன் செல்கையில் வழிக்கு வராத பெண்கள் மீது ஆசிட் ஊற்றலாமா எனத் தவறாக பேசும் ரவுடிகள் கன்னத்தில் ஓங்கி அறைகிறாள், ''உன்ன பெத்தவளும் ஒரு பொண்ணுதாண்டா'' என்கிறாள்.
நமது வாழ்வில் ஆண் பெண் உறவுகளில் பெண்ணுக்கான இடம் எவ்வளவு முக்கியமானது என்பது குறித்து சற்றே கோபமாக தன் மகள் சரண்யா அந்த இளைஞர்களுக்கு எடுத்துரைப்பதை தந்தை காண நேர்கிறது. அப்போதுதான் தமது தமக்கையின் தொலைபேசி புகாரை அடுத்து அங்கு வரும் தந்தை தொலைவிலிருந்தே மகளின் துணிவை நேரில் பார்த்து பெருமிதம் கொள்கிறார்.
அதைத் தொடர்ந்து சரண்யாவின் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு சாட்டையடி, ''இவனுங்ககிட்ட பெல்ட் அடி வாங்கறதைவிட, அப்பா அம்மாகிட்ட திட்டு வாங்கறது எவ்வளவோ மேல்'' எனும்போது சமீபத்திய பாலியல் பலாத்கார சம்பவங்கள் நினைவுக்கு வருவதை தவிர்க்கமுடியவில்லை. பெல்ட் அடி என்று கேட்டமாத்திரத்தில் ஒரு கணம் நம் இதயம் ஒரு நின்று அதிர்கிறது. இப்படத்திற்கான வசனம், திரைக்கதை, எடிட்டிங், இயக்கம் ஆகியவற்றை எஸ்டிஜே ஆந்த்ரேஸ் கமல் ராஜ் ஏற்று செய்திருக்கிறார். தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறுவதாக காட்டப்படும் காட்சிகள் முன்னும் பின்னும் வெட்டி ஒட்டப்பட்டுள்ள நான்லீனியர் எடிட்டிங் பணிகள் பிரமிக்க வைக்கின்றன.
ஒரு இளம் பெண்ணின் வாழ்வில் வீடு, குடும்பம், நட்பு வட்டம், போக்கிரிகள், சுற்றியுள்ள சமூகம் என விரியும் தளங்கள் எந்த அளவில் அவளின் வாழ்வில் பங்களிப்பு செய்கின்றன என்பதையே ரசிக்கத்தக்க வகையில் பொறுப்புமிக்க ஒரு காட்சிப்படிமத்தை நமக்குத் தந்துள்ளார். இக்குறும்படத்தின் இயக்குநர் எஸ்டிஜே ஆந்த்ரேஸ் கமல் ராஜ்.
எவ்வகையிலும் பிரச்சார தொனியை இப்படம் கொண்டிருக்கவில்லை. அறிவுரை ஆலோசனை என்ற பெயரில் மரண மொக்கையாகவும் இல்லை; இளைஞர்கள் காணவேண்டிய ஒரு நல்லபடத்தை ஜே.கே கிரியேஷனுக்காக தயாரித்துள்ள ஜெகதீசன் ஜேகேவை நிச்சயம் பாராட்ட வேண்டும்.
நம்மை கைபிடித்து அழைத்துச் செல்லும் உற்சாகம் தரும் ஒளிப்பதிவை தந்துள்ளனர் எஸ் பிரசாந்த், சிஜே பாலாஜி இருவரும். இப்படத்தின் கதையமைப்பை மேலும் விறுவிறுப்பாக்கியுள்ளன, ரவி கார்த்திக் ராஜாவின் இசையும் ஒலி அமைப்புகளும்.
அனைத்துப் பெண்களுக்கும் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ள இப்படத்தில் முதன்மைப் பாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார் சௌம்யா. அவரது நடிப்பு யதார்த்தம், சமூகத்தின்முன் ஒரு விடிவெள்ளியாக அவரது கண்கள் பளிச்.
சௌமியா, ரேவதி.எஸ், தமிழ்செல்வி கே, ரேமன் பிரகாஷ், விஜய் அலெக்ஸ், அப்துல் ஹாசன், ஸ்ரீநி பீட்டர், அகிலன், ஜெகதீஷ், மாதையன், வாசுகி, புனிதா ஆகிய அனைவரது நடிப்பும் இக்குறும்படம் எடுத்துரைக்கும் செய்திகளுக்கு வலு சேர்க்கின்றன. இது தவிர ஒரு நல்ல படைப்பிற்கு துணைநின்ற பின்னணி குரல், கோரஸ் பாடியவர்கள், டெக்ஸ்ட் எடிட்டிங், சாய்மீரா ஸ்டுடியோ உள்ளிட்ட பங்கேற்றுள்ள திரைப்பட குழுவினர் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.
குறும்படத்தைக் காண:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT