Published : 15 May 2014 12:00 AM
Last Updated : 15 May 2014 12:00 AM
தங்களது பெற்றோர் அனைத்து அடிப்படை வசதிகளுடன் வாழ்வதற்கான ஏற்பாடுகளை வாரிசுகள் செய்வது அவர்களின் சட்டப் பூர்வமான கடமை. இதனை 2007-ம் ஆண்டின் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் நலன் மற்றும் பராமரிப்பு சட்டம் வலியுறுத்துகிறது. ஒருவேளை மூத்த குடிமக்களுக்கு குழந்தைகள் இல்லையெனில், அவர்களின் சொத்துகளை அனுபவிக்கும் சொந்தங்கள் அல்லது எதிர்காலத்தில் அந்த சொத்துகளில் உரிமையுள்ள சொந்தங்கள் இதை செய்ய வேண்டும்.
தங்கள் சொந்த வருவாய் அல்லது சொத்துகள் மூலம் தங்களை தாங்களே பராமரித்துக் கொள்ள இயலாத மூத்த குடிமக்கள், தங்களுக்கான பராமரிப்புத் தொகை வழங்க உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்யலாம். இதற்காகவே செயல்படும் தீர்ப்பாயத்தில் மகன், மகள், பேரன் மற்றும் பேத்திகளுக்கு எதிராகவோ அல்லது சொத்துகளுக்கு வாரிசுகளாக சட்டபூர்வ உரிமையுள்ள சொந்தங்களுக்கு எதிராகவோ மூத்த குடிமக்கள் இந்த மனுக்களை தாக்கல் செய்யலாம்.
தீர்ப்பாயம் விசாரித்து அதிகபட்சம் மாதம் 10 ஆயிரம் ரூபாய் வரை பராமரிப்புத் தொகையாக வழங்கும்படி வாரிசுகளுக்கு உத்தரவிட முடியும். சரியான காரணங்கள் இல்லாமல், தீர்ப்பாயத்தின் உத்தரவை நிறைவேற்றாத வாரிசுகள் தண்டிக் கப்படலாம். அத்தகைய குற்றத்துக்காக வாரிசுகளுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்
கப்படும். மேலும், பராமரிப்புத் தொகையுடன், அபராதத் தொகையையும் சேர்த்து செலுத்தும்படி தீர்ப்பாயம் உத்தரவிட முடியும்.
பராமரிப்புத் தொகையை செலுத்தாமல் தீர்ப்பாய உத்தரவை வேண்டுமென்றே பிள்ளை கள் மற்றும் வாரிசுகள் மீறுவதாக தீர்ப்பாயம் உறுதியாக நம்புமேயானால், அத்தகைய வாரிசுகளுக்கு எதிராக தன்னிச்சையான உத்தரவுகளைப் பிறப்பிக்கும் அதிகாரமும் தீர்ப்பாயத்துக்கு உள்ளது. தீர்ப்பாயம் பிறப்பிக்கும் உத்தரவு தங்களுக்கு பாதகமாக உள்ளது என பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் கருதுவார்களேயானால், தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் 60 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யும் உரிமையும் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்களைப் பாதுகாத்து பராமரிக்க வேண்டிய ஒருவர், அந்தக் கடமையைச் செய்யாமல், அந்த வயதானவர்களை வீட்டை விட்டு வெளியே துரத்தினாலோ அல்லது அவர்களின் விருப்பத்துக்கு மாறாக அவர்களைக் கட்டாயப்படுத்தி வேறு ஏதேனும் ஒரு இடத்தில் அவர்களை கொண்டு போய் விட்டாலோ அத்தகைய பிள்ளைகள் மற்றும் வாரிசுகளுக்கு 3 மாதம் சிறைத் தண்டனை அல்லது ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் அல்லது இவை இரண்டும் சேர்த்து விதிக்கவும் சட்டத்தில் இடம் உண்டு.
(மீண்டும் நாளை சந்திப்போம்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT