Published : 16 Sep 2020 04:43 PM
Last Updated : 16 Sep 2020 04:43 PM
குரலுக்கும் பாடலுக்கும் தொடர்பு உண்டு. ஒரு பாடலை, குரல் வழியே பாவங்களுடன் பாடுகிற போது, கேட்பவர்கள் கிறங்கித்தான் போகிறோம். அதேபோல், பாடலானது குரல் வழியே வெளியே வரும் போது முகத்தில் ஏற்படுகிற பாவங்களிலும் இன்னும் கரைந்துபோகிறோம். நாம் மட்டுமா என்ன... இறைவனே பாடலைக் கேட்டு மெய்ம்மறந்த கதையெல்லாம் புராணங்களில் உண்டு. புராணத்தில் மட்டுமா? கலியுகத்திலும் நடந்திருக்கிறது. அவரின் இசைக்கு, அந்த காந்தர்வக்குரலுக்கு இறைவனே மெய்சிலிர்த்துத்தான் போவான். அந்த மதுரக்குரலின் நாயகி... எம்.எஸ்.சுப்புலட்சுமி.
இசைக்கு வசமாகாதவர்கள் எவருமே இல்லை. தலைமுறைகள் கடந்தும் ரசிகர்களின் மனங்களையும் செவிகளையும் தன் குரலால், எண்ணற்ற பாடல்களால் ஆற்றுப்படுத்தியவர் எம்.எஸ். சுப்புலட்சுமி. நூற்றுக்கு தொந்நூறு பேரின் செல்போன்களில், இவரின் ஒருபாடலாவது நிச்சயம் பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கும். இன்னும் பெரும்பாலோர், ரிங் டோனாக, டயலர் டியூனாக இவருடைய பாடலைத்தான் வைத்திருக்கிறார்கள். நம் துன்பத்தையெல்லாம் கரைந்து போகச் செய்கிற யாழிசைக் குரல் அவருக்கு!
’மந்திரத்துக்குக் கட்டுப்பட்டது போல்’ என்றொரு வாசகம் உண்டு. இவர் எந்தப் பாடல் பாடினாலும் அது மந்திரமாகிவிடும். கேட்பவர்களையெல்லாம் கட்டுப்படுத்திவிடும். எத்தனை கோபமிருந்தாலும் எவ்வளவு சோகங்கள் அழுத்தினாலும் எப்பேர்ப்பட்ட அவமானங்களை சந்தித்தாலும் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் குரலைக் கேட்டால்... கோபம் போய் சாந்தமாகிவிடுவோம். சோகமெல்லாம் கரைந்து காணாமல் போய்விடும். அவமானங்களைத் துடைத்துவிட்டு, மலர்ந்த முகத்துடன் அடுத்தப் போராட்டத்துக்குத் தயாராகிவிடுவோம். அதனால்தான் அவரை... கானக்குயில் என்கிறோம். ஞான சரஸ்வதி என்று போற்றுகிறோம்.
எம்.எஸ்.சுப்புலட்சுமி. ஆனாலும் ‘எம்.எஸ்.’ என்றுதான் பலரும் சொல்கிறார்கள். மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி. மதுரை சுப்ரமணியம் சுப்புலட்சுமி என்று அர்த்தம். தாயார் பெயர் சண்முகவடிவு. தந்தையார் பெயர் சுப்ரமணியம். இந்தக் குடும்பம்... இசைபட வாழும் குடும்பம். இசையோடு வாழும் குடும்பம். இசையே வாழ்க்கை, இசையே உலகம் என்று வாழும் குடும்பம். இவர்களுக்கு இசைதான் மூச்சு!
சிறு வயதில் சுப்புலட்சுமிக்கு, பாட்டென்றால் கொள்ளைப்பிரியம். சாப்பிடும் போது பாட்டு. விளையாடும்போது பாட்டு. தூங்கும் போது பாட்டு. ஓடியாடும் போதும் பாட்டு. அம்மாதான் இவருக்கு முதல் குரு. முதலில் வீணைதான் கற்றுக் கொண்டார். வீணையை எடுத்து, வீணையின் நரம்புகளில் விரல்களை வைத்ததும், சரஸ்வதிதேவியே சிலிர்த்துப் போனாள். விரல்களும் வீணையும் பேசிக்கொண்டன. அந்தப் பேச்சு ஸ்ருதியாக, ராகமாக, பாடலாக வெளியே எல்லோருக்கும் கேட்டது.
ஒருநாள்... சென்னை மாகாண ஆளுநர், சுப்புலட்சுமி அம்மா சண்முகவடிவின் வீணை இசையைப் பதிவு செய்துகொண்டிருந்தார். அப்போது இங்கும் அங்குமாக இரட்டைஜடையுடன் ஓடியாடி விளையாடிக்கொண்டிருந்தாள் சுப்புலட்சுமி. ‘இங்க வாம்மா. எங்கே ஒரு பாட்டு பாடேன்’ என்று எல்லோரும் சொன்னார்கள். உடனே சுப்புலட்சுமி பாடினாள். மொத்தக் குடும்பமும் ஆச்சரியத்தில் திளைத்தன. கேட்டவர்கள் எல்லோருமே உணர்ச்சிப்பெருக்குடன் பேசமுடியாமல் நின்றார்கள். அந்தக் குரல் எவரையும் அசையவிடாமல் செய்தது. ‘ஆஹாஹா... என்ன சாரீரம் சுப்புவுக்கு. அம்மாவையே மிஞ்சிருவா பாருங்க’ என்று எல்லோரும் வாழ்த்தினார்கள். கொண்டாடினார்கள். ஆசீர்வதித்தார்கள்.
படைத்த பிரம்மாவும் கலைக்கடவுள் சரஸ்வதிதேவியுமாகச் சேர்ந்து, ‘நம்மைப் பாடுவதற்கு ஆள் வேண்டுமே...’ என்று முடிவு செய்து, பூமியில் பிறக்கச் செய்தவர்தான் சுப்புலட்சுமி’ என்று பின்னாளில் இசையுலக ஜாம்பவான்களே மனமுவந்து பாராட்டினார்கள்.
சிறுமியாக இருந்து அடுத்தக்கட்டத்துக்கு வளர்ந்தார். அதே தருணத்தில், வீட்டில் இருந்து வெளியே வந்து பாடத் தொடங்கினார். மதுரையில் பாடினார். மதுரை முழுக்கப் பாடினார். அக்கம்பக்க ஊர்களில் பாடினார். சென்னைக்கு வந்து பாடினார். மைசூர் மகாராஜாவின் அரண்மனையில் பாடும் அளவுக்கு உயர்ந்தார்.’சுப்புலட்சுமியின் பாடலைக் கேட்டால் மயங்கிப்போவோம்’ என்று தெரிந்தும் உணர்ந்துமே அவரின் பாடலைக் கேட்டார்கள். எல்லோருக்கும் பிடித்த பாடகியானார் சுப்புலட்சுமி.
இந்தக் காலகட்டத்தில், பாடகி சுப்புலட்சுமிக்கு,நடிப்பதற்கும் வாய்ப்பு வந்தது. அப்போதெல்லாம் நடிப்பவரே பாடவேண்டும். அதனால் பாடத் தெரிந்தவரையே அழைத்து நடிக்கவைத்தார்கள். அப்போதெல்லாம் 22 ரீலில் 24 பாடல்கள் இருக்கும். பாடலும் நடிப்பும் இரண்டறக் கலந்திருந்தன அவரிடம். குறிப்பாக, படத்தின் தயாரிப்பாளர் சுப்புலட்சுமியின் பாடலில் தன்னையே இழந்தார். அந்தக் குரலுடன் இரண்டறக் கலந்தார். இந்தக் குரலை சாகும்வரை கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என பிரயாசை கொண்டார். குரலுக்கு உரிய கலையரசியான சுப்புலட்சுமியும் சாகும் வரை இருக்கவேண்டும் என விரும்பினார். தன் எண்ணத்தை சதாசிவம் சுப்புலட்சுமியிடம் சொன்னார்.
சதாசர்வ காலமும் இசையையே நினைத்துக் கொண்டிருக்கிற, பாடிக்கொண்டிருக்கிற சுப்புலட்சுமியும் சதாசிவத்தை திருமணம் முடிக்க சம்மதித்தார். திருமணம் செய்துகொண்டார்கள். பிறகுதான் இன்னும் இன்னுமாக இசையுலகில் பட்டொளி வீசிப் பறக்கத் தொடங்கினார். சுப்புலட்சுமி எம்.எஸ்.சுப்புலட்சுமியானார். எம்.எஸ். என்று எல்லோராலும் கொண்டாடப்பட்டார். இவரின் அத்தனை வெற்றிக்குப் பின்னேயும் கிரியா ஊக்கியாக, உந்துசக்தியாக, பலமாக, பக்கபலாக கல்கி சதாசிவம் இருந்தார்.
பாடுவது... பாடுவது... பாடுவது என்பதே வாழ்க்கையாயிற்று. இந்த ஜென்மப் பணியே பாடுவது மட்டும்தான் என்று பாடிக்கொண்டே இருந்தார் எம்.எஸ்.
சினிமாவில் பாடினார். வட்ட சைஸ் ரிக்கார்டுகள் பறபறவென விற்றன. எம்.எஸ். கச்சேரி என்றாலே இரண்டு நாட்களுக்கு முன்பே, டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்துவிடும். தேசப் பற்று மிக்க பாடல்களைப் பாடினால், ஆயுள் முடியக் காத்திருப்பவர்களும் எழுந்துகொள்வார்கள். அன்று பிறந்த குழந்தை கூட, சுதந்திர தாகம் அதிகரிக்கும். ’பக்த மீரா’ படத்தில், எம்.எஸ். பாடிய பாடல், தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த அடையாளம். கர்நாடக இசையுலகுக்கான தமிழ் சினிமாவில் பதிக்கப்பட்ட முகவரி. தமிழ்த் திரைக்கும் பக்திக்குமான எம்.எஸ். அளித்த விலாசம் என்று இந்தியா முழுவதும் இந்தப் பாடலைக் கேட்டுக் கேட்டு கொண்டாடினார்கள். தமிழே அறியாதவர்கள் கூட, குரலில் கட்டுண்டார்கள். இந்தியா முழுவதும் காற்றில் கலந்து, மனதை தென்றலெனத் தொட்டு வருடிய அந்தப் பாடல்... ‘காற்றினிலே வரும் கீதம்!’.
எம்.எஸ். பாடல்கள்தான் அன்றைக்கு எல்லாத் துறைகளிலும் எல்லாத் தலைவர்களுக்கும் இளைப்பாறல்; ஆசுவாசம்; நிம்மதி எல்லாமே! இந்தியத் தலைவர் ஜவஹர்லால் நேருவாகட்டும்... வெள்ளைக்கார துரை மெளண்ட்பேட்டன் பிரபுவாகட்டும்... எம்.எஸ்.ஸின் குரல், டில்லி காற்றில் கலந்து, கேட்போரின் இதயத்தைக் கரைத்தது.
தேசபக்திப் பாடல்களை இவர் பாடினார். விலகி விலகி இருந்த இந்தியர்கள் கைகோர்த்து ஒன்றுபட்டார்கள். இறைவனைப் போற்றும் பாடல்களைப் பாடினார். பாடலுக்குள் மூழ்கி, ஆன்மிக முத்தெடுக்க முனைந்தார்கள் பக்தகோடிகள்.
1944ம் ஆண்டில், சுதந்திர இந்தியா வேண்டும் என்றும் போராட வேண்டும் என்றும் நிதி திரட்டப்பட்டது. அதற்காகப் பாடினார் சுப்புலட்சுமி. ஒவ்வொரு ஊரிலும் பாடினார். அப்படிச் சென்ற இடங்களிலெல்லாம் கூட்டம் கூட்டமாகக் கூடினார்கள் மக்கள். நிதியை வாரிக் கொடுத்தார்கள். வாரி வாரிக் கொடுத்தார்கள். இரண்டு கோடி ரூபாய் நிதியைத் திரட்டித் தந்தார். இவர் பாடியதைக் கேட்ட ஊர்க்காரர்கள் எல்லோரும், சுப்புலட்சுமியின் குரலை ரசித்தார்கள். முகபாவத்தைக் கொண்டாடினார்கள். அவரின் மூக்குத்தியின் டாலடிக்கும் ஒளியில், மதுரை மீனாட்சியே நம் எதிரே அமர்ந்து பாடுகிறாள் என்று விகசித்தார்கள்; வியந்தார்கள்; தெய்வரூபம் என்று எம்.எஸ்.சுப்புலட்சுமியை ஆராதித்தார்கள்.
தெலுங்கு மாட்லாடுகிற ஆந்திரத்தில்தான் இருக்கிறது திருப்பதி தேவஸ்தானம். இன்றைக்கும் தினமும் பாடப்படுகிறது சுப்ரபாதம். தன் சுகந்தக் குரலால், சுந்தரக் குரலால் பாடியவர்... எம்.எஸ். அம்மா. தினமும் இவரின் சுப்ரபாதம் கேட்டுத்தான் மலர்ந்து விழிக்கிறார் வேங்கடேச பெருமாள்.
‘அலைபாயுதே கண்ணா’ பாடினால், அந்தக் கண்ணனே பாய்ந்தோடி வருவான் இங்கே. இப்படி எத்தனையோ பாடல்கள். முக்கியமாக, ‘குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா’ என்று பாடினால், ‘நிறைவு நிறைவு நிறைவு’ என அந்த மலையப்ப சுவாமியே கீழிறங்கி வருவான். யாருக்கு என்ன குறை உண்டோ அவற்றையெல்லாம் நிவர்த்தி செய்து தருவான்!
போகாத ஊரில்லை. ஏறாத மேடையில்லை. பாடாத இசையில்லை. வாங்காத பட்டங்களில்லை. பரிசுகள் இல்லை. பதக்கங்கள் இல்லை. இசையை ரசிப்போர் இல்லங்களில், சிரித்த முகத்துடன், மங்கலச் சின்னங்களுடன், அந்த டாலடிக்கும் மூக்குத்தியுடன் இசையின் வடிவமாகவே காட்சி தருகிறார் எம்.எஸ். என்கிற எம்.எஸ்.சுப்புலட்சுமி.
சுப்ரபாதக் குரல்... சுகந்தக்குயில்... எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பிறந்தநாள் (செப்டம்பர் 16 , 1916) இன்று. அவருடைய 104வது பிறந்தநாள்.
எம்.எஸ்.சுப்புலட்சுமியை போற்றுவோம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT