Published : 16 Sep 2015 11:15 AM
Last Updated : 16 Sep 2015 11:15 AM
கொடைக்கானல் இயற்கை அழகை பார்த்தவாறு மலை முகட்டில் நின்றிருந்தான் முகேஷ். பல முறை அங்கு வந்திருந்தாலும், இப்பொழுது அவன் மட்டும் தனியே... தற்கொலை செய்து கொள்ள..
வியாபாரத்தில் தொடர் தோல்வி, நண்பர்களின் நம்பிக்கை துரோகம், கடன் தொல்லை, காதல் முறிவு. இவைகளைத் தாங்கிக்கொள்ள முடியாமல் வாழ்க்கையை முடித்துவிட எண்ணி இங்கு வந்தான்.
எங்கு குதிக்கலாம் என்று எண்ணியவாறு நடந்தவனை ‘அண்ணா’ என்ற குரல் தடுத்தது.
ஒரு சிறுவன், தரையில் விரித்த கோணிப்பையில் சோளம் மற்றும் பழ வகைகள் விற்றுக்கொண்டிருந்தான்.
“அண்ணா... காலையில் இருந்து ஒண்ணும் போணி ஆகல.. எதுனாச்சும் வாங்குங்க” என்று கெஞ்சினான்.
இறப்பதற்கு முன் ஒரு நல்ல காரியம் செய்யலாம் என்று முகேஷ் ஒரு ஐம்பது ரூபா தாளை நீட்டினான்.
“அண்ணா.. சில்லறை இல்லையே” என்றவனிடம் “மீதியை நீயே வைத்துக் கொள்” என்றபடி சோளத்தை வாங்கி கொறிக்க ஆரம்பித்தான்.
“கொஞ்சம் பொறுங்க, எங்க அப்பா வந்ததும் சில்லறை தந்துடறேன். நீங்க மட்டும் தனியாவா வந் தீங்க?” என்றான்.
“ஆமா. அதுசரி.. வியாபாரம் எப்படி ஓடுது?” என்று பேச்சை மாற்றினான் முகேஷ்.
“ஏதோ .. சீசன் டயத்துல வருமானம் வரும். மீதி நேரம் கஷ்டம்தான். அந்த நேரம் தோட்ட வேலைக்கு போயிடுவோம்” என்றான்.
“ரொம்ப கஷ்டமா இருக்குமே” என்றான் முகேஷ்.
“எங்களுக்கு என்ன.. இந்த மடம் இல்லேனா அந்த மடம். ஆனா இந்த படிச்சவங்க இருக்காங்க பாருங்க.. எதுனா ஒண்ணுன்னா மலையில விழுந்து குதிக்க வந்திருறாங்க” என்றான் வெள்ளந்தியாக.
“அதனால என்ன?”
“என்ன இப்படி சொல்லிட்டீங்க.. இருக்கிறது ஒரு வாழ்க்கை. கஷ்டமோ, நஷ்டமோ நாமதான இழுத்து போக ணும். படிக்காத நாங்களே தெளிவா இருக்கிறப்போ, படிச்சவங்களுக்கு ஏன்தான் வழி தெரியலையோ? ஒரு வழி இல்லேன்னா, இன்னொரு வழி இல்லாமலா போயிடும். சொல்லுங்கண்ணே” என்றான் அனுபவசாலியாக.
அந்த ஏழை சிறுவனிடம் இருக்கும் தன்னம்பிக்கை தன்னிடம் ஏன் இல்லை? கடவுளே இவன் மூலம் அசரீரியாக தனக்கு புத்தி சொல்லியிருக்கிறாரோ என்று எண்ணிய முகேஷ் தன் முடிவை மாற்றிக்கொண்டு புதுத் துள்ளலுடன் கீழே இறங்கினான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT