Last Updated : 19 Sep, 2020 02:37 PM

2  

Published : 19 Sep 2020 02:37 PM
Last Updated : 19 Sep 2020 02:37 PM

பழைய நோட்டுப் புத்தகத்துக்கு வண்ணக் கோழிக்குஞ்சு: குழந்தைகளுக்குக் கொண்டாட்டம், பெற்றோருக்குத் திண்டாட்டம்

"ஒரு படி நெல்லுக்கு ஒரு படி உப்பு... ஒரு படி புளியங்கொட்டைக்கு ஒன்றரைப் படி உப்பு..." என்று பதிவு செய்யப்பட்ட குரல் பதிவை ஒலிபரப்பியபடி, எங்கள் பகுதிக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் குட்டி யானை வாகனம் வரும். வழக்கமான பண்டமாற்று முறை இது.

இப்போது இன்னொரு பண்டமாற்று முறை மதுரை மாவட்டத்தைக் கலக்குகிறது. வண்ணக் கோழிக்குஞ்சு வியாபாரிகள், அடிக்கடி கிராமங்களுக்கு வந்து பழைய நோட்டு, புத்தகம், செல்போன் போன்றவற்றுக்கு ஈடாகக் கோழிக்குஞ்சு தருகிறார்கள். விலை கொடுத்து வாங்கினால், ஒரு கோழிக் குஞ்சு 10 ரூபாய்தான் என்றாலும், பண்டமாற்றில் ஓர் ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது.

கோழிக்குஞ்சு வியாபாரியின் சத்தம் தெரு முனையில் கேட்டாலே, குழந்தைகள் வீட்டிற்குள் புகுந்து கையில் கிடைத்ததைப் பொறுக்கிக் கொண்டு வியாபாரியை நோக்கி ஓடுகின்றனர். உடைந்த, மண்ணிலும் தண்ணீரிலும் புதைத்து விளையாடி இத்துப்போன ஸ்மார்ட் போனைக் கொடுத்தால் உயிருள்ள கோழிக்குஞ்சு தருகிறார் என்றால், பிள்ளைகள் சும்மா இருப்பார்களா? வீட்டில் கிடக்கும் பழைய நோட்டு, புத்தகம், செல்போன், இரும்பு, டப்பா, தகரம் என்று எல்லாவற்றையும் கணப் பொழுதில், கலர் கோழிக்குஞ்சாக மாற்றிக் கொள்கிறார்கள். பெற்றோர்கள் கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தாலும் புதிய பாடப்புத்தகங்களும், பத்தாயிரத்துக்கு வாங்கிய செல்போன்களும் கோழிக் குஞ்சுகளாக மாறிவிடுகின்றன.

கலர்க் கோழிக்குஞ்சுகளுக்கு ஆயுள் மிகக்குறைவு என்பதைத் தங்கள் அனுபவத்தில் இருந்து பெற்றோர்கள் கண்டுகொள்கிறார்கள் என்பதால், இப்போது அதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் வியாபாரிகள். தூய வெள்ளைக்குஞ்சுக்கு இளம் மஞ்சள் நிறத்தைப் பூசி ஆங்காங்கே கருப்பு புள்ளி வைத்துவிடுகிறார்கள். அது நாட்டுக் கோழிக்குஞ்சாம். அதேபோல உடல் முழுக்க சாம்பல் நிறம் அடித்தும் விற்கிறார்கள்.

இந்தக் கோழிக்குஞ்சுகளை வாங்குவதும், பிடித்து அமுக்கி, கொஞ்சி விளையாடுவதும்தான் குழந்தைகளின் வேலை. மற்றபடி தங்களுக்கும், கோழிக்குஞ்சுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது போலவே நடந்து கொள்கிறார்கள். அவற்றுக்கு இரை போட்டு, காகம், பூனையிடம் இருந்து காப்பாற்றி, வீட்டையும் சுத்தப்படுத்துவது பெற்றோரின் பாடு. சில குழந்தைகள் அந்தக் குஞ்சுகளுக்குத் தாயில்லாக் குறையைப் போக்க, தாங்களே தாய்க்கோழியாக மாறி பகல் முழுக்க மேய்த்துக் கொண்டு திரிகிறார்கள்

கிராமப்புறங்களில் கோழிக்குஞ்சு என்றால், நகர்ப்புறக் குழந்தைகள், நாய், பூனை, லவ் பேர்ட்ஸ், வண்ண மீன்கள் என்று வாங்குகிறார்கள். இந்த ஊரடங்கு காலத்தில் அவர்களுக்கு உடன் விளையாட வேறு யார்தான் இருக்கிறார்கள்?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x